சென்ற இதழ் தொடர்ச்சி...
குரு
சனிக்கு திரிகோணத்தில் குரு இருந்தால், ஜாதகர் சந்நியாசியாக இருந்திருப்பார் அல்லது ஆலயத் திருப்பணி செய்தல், குரு சேவை செய்தல், சந்நியாசிகளை உபசரித்தல், குழந்தைகளுக்கு ஆசிரமம் கட்டுதல், மதபோதனை செய்தல் போன்ற சமூகசேவை செய்திருப்பார். இதன் பலனாக இந்தப் பிறவியில் சமுதாயத்தில் நல்ல மதிப்பு, மரியாதை, சகல சௌபாக்கியமும் தேடிவரும்.
ஜனனகால ஜாதகத்தில் சனி, குரு சமசப்த மப் பார்வை, குருவுக்கு அடுத்து சனி இருந்தால், வாழ்வில் ஏற்ற- இறக்கம் மிகுதி யாகும். குரு, சனியை நோக்கிச் சென்றால் முன்னேற்றக்குறைவு அதிகமாகும். இதற்குப் பரிகாரமாக சித்தர் ஜீவசமாதி வழிபாடு, பெரியோர்களின் ஆசிபெறுதல், சாதுக்கள் தரிசனம் போன்றவை நல்ல பலன் தரும்.
சுக்கிரன்
சனிக்கு திரிகோணத்தில் சுக்கிரன், சுக்கிரன் சனி இணைவு, சமசப்தமப் பார்வை, சுக்கிரனுக்கு அடுத்து சனி, சனியை அடுத்து சுக்கிரன் இருந் தால், சென்ற பிறவியில் பெண்களை மதித்தல், மனைவி, உடன்பிறந்த சகோதரிகளின் அன்பைப் பெற்றவர், பெண்தெய்வ உபாசகர், தானதர்மம் செய்தவர். இதன் பலனாக, இந்தப் பிறவியில் பொன், பொருள், வீடு, மனை, வாகன யோகம், அழகு- ஆடம்பரப் பொருள் சேர்க்கை, விலையு யர்ந்த ஆபரணச் சேர்க்கை மிகும்.
சுக்கிரன், சனி சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும், சுபப் பலன் மிகும். ஆனால், காலதாமதத் திருமணத்தைத் தரும். திருமணத் தடை மிகுதியாக இருந்தால் அம்மன் வழிபாடு நல்ல பலன் தரும்.
ராகு
சனிக்கு திரிகோணத்தில் ராகு இருந்தால், ஜாதகர் சென்ற ஜென்மத்தில் உழைத்த ஊதியத் தைக் கொடுக்காமல் ஏமாற்றிப் பிழைத்தல், திருடுதல், செய்வினை, ஊழல், அழிவுக் காரியங் களில் ஈடுபடுதல், முறைகேடான பெண்கள் சம்பந்தம், சூதாடுதல் போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டிருப்பார். இதன்பயனாக, இந்த ஜென்மத்தில் ஜாதகருக்கு சிறப்பான தொழில் அமையாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் அமையாது அல்லது மிக உயர்த்த நிலைக்கு ஏற்றி மிகத்தாழ்ந்த நிலைக்குத் தள்ளும். ஜாதகருக்கு முன்னேற்றமின்மை இருக்கும். வெளிநாட்டில் சென்று அடிமைப்படும் நிலை, வெளிநாடு சென்று திரும்பிவர முடியாத நிலை அல்லது சிறை தண்டணை, மனநலக் குறையை அனுபவிக்கநேரும்.
ஜனன ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் ராகு, சனி- ராகு சேர்க்கை இருப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:
சனிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு வில்வார்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமை பைரவருக்கு ராகு வேளையில் உளுந்து வடை மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
கேது
சனிக்கு திரிகோணத்தில் கேது இருந்தால், பொய் வழக்கு போடுதல், ஜாதகர் போலி டாக்டர், போலி மருந்து விற்றல், குரு துரோகம் செய்தல், சாதுக்களை அவமதித்தல், தானதர்மம் செய்பவரைத் தடுத்தல், துஷ்ட தேவதைகளை வழிபடுதல், மிருகங்களை வதைசெய்தல், உழைக்காமல் உண்ணுதல், அடுத்தவர் வாழ்க்கை யைக் கெடுப்பது போன்ற செயல்களைச் செய்திருப்பார். இதன்பலனாக இந்த ஜென் மத்தில் ஜாதகரின் எல்லா செயல்களும் தடை- தாமதப்படும். நிலையான தொழில் இருக்கும். ஆனால் தரித்திரம் ஏற்படும். வம்பு, வழக்கு தேடி வரும். திருமணத்தடை மிகும். விரக்தியில் சந்நியாச நிலையில் வாழ்வார் அல்லது சந்நியாசி யாகிவிடுவார். மன சஞ்சலம் மிகும்.
ஜனன ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் கேது இருப்பவர்கள் அல்லது சனி, கேது சேர்க்கை இருப்பவர்களுக்கு ஆஞ்சனேயர் வழிபாடே தீர்வு. சனிக்கு திரிகோணத்திலுள்ள கிரகமறிந்து, அதற்கு முறையான வழிபாடு செய்தபின்பு மூன்று பெருங்கடன்களைத் தீர்க்க வேண்டும். பொருள் கடன் மட்டும் கடனாகாது; கடமை யைச் செய்யாமல் விடுதலும் கடனே.
மனிதன், தன் வாழ்நாளில் தீர்க்கவேண்டிய மூன்று கடன்கள்:
தேவ கடன்
தேவ கடன் என்பது தெய்வ சிந்தனை இல்லாமலிருப்பது, குலதெய்வத்தை வழிபடா மலிருப்பது, கோவில் திருப்பணியைத் தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது, நேர்த்திக்கடன்களைச் செய்யாமல் விடுவது தவிர, கோவில் சொத்து, சிலை, வருமானத்தைத் திருடுதல் போன்ற செயல்களை ஜாதகர் அல்லது ஜாதகரின் முன்னோர்கள் செய்திருந் தால், அதை முறையாக சரிசெய்ய வேண்டும்.
ரிஷி கடன்
இந்த கலிகாலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர். அதனால் ரிஷி கடன் ஏற்படும் வாய்ப்புக் குறைவு. ஜாதகத்தில் ரிஷிகள் சாபமிருந்தால் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் தானம் செய்தல், ஆன்மிக மடங்களுக்கு உதவி செய்தல், ரிஷிகள், சாதுக்களின் ஆசிபெற வேண்டும்.
பித்ருக் கடன்
மறைந்த முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் செய்யாதவர்கள், வாழும் காலத்தில் பெற்றோர்களின் சாபத்தை வாங்குவது போன்ற வற்றால் ஏற்படும். இதனால் ஏழு தலைமுறை பாதிக்கப்படும். பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால், பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன. அவரவர் ஜாதகம் பார்த்து, உரிய பரிகாரம், பூஜை, யாகம்செய்ய வேண்டும்.
பல ஆலயங்களுக்குச் சென்றும், பலவித மான பரிகாரங்களைச் செய்தும் கர்மவினை தீரவில்லை என வேதனைப்படுவர்கள், இந்தக் கட்டுரையில் கூறிய முறையில் பரிகாரம் செய்து, சரணாகதி அடைந்தால் கர்மவினை தீரும். ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதேசமயம் திரும்பவும் அதே பாவங்களைச் செய்யாமலிருக்க வேண்டும். அத்துடன் தினமும் சிவபுராணம் படித்து, இறைவனை சரணாகதி அடைந்தால் கர்மவினை நீங்கும்.
செல்: 98652 20406