இந்தியர்களின் சமுதாயக் கட்டமைப்பே கூட்டுக்குடும்பமாக வாழ்வதுதான்.சமீபகாலத்தில் கூட்டுக்குடும்பத்தைப் பார்ப்பதே மிகவும் அரிதாகிவிட்டது.தாய், தந்தை மற்றும் முதியோர்கள் பராமரிப்பென்றால் என்னவெனத் தெரியாத வகையில் காலம் மாறிவருகிறது.
இன்றுள்ள காலச்சூழலில் பல குடும்பங்களில் பொருளாதார நிலையை சமாளிக்க ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது.நேரமின்மையால், வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்த பெற்றோரின் பராமரிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. ஒன்றுக்கு மேற் பட்ட பிள்ளைகள் இருந்தால் பெற்றோரை யார் பராமரிப்பது என்னும் கருத்து வேறுபாடும் மிகுதியாக உள்ளது. அதனால் தான் முதியோர் காப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.
பல பெற்றோர்கள் தங்களிடம் அன்பாகப் பேச குழந்தைகளில்லாத வேதனையில் வாழ்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பெற்றோரைத் தங்களின் சுயதேவைக்காகப் பயன்படுத்தி வேதனைப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.கணவன்- மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், தங்களின் வீட்டு வேலை, குழந்தைப் பராமரிப்பு என முதியோர்களின் வயதுக்கு மீறிய வேலையைச் சுமத்தித் துன்பப்படுத்து கிறார்கள்.
தங்களின் பேரப்பிள்ளைகளை சுய ஆர்வத்தால் சீராக வளர்க்கும் தாத்தா, பாட்டியும் இருக்கிறார்கள். முதுமையால் பேரக்குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் வாரிசுகளை வசை பாடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
ஜோதிடரை சந்திக்கும் வயது முதிர்ந்த பெற்றோர் பலர், "என் மகனின் மடியில் கடைசி மூச்சுவிடும் பாக்கியம் எனக்கிருக்கிறதா?
என் குழந்தை கடைசிவரை என்னை வைத்துப் பார்ப்பானா' என கண்ணீர் மல்கக் கேட்காதவர்களே கிடையாது. இது பிள்ளையைப் பெற்றவர்களின் ஆதங்கம் எனில், வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிப்பவர்களும், பெற்றோரால் பிரச்சினையை சந்திக்கத்தான் செய்கிறார்கள்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நமது "பாலஜோதிடம்' வாசகர் ஒருவர் என்னை சந்தித்தார். அவருடன் பிறந்தவர்கள் ஆண்கள் மூன்றுபேர், பெண்கள் மூன்றுபேர் என மொத்தம் ஏழுபேர். அவர் இவ்வாறு கேட்டார்-
""நாங்கள் அனைவரும் சொத்து சுகத்துடன் எந்தக் குறையுமின்றி வாழ்கிறோம். ஒரு சகோதரியும் நானும் சொந்த ஊரிலிருந்து பெற்றோருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறோம். மற்ற ஐந்துபேரும் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் வசிக்கிறார்கள். சொந்த ஊரில் நடக்கும் நல்லது, கெட்டது, கோவில் கொடைக்கு வந்து செல்வார்கள். ஒரு வாரம், பத்து நாட்கள் தங்கும் அவர்களுக்குப் பொருட்கள் மற்றும் நல்லாசி வழங்கி பெற்றோர் வழியனுப்புவார்கள். உடன்பிறந்தவர்கள் வந்து செல்லும் நாட்களில் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்களிருவரும் வேலையாட்கள்மூலம் செய்து கொடுப் போம். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறு பாடும் கிடையாது.
ஆனால், எங்களது பெற்றோர் நாங்கள் எத்தகைய உதவிசெய்தாலும் ஏதாவது குறைகூறி சபிக்கிறார்கள். எங்களைப் பற்றி தவறான தகவல்களை உடன்பிறந்தவர்களிடம் கூறுகிறார்கள். சகோதர- சகோதரிகள் பெற்றோரின் குணம்தெரிந்து எங்களுக்கு ஆறுதலாகவே இருக்கிறார்கள். எவ்வளவு அன்பாகப் பார்த்துக்கொண்டாலும் பெற்றோர் ஏன் சபிக்கிறார்கள்? மனதால்கூட எந்தக் கெடுதலும் செய்யாத எங்களைப் பெற்றோரின் சாபம் பாதிக்குமா? எங்களுக்கு ஆசி வழங்காவிட்டாலும் பரவாயில்லை; எங்களை சபிக்காமலிருந்தால் போதும். அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழில் செய்யும் நான், தொழில்ரீதியாக ஜெயித்தாலும், என்னால் பெற்றோரின் அன்பைப் பெறமுடிய வில்லை. அப்படி என்ன பாவம் செய்தேன்?'' என்று வேதனையுடன் கேட்டார்.
இதுபோன்ற மனவேதனையை ஐம்பது சதவிகிதத்தினர் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். உண்மையில், ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கக்கூடாத வேதனை பெற்றோரின் சாபமாகத்தான் இருக்க முடியும். இதற்குத் தீர்வுகாண அவருடைய ஜாதகத்தை ஆய்வுசெய்வோம்.
2-12-1956, காலை 10.40 மணிக்குப் பிறந்த இந்த ஜாதகர் மகர லக்னம். லக்னாதிபதி சனி பதினொன்றா மிடமான பாதக ஸ்தானத்தில் நிற்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்றதால், ஆடை ஏற்றுமதித் தொழிலில் நிறைந்த லாபம். ஒன்பதாம் அதிபதி புதன் பதினொன்றா மிடமான பாதக ஸ்தானத்தில் நிற்கிறது.
எந்த ஜாதகமாக இருந்தாலும் நவகிரகங்களும் ராசிக்கட்டத்தில் ஏதாவதோரிடத்தில் நின்றுதான் தீரவேண்டும். கிரகங்கள் நின்ற இடத்தை வைத்துப் பலன் சொல்வதைவிட, கர்மா, அஷ்டமாதிபதி, பாதகாதிபதியை வைத்துப் பலன் சொன்னால் தீர்வைத் தெளிவாகக் கொடுக்கமுடியும்.
பெரும்பான்மையான கர்மாக்கள் கோபத் தாலும், சாபத்தாலும் மட்டுமே விஸ்வரூப மெடுக்கின்றன. ஒருவரின் கோபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கூறுமிடம் எட்டாமிடம் எனில், சாபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கூறுமிடம் பன்னிரண்டாமிடம். இந்த ஜாதகரின் மனக்குமுறலை கர்மாரீதியாக ஆய்வுசெய்வோம்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 98652 20406