ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சரியில்லையென்றால், அவர் இளம்வயதில் பல பெண்களிடம் ஏமாறுவார். பெண் மோகத்தால் தன் திறமையை வீணாக்குவார்.
ஒரு ஜாதகத்தில் விரய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இருந்து, 7-ல் ராகு அல்லது கேது, சந்திரன் உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் பல பெண்களுடன் பழகுவார். அந்தப் பெண்கள் அவரை ஏமாற்றுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில், லக்னத்தில், நீசச்செவ்வாய், 4-ல் சுக்கிரன், கேது, 7-ல் சனி இருந்தால் ஜாதகர் தன் தகுதிக்கும் கீழான பெண்களுடன் பழகி, அவர்களிடம் ஏமாறுவார்.
லக்னத்தில் நீசச்செவ்வாய், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், அவர் போதைப்பழக்கத்தின் காரணமாகப் பெண்களுடன் பழகுவார். தான் சம்பாதித்த பணத்தை அவர்களிடம் இழப்பார். அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக்கூறி பெண்கள் ஏமாற்றுவார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் புதன், சுக்கிரன், 4-ல் குரு, சனி, 12-ல் செவ்வாய், சூரியன் இருந்தால், அந்த ஆண் பிறக்கும்போது மூலம் அல்லது மக நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர் இளம்வயதிலேயே பல பெண்களிடம் மோகம் கொண்டு ஏமாற்றத்தைச் சந்திப்பார். தன் பூர்வீக சொத்துகளைப் பெண்களிடம் இழப்பார்.
கடக லக்னத்துக்கு 12-ல் சந்திரன், 4-ல் சுக்கிரன், கேது அல்லது சுக்கிரன், ராகு, 7-ல் செவ்வாய் இருந்தால், அவர் இளமைக்காலத்தில் பெண்மோகம் கொண்டு சுற்றித்திரிவார். எப்போதும் பெண்களையே கனவு கண்டுகொண்டிருப்பார். அந்தப் பெண்கள் அவரை ஏமாற்றிப் பணம் பறிப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் 5-ல் சுக்கிரன், புதன், செவ்வாய், கேது அல்லது சுக்கிரன், புதன், செவ்வாய், சனி அல்லது சுக்கிரன், புதன் சந்திரன், செவ்வாய், சனி அல்லது சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் இருந்தால், அவர் பழகும் பெண்கள் அவரை ஏமாற்றிவிடுவார்கள்.
லக்னத்தில் பலவீனமான சந்திரன், 11-ல் சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவர் வீட்டிற்குத் தெரியாமல் பல பெண்களுடன் பழகுவார். அவர்களிடம் பணம், சொத்து ஆகியவற்றை இழந்துவிடுவார்.
ஒரு ஜாதகத்தில் 2-ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் இருந்தால், இளம்வயதில் அவர் பல பெண்களுடன் பழகுவார். அவர்களிடம் தன் சொத்துகளை இழந்துவிடுவார்.
ஒரு வீட்டிற்குத் தென்மேற்கு திசையில் வாசல் இருந்து, படுக்கையறை வடகிழக்கில் இருந்து, அந்த படுக்கையறையின் வாசல் தென்மேற்கில் இருந்து, படுக்கை வடகிழக்கில் இருந்தால், அதில் படுப்பவர் தன் சொத்துகளைப் பெண்களிடம் இழந்துவிடுவார்.
ஒரு வீட்டிற்குப் பிரதான வாசல் தென்கிழக்கில் இருந்து, அந்த வீட்டின் படுக்கையறை வடமேற்கு திசையில் இருந்து, அந்த அறைக்கு தென்கிழக்கு வாசல் இருந்து, அந்த வீட்டின் மேற்கு திசை காலியாக இருந்தால், அங்கு இருப்பவர் பெண் மோகத்தால் பணம், பெயர், புகழ் அனைத்தையும் இழப்பார்.
பரிகாரங்கள்
தினமும் சிவாலயத்திற்குச் சென்று, சிவனுக்கு தயிர், பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும். சிவப்பு மலர் வைத்துப் பூஜைசெய்ய வேண்டும்.
தன் குலதெய்வத்தை தினமும் வணங்கவேண்டும்.
தினமும் நீரில் சர்க்கரை கலந்து, அரசமரத்திற்கு வார்ப்பது நல்லது.
கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும்.
தெற்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
வீட்டிற்குத் தென்மேற்கு திசையில் வாசல் இருந்தால், அதை மாற்றிவிட வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று, அங்கு இரண்டு தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும்.
தினமும் மனதிற்குள் ராமநாமத்தை ஜெபிக்கவேண்டும்.
சனிக்கிழமை ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடுதல் நல்லது.
இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் அலைபாயும் மனம் அடங்கும். பிறரிடம் ஏமாறவேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
செல்: 98401 11534