திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிக இன்றியமையாததாக இருக்கின்ற நிலையில், அது அவரவருக்கு எவ்வாறு வாய்க்கும் என்பதை ஜாதகம் வாயிலாக மிக விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும். கடந்த இதழ்களில் பல நுணுக்கங்களைப் பார்த்துவிட்டோம். மேலும் சில விவரங்களையும் இங்கு காணலாம்.

marriage

திருமணத்தால் நன்மை

திருமணம் நடக்கும்வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்த பலர் திருமணத்திற் குப்பின் வசதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வார்கள். ஏழாமிடத்ததிபதி 2, 5, 9, 11 ஆகிய இடங்களில் இருந்தாலும்; 7-ஆமிடத்திற்கு 2, 5, 9, 11 ஆகிய அதிபதி களின் பார்வை, சேர்க்கை மற்றும் சுபகிரகப் பார்வை ஆகியவை இருந்தாலும் கணவன்- மனைவிக்கு யோகம் தரும். ஏழாமதிபதி, சுக்கிரன் உச்சம் பெறுதல் துணைவரால் யோகமே. ஏழாமதிபதி பத்தில் அல்லது பத்தாமதிபதி ஏழில் இருப்பது- துணைவரால் தொழிலில் லாபம் ஏற்படும். ஏழாமதிபதி 11-ல் இருக்க, குரு, கேது இணைந்த, பார்த்த ஜாதகருக்கு திருமணத்தால் கோடீஸ்வர யோகம் கிட்டும். ஏழாமிடம், ஏழாமதிபதியுடன் சுபகிரக சம்பந்தம் ஏற்பட்டால் திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.

Advertisment

திருமணத்தால் தீமை

சிலர் திருமணம் முடியும்வரை சுகவாசி யாக இருப்பர். திருமணத்திற்குப்பின் கஷ்டப்படுவார்கள். "உன்னைத் திருமணம் செய்ததால் நான் கஷ்டப்படுகிறேன்' என்று சண்டையிட்டுக் கொள்வர். காரணம் ஏழாமதிபதி, 3, 6, 8, 12-ல் மறைவு பெறுவதும், சுபகிரகப் பார்வையின்றி இருப்பதும்தான். ஏழாமதிபதியுடன் பாவ கிரகச் சேர்க்கை, பார்வை, அஷ்டமாதிபதி பார்வை,பாதகாதிபதி தசை, 3, 6, 8, 12-க்குடையவரின் தசை தீய பலன்களைக் கொடுத்து இல்லற வாழ்க்கையைக் கெடுக்கிறது. இத்தகைய அமைப்புகொண்ட ஜாதகர்கள் யாரைத் திருமணம் செய்தாலும் இதே நிலைதான். ஏழில் நீச கிரகங்கள் இருப்பது, ஏழாமதிபதி நீசமாகவோ, நீசம்பெற்ற கிரகங்களுடனோ இருப்பது திருமணத்தில் நஷ்டத்தையே தரும். முதல் காதல், முதல் திருமண வாழ்க்கை பலருக்கு பாதிப்பைத் தருவதற்குக் காரணம், ஏழாமிடம் கெட்டுப்போவதால்தான். ஏழாமிடம், ஏழாமதிபதி பாவகிரக சம்பந்தம் பெற்றுவிட்டாலே திருமண வாழ்க்கை தொல்லை மிகுந்ததாகவே இருக்கும்.

தாமதத் திருமணம்

Advertisment

"நான் பெண் பார்த்து வந்த பிள்ளை களுக்கெல்லாம் உடனே திருமணமாகிறது. எனக்கு மட்டும் தாமதமாகிறது' என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். அதற்குக் காரணம் ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்புகளே. அவர்கள் இளமையில் திருமணம் செய்யக்கூடாது. செய்தால் களத்திர தோஷமாகிவிடும். ஏழாமதிபதி நீசம்பெற்றலோ, ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் சேர்ந்திருந்தாலோ அல்லது ஏழாமிடத்தைப் பார்த்தாலோ, பாதகாதிபதி இணைந்தாலோ, பார்த்தாலோ நீசகிரகத் தொடர்பிருந்தாலோ தாமதத் திருமணம்.

ஆண் ஜாதகத்தில் 4, 10-ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் தாமதத் திருமணம்தான். சுக்கிரன், புதன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருக்க, அதை சுப கிரகங் கள் பார்த்தால் வயோதி கக் காலத்தில் திருமணம் நடைபெறும். பெண் ஜாதகத்தில் 4, 10-ஆமிடங் களில் சூரியன் இருந்தால் தாமதத் திருமணமே. லக்னத் திற்கோ, சந்திரனுக்கோ, செவ்வாய்க்கோ 2, 4, 7, 12 ஆகிய ஸ்தானங்களும்; அந்த வீட்டு அதிபதிகளும் கெட்டிருந்தால் அப் பெண்ணிற்குத் திருமணம் நடக்குமா என்பதே சந்தேகம்தான். லக்னத்தில் சூரியன், சுக்கிரன், கேது; ஏழாமிடத்தில் செவ்வாய், ராகு உள்ள ஜாதகிக்குத் திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டுவிடும். நாற்பது வயதிற்குமேல் திருமணம் செய்வதுதான் உத்தமம்.

திருமணம் இல்லை

1, 2, 7, 8 ஆகிய ஸ்தானங்கள் ராகு- கேது வினால் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன பாடுபட்டாலும் உரிய காலத்தில் திருமணம் நடக்காது. ஏழாமிடத்தில் சூரியன், கேது; ஏழாமதிபதி 6, 8, 12-ல் மறைந்தால் திருமணம் நடக்காது. சுபகிரகப் பார்வை படாமல், ராகு- கேதுக்களுக்குள் சுபகிரகங்கள் அடைபட்டு காலசர்ப்ப தோஷம் இருந்தாலோ, எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானம் கெட்டு சூரியன், சனி சேர்ந்து அல்லது பார்வைபட்டாலோ திருமணம் நடைபெறாது. ஆண்கள்- பெண்கள் ஜாதகத் தில் ஏழாமிடத்தில் சூரியன், செவ்வாய், சனி, கேது சம்பந்தம், பெண்களுக்கு எட்டாமிடத்தில் இதேபோல் இருந்தால் திருமணம் நடக்காது. திருமண வயதில் தீமையான தசாபுக்தி நடந்தாலும் திருமணம் நடக்காமல் போகும்.

உறவில் திருமணம்

ஏழில் சூரியன், ஏழாமதிபதியுடன் சூரியன் இருந்தால் தந்தைவழியில் திருமணம் நடைபெறும். ஏழில் சந்திரன் இருந்தால் தாயார்வழியில் திருமணம் நடைபெறுகிறது. ஏழாமிடத்ததிபதி ஏழில் இருந்தால் உறவில் திருமணம் நடக்கும். ஏழாமிடத்ததிபதி ஐந்தில் அல்லது ஐந்தாமதிபதி ஏழில் இருந்தால் மாமன், தாயுடன் பிறந்தவரின் மகன் அல்லது மகளைத் மணம் செய்வார்.

செவ்வாய் ஏழாமிடத்தில் அல்லது ஏழாமதிபதிக்கு களத்திர காரக கிரகத் தொடர்பிருந்தாலும் திருமணம் உறவில் முடியும். பெண்ணின் ஜாதகத்தில் சந்திரனுக்கு மூன்றாம் அதிபதியோ, ஏழாம் அதிபதியோ செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் அல்லது ஏழாமிடத்தில் இருந்தால் தன் தாயின் தம்பி- அதாவது தாய்மாமனை மணப்பர் அல்லது அத்தை மகனை அல்லது நெருங்கிய உறவினரை மணப்பர்.

லக்னத்தில் சனி

அல்லது ஐந்தில் சனி இருந்து ஏழாமிடத்தைப் பார்த்தாலும், ஐந்தாமதி பதி பதினொன்றில் இருந்து, ஐந்தாமிடம் வலுப்பெற்றாலும் நெருங்கிய உறவினரை மணப்பர். சுபகிரக வலுப்பெற்றால் கூட்டுக் குடும்பமாகவே வாழ்வர். ஏழில் புதன் இருப்பவர்கள் தாய்மாமன், அத்தை மகன், அக்காவழி உறவினரையே மணப்பர். ஏழில் ரத்த சம்பந்தபட்ட கிரகமான செவ்வாய், சுக்கிரன், ஏழாமதிபருடன் இருந்தாலும் நெருங்கிய உறவில் திருமணம் கூடும். குடும்ப ஸ்தானமான இரண்டு, உறவினரைக் குறிக்கும் நான்காம் ஸ்தானம் சம்பந்தப் பட்ட 2, 4, 7-ஆமதிபதிகள் ஒன்றுக் கொன்று இணைந்து, பார்த்திருந்தால் உறவிலேயே திருமணம் நடக்கும். சகோதர- சகோதரியைக் குறிக்கும் மூன்றாமதிபதி ஏழாமிடத்துடன் எதாவது ஒருவகையில் சேர்ந்தாலும் உடன்பிறந்தவர் உறவில் மற்றும் அத்தை மகன், மகளை திருமணம் செய்ய நேரும்.

அந்நியத்தில் திருமணம்

அந்நியத்தில் திருமணத்தை ஏழாமதிபதி நின்ற இடத்தின் வலுத்தன்மையைப் பொருத்தே அறியமுடியும். காதல், கலப்பு மணம் செய்யும் விதிமுறைகள் அந்நிய திருமணத்தை உறுதிசெய்யும். குருபலம் இருப்பவர்களுக்கு வீட்டில் பார்த்து முறையாகத் திருமணம் செய்து வைப்பர். சனி பார்வை பெற்றால், திருமணத்திற்கு முன்பே அறிமுகமான அந்நியத்தில் திருமணம் செய்வர். தோஷங்கள் இருந்தால், உறவினர் கள் கலந்துகொள்ளாத திருமணமாகவும், சுபத்தன்மை பெற்றால் முறையான அனைத்து சொந்தங்களும் கலந்துகொள்ளும் அந்நிய சம்பந்த திருமணத்தை செய்துவைப்பர். தோஷங்களால் தாமதத் திருமணம் நடந்தா லும், அந்நிய சம்பந்தமாக நல்ல வரன் அமைந்து, நல்லமுறையில் நடைபெறும். செவ்வாய், சனி பாதிப்பு பெற்று ராகு- கேது தோஷமானாலும், சுபகிரக வலுப்பெற்றால் ஜாதி, இனம், மொழி, நாடு கடந்து, அந்நியத் தில் முறையாக பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும்.

திருமணம் நடக்கும் நேரம்

ஏழாமிடத்தில் நிற்கும் கிரகம், ஏழாமதிபதி கிரகம், ஏழாமதிபதியுடன் இணைந்த, பார்த்த கிரகங்கள், இரண்டாமதிபதி போன்ற கிரகங்களில் எந்த கிரகம் வலுப்பெற்றுள் ளதோ அந்த கிரகத்தின் தசாபுக்திகளில் திருமணம் நடைபெறும். வருடாவருடம் கோட்சாரத்தில் குரு அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 10, 11-ஆம் இடங்களில் வரும்போது திருமணத்திற்கான வாய்ப்பு எல்லாருக்கும் வரும். ஆனால் சுய ஜாதகத்தில் தசாபுக்தி களும் சாதகமாக இருந்தால்தான் திருமணம் நடக்கும்.

எந்த திசையில் வரன்?

ஏழாமிடத்தில் நின்ற கிரகங்கள், ஏழாமதிபதி கிரகம், ஏழாமதிபதி கிரகம் நின்ற நட்சத்திர அதிபதி கிரகத்தின் திசை, ஏழாமதிபதியுடன் இணைத்த, பார்த்த கிரகங்களில் எது வலுப்பெற்றுள்ளதோ, அந்த கிரகத்தின் திசையே ஜாதகருக்கு வரனமையும் திசையாகும். சூரியனுக்கு கிழக்கு, சந்திரனுக்கு தென்கிழக்கு, செவ்வாய்க்கு தெற்கு, புதனுக்கு வடகிழக்கு, குருவுக்கு வடக்கு திசைகளிலும்; சுக்கிரனுக்கு வசிக்கும் ஊரில் அல்லது கிழக்கு திசையிலும்; சனிக்கு மேற்கிலும்; ராகுவுக்கு தென்மேற்கிலும்; கேது வுக்கு வடமேற்கு திசையிலும் வரன் அமையும்.

வரன் பார்க்கும்போது சிலர் தற்சமயம், குடியிருப்பது வடக்கு திசையில் இருப்பது போல இருந்தாலும், சொந்த ஊர் தெற்காக இருக்கும். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரனின் உடன்பிறந்தவர்கள்

ஜாதகர் திருமணம் செய்யப் போகிறவரின் உடன்பிறந்தவரைக் கண்டறிய- ஐந்தாமிடம் மூத்த சகோதரத்தையும், ஒன்பதாமிடம் இளைய சகோதரத்தையும் குறிக்கும். ஐந்தில் இருக்கும் ஐந்தாமதிபதி கிரகத்தைப் பொருத்து மூத்த சகோதரர் இருக்கிறாரா என்பதைக் கண்டறியலாம். ஆண் கிரகம் இருந்தால் ஆணாகவும், பெண்கிரகம் இருந்தால் பெண்ணாகவும் இருப்பர். கிரகம் நின்ற நட்சத்திர பாதாசார அமைப்பின்படிகூட சிலருக்குத் துல்லியமாக இருக்கிறது. அதேபோல் இளைய சகோதரத்தை ஒன்பதாமிட கிரகத்தைப் பொருத்துத் தெரிந்துகொள்ளலாம். இதனைத் துல்லியமாகக் கண்டறிய கிரக வலுத்தன்மையை சரியாகக் கணக்கிட்டால் தெரிந்துகொள்ளலாம்.

ஜாதகரின் ஏழாமிடத்திற்குப் பத்தாமிடத் தைக் கொண்டு, வரும் வரனின் தொழில் என்ன என்பதைக் கண்டறியலாம். அதாவது ஜாதகரின் நான்காமிடத்தைப் பொருத்துதான் வரும் கணவர் அல்லது மனைவி செய்யும் தொழிலைக் கண்டறியலாம். சுபகிரகம் வலுப்பெற்றால் நன்கு படித்த, நல்ல பணியில் இருக்கும் வரன் அமையும். குரு, செவ்வாய் இணைந்த- பார்த்த குருமங்கள யோகத் தொடர்பு அரசுப் பணியிலுள்ள வரனைத் தரும். நான்கில் ராகு இருக்கப்பெற்றால், பெரும்பாலும் மக்கள் பாதுகாப்புத் துறைகளான இராணுவம், காவல்துறை வரன் அமைகிறது. சுபவலுப் பெற்றால் சி.பி.ஐ., கலெக்டர் போன்ற துறைகள்; சூரியன் சேர்க்கை பெரிய பதவி; செவ்வாய் அல்லது கேது தொடர்பு மருத்துவத் துறை என அமைகிறது.நான்காமிடம் நன்றாக இருந்தால், வரன் நல்ல வேலையில் இருந்து சம்பாதிக்கும் துணைவராகக் கிடைத்து, சுகவாசியாக வாழ்வர். நான்காமிடம் கெட்டால் சுகஸ்தானம் கெட்டுவிட்டது. எனவே ஊதாரி கணவர் கிடைப்பார்.

வரனின் நிறம்

ஒவ்வொருவரும் தனக்கு வரும் துணைவர் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கவேண்டு மென நினைப்பது நம் நாட்டில் சகஜம். ஏழாமிடத்தில் ஏழாமதிபதி, ஏழாமதிபதியின் சாரம், ஏழாமதியுடன் சனி, ராகு சம்பந்தம் இருந்தால் கண்டிப்பாக கணவன் அல்லது மனைவி கருப்பாக இருப்பார். குரு, சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது ஏழாமதிபதியுடன் மேற்கண்ட ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தப் பட்டால் சிவப்பு நிற வரனே அமையும். சந்திரனுடன் சனி, ராகு சாரம் பெற்ற ஏழாமிட கிரகங்கள் கருப்பு நிற வரனையே தரும். சுபகிரகச் சேர்க்கை, பார்வை இருந்தால் கொஞ்சம் புதுநிறமாக, கலையாக இருப்பர்.

பல தாரம்

ஏழாமதிபதி இளையதார ஸ்தானமான பதினொன்றில் இருந்து செவ்வாய், சனி சேர்க்கைமற்றும் பாவகிரக சம்பந்தம் ஏற்பட்டால் திருமண முறிவு, பாதிப்பு ஏற்படும். செவ்வாய் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சுக்கிரனுடன் சேர்ந்தாலோ இருதாரயோகம் தரும். 11-ல் ஏழாமதிபதி நின்று, இரண்டாமிடத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் மூன்று தாரம் ஏற்படும். பதினொன்றாம் அதிபதி ஏழில் நின்று சுக்கிரன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் பல தாரம் கொடுக்கும். சுப- அசுபகிரகப் பார்வையைப் பொருத்து தார தோஷத்தைக் கணக்கிடலாம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...