திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, தனக்கு வரப்போகும் கணவன் நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும்; நன்கு உழைக்கக்கூடியவராக இருக்க வேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஒரு பெண் நினைப்பாள். ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு நேரெதிராக, ஆண் வேலை எதுவும் செய்யாமல்- சிறிதுகூட உழைக்காமல்- வீண் கதைகளைப் பேசிப் பொழுதைப் போக்கிக்கொண்டு, கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றிக் கொண்டிருந்தால் ஒரு பெண்ணின் மனம் எந்த அளவுக்குக் கவலை கொள்ளும்?

Advertisment

இதற்குக் காரணம்- ஒரு ஆணின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களே.ஆணின் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் உச்சமாக இருந்து, லக்னாதிபதி சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், அந்த மனிதர் திருமணமான பிறகு, தன் பூர்வீக சொத்துகளை அழிப்பார். தேவையற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார். மனைவியுடன் சந்தோஷமாக இருக்கமாட்டார்; வீணான தொல்லைகளைத் தருவார்.

லக்னத்தில் செவ்வாய், 7-ல் சனி இருந்து, சந்திரன் பலவீனமாக இருந்தால், அவர் தன் மனைவிக்கு சந்தோஷம் தரமாட்டார். வீணான கதைகளைப் பேசி பொழுதைக் கழிப்பார்.

செவ்வாய், சனி, சூரியன் 4, 7, 12-ல் இருந்தால் அந்த மனிதர் எந்தக் காரியத்தையும் ஒழுங்காகச் செய்யமாட்டார். எப்போதும் முரட்டுத்தனமாகப் பேசி எல்லாருடனும் சண்டை போடுவார். சோம்பேறியாக இருப்பார். மனைவியுடன் உறவு சரியாக இருக்காது.

Advertisment

verma

லக்னத்தில் நீசச் செவ்வாய், 4-ல் நீச சூரியன் இருந்தால், தேவையற்ற விஷயங்களை அவர் பேசி, வாழ்க்கையையே நரகமாக்கிவிடுவார். பிறரைக் குறைகூறிக்கொண்டு, அவர் எந்த வேலைகளையும் செய்யாமலிருப்பார். மனைவியுடன் சண்டை போடுவார்.

சுக்கிரன், செவ்வாய், சூரியன் நீசமாக இருந்து, 2-ல் சனி இருந்தால், அந்த மனிதர் சந்தோஷமாக இருக்கமாட்டார். பலருக்கு மறுமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியுடன் சீரான உறவிருக்காது.

Advertisment

ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ல் சனி இருந்து, அதை செவ்வாய் பார்த்தாலும், 7, 8, 11-ல் செவ்வாய் இருந்து சனியைப் பார்த்தாலும் அவருக்கு மனைவியுடன் நல்லுறவு இருக்காது. மறுமணம் செய்துகொண்டாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்காது.

தகுதியற்ற கணவனைப் பெற்ற ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ல் சனி, 3-ல் சந்திரன், 7-ல் செவ்வாய், சுக்கிரன் இருந்தால், அவருக்கு கணவனுடன் சரியான உறவிருக்காது. சில பெண்கள் மறுமணம் செய்ய நேரிட்டாலும் சந்தோஷம் இருக்காது.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சந்திரன், சனி சேர்ந்து லக்னம் அல்லது 4-ல் இருந்து, 12-ல் கேது இருந்தால், அவர் பல பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டிருப்பார். அதனால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது.

லக்னத்தில் புதன், 4-ல் சந்திரன், 8-ல் சுக்கிரன்- செவ்வாய், 10-ல் சனி இருந்தால் அவருக்கு மறுமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்போதும் மனைவியுடன் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கமாட்டார்.

தகுதியற்ற கணவரைப் பெற்றிருக்கும் பெண்ணின் ஜாதகத்திலுள்ள 4-ஆம் பாவத்திற்கும், 7-ஆம் பாவத்திற்கும் உரிய அதிபதிகள் கெட்டுப் போயிருப்பார்கள். அதிலும் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல கணவன் கிடைக்கமாட்டான்.

பரிகாரங்கள்

கணவனால் சந்தோஷமில்லாத பெண்கள் தினமும் காலையில் சூரிய பகவானை வணங்கி, அவருக்கு நீர் வார்க்க வேண்டும்.

துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, சிவப்பு மலர்களால் வழிபடவேண்டும்.

வெள்ளிக்கிழமை விரதமிருக்க வேண்டும். அன்று துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி, பூஜை செய்ய வேண்டும்.

படுக்கையறையின் தென்மேற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது. வீட்டின் தென்மேற்கு திசையில் சமையலறை இருக்கக்கூடாது.

வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப் பட்டிருக்கக் கூடாது.

பெண்கள் திங்கட்கிழமை சிவன் ஆலயத்திற்குச் சென்று, சிவப்பு மலரை வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை தலைகுளிக்கக்கூடாது.

செவ்வாய்க்கிழமை விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, அவரை நான்குமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும்.

செல்: 98401 11534