ஒரு வேலையில் சேர படித்த சான்றிதழ், அனுபவம் போன்றவை தேவையென்பது அடிப்படை விஷயம். ஆனால் சேர்ந்த வேலையில் நிலைத்துநிற்க பல விஷயங்களும் தேவைப்படுகின்றன. அதில் முக்கியமானது, வேலைக்குச் செல்லும் நபர்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகள்தான்.
நாம் வேலை செய்யுமிடத்தில் நமது இயல்பான குணாதிசயங்களை மறைத்துக்கொண்டு- அதாவது நியாயம் பேசவேண்டிய இடத்தில் வாய்க்கு பூட்டுபோட்டுக் கொண்டு, கோபப்படவேண்டிய இடத்தில் முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, போலியான புன்னகையுடன் இருக்க நேர்கிறது. பலரும் இவ்வாறுதான் தங்கள் பணியைச் செய்கிறார்கள்.
ஆனால் எல்லா விஷயங்களிலும் நியாயம் பேசிக்கொண்டு, கோபம் வந்தால் அதை வெளிப்படுத்திக்கொண்டு மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகி, வேலையைக் கெடுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி ரோஷப்பட்டு பாதிக்கப்பட்ட ஒரு உதாரண ஜாதகத்தை இங்கு காணலாம்.
இந்த ஜாதகர் மகர லக்னத்தில் பிறந்தவர். பொதுவாக இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நியாயம் பேசுவார்கள். இவருடைய லக்னாதிபதி சனி நியாயம், தர்மத்தைக் கடைப்பிடிப்பவர். லக்னாதி பதியான சனி லக்னத்தில் அமர்ந்து ஜாதகரின் குணாதிசயங் களுக்கு மேலும் வலுசேர்க்கிறார். போர்வீரரான செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் நியாயத்திற்குப் போராடும் நேரத்தில், எதிரிகளைக் கூர்மையான சொற்களால் தாக்குவார்.
இவருக்கு ஒரு நல்வாய்ப்பு, வாக்கு ஸ்தானத்திலுள்ள செவ்வாயை குரு ஏழாம் பார்வையால் பார்ப்பது தான். இவரது கூர்மையான பேச்சால் ஏற்படும் பாதிப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள குருவின் பார்வை உதவுகிறது. இத்தகைய குணாதிசயம் கொண்ட இந்த ஜாதகர் வேலையில் பல தடங்கல்களையும் இடமாற்றத்தை யும் சந்தித்து அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒருவருக்கு எப்போது ரோஷம் வருமென்றால், ஊதிய உயர்வு, பதவி உயர்வு தடைப்படும்போதும், செய்யாத தவறுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் மேலதிகாரிகளின் பழி விழும்போதும், உழைத்த உழைப் பைக் கண்டுகொள்ளாமல் செல்லும்போதும், தகுதி இல்லாதவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்போதும் ரோஷமும் கோபமும் வரும். சூரியன், செவ்வாய் ஆகிய இரு கிரகங் களின் ஆதிக்கம் மிகுந்திருப்பவர்கள் அதிகமாகக் கோபப்படுவார்கள். அதை கட்டுப்படுத்துவதுதான் வேஷம்.
நமக்குதான் இதுபோன்ற பிரச்சினை என்று எண்ணவேண்டாம். இது உலக மெங்கும் இருக்கிறது. நவநாகரிகமும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள ஜப்பானில், சில அலுவலகங்களில் வாரம் ஒரு நாள் முகமூடி அணிந்து வரச் சொல்கிறார்கள். அதற்குக் காரணம், யாரையும் பார்த்து போலி யாகப் புன்னகைக்க வேண்டியதில்லை.
சாலையில் அவசரமாக நாம் பயணித்துக் கொண்டிருக்கும்போது சிவப்புவிளக்கு நம்மைத் தடுத்தால் கோபம் வரும். ஆனால் அது போக்கு வரத்து விதி. நம் மேலதிகாரி நமக்குச் செய்வது காலக்கொடுமை. இதை ஜோதிடரீதியாகப் பார்த்தால் ஆறு, எட்டுக்குடைய தசையோ புக்தியோ வரும்பொழுது சிவப்பு விளக்கு எரியும். நட்பு கிரகங்களின் காலம் வரும்பொழுது ஆரஞ்சு விளக்கு எரியும்; நம் மேலதிகாரியின் தீயபார்வை விலக ஆரம்பிக்கும். யோககாரகன் காலம் வரும்பொழுது பச்சை விளக்கு எரிந்து; நமக்கு வழிவிடும். மேலதிகாரியின் வேலை மாற்றமோ அல்லது நம் தகுதிக்கேற்ற பதவி உயர்வோ கிட்டும். நல்ல நேரத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்; ஏமாற்றம் வராது.