ஜோதிடத்தில் புதனுக்கு மீனம், சூரியனுக்கு துலாம், செவ்வாய்க்கு கடகம், குருவுக்கு மகரம், சுக்கிரனுக்கு கன்னி, சனிக்கு மேஷம், சந்திரனுக்கு விருச்சிகம், ராகு- கேதுவுக்கு ரிஷபம் நீசவீடுகள் என்று சொல்லப்பட்டுள்ளன. ஒரு உச்சம்பெறும் கிரகம் வீட்டிற்கு நேர் ஏழாம் வீட்டில் அதே கிரகம் நீசம் பெறும். உதாரணமாக மேஷத்தில் சூரியன் உச்சம். அதற்கு நேர் ஏழாம் வீடு துலாத்தில் சூரியன் நீசமடைகிறார். மேஷத்தில் சனி நீசம்; அதற்கு நேர் ஏழாம் வீட்டில் துலாத்தில் சனி உச்சம்.

Advertisment

நீசம் என்பது ஒரு கிரகம் தன் சுயவலுவை இழந்து பலன் குன்றிப்போவது. நீசபங்கம் என்றால் என்ன? பங்கம் என்றாலே பாதிக்கப்படுவது என்று பொருள். நீசம் பாதிக்கப்பட்டால் பலன்கள் எதிர்மறையாக நடைபெறும். சில ஜோதிடர்கள் உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நீசமானாலும் நீசபங்க ராஜயோகம் அடைந்துள்ளதாகக் கூறிவிடுவார்கள். நீசபங்க ராஜயோக தசை, புக்தி வரும்பொழுது ஜாதகர்கள் தனக்கு நல்லது நடைபெறும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள். ஒருசிலருக்கு நீசபங்க ராஜயோகம் இருந்தும், அந்த தசை, புக்தியில் மிகப்பெரிய நன்மைகள் நடைபெறாமல் போகும்.

நீசபங்க ராஜயோகம் அடைவதற்கு ஜோதிடத்தில் பலவிதிகள் உள்ளன.

● ஒரு கிரகம் நீச வீட்டில் இருக்கும்போது அந்த வீட்டிற்குரியவன் மற்றொரு ராசியில் உச்சம், ஆட்சி பெற்று லக்ன கேந்திரம், சந்திர கேந்திரம் பெற்றால் நீசபங்க ராஜயோகம். லக்ன கேந்திரத்தில் அடைந்தால் 100 சதவிகிதம் நீசபங்க ராஜயோகம். சந்திரகேந்திரத்தில் அடைந்தால் 50 சதவிகித நீசபங்க ராஜயோகம் அடைந்துள்ளதாக அர்த்தம்.

rajayogam

Advertisment

● ஒரு கிரகம் நீசம் அடையும்போது, நீசமடைந்த கிரகம் இருக்கும் வீட்டிற்குரியவன் நீசமடைந்த கிரகத்தைப் பார்த்தால் நீசபங்க ராஜயோகம்.

● ஒரு கிரகம் ராசியில் நீசமாகி, அம்சத்தில் அந்த கிரகம் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.

● ஒரு கிரகம் நீசமாகி, மற்றொரு கிரகம் நீசம் பெற்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் நீசபங்க ராஜயோகம்.

Advertisment

● ஒரு கிரகம் நீசமாகி, அவருடன் மற்றொரு உச்சம், ஆட்சிபெற்ற கிரகம் சேர்ந்தால் நீசபங்க ராஜயோகம்.

இதுபோன்று எண்ணற்ற நீசபங்க ராஜயோக விதிகள் உள்ளன.

உதாரணமாக, மிதுன லக்னத்திற்கு இரண்டாம் இடம் கடகத்தில் செவ்வாய் நீசம். அங்கு குரு உச்சம் பெற்றிருந்தால் நீசபங்க ராஜயோகம்.

ஆனால் இரண்டாம் இடத்தில் நீசம் பெற்ற செவ்வாய் இருப்பதால் பொருளாதாரம், தனவரவு பாதிக்கும். முதல்நாள் சட்டைப் பாக்கெட்டில் கைநிறைய பணம் இருக்கும். மறுநாள் பார்த்தால் பணம் குறையும் அல்லது பணம் இல்லாமல் போகும். டீ குடிக்கக்கூட காசு இல்லாமல் இருக்கும். பிறரிடம் டீ குடிப்பதற்கு காசு கேட்கும் அளவிற்கு அமைந்துவிடும்.

மிதுன லக்னத்திற்கு ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம் ஆகும்பொழுது எதிரிகள், நோய், கடன், வம்பு, வழக்கு ஏற்படாது. திடீரென்று கோபம் வந்தாலும் சாந்தமாகிவிடும்.

ராசியில் உச்சம் பெற்ற பத்தாம் அதிபதி குரு, அம்சத்தில் மகரத்தில் நீசம் பெற்றால் ஆரம்ப நிலையில் வேலை, தொழில் சிறப்பாக அமையும். பிறர் புகழும் அளவுக்கும், கண்திருஷ்டி ஏற்படும் அளவுக்கும் தொழில் சிறப்பாக அமையும். ஆனால் போகப்போக அதே தொழில், வேலை தள்ளாடும். பிறர் அவமானமாகப் பேசும் அளவுக்கு அமைந்துவிடும்.

ராசியில் நீசம்பெற்ற கிரகம் செவ்வாய் அம்சத்தில் உச்சம் பெற்றால் ஆரம்பநிலையில் ஜாதகருக்கு நோய், கடன், எதிரி, வம்பு, வழக்கு ஏற்படாது. ஆனால் போகப்போக ஜாதகருக்கு ஏதாவது ஒருவகையில் கடன், நோய், எதிரி, வழக்கு ஏற்பட்டுவிடும்; ஆரம்பத்தில் ஒருசிலர் புகழ்ந்து பேசுவார்கள். போகப்போக இகழ்ந்து பேசுவார்கள்.

நீசபங்க ராஜயோகத்தின் உண்மையான நிலவரம் என்ன? முதலில் நீசம் செய்யும்; பங்கம் ஏற்பட்டு பின்னால் ராஜயோகம் செய்யும். அது முன்பகுதியில் அல்ல. பிற்பகுதியில் தான் ராஜயோகம் செய்யும். நீசபங்க ராஜயோகம் முதலில் பலன் கொடுப்பதில் தள்ளாடும்; பின்னால் ராஜயோகம் செய்யும். எனவே நீசபங்க ராஜயோக தசை, புக்தி வந்தால் முதலில் அந்த தசை, புக்தியில் நல்ல பலன்கள் நடைபெறாது. பின்னால்தான் நல்லபலன்கள் கொடுக்கும்.

பொதுவாக திருமணப் பொருத்தத்தில் மணமகள்- மணமகன் இருவர் ஜாதகத்திலும் மேஷத்தில் சனி நீசம் பெற்ற ஜாதகத்தை கூடுமானவரை ஒதுக்குவதே நல்லது. சனி ஆயுள்காரகன், தொழில்காரகன் என்ற வகையில் வாழ்க்கை முழுவதும் தொழில், வேலை தள்ளாடும். சனி ஆயுள்காரகன் என்ற வகையில் ஆயுளில் பங்கம் ஏற்படும். சனி நீசபங்க ராஜயோகம் அடைந்தாலும் மேஷத்தில் சனி உள்ள ஜாதகத்தை ஒதுக்குவது நல்லது என ஜோதிட குருநாதர்கள் சொல்லிய ரகசியமாகும்.

ஜாதகத்தில் கிரகங்கள் நீசபங்க ராஜயோகம் அடைந்திருந்தால் முதலில் நீசம் செய்து பங்கம் ஏற்பட்டு கடைசியில் ராஜயோகம் அடையும்.

செல்: 98403 69513