உழைத்தால் மட்டுமே வாழ்வில் உயர்வடைய முடியும். அது தொழிலோ, உத்தியோகமோ எதுவாக இருந்தாலும் சரி. ஒருவர் இளம்வயதில் கல்வி கற்பதென்பது அவரின் அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். மேற்கல்வி என வரும்போது அவர் என்ன தொழில்செய்ய விருப்பப்படுகிறாரோ அதற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டியுள்ளது.
ஏதாவது ஒரு தொழில், உத்தியோகத்தில் ஈடுபட்டுப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். சிலருக்கு கற்ற கல்விக்கேற்ப தொழில், உத்தியோகம் செய்யும் யோகம் அமையும். அத்தகைய கல்வி கற்காதவர்களுக்கும் அனுபவரீதியாக தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
"பசித்திருப்பவனுக்கு மீனைக்கொடுக்காதே; மீன் பிடிக்க வலை வாங்கிக் கொடு' என்பார்கள். அதுபோல உழைக்காமல் பிழைக்க விரும்புபவர்களை எந்த வகையிலும் ஊக்குவிக்கக்கூடாது. தொழில் செய்து பிழைப்பவர்களில் பல வகை உண்டு. சிலர் என்னதான் படித்திருந்தாலும் பூர்வீக வழியில் செய்யக்கூடிய குலத்தொழிலைதான் செய்வார்கள்.
சிலர் தன் சொந்த முயற்சியாலேயே முன்னேறி ஒரு தொழிலை அமைத்துக்கொள்வார்கள். சிலருக்குப் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று தொழில், உத்தியோகம் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பு அமையும். சிலருக்குக் கூட்டுத்தொழில் செய்து சம்பாதிக்கும் வாய்ப்பும் உண்டாகும். ஒருவர் சம்பாதிக்க தொழில்தான் செய்யவேண்டும் என்பதில்லை. உத்தியோகம் செய்தும் முன்னேற்றமடைய முடியும். தொழில், உத்தியோகம் என்பது பல்லாயிரம் வகைகளில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களில், பலம்பெற்ற கிரக நிலைகளின் காரகத்துவத்திற்கேற்ப ஒவ்வொருதுறையிலும் சாதித்து சம்பாதிக்க முடியும்.
ஒருவரின் ஜீவன அமைப்புப் பற்றி ஜோதிடரீதியாக ஆராயும்போது, ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் வீடும், 10-ஆம் அதிபதியும், 10-ஆம் வீட்டில் அமையப் பெற்ற கிரகமும், 10-ஆம் அதிபதி அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறாரோ அந்த கிரகமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேற்கூறிய கிரகங்களில் எந்த கிரகம் அதிக பலம்பெறுகிறதோ அந்த கிரகத்திற்குரிய துறையில் ஜாதகர் பிரகாசிக்கும் யோகம் உண்டாகும்.
சூரியன்
ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் வீட்டில் வலுப்பெற்ற கிரகமாக சூரியன் இருந்தால் பல சாதனை படைக்கும் அமைப்பு, அதிகம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சூரியன் 10-ல் பலமாக அமைந்திருந்தால் அரசு, அரசாங்கத் துறைகளில் கௌரவப்பதவி, வங்கிப்பணி, மருத்துவத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறைகளில் அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும், நல்ல நிர்வாகத் திறனும் உண்டாகும்.
சூரியன் வீடான சிம்மத்திலும் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சிம்மத்தில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்றால், செய்யும் தொழிலி−ல் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களால் பிரச்சினை, தேவையற்ற இன்னல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, சட்டச் சிக்கல்கள் போன்றவை உண்டாகும். சூரியன் வலுப்பெற்று அமைந்து அதன் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் தொழில், உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். அதுவே சூரியன் பலமிழந்து அமைந்துவிட்டால் அக்காலங்களில் எதிர்பாராத இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
சந்திரன்
சந்திரன் 10-ல் வலுப்பெற்று அமைந்தால் பயணத்தொடர்புடைய துறை, நீர் சம்பந்தப்பட்ட துறை, கடல்சார்ந்த துறை, உணவகத் தொழில், எண்ணெய் சம்பந்தப்பட்டவை, பண்ணைத் தொழில், ஏற்றுமதி- இறக்குமதி சம்பந்தப்பட்டவை, அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்கள், விலை உயர்ந்த துணி வகைகள், உப்பு சம்பந்தப்பட்ட தொழில், மலைப் பகுதிகளில் பணிபுரியும் அமைப்பு, தாய்வழியில் தொடரும் தொழில்களைச் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.சந்திரனின் வீடான கடகத்தில் சுபகிரகங்கள் அமைவது நல்லது. சந்திரன் பலம் பெற்று தசை நடைபெற்றால் தொழில், உத்தியோக ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்பு உண்டாகும். நல்ல வருமானத்தையும் ஈட்ட முடியும். அதுவே சந்திரன் பலமிழந்து அதன் தசா புக்திகள் நடைபெற்றால், தேவையற்ற மனக்குழப்பங்களால் தொழி−லில் இடையூறு, லாபங்கள் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
செவ்வாய்
செவ்வாய் 10-ல் பலம்பெற்றிருந்தால் பூமி, மனை, ரியல் எஸ்டேட், தோட்டம், கட்டட வல்லுனராகக்கூடிய அமைப்பு, ராணுவம், பாதுகாப்புத்துறை, போலீஸ், நிர்வாகத்துறை, வழக்கறிஞர் துறை போன்றவற்றில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு உண்டாகும். மற்றும் மருத்துவத்துறை, அறுவை சிகிச்சைப் பிரிவுகள், உளவுத்துறை, சிறைத்துறைவட்டாட்சியர், மின்சாரப் பொறியாளர் போன்ற துறைகளில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும். அணு உலைப்பணி, தபால்துறை, தூதரகப் பணி, சர்க்கஸில் மிருகங்களை பழக்குபவர், இரும்பு வெட்டுபவர், தீப்பெட்டித் தொழில், மண்ணெண்ணெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவராகவும் இருக்கக்கூடிய வாய்ப்பு அமையும்.செவ்வாய் பலம்பெற்று அமைந்து, செவ்வாய் தசை நடைபெற்றால் எந்தவொரு துறையிலும் நல்ல நிர்வாகத்திறமையுடன் செயல்பட்டு சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் பலமிழந்திருந்தால் பகைவர்களின் தொல்லைகள் அதிகரித்து தொழில் நஷ்டமடைய நேரிடும்.
புதன்
புதன் 10-ல் பலம்பெற்று அமையப்பெற்றால் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் பணி, கணக்கர்கள், கவிஞர்கள், எழுத்தாளர், பேச்சாளர், மற்றவர்களுக்கு உபதேசிக்கும் பணி, கணிதத்துறை, ஆடிட்டர், தபால்துறை, இன்சூரன்ஸ் துறை, செய்தி சேகரிக்கும் பத்திரிகைத்துறை, எடிட்டர்கள், பதிப்பாளர் பணி, ஜோதிடத்துறை, பெயின்டிங், பிரின்டிங், புத்தக வர்த்தகம், வரைகலைப்பணி போன்றவற்றில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும். தாய்வழி மாமன்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் வாய்ப்பும் உண்டாகும்.புதன் வலுப்பெற்று அமைந்து, அதன் தசை நடைபெறும்போது தொழில், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடையமுடியும். புதன் வலுவிழந்து அதன் தசை நடைபெற்றால் உடன்பணிபுரிபவர்கள் மற்றும் உடன் பழகுபவர்களாலேயே தொல்லை ஏற்படும்.
குரு
குரு 10-ல் வலுப்பெற்று அமையப்பெற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவ ஆலோசகர்கள், வரித்துறை, கல்வித்துறை, அரசியல் அமைப்பு உருவாக்குதல், ஆலய அறப்பணிகள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தகத்துறை, சட்டம்- ஒழுங்கு பாதுகாத்தல், வங்கிகளில் பணத்தைக் கையாளும் துறை, சமயத் தொடர்புடைய துறைகள், ஜோதிடத்துறை, அறக்கட்டளைப் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.குரு பலம்பெற்றிருந்து அதன் தசை புக்திகள் நடைபெறும் காலங்களில் தாராள தனவரவும், செய்யக்கூடிய தொழில், உத்தியோகத்தில் உயர்பதவிகள் தேடிவரக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குரு பலமிழந்து தசை நடைபெற்றால் தைரியமற்ற நிலை, தேவையற்ற அவப்பெயர்களை சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி, வீண்பழிச்சொற்கள் போன்ற சாதகமற்ற பலன்கள் உண்டாகும்.
சுக்கிரன்
சுக்கிரன் 10-ல் பலம்பெற்று அமைந்திருந்தால் கலை, இசை, நடிப்பு, நாட்டியம், சங்கீதத்துறை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பும், தங்க நகைகள் விற்பனை, ஆடம்பர ஆடைகள் சம்பந்தப்பட்ட தொழில், மாளிகைகள் கட்டும் பணி, பட்டுத்துறை, பால் துறை, வாசனைப் பொருட்கள் விற்பனை, குதிரைப் பந்தயம், மருந்து விற்பனை போன்றவற்றில் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.சுக்கிரன் வலுப்பெற்று அமைந்து தசை நடைபெற்றால் தொழில்ரீதியாக வாழ்வில் பல வகைகளில் முன்னேற்றங்கள் தேடிவரும். செல்வம், செல்வாக்கு பெருகும். சுக்கிரன் பலமிழந்து தசை நடைபெற்றால் தொழில்ரீதியாக இழப்புகள், பெண்களால் அவமானங்கள் ஏற்பட்டு நஷ்டம் உண்டாகும்.
சனி
சனி 10-ல் பலம்பெற்று அமைந்திருந்தால் விவசாயத்துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, பஞ்சாயத்துத்துறை, மருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, இரும்பு, ஈயம் மற்றும் எண்ணெய் வியாபாரம், நிலம், சொத்து, வர்த்தகக் கூட்டுறவுத்துறைகளில் பணிசெய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். காவலாளி, தோட்ட வேலை, மாட்டுத் தொழுவத்தில் பணி, செருப்பு தைத்தல் போன்ற தொழில்களைச் செய்ய நேரிடும்.சனி பலம்பெற்றிருந்தால் தொழிலிலில் நிறைய சம்பாதிக்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும். அதன் தசாபுத்திக் காலங்களில் மேன்மேலும் உயர்வு உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் தேவையற்ற பழக்கவழக்கங்களால் திருடி சம்பாதிக்கும் சூழ்நிலை, அடிமைத்தொழில், வாழ்நாள் முழுவதும் கஷ்ட ஜீவனம் நடத்தக்கூடிய நிலை உண்டாகும்.
ராகு
ராகு 10-ல் அமையப்பெற்றால் விண்வெளிப் பயணம் செய்யும் துறை, வானொலி, சர்க்கஸ் போன்ற துறை, தெய்வீகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால், ராகு நின்ற வீட்டதிபதி பலம்பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் ராகு தசாபுக்திக் காலங்களில் எக்கிரக வீட்டில் உள்ளரோ அக்கிரகத்தின் தன்மைக்கேற்ப தொழில், உத்தியோக ரீதியாக சம்பாதிக்கும் யோகம் சிறப்பாக அமையும். ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்து ராகு பாவ கிரகங்களின் பார்வை, சேர்க்கைப் பெற்றிருந்தால் இழிவான வேலைகளைச் செய்யக்கூடிய அமைப்பு, அடிமைத் தொழில், தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி சம்பாதிக்கவே முடியாமல் வாழ்க்கையே பாழாகும்.
கேது
கேது 10-ல் இருந்தால் விஞ்ஞானம், வெளிநாட்டு வர்த்தகம், மெஸ்மரிசம், கட்டப் பஞ்சாயத்துமூலமும், ஆன்மிக, தெய்வீகக் காரியங்களிலும் ஈடுபட்டு சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும் அமையும். ராகுவுக்குக் கூறியதுபோல கேதுவுக்கும் சொந்தவீடு இல்லை என்பதால் கேது நின்ற வீட்டதிபதி பலம்பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் கேது தசாபுக்திக் காலங்களில் தொழில், உத்தியோக ரீதியாக சம்பாதிக்கும் யோகம் சிறப்பாக அமையும். கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்து பாவ கிரகங்களின் பார்வை, சேர்க்கைப் பெற்றிருந்தால் அக்கிரகங்களின் தன்மைக்கேற்ப இழிவான வேலைகளைச் செய்து சம்பாதிக்கக்கூடிய அமைப்பைக் கொடுக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.
செல்: 72001 63001