பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
சென்ற இதழ் தொடர்ச்சி...
புதன்
புதன் புத்திசாலித்தனத்தைக் குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம்வயதில் திருமணம் நடக்கும். தாய் மாமன்வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். தன் புத்திசாலித்தனத்தைப் பயன் படுத்தி வாழ்க்கைத்துணையை சந்தோமாக வைத்திருப்பார்கள். வாழ்க்கைத்துணை இளமைப் பொலிவுடன் இருக்கவேண்டுமென்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள. இது ஒரு அலி கிரகம் என்பதால், ஆண்களுக்கு காதலியையும், பெண் களுக்கு காதலனையும் குறிக்கும் கிரகம் என்பதால், திருமணத்திற்குப் பிறகும் காதலர்களாக- ஆதர்சன தம்பதியராக வாழ்வார்கள்.
தனுசு மற்றும் மீன லக்னமாக இருக்கும்போதும், ரிஷப லக்னத்திற்கு ஏழாம் அதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டையில் நின்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைத் தரும். மற்றபடி, தனித்த புதன் எந்தத் தொந்தரவும் தராது.
புதனுடன் பகை கிரகங்களான செவ்வாய், சந்திரன், ராகு- கேதுக்கள் சேரும்போது, உலகப் போரே நடந்த பாதிப்பு வாழ்கையில் இருக்கும். ஊருக்காகவும் உறவுக்காவும் கணவன்- மனைவியாக நடிப்பார்கள். வாழ்க்கைத் துணை இருக்கும்போதே அவரை அலட்சியப்படுத்தி, மற்றவரோடு சிரித்துப்பேசி வாழ்க்கைத் துணையையை வெறுப்படையச் செய்வார்கள். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும்.
ஏழில் புதன் இருப்பவர்கள் விவாக ரத்திற்குப்பிறகுகூட சேர்ந்துவாழ்வர். புதனின் சேட்டைகளைக் கணிப்பது கடினம்.
சென்ற பிறவியில் இளம்பெண்ணைக் காதலித்து ஏமாற்றிய குற்றத்தின் பதிவால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
பரிகாரம்
புதன் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
புதன்கிழமைதோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடுசெய்து, பச்சைப் பயறு தானம் தரவேண்டும். பச்சைப் பயறு சாப்பிட வேண்டும்.
விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யவேண்டும்.
வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று அவல், பொரி பாயசம் வைத்து நைவேத்தியம் செய்யவேண்டும்.
புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சி யம்மன் கோவில் சென்று வழிபாடு செய்யவேண்டும்
குரு
குரு, உடைபட்ட நட்சத்திரம். இது காலற்ற நட்சத்திரம் என்பதால், திருமணத்திற்குப் பின்பே பிரச்சினை ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் குரு செவ்வாயுடன் சேருவதோ, செவ்வாயைப் பார்ப்பதோ சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரனைப் பார்ப்பதோ, குரு சுக்கிரனுடன் சேர்வதோ சிறப்பு அல்லது தம்பதிகளின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியுடன் சேர்வதோ, ஏழாம் அதிபதியைப் பார்ப்பதோ சிறப்பு.
மேற்கண்ட எந்த நிலையும் இல்லாதபோது, திருமண வாழ்க்கை கடமைக்காக வாழ்வது போல் இருக்கும். மகர லக்னத்திற்கு ஏழில் உச்சம் பெறும் குருவும், கடக லக்னத்திற்கு ஏழில் வக்ரம் பெற்ற குருவும் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்குப் பின் பிரிவினையைத் தருகிறது.
திருமணத்திற்குப் பின் குழந்தையில்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது. குழந்தை நல்ல நிலையில் உருவாகக் காரணமாக குரு இருப்பதால், குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது குழந்தையை வளர்க்கமுடியாமை போன்ற காரணங்களால் பிரிவினை ஏற்படுகிறது. நம்பிக்கை, நாணயத்திற்கு காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர்மேல் நம்பிக்கை, நாணயக் குறைவால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. கருக்கலைப்பு மற்றும் குரு துரோகம் செய்தவர்களுக்கும் இதுபோன்ற வினைப்பதிவு இருக்கும்.
பரிகாரம்
குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்.
குரு தலமான ஆலங்குடி சென்று, குரு வழிபாடு செய்யவேண்டும்.
திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும்.
வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தரவேண்டும்.
யானைக்கு கரும்பை உணவாகத் தரவேண்டும்.
வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.
வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை சாப்பிட வேண்டும்.
குருமார்கள் மற்றும் வயதில் பெரியவர்களுக்கு வஸ்திரம் கொடுத்து ஆசிபெறவேண்டும்.
சுக்கிரன்
ஆண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு குரு பார்வை இருப்பவர்கள் ஆதர்ச தம்பதிகளாக விளங்குவர். பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் இருக்கும் தம்பதிகளி டையே கருத்துப் பரிமாற்றம், அன்பு மிகுதியாகும். உரிய வயதில் திருமணம், இனிய இல்லறம் அமையும்.
ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மனை வியைக் குறிக்கும் கிரகமாகும். ஆண் ஜாத கத்தில் குரு சம்பந்தமில்லாத சுக்கிரன் ஏழில் இருக்கும்போது காரகோ பாவக நாஸ்தி. ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோஷத்திற்கும் சுக்கிரன் காரண கிரகமாக இருப்பதால், தகுதிக்குமீறிய ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வாழ்க்கையை இழந்தவர்களும் விவாகரத்தானவர்களுமே அதிகம்.
சுக்கிரன் வக்ரம், நீசம், அஸ்தமனமாகும் போதும், ராகு- கேதுக்களுடன் சம்பந்தம் பெறும்போதும் கணவரால் மனைவிக்கு பிரயோஜனமற்ற நிலை அல்லது மனைவியைப் பராமரிக்கமுடியாத நிலை அல்லது பிரச்சினைக் குரிய மனைவியை அடைவார்கள். சென்ற பிறவியில் மனைவியை அலட்சியம் செய்தவர் களுக்கு இதுபோன்ற வினைப்பதிவு இருக்கும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை காலை 8.00-9.00 மணிக்கு சுக்கிர ஓரையில் விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00-7.00 மணிக்குள் சுக்கிர ஓரையில் நெய்தீப மேற்றி லலிதாசகஸ்ர நாமப் பாராயணம் செய்யவேண்டும்.
ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்யவேண்டும்.
வெள்ளை மொச்சையை வெள்ளிக் கிழமைகளில் தானம் செய்யவேண்டும்.
இளம்பெண்களுக்கு ஆடை தானம் தரவேண்டும்.
ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு பொருளுதவி செய்தல், வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட் களான பூ, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு கொடுத்து ஆசிபெறவேண்டும்.
சனி
ஒருவரின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயர்வதற்கும், தாழ்வதற்கும் சனி மிகமுக்கியக் காரணமாகும். சனி என்றால் கர்மபந்தம். கர்மபந்தமில்லாத ஒருவருடன் சம்பந்தம் ஏற்படாது. அந்தவகையில், ஏழில் சனி இருப்பது முழுமையான கர்மபந்தமாகும். பூர்வஜென்ம விட்டகுறையின் தொடர்ச்சி. சென்றபிறவியில் தம்பதிகளாக வாழ்ந்தவர்களே இந்தப் பிறவியிலும் தம்பதிகளாக வாழ்வர். ஒருவர் மற்றவருக்கு செய்த நல்ல, தீய செயல்களின் பதிவுகளின்படி வாழ்க்கை இருக்கும்.
சனி தாமதத்தைக் குறிக்கும் கிரகம். சனி, தான் நின்ற பாவகத்தின்மூலம் ஜாதகருக்குக் கிடைக்கவேண்டிய பலனைத் தாமதப்படுத்து வார். திருமணம் கால தாமதமாகவே நடக்கும். ஜாதகரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தன்மை குறைந்த களத்திரமே கிடைக்கும். சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்கள் மற்றும் செவ்வாய், ராகு- கேதுக்களுடன் சம்பந்தம் இருப்பவர்கள் தொழில்நிமித்தம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கிறார்கள். சனி மந்தத்தன்மை மற்றும் பொய் பேசுவதற்கும் காரணமாக இருப்பதால், வெறுப்பால் பிரிவு ஏற்படுகிறது.
கடக, சிம்ம லக்னத்திற்கு சனி மனநிறைவான மணவாழ்க்கையைத் தருவதில்லை. ஏழாமிடத்தோடு சனி சம்பந்தம் இருப்பவர் களுக்கு எளிதில் விவாகரத்தும் கிடைக்காது. வயதான பிறகே புரிதல் ஏற்பட்டு அன்யோன்ய தம்பதிகளாக வாழ்வர்.
பரிகாரம்
பித்ருக்கள் வழிபாடு மிக அவசியம்.
சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்த்து, சனி காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்.
சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு, அன்னதானம் செய்யலாம்.
சனிப்பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம்.
பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், தொழிலாளிகள், துப்புரவுத் தொழிலாளிகள் போன்றவர்களுக்குச் செய்யும் உதவி நல்ல பலன் தரும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமித்தால் ஹோமம்செய்து வழிபடலாம்.
சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு.
ராகு
ஏழில் இருக்கும் ராகு நிச்சயமாகத் திருமணத் தைத் தடைசெய்ய மாட்டார். திருமணத்தை நடத்திப் பிரச்சினையைத் தருவார். காதல், கலப்புத் திருமணத்தால் பிரச்சினை தருவார். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்தி பிரச்சினை தருவார். முதல் மனைவி இருக்கும்போதே சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணத் தைத் தருவார். தனித்த ராகுவும், குரு பார்வை பெற்ற ராகுவும் பெரிய தொந்தரவைத் தருவதில்லை.
எனினும், தனித்த ராகு இருப்பவர்களுக்கு, திருமண வாழ்வில் மாமியார், நாத்தனார் அல்லது நெருங்கிய உறவுகளின் தலையீட்டால் மணவாழ்வில் நெருடல் இருந்துகொண் டேதான் இருக்கும். ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், ராகு சேர்க்கை இருந்தால், ஒன்றுக்குமேற்பட்ட பெண்கள் திருமண வாழ்வில் இருப்பார்கள்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய், ராகு சேர்க்கை இருப்பவர்களுக்கு கணவரிடம் இருந்து கிடைக்கவேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடைக்காததால் பிரச்சினை, பிரிவினையை ஏற்படுத்துகிறது. சந்திரன், ராகு சேர்க்கை இருக்கும் ஆண்கள் மனைவியைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்துபவர்கள். சனி, ராகு சம்பந்தம் கர்மபந்தத்தால் இணைந்து, கர்மவினையைக் கழிக்கமுயன்று கர்ம வினையை அதிகப்படுத்துபவர்கள்.
ஏழில் ராகு இருப்பவர்களுக்கு கவனமாகத் திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல், கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். சென்ற பிறவியில் தம்பதிகளுக்குள் நிறைவேறாத ஆசையின் பிரதிபலிப்பு இந்த ஜாதக அமைப்பு.
பரிகாரம்
தந்தைவழி முன்னோர்களின் நல்லாசி மிக அவசியம்.
ராகு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநா கேஸ்வரம் சென்று வழிபாடு செய்யவேண்டும்.
பிரத்தியங்கரா தேவி, துர்க்கை, காளி வழிபாடு சிறப்பு.
வளரும் பாம்புப் புற்றுக்குச் சென்று வழிபாடு செய்தல் நலம்.
காலபைரவரை வழிபாடு செய்யவேண்டும்.
பஞ்சமி திதியில் கருட வழிபாடு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வது நன்று.
கேது
ஏழில் கேது இருப்பது கடுமையான திருமணத் தடையை உருவாக்கும். ஒரு செயல் நடக்காமல் முட்டுக்கட்டை இடுவதில் கேதுவுக்கு இணை கேதுதான். ஒரு செயலை சனி பகவான் காலம் தாழ்த்தியாவது நடத்தித் தருவார். கேது பகவான் நடத்தியே தரமாட்டார்.
ஏழாமிடத்திற்கு குரு சம்பந்தம், ஏழாம் அதிபதி, லக்ன சுபரின் சாரம் பெற்று திருமணம் நடந்தாலும், எளிதில் இல்வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்கு நோய்த் தாக்கம் மிகுதியாக இருக்கும். அல்லது நோயுள்ள களத்திரத்துடன் திருமணம் நடக்கும். சிலர் இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். சிலர் சந்நியாசம் வாங்கி ஆன்மிக இயக்கத்தில் சேர்ந்துவிடுவார்கள்.
ஜனனகால ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், கேது சேர்க்கை, பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேது சேர்க்கை இருப்பது கடுமையான திருமணத் தடை உண்டாக்கும். திருமணத்திற்குப் பின்பும் தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். ஏழாம் அதிபதி, லக்னம் பலமிழந்தால் பிரிவினை உறுதி. ஏழாம் இடத்திற்கு அல்லது கேதுவுக்கு குரு பார்வை இருந்தால் பாதிப்பு வெகுவாகக் குறையும். இந்த ஜாதக அமைப்பு சென்ற பிறவியில் தம்பதிகள் தங்களுக்குள் நிறைவேற்றத் தவறிய கடமையின் பிரதிபலிப்பாகும்.
பரிகாரம்
கேது காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்.
கேது, வாலைக் குறிப்பதால் தெய்வங்களுள் விநாயகருக்கு துதிக்கையும், ஆஞ்சநேயருக்கு வாலும் இருப்பதால் விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன்தரும். விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம். எனவே, ஆலமரத்தை வழிபடவேண்டும்.
மேலும், சடைமுடியும், தாடியும் வைத்திருக்கும் சாது, சந்நியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும்.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தி சென்று வழிபட இன்னல் தீரும்
செல்: 98652 20406