சமீபகாலமாக மக்களிடையே பிரபலமடைந்துவரும் கலையான வாஸ்து, ஜோதிடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலை என்பது சிலரின் கருத்து. ஆனால் ஜோதிட நுட்பங்களை அறியாத ஒருவரால் வாஸ்துக் கலையிலுள்ள சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள முடியாது. வாஸ்துவுக்கு அடிப்படையே ஜோதிடம்தான். ஜோதிடமும் வாஸ்துவும் இணைந்த கைகள்.
வாஸ்து கலையை மட்டும் கற்றவர்கள் எட்டு திசைகளை மட்டும் பிரதானமாக எடுத்துக்கொண்டு தீர்வுகாண முயல்கிறார்கள். ஜோதிடத்துடன் வாஸ்துவையும் இணைந்து கற்றவர்கள், நவகிரகங்களையும் எட்டு திசையையும் இணைத்துத் தீர்வுதருகிறார்கள்.
ஜோதிடம் என்பது 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், 9 கிரகங்களையும் உள்ளடக்கியது. 12 ராசிகளும் 9 கிரகங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன.
வாஸ்துவில் நவகிரகங்களும் எட்டு திசைகளை ஆள்கின்றன. எட்டு திசைகளும், பன்னிரண்டு ராசிகளைப் போல் என்றும் அசையாமல் மாறாமல் இருப்பவை. ஆனால் மனிதர்கள் எட்டு திக்குகளிலும் சுற்றித் திரிகி றார்கள். ஆக, திசைகள் மனிதனை இயக்குவதில்லை; கிரகங்கள்தான் மனிதனை இயக்குகின்றன.
ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் உடலும், உறைவிடமும் பூர்வ புண்ணியத்தைப் பொருத்ததாகும். சிலருக்கு தோஷமுள்ள வீடு அமையலாம். ஒருசிலருக்கு தோஷமில்லாத வீடு அமையலாம். ஜனனகால ஜாதகத்தில் எந்த கிரகம் பலமிழந்துள்ளதோ, அந்த கிரகம் ஆளும் திசைகளில் தோஷம் மிகுதியாக இருக்கும்.
வாஸ்து தோஷம்
சொந்த வீடோ, வாடகை வீடோ வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும்போது பலவிதமான சௌபாக் யங்களைப் பெற்று வாழ்வில் வளம்பெற முடியும் என்னும் ஆர்வம் இருந்தாலும், வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றிய சரியான புரிதல் மக்களிடம் குறைவாகவே உள்ளது. குடியிருக்கும் வீடுகளில் தோஷமிருப்பது இயல்பு. அதை இயன்றவரை பரிகாரங்கள் மூலம் சரிசெய்யவே முயற்சிக்கவேண்டும். வசிக்கும் வீடு மனித உடலைப் போன்றதாகும். மனித உடலில் ஏற்படும் சில குறைகளை சரிசெய்யலாம். சில குறைகளை சரிசெய்ய முடியாமல் சகித்துக்கொண்டு வாழும் சூழல் இருக்கும். சரிசெய்ய முடியாத சில குறைகளை சரிசெய்ய முயன்றால் உயிருக்கே ஆபத்தாக முடியும் அல்லது உடல் உறுப்புகளை இழக்க நேரும்.
அதேபோல் குடியிருக்கும் வீட்டின் சில பகுதிகளைத் தேவையின்றி இடித்து உடைக்கும்போது வீடு தனது சக்தியையும் புனிதத்தையும் இழந்துவிடும். எனவே பாதிக்கப்பட்ட கிரகங்களுக்குரிய நவகிரகப் பரிகாரங்களைப் பயன்படுத்தி சரிசெய்ய வேண்டும். மேலும் சாதகமற்ற தசா புக்தி மற்றும் ஏழரைச்சனி, அஷ்டமச் சனியின் காலங்களில் எற்படும் பாதிப்புக்கும் குடியிருக்கும் வீட்டையே பலர் குறைகூறி, இடித்து உடைத்து வீண் விரயத்தையும் ஏற்படுத்துவதுடன் வீட்டின் புனிதத்தையும் கெடுக்கிறார்கள். குடியிருக்கும் வீட்டிலிருக்கும் தோஷத்தைத் தீர்க்க ஜோதிடரை சந்தித்து ஆலோசனை பெறுபவர்கள் எளிய முறைகளிலேயே பாதிப்பை சரிசெய்து விடுகிறார்கள்.
சமீபத்தில் ஜாதகம் பார்க்க வந்த நபர் ஒருவர், "எனக்கு இரவில் தூக்கம் சரியாக வரவில்லை. அடிக்கடி கதவு தானாக ஆடுகிறது. அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் இருக்கிறது. அதை சரிசெய்து தரவேண்டும்' என்று கூறினார்.
"உங்கள் ஜாதக அமைப்புப்படி அமானுஷ்ய சக்தி உங்கள் வீட்டிலிருக்கும் வாய்ப்பு சிறிதுமில்லை.அதனால் பயப்பட வேண்டாம். வீட்டில் துளசிச் செடி வளர்க்க வும். பிரதோஷ வழிபாடு செய்யவும்' என்று கூறினேன். எவ்வளவு எடுத்துச்சொல்லியும் கேட்காமல், மிகவும் வற்புறுத்தி தன் வீட்டைப் பார்வையிடச் சொன்னார்.
அந்த வீட்டின் தலைவாசல் உச்சப்பகுதியில் இருந்தது. அதே வீட்டின் நீசப்பகுதியில் இன்னொரு வாசலும் இருந்தது. வடகிழக்கு மூலையென்பது உச்சப்பகுதி. வடமேற்கு மூலையென்பது நீசப்பகுதி. ஒரு கதவு உச்சப்பகுதியிலும் ஒரு கதவு நீசப்பகுதியிலும் இருந்ததால், இரண்டில் ஒரு கதவைத் திறக் கும்போது இன்னொரு கதவு தானாக அசைந்தாடும். இரவில் காற்றடித்தால் தூக்கத்தில் யாரோ தட்டுவதுபோலவும் எழுப்புவதுபோலவும் இருக்கும். அங்கு ஒரு நிமிடம் அமானுஷ்ய எண்ணம் வரும். இதை அமானுஷ்ய சக்தியென்று நினைத்து பயந்திருக்கிறார்கள்.
மிதுன லக்னத்தைச் சேர்ந்த அந்த ஜாதகருக்கு கன்னியில் புதன் உச்சமாகவும், சுக்கிரன் நீசமாகவும் இருந்து நீசபங்கம் பெற்றதால், அவரின் வீட்டில் உச்சப்பகுதியில் ஒரு கதவும், நீசப்பகுதியில் ஒரு கதவும் அமைந்தது. நேர்மறை ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) வீட்டுக்கு வரும்படி, தவறாக இருக்கும் கதவை சரிசெய்துகொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
இயற்கைசக்தி வீட்டில் எப்போதும் இருக்கவேண்டும். எளிமையாக சரிசெய்யக் கூடிய சாதாரண பிரச்சினையை, வீட்டில் அமானுஷ்ய தொடர்பிருக்குமென்று கற்பனை செய்தது அறியாமையை வெளிப்படுத்தியது. இதுபோல் பலர் புரியாத பிரச்சினையில்- இல்லாத பிரச்சினையில்- கற்பனையில் வாஸ்து என்ற பெயரில் வீட்டை இடித்து உடைத்து நிம்மதியைத் தொலைக்கிறார்கள்.
குடியிருக்கும் வீட்டில் தோஷமிருக் கிறதா என்பதை அறிந்துகொள்ள பல எளிய வழிமுறைகள் உள்ளன. பொதுவாக ஜனனகால ஜாதகத்தில் ராகு- கேதுக்கள் நின்ற இடங்களை வைத்தே வீட்டில் தோஷமுள்ளதா என்பதைத் தீர்மானித்துவிடலாம். சூரியன் ஆத்மக்காரகன்.
சந்திரன் உடல் மற்றும் மனோகாரகன். ஜனனகால ஜாதகத்தில் சூரியனுடன் ராகு- கேது சம்பந்தமிருக்கும்போது ஆன்மாவைத் துன்புறுத்தும்விதமான சம்பவங்கள் வீட்டில் நடக்கும். உதாரணமாக துர்மரணம், தற்கொலை உணர்வு, தீயசக்திகளின் தொல்லை, வீடுகளில் வளர்க்கப்படும் பிராணிகள் இறந்துபோவது, மரம், செடி, கொடிகள் வளராமல் பட்டுப்போவது, குடும்பத்தில் அடிக்கடி சண்டை, சச்சரவு, குழப்பம் போன்ற பாதிப்புகள் இருக்கும்.
ஜனனகால ஜாதகத்தில் சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தமிருந்தால் உடல்ரீதியான பாதிப்புகள், தீராத நோய்த் தாக்கம், கை கால் வலி-, கெட்ட கனவு, தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் இருக்கும்.
இதுபோன்ற குறைபாடுகளால் பாதிப்பு மிகைப்படுதலாக இருந்தால், வசதியிருப்பவர்கள் வீட்டில் நவகிரக சாந்தி ஹோமம், கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் செய்தால் பாதிப்பு வெகுவாகக் குறையும். வசதியில்லாதவர்கள் வீட்டில் அடிக்கடி கூட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், தினமும் கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்யலாம் அல்லது ஒலிக்கச்செய்து கேட்கலாம்.
சிறிய பாதிப்பு இருப்பவர்கள்...
வீட்டில் துளசி வளர்க்கலாம். தினமும் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபமேற்றலாம். வெண்கடுகு சேர்த்து சாம்பிராணி புகை போடலாம். வீட்டில் மணியடித்து பூஜை செய்யலாம். வீட்டு வாசலில் எலுமிச்சை அல்லது பச்சை மிளகாய் கட்டித் தொங்கவிடலாம். வீட்டு வாசலில் தினமும் கற்பூரம் ஏற்றலாம். தினமும் வீட்டுவாசலில் நீர்தெளித்துக் கோலம் போடலாம்.
எட்டு திசைகளும் பலவிதமான நன்மைகளை அளித்து மனிதனை வழிநடத்தக் கூடியவை. ஒவ்வொரு திசைக்கும் அதற்கென சிறப்பம்சங்கள் உள்ளன. இனி எட்டு திசைகளின் வாஸ்துக் குறைபாட்டைச் சரிசெய்யும் பரிகாரங்களைக் காணலாம்.
கிழக்கு
இந்தத் திசைக்கு அதிபதி இந்திரன். இந்த திசையின் அதிர்வலைகள் ஆத்ம பலத்தையும், சுகபோக வாழ்க்கையையும், அரச பதவியையும், சொத்து சுகங்களையும் அளிக்கிறது. ஜனனகால ஜாதகத்தில் சூரியபலம் குறைந்தவர்களின் வீடுகளில் கிழக்குப் பகுதியில் பாதிப்பிருக்கும்.
அவ்வாறு இருந்தால் குலதெய்வ வழிபாட்டை முறைப்படுத்துவதுடன், சிவ வழிபாடு, ஞாயிறன்று பிரதோஷ வழிபாடு செய்துவந்தால் சிறப்பான மாற்றத்தை அடையலாம்.
தென்கிழக்கு
இது அக்னிமூலை எனப்படும். ஜனனகால ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் பலம்குறைந்த வர்களுக்கு, சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்றவர்களுக்கு, சூரியன் சுக்கிரனுக்கு பாகைமுறையில் அதிக தூரமிருப்பது போன்ற குறைபாடு இருப்பவர்களுக்கு, குடியிருக்கும் வீட்டின் தென்கிழக்கு பாதிப்பால் திருமணத்தடை இருக்கும். அல்லது திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளிடையே ஒற்றுமைக் குறைவிருக்கும். தென்கிழக்கு பாதிப்பிருப்பவர்கள் சிவனுக்கும், சிவன் கோவிலிலுள்ள அம்மனுக்கும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் அபிஷேகம், அர்ச்சனைசெய்து வழிபட்டால் சுபவாழ்வு கிடைக்கும்.
மேற்கு
இத்திசைக்கு அதிபதி வருணன். ஜனனகால ஜாதகத்தில் சனிபலம் மிகுந்தவருக்கு நல்ல தைரியமும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தும், புகழும், நல்ல சந்ததிகளும், தொழிலில் நல்ல பணப் புழக்கமும், அரசாங்க ஆதரவும் ஏற்படும். சனிபலம் குறைந்தவர்களுக்கு நிலையற்ற தொழில், வறுமை, கடன், எதிரித் தொல்லை இருக்கும். மேற்கு திசை பாதித்தவர்கள் அவரவர் குலவழக்கப்படி வருடாவருடம் முன்னோர் களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வதுடன், இறந்த திதியில் படையல் படைத்து வழிபட்டால் நிலைமை சீராகும்.
வடமேற்கு
வாயுமூலை என்பது வடமேற்கு திசையாகும். ஜனனகால ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருப்பவர்களுக்கு வாயுமூலை பாதிப்பிருக்கும். மன சஞ்சலம், தீராதநோய், தீராத பிரச்சினைகள் இருக்கும். வீட்டில் எலியாகவும், வெளியில் புலியாகவும் இருப்பார்கள். அதாவது சேவை மனப் பான்மையுடன் ஈடுபடும் பொதுவாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால் குடும்பத்தில் மரியாதை இருக்காது. இவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது புனித நீர்நிலைகளில் நீராடவேண்டும். சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு தயிர்சாதம் மற்றும் தண்ணீர் தானம் தர, வாழ்க்கை வளமாகும்.
வடக்கு
இந்தத் திசைக்கு அதிபதி குபேரன். ஒருவருக் குத் தேவையான பொருளாதாரத்தைத் தருவது வடக்கு திசை. ஜனனகால ஜாதகத்தில் புதன் வலிமை இழந்தவர்களின் வீட்டில் வடக்குப் பகுதியில் பாதிப்பிருக்கும். வடக்குப் பகுதியில் வாஸ்துக் குறைபாடு இருப்பவர்கள் மகாவிஷ்ணுவை வழிபடுவதுடன், பிராமணர்களுக்கு வஸ்திர தானம், உணவுப் பொருள் தானம் செய்து வர, எல்லா தோஷமும் விலகி வளர்ச்சி உண்டாகும்.
வடகிழக்கு
இந்த திசையே ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் தாழ்வாகவும் மூடப்படாமலும் இருக்கவேண்டும். ஈசான்யம் கெட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய்த் தாக்கம் ஏற்படும். பணவரவு குறையும்.பெரும்பாலும் ஜனனகால ஜாதகத்தில் குரு, சந்திரன் சம்பந்தம் இருப்பவர்களின் வீடுகளில் ஈசான்ய பாதிப்பிருக்காது. சந்திரன் மனம் மற்றும் உடலைக் குறிக்கும் கிரகம். சந்திரனுக்கும் குருவுக்கும் சம்பந்தம் இருந்தால் உடல் நிலை, மனநிலை சீராக இருக்கும். நல்ல தெளிவான சிந்தனை, சாத்வீக எண்ணத்தால் தொட்டது துலங்கும். ஜனனகால ஜாதகத்தில் குருவும், சந்திரனும் சகடையாக இருந்தால் ஏற்ற- இறக்கம் மிகுதியாக இருக்கும். காலதாமத புத்திர பாக்கியம் உண்டாகும். அல்லது குழந்தைகளால் தீராத மன உளைச்சல் இருக்கும். ஈசான்யத்தில் பூஜையறை, கிணறு, கீழ்நிலைத் தொட்டி இருந்தால் குருச்சந்திர யோகம் இயல்பாகவே அமைந்துவிடும். வீட்டில் ஈசான்யத்தில் குறைபாடிருந்தால் அடிக்கடி வேத பாராயணம் செய்யலாம். வாஸ்து சாந்தி பூஜை செய்யலாம். வேற்று மதத்தினர் ஜெபக்கூட்டம் நடத்தலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் ஈசான்ய குறைபாடு சீராகும். எதுவும் செய்யமுடியாதவர்கள் மிக எளிமையாக, வீட்டின் ஈசான்யத்தில் நீர் நிரம்பிய கலசம் அல்லது நீர் நிரம்பிய குடம் வைக்கலாம்.
அவர்களுடைய குல, இஷ்ட தெய்வ படங்களை வைக்கலாம்.
தெற்கு
இந்தத் திசைக்கு அதிபதி எமன். ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்றவர்கள் நியாயம், தர்மத்தைக் காப்பவர்கள். நல்ல உடல் ஆரோக்கியமும் தொழிலில் வெற்றியும் உடையவர்கள். பரம்பரை பரம்பரையாக வெற்றிகரமாகத் தொழில்செய்பவர்கள். தெற்கு திசை பாதித்தவர்கள், சுய ஜாதகத்தில் செவ்வாய் பலமிழந்தவர்கள் நித்திய கண்டம், பூரண ஆயுள் உடையவர்கள். பலருக்கு தீராத, தீர்க்கமுடியாத பரம்பரை நோய் அல்லது சொத்துப் பிரச்சினை இருக்கும். இவர்கள் அடிக்கடி வீட்டில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்தால் நலம் உண்டாகும்.
தென்மேற்கு
நைருதிமூலை என்பது தென்மேற்கு திசையாகும். இதை கன்னிமூலை என்றும் கூறுவார்கள். ஜனனகால ஜாதகத்தில் ராகு- கேது சுபத்தன்மையுடன் இயங்குபவர்களுக்கு தென்மேற்கு பாதிப்பிருக்காது. ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு- கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு தீராத, தீர்க்கமுடியாத பரம்பரை நோய் அல்லது சொத்துப் பிரச்சினை இருக்கும்.
பொதுவாக தென்மேற்கு மூலை என்பது உயர்ந்தும் நீரோட்டம் இல்லாமலும் இருப் பதுடன் எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரப்படி கன்னிமூலை என்றழைக்கப்படும் தென்மேற்குப் பகுதி தாழ்வாக இருந்தாலோ, நீரோட்டம் இருந்தாலோ, மூடப்படாமல் இருந்தாலோ, அந்த வீட்டில் தீராத வியாதிகள், பொருள் பற்றாக்குறை மற்றும் சுபகாரியத் தடை இருந்துகொண்டே இருக்கும். வீட்டில் கன்னி மூலையானது திறந்த நிலையில் இருக்கும்பட்சத்தில், துர்தேவதைகள் கட்டாயம் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். அப்போது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும் தலைவிரித்தாடும். குடியிருக்கும் வீட்டிற்கும் கன்னிமூலைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. கண்ணுக்கு தெரிந்த- தெரியாத கன்னி மூலை பாதிப்பபானது, வீட்டில் பிறந்த பெண்களின் திருமணத்தைத் தடைசெய்கிறது அல்லது குலத்திற்கு மாறான திருமணத்தை நடத்திவிடுகிறது. முதிர்கன்னிகள் இருக்கும் வீட்டில் அல்லது ஜனனகால ஜாதகத்தில் விஷக் கன்னிகா தோஷமிருக்கும் பெண்கள் வாழும் வீட்டில் கன்னிமூலை பாதிப்பிருக்கும். தென்மேற்குப் பகுதியின் பாதிப்பால் பலர் பலவிதங்களில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.
ஜாதகரீதியாக எந்த பிரச்சினையுமில்லாத ஆண்களும், கன்னிமூலை பாதிப்பால் திருமணத் தடையை சந்திக்கி றார்கள். எட்டு திசைகளில் வடகிழக்கும், தென்மேற்கும் மிகவும் முக்கியம். எனவே தென்மேற்கு பாதிப்பை சரிசெய்யாமல், திருமணத் தடைக்கு எவ்வளவு பரிகாரம் செய்தாலும் பலிப்பதில்லை. கன்னிமூலை பாதிப்பை சரிசெய்யமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், தென்மேற்குப் பகுதியில் சிறிய பீடம் அல்லது கபோர்டு அமைத்து, அதில் ஆஞ்சனேயர், சுவாமி ஐயப்பன் மற்றும் பாலா திரிபுரசுந்தரி போன்ற படங்களை வைத்து வழிபடவேண்டும். குடும்பத்தில் பிறந்து கன்னியாக மறைந்த கன்னி களை வெள்ளிக் கிழமைகளில், அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.
ஒரு மனிதனுக்கு வசிக்கும் வீடென்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஒரு மனிதன் தன் முற்பிறவியில் செய்த பாவ- புண்ணியங் களின் அடிப்படையில்தான் இப்பிறவியில் வீடு அமையும். மனிதனுடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒரு காரண காரியம் உண்டு. இதைத்தான் ஆன்மிகமும் சொல்கிறது. எனவே மேற்கண்ட நவகிரகப் பரிகாரங்களைச் செய்து மனக் கவலை இல்லாமல் வாழ்வோம்.
செல்: 98652 20406