சுயமுயற்சியால் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், அது நம் மூதாதையரின் நல்லாசியுடன் பெறும் ஒரு காணி நிலத்திற்கு ஈடாகாது. பொதுவாக வெகுமதி, முயற்சிக்காமல் வரும் திடீர் வருமானம் (WIND FALL INCOME) போன்றவற்றிற்கு பதினோறாம் பாவமே காரணமாகிறது. அந்த பாவத் திற்கு லாப ஸ்தானமாக அமைவதே பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாம் பாவம். தந்தை, தந்தைவழி உறவுகள், கடவுள் அருள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் ஒன்பதாம் பாவத்தைக்கொண்டே பிதுர் ராஜ்ஜிய சொத்து எனும் மூதாதையர் சொத்து கிடைப்பதை உறுதிசெய்ய முடியும். இதே அமைப்பை பெண்களின் ஜாதகத்தில் "மஞ்சள் காணி சொத்து' என்றும் சொல்வார்கள். நான்காமிடம் வசிப்பிடத்தைக் குறிப்பதால், அது ஒன்பதாமிடத்துடன் பெறும் தொடர் பையும் ஆராயவேண்டும். இந்த உலகில் பிறப்பதற்குமுன் எல்லாரும் பத்து மாதம் வசித்த இடம் தாயின் கருப்பை என்பதாலேயே வசிப்பிடமும், தாயும் நான்காமிடத்து பாவ காரகத் திலடங்கும்.
க்ஷி ஸ்திர ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீடு பாதக ஸ்தானமாக அமைவதால், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்ப ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு மூதாதையர் சொத்து கிடைப்பதில் தடையுண்டாகும். அதிலும் கும்ப ராசிக்கு ஒன்பதாம் வீடு துலாமாக அமைவதால், மூதாதையர் சொத்துக்காக நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை வரும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி, அசுப கிரகங்களின் பார்வையால் பாதிக்கப்படாமல், கேந்திரம் (1, 4, 7, 10) அல்லது திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) அமர்ந்தால் பூர்வீக சொத்தினை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி லக்னத்துடன் தொடர்பு கொண்டால் பூர்வீக சொத்தினால் வாழ்க்கை வளம் பெறும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் வாழ்வின் பிற்பகுதியில்தான் பூர்வீக சொத்து கிடைக்கும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் பெற் றோரால் பயனில்லை.
பூர்வீக சொத்து கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் தந்தை, தாய் இருவர்மூலமாகவும் பூர்வீக சொத்து கிடைக்கும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் மூதாதையர் சொத்து தந்தையால் அழிக்கப்படும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் தந்தைவழி சொத்து கிடைக்காது. மாமனார் வீட்டு சொத்து கிடைக்கும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் தந்தையுடன் பகையுண்டாகி மூதாதையர் சொத்து கிடைக்காமல் போகும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி ஒன்ப தாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் ஜாதகரின் தந்தைமூலம் செல்வமும் செல்வாக்கும், மூதாதையர் சொத்தும் கிடைக்கும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் ஜாதகர் தந்தைமூலம் கிடைக்கும் சொத்தை தானதர்மங்களில் செலவிடுவார்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி பதினோறாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு அதிகமான பூர்வீக சொத்து கிடைத்து அதிர்ஷ்டமான வாழ்க்கை அமையும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி பன்னிரண்டாம் வீட்டுடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு தந்தை சொத்தை அடைவதில் உறவினரால் தடையுண்டாகும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் (பூமிகாரகன்) தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு தந்தை சொத்தாக நிலமும் சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் வாகனம், நகைகள் அல்லது வங்கியில் சேர்த்த பணமும், புதன் சந்திரனுடன் தொடர்பு கொண்டால் பங்குச்சந்தை முதலீடும், சூரியனுடன் தொடர்புகொண்டால் தந்தையின் செல்வாக்கும், சனியுடன் தொடர்பு கொண்டால் மூதாதையர் வாழ்ந்த வீடும், கேதுவுடன் தொடர்பு கொண்டால் மூதாதையர் பூஜைசெய்த கோவிலும், ராகுவுடன் தொடர்பு கொண்டால் புதையலும், குருவுடன் தொடர்பு கொண்டால் கல்வி ஸ்தபனமும் கிடைக்கும்.
ஒன்பதாம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் தொடர்புகொண்டு, நான்காம் வீட்டு அதிபதி மூன்றாமிடத்திலிருந்தால், தந்தையின் வீட்டை விற்கவேண்டிய நிலைவரும்.
ஜனனஜாதகத்தில் 4-ஆம் வீட்டின் அதிபதி 5-ஆம் வீட்டில் இருப்பின் சொத்துசுகம் ஏற்படும். ஆனால், பிள்ளைகளால் சொத்து பின்னம் அடைய வாய்ப்புண்டு.
ஜனன ஜாதகத்தில் 4-ஆம் வீட்டின் அதிபதி 2-ஆம் வீட்டிலிருப்பின் தமது தாய்வழி உறவுகளின் மூலமே வீடுவாசல் கிடைக்கும் யோகம் உண்டு.
ஜனன ஜாதகத்தில் 4-ஆம் வீட்டின் அதிபதி 6-ஆம் வீட்டில் இருப்பது கெடுபலனாகும். மூதாதையர் சொத்துகளை அடமானம் வைக்கவும் நேரிடும்.
ஜனன ஜாதகத்தில் 4-ஆம் வீட்டின் அதிபதி 8-ஆம் வீட்டில் இருப்பின், மூதாதையர் சொத்துகளில் வில்லங்கம் ஏற்படும்.
ஜனன ஜாதகத்தில் 4-ஆம் வீட்டின் அதிபதி 11-ஆம் வீட்டில் இருப்பின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெறவேண்டும். மூதாதையர் சொத்துகளை விற்று புதிய வீடு வாங்குவார். சொத்தில் வில்லங்கம் வரும். வடிவமில்லாத நிலம் அல்லது வீடு வாங்குவார்.
ஒன்பதாம் வீட்டின் அதிபதி வக்ரம் பெற்று அமைந்திருப்பின், முழுமையாகக் கட்டப்படாத மூதாதையர் வீடு கிடைக்கும்.
ஐந்தாம் அதிபதி நீசம்பெற்றாலும், 6, 8, 12-ல் அமைந்து பலவீனமாக இருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமைந்தாலும் பூர்வீக சொத்துவகையில் அனுகூலமானப் பலன்கள் ஏற்படாது.
சனி, ராகு போன்ற பாவிகள் 5-ல் அமையப்பெற்றாலும், 5-ஆம் வீட்டை சனி பார்வை செய்தாலும் பூர்வீகவழியில் அனுகூலங்கள் இருக்காது.
குரு பகவானின் பார்வை 5-ஆம் வீட்டிற்கோ, 5-ஆம் அதிபதிக்கோ இருந்தால் பூர்வீகவழியில் ஓரளவாவது அனுகூலங்கள் ஏற்படும்.
ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகள் ஆறாமிட அதிபதியால் பார்க்கப்பட்டால் அவரின் மூதாதையரின் சொத்துகள் தந்தைவழியிலுள்ள உறவுகளால் இழக்கும் சூழல் உருவாகும்.
ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தைப் பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம், ஐந்திற்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடமும், பூர்வீக சொத்திற்கு காரக கிரகமான சனி பகவானின் வலிமையுமே நிர்ணயம் செய்கின்றன.
ஐந்தாம் பாவாதிபதி 2-ல் இருந்தால், பூர்வீக சொத்தால் ஆதாயம் கிடைக்கும்.
ஐந்தாம் பாவாதிபதி மூன்றாம் பாவத்தில் வலிமைப்பெற்று, செவ்வாயும் அனுகூலமாய் இருந்தால், ஜாதகரின் பூர்வீக சொத்தில் அவருடைய சகோதரர் குடியிருப்பார்.
ஐந்தாம் பாவாதிபதி பதினொன்றிலிருந்து, குருவும் வலிமை பெற்றால், ஜாதகருடைய பூர்வீகச் சொத்தை மூத்த சகோதரர் அனுப விப்பார்.
நான்காம் அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால், அவருடைய பிறந்த ஊரிலுள்ள சொத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூர் அருள்மிகு கிருபாபுரீஸ்வரரை தரிசிக்க, பூர்வீக சொத்து பெறுவதிலுள்ள இடையூறுகள் நீங்கும்.
அப்பய்ய தீட்சிதர் இயற்றிய ஸ்ரீமார்க் கபந்து ஸ்தோத்திரத்தை தினமும் படித்துவர பூர்வீக சொத்திலுள்ள வில்லங்கம் விலகும்.
ருத்ராட்சப் பந்தலில் குடியிருக்கும் திருவிரிஞ்சிபுரம் (வேலூர்) ஸ்ரீ மார்க்கபந்து ஈஸ்வரரை வழிபடுவதால், பூர்வீக சொத்தில் வரும் பிரச்சினைகள் தீரும்.
செல்: 98404 07209