சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 30-ஆம் தேதி (15-11-.2020) அன்று, குரு பகவான் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியடைந்து மகர ராசிக்கு வருகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கத் தேதி. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி 20-11-20202 அன்று பெயர்ச்சியடைகிறார். அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்ட நட்சத்திரங்களில் ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்து, பூமிக்கும், அதில் வசிக்கும் மனிதர்களுக்கும் எவ்விதப் பலன்களைத் தருவாரென சுருக்கமாக அறிந்துகொள்வோம்.
(இதுநாள்வரை கணித ஜோதிடமுறையில் உங்கள் ராசிக்கு எழுதிய குருப்பெயர்ச்சிப் பலன்களைப் படித்து அறிந்திருப்பீர்கள். இங்கு சித்தர்கள் கூறியுள்ள குருப்பெயர்ச்சிப் பலன்கள் தரப்பட்டுள்ளது.)
நாடி ஜோதிடமுறையில் குருப்பெயர்ச்சிப் பலன்களை அறிந்துகொள்ள, நீங்கள் எந்த ராசியில் பிறந்தவரானாலும் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசிகளில் எந்த கிரகம் உள்ளதெனப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள். அந்த கிரகங்களுடன், இப்போது கோட்சார நிலையில், மகர ராசிக்கு வந்துள்ள குரு இணைந்து எவ்விதப் பலன்களைத் தந்து, உங்களை அனுபவிக்கச் செய்வார் என்பதை அறிந்துகொள்வோம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தைக்கொண்டு, அவர்களுக்கும் பலனை அறிந்துகொள்ளலாம். அப்போதுதான், இந்த வருடம் குருவால் உங்களுக்கு நடக்கப்போகும் நன்மை, தீமைகளைப் பூரணமாக அறிந்துகொள்ள முடியும்.
நாடி ஜோதிடத்தில் தசை, புக்தி, அந்தரம், ஜென்ம ராசி, லக்னம் ஆகியவற்றைக் கொண்டு பலன் கூறுவதில்லை. கோட்சார நிலை கிரகங்கள் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்களுடன் இணையும்போது, நாம் வாழ்வில் அனுபவிக்கப்போகும் பலன்களையே சித்தர்கள் கூறுவார்கள்.
உதாரணமாக, நீங்கள் ஒரு காரியத்தைச் செய்யும்போது, உங்கள் நண்பரோ, உறவினரோ, தெரியாதவர்கள் என யாராரோ ஒருவர் வந்து உங்கள் காரியத்திற்கு உதவி செய்யலாம் அல்லது ஏதாவது கூறி தடை செய்யலாம். இதுபோன்றுதான் உங்கள் ஜென்ம ஜாதகத்தில் ராசிகளிலுள்ள கிரகங்களுடன் கோட்சார நிலையில் மற்ற கிரகங்கள் வந்திணையும்போது தொழில், திருமணம், புத்திர பாக்கியம், நோய், எதிரி, கடன், குடும்பச்சூழ்நிலை, வீடு போன்ற இன்னும் அனைத்திலும் நடக்கப்போகும் நன்மை, தீமை பலன்களைக் கூறுகிறார்கள்.
சிலருக்கு ஜென்ம ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்கும். அந்த கிரகங்களுக்குக் கூறியுள்ள பலன்களையும் இணைத்துப் பலனறியலாம். இந்த மூன்று ராசிகளில் உள்ள நட்சத்திரங்களில், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்களில் குரு சஞ்சாரம்செய்யும்போது அதிர்ஷ்டத்தைத் தந்து அதிக நன்மை செய்யும்.
பிறப்பு நட்சத்திரத்திற்கு நன்மைதராத நட்சத்திரங்களில் சஞ்சாரம்செய்யும் நாட்களில் குரு நன்மைகளைச் செய்யமாட் டார். மத்திமமான பலன்களையே தருவார்.
இனி, குரு கோட்சாரப் பலன்களை அறிவோம்.
குரு+சூரியன்
தை மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் மகரத்திலும், வைகாசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் ரிஷபத்திலும், புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் கன்னியிலும் இருப்பார். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் கோட்சார குரு ஜென்மச் சூரியனுடன் இணைந்து தரும் பலன்கள் இதோ...
உங்கள் மனதில் தைரியமும் சுறுசுறுப்பும் ஏற்பட்டு, பயமில்லாமல், தன்னால் வெற்றி யாகச் செய்துமுடிக்க முடியும் என்னும் உத்வேகத்துடன், புதிய திட்டங்களை வகுத்து, ராஜதந்திரத்துடன் செயல்பட்டு, காரிய வெற்றியை அடைவீர்கள். அதனால் புகழ், பொருள், கௌரவத்தை அடைவீர்கள். உங்கள் குடும்பத்திற்கே கௌரவத்தைச் சேர்ப்பீர்கள்.
அறிவு, புத்தி மந்தநிலை மாறி பிரகாச மாகும். இதுவரை பிறர் சொல்வதைக் கேட்டு செயல்பட்டு வந்த நீங்கள், அடிமைகுணம் விலகி, மூடநம்பிக்கை களை ஒதுக்கி, எந்த செயலையும் சுயமாக சிந்தித்து அறிவுப் பூர்வமாக செயல்பட்டு, உங்கள் எதிர்கால வாழ்வை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வாழத் தொடங்குவீர்கள். இதனால் வாழ்வில் உயர்வும், கௌரவமும் உங்களைத் தேடிவரும்.
அரசியலில் ஈடுபட்டு, இது வரை உழைப்பு, திறமைக்குத் தகுந்த பதவி, பொறுப்பு கிடைக்காதவர் களுக்கு இப்போது கட்சி அல்லது ஆட்சியில் பதவி கிடைக்கும். தலைமைப் பொறுப் பிலுள்ளவர்கள் உங்கள் திறமையை அங்கீ கரித்து அன்பு, ஆதரவு காட்டி உங்களின் மனக் குறைகளைத் தீர்த்துவைத்து விடுவார்கள். தொண்டன் தலைவனாகும் நேரமிது. உங்கள் தந்தையின் தொழிலில் பெரிய மனிதர்கள் அந்தஸ்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்து, அவருக்கு உயர்வு, லாபம், பெருமை உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
புத்திரர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பிய கல்வியை, விரும்பும் பள்ளி, கல்லூரியில் படிக்க வழிபிறக்கும். உத்தியோகம், தொழில் ஆகியவற்றை எதிர் பார்த்துக் காத்திருப்பவர்கள் இப்போது முயற்சிசெய்தால் உத்தியோகம் கிடைத்து விடும். தந்தை- மகன் இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பும் பாசமும் உண்டாகும். இதுவரை பிரிந்து வாழ்ந்த தந்தை, மகன் இணைந்து வாழ்வார்கள். குழந்தைகளால் கௌரவம் உண்டாகும். பூர்வீக சொத்துகளிலுள்ள தடை, பிரச்சினைகள் விலகி சொத்துகளை அடைவீர்கள்.
இதுவரை புத்திர பாக்கியமில்லாமல், பரிகாரம், மருத்துவம் செய்தும் பலன் கிடைக்காமல் துயருடன் வாழ்பவர்கள், அவரவர் வம்சமுறைப்படி முன்னோர் வழிபாட்டுப் பூஜையை சித்தர்கள் கூறியுள்ளபடி, உங்கள் வீட்டில் செய்தால் வம்ச முன்னோர்களுள் ஒருவர் உங்கள் விந்துமூலம் மனைவி கர்ப்பத்தில் கருவாகி, உருவாகி புத்திரனாக வந்து பிறப்பார்.
இந்த முன்னோர் பூஜையின் பலனால், உங்கள் முற்பிறவிகளில் தந்தைக்கும், முன்னோர் களுக்கும் செய்த நன்மைகள் புண்ணியப் பதிவுகளாகி, முன்னோர்களின் ஆசிர்வாதம், அருள், அனுகிரகம் தந்து, குலதெய்வமாக இருந்து காப்பாற்றுவார்கள்.
அரசுத்துறை, தனியார் நிறுவனங்களில் உத்தியோகம் செய்பவர்களின் உழைப்பு, திறமை, அறிவுத் தகுதிக்கேற்ற பதவி கிடைக்காமலிருந்தால் தடைகள் விலகி பதவி உயர்வு கிடைக்கும். உயரதிகாரி அந்தஸ்தில் உள்ளவர்களின் ஆதரவால் காரியத் தடைகள் விலகி, மனம்போல் காரியம் வெற்றியாக முடியும். கண், இதயம், ரத்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
குரு+சந்திரன்
பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் சந்திரன் இருந்தால், இப்போது கோட்சார குரு ஜென்மச் சந்திரனுடன் இணைந்து தரும் பலன்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
பொதுவாக, ஒருவரின் பிறப்பு ஜாதகத் திலோ, கோட்சார நிலையிலோ குருவும் சந்திரனும் இணைந்து சஞ்சாரம்செய்யும் காலங்களில் யோகப் பலன்கள் எதுவும் நடக்காது. மத்திமமான பலன்களே நடக்கும்.
ஆண்களானால் இராமனைப் போன்ற வாழ்வையும், பெண்களானால் சீதை தன் வாழ்வில் அனுபவித்தது போன்ற சிரமங்களையும் அடைவார்கள்.
குரு, சந்திரன் இணைவால் வீடு, ஊர், உத்தியோகம், அலுவலகம் என ஏதாவ தொன்றில் இடமாற்றம் ஏற்படும். தாய், சகோதரி, மனைவி, உறவுப் பெண்கள், அந்நியப் பெண்கள் என யாராவதொரு பெண்ணால் பிரச்சினைகள், அவப்பெயர் உண்டாகலாம். கருத்து வேறுபாடு, மனக் குழப்பம், பணவிரயம் இருந்துகொண்டே இருக்கும்.
காரியம், செயல்களில் தடை, தாமத மாகும். அதிக பயணங்கள், அலைச்சல், நேரத்திற்கு உண்ண முடியாத நிலை ஆகியவை உண்டாகும். காலையில் மனநிம்மதி, மகிழ்ச்சியாக இருந்தால், மாலையில் மனக்குழப்பம், பிரச்சினைகள் என நாட்கள் நகரும். உங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்களால்கூட பிரச்சினைகள் உண்டாகும். பிறருக்கு உதவிசெய்யப்போய் நீங்கள் எதிரிகளை உருவாக்கிக்கொள்வீர்கள். வேலைச்சுமை ஏற்படும். அதனை குடும்பத்தினர்மீது காட்டுவீர்கள். இதனால் குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடு கள் உண்டாகும். நிம்மதி குறையும். நீங்கள் விரும்புவதுபோல் காரிய முடிவு இராது.
உங்கள் உறவினர்களால், சொந்த இனத்த வரால் எந்தவொரு நன்மையும் கிடைக்காது. மாற்று சாதி, இனத்தவரால், உங்களைவிட கீழான நிலையில் உள்ளவர்களால் அவ்வப் போது உதவிகள் கிடைக்கும்.
இராமருக்கு கைகேயி, கூனி, சூர்ப்பனகை போன்ற பெண்களால்; சீதைக்கு மாரீசன், இராவணன் போன்றவர்களால் துன்பம் உண்டானதுபோல் ஆண்களாôல் பெண்களாலும், பெண்களானால் ஆண்களாலும் பிரச்சினைகளை குரு, சந்திரன் இணைவு ஏற்படுத்திவிடும்.
இது, பெற்ற தாய் வயிறெரிந்து விட்ட சாபம் செயல்படும் காலம். இராமனின் முந்தைய அவதாரமான பரசுராம அவதாரத் தில், அவர் பெற்ற தாயையும், தாய்க்கு உதவிய பெண்ணையும் கோடரியால் வெட்டிக்கொன்றார். தனது முற்பிறவி பாவத்திற்கு தண்டணையாக இராமாவதாரத் தில் பெண்களால் அனைத்தையும் இழந்து வாழ்ந்தார். இதுதான் குரு, சந்திரன் இணைந்த பலன்.
குரு+ செவ்வாய்
பிறப்பு ஜாதகத்தில் மகரம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் மகரத்திற்கு வந்துள்ள குரு, ஜென்மச் செவ்வாயுடன் இணைந்து கீழ்க்காணும் பலன்களைத் தருவார்.
உங்கள் சகோதரர்கள் வாழ்வில் உயர்வுண்டாகும். உடன்பிறந்தோர், பங்காளிகளுடன் கருத்து வேறுபாடுகள் மறைந்து, அவர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் பூமி, சொத்து, வீடு சம்பந்தமான பங்கு, பாகப் பிரிவினைகளில் தடைகள், பிரச்சினைகள் நீங்கி, உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்துகள் கிடைக்கும்.
கணவன் மீது மனைவிக்கு பாசம் அதிக மாகும். கணவன்மீது வெறுப்புடன் இருந்த பெண்கள் இப்போது கணவனுடன் பாசம்கொண்டு மதித்து வாழ்வார்கள். ஏதாவதொரு காரணத்தால் கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்கள் இப்போது கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வார்கள். பிரிவுகள் உறவாகும். கணவர், சகோதரர் ஆரோக்கியம் மேம்படும்.
மகரம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் ஜென்ம ஜாதகத்தில் செவ்வாய் இருந்து, இதுவரைத் திருமணமாகாமல் தடை, தாமதங்கள் ஏற்பட்டிருந்தால், இப்போது வரன் அமைந்து திருமணம் நடக்கும். கழுத்தில் மாங்கல்யம் தொங்கும் காலம்.
வம்சத்தில் வாழவந்த பெண் வாழ்க்கையில் பாதிப்பு, சிரமமடைந்ததால், அவள் மனம் வெறுத்து விட்ட சாபம், திருமணத் தடையைத் தந்து கணவனை அடைய காலதாமதத்தை உண்டாக்கிவருகிறது. இந்த சாபம் தீர சித்தர்கள் கூறிய சாப நிவர்த்தி பூஜைசெய்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் ஆத்மா மனம் குளிர்ந்து, கனவில் காட்சி தந்து, தடைவிலக்கி, திருமணம் நடைபெற அருள்புரிந்து அனுகிரகம் செய்துவிடும். உங்கள் குலவழக்கப்படி படையலிட்டுப் பூஜைசெய்யலாம்.
பிறப்பு ஜாதகத்தில் மகரத்தில் செவ்வாய் இருந்தால், அதிகபட்சம் 30 மைல் தூரத்தில் தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளிலிருந்து வரன் அமையும். கணவர் வீடு தெற்கு, வடக்கு வீதியில் கிழக்கு, மேற்கு நோக்கி முன்வாசல் உள்ள வீடாக இருக்கும்.
பிறப்பு ஜாதகத்தில் ரிஷபத்தில் செவ்வாய் இருந்தால், கணவர் செல்வந்தராகவும், கவர்ச்சியான தோற்றம், ஆடம்பரப் பிரியராக வும் இருப்பார். அதிகபட்சம் பத்து மைல் தூரத்தில் சொந்தத்திலோ, சொந்த ஊரிலோ தெற்கு சார்ந்த திசையில் வரன் அமையும். கணவர் இருக்கும் வீடு தெற்கு, வடக்கு வீதியில் கிழக்கு, மேற்கு முன்வாசல் உள்ள வீடாகும்.
பிறப்பு ஜாதகத்தில் கன்னியில் செவ்வாய் உள்ள பெண்களுக்கு கணவர் அழகானவராகவும், அறிவாளியாகவும் இருப்பார். 20 மைல் முதல் 200 மைல் தூரம்வரை தெற்கு சார்ந்த திசையில் வரன் அமையும். கணவர் வீடு வடக்கு, தெற்கு வீதியில் கிழக்கு, மேற்கு முன்வாசல் உள்ள வீடாகும்.
மகரம், கன்னி ராசிகளுக்கு திரிகோண ராசியான ரிஷபத்தில் கோட்சார ராகு இப்போதிருப்பதால், ராகு பகவானின் பாதிப்பில்லாத நாளாகப் பார்த்து, முகூர்த்த நாள் வைத்துத் திருமணம் செய்யவேண்டும். வம்சத்தில் வாழவந்த பெண்ணின் சாபம் நிவர்த்தியானால் சந்தோஷமான திருமணம் சட்டென கூடிவந்துவிடும்.
குரு, செவ்வாய் இணைவால், ஆண்- பெண் யாராக இருந்தாலும், முன்கோபம், ஆணவம், அகங்காரம், தான் என்னும் அதிகாரத் தோரணை, சட்டென உணர்ச்சிவசப்படும் குணம் உண்டாகும். இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்ற எண்ணத்தால் மற்றவர் களிடம் சண்டை, சச்சரவு, கருத்து வேறுபாடு கள், வாக்குவாதங்கள் உண்டாகி அமைதி குறையும். இதனால் உங்களுக்கு அவப்பெயர், அவமானம் உண்டாகும்.
ரத்த அழுத்தம், உடல் உஷ்ணம் அதிகமாகும். எனவே, எதற்கும் கோபப்படாமல், அதிக உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக இருக்கவேண்டும். எந்தக் காரியத்தையும் உடனே முடிக்கவேண்டுமென அவசரப்படா தீர்கள். உங்கள் நோய்க்கு கோபமே காரணம்.
மற்றவர்களுக்காக ஜாமின் பொறுப் பேற்றுக் கொள்ளாதீர்கள். யாருக்கும் எந்த வாக்கும் கொடுக்கவேண்டாம். அதனால் நீங்கள்தான் சிரமமடைவீர்கள். நீண்டநாட் களாக தொல்லை கொடுத்துவரும் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைத் தால், இப்போது செய்துகொள்ளலாம்.
அடுத்த இதழில் புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களுடன் குரு இணைந்து எவ்விதப் பலன்களைத் தருவார் எனப் பார்க்கலாம்.
செல்: 99441 13267