எந்தவொரு தசையிலும் ஒன்பது புக்திநாதர்களும், எந்த ஒரு புக்தியிலும் ஒன்பது அந்தரநாதர்களும் உள்ளடங்கியிருப்பார்கள். ஆக, ஒரு தசையில் ஒன்பது புக்திகளும், 81 அந்தரங்களும் உள்ளடங்கியிருக்கும்.
தசை, புக்தி, அந்தரம் பற்றி நூல்கள் பலவாறு தெரிவித்தாலும், நமக்கு நெருக்கமாகத் தெரிந்த ஒருவரின் ஜாதகத்தில் நடந்துமுடிந்த ஒரு தசையில் எவ்வாறு நிகழ்ச்சிகள் நடந்தன என்பதை அறிந்துகொண்டால் இன்னும் விசேடமாக இருக்கும் அல்லவா? ஒரு தசையில், என்னென்ன புக்திக்காலங்களில், எந்தெந்த அந்தர காலம் நலமளித்தது அல்லது கெடுதல் தந்தது என்பதையறிய நெருக்கமானவரின் ஜாதகம் நிச்சயமாக கைகொடுக்கும். இதோ ஒருவரின் ஜாதகம்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ganesh.jpg)
இந்த ஜாதகத்தில் நடந்துமுடிந்த குரு தசையில் ஒன்பது புக்திகளில் 81 அந்தரகாலங்களில் நடந்த நிகழ்ச்சிகளை இனி காண்போம். குரு 3, 12-க்குரிய பாவகிரகம் என்பது முக்கியமான விஷயமாகும்.
குரு தசை, சுயபுக்தியில் குருவின் நண்பர்களான சூரியன், சந்திரன், செவ்வாயின் அந்தரங்கள் மட்டும் நலமளித்தன. அப்போது பணப்புழக்கம் மிகச்சிறப்பாகவே இருந்தது.
மற்ற அந்தரங்கள் அனைத்தும் தொழிலைக் கெடுத்தன.
குரு தசை, சனி புக்தி, புதன் அந்தரத்தில் திருமணம் கைகூடியது. சுய அந்தரம் தவிர மற்ற அந்தரங்கள் அனைத்தும் வெகுசுகம் தந்தன. செவ்வாய் அந்தரத்தில் பதவி உயர்வும், ராகு அந்தரத்தில் ஊதிய உயர்வும் உண்டானது. குரு அந்தரத்தில் பெண் புத்திரபாக்கியம் கிட்டியது.
குரு தசை, புதன் புக்தி, குரு அந்தரகாலத்தில் புத்திரபாக்கியம் உண்டானது.
சந்திரன், ராகு அந்தரம் தவிர மற்ற அந்தரங்கள் அனைத்தும் சுபப்பலன்களைத் தந்தன.
குரு தசை, கேது புக்தியில் தொழில் மாற்றம் ஏற்பட்டது. ராகு அந்தரம் தவிர மற்றவை சுபம்.
குரு தசை, சுக்கிரபுக்தியில் அனைத்து அந்தரங்களும் நலமளித்தன. குறிப்பாக ராகு, புதன் அந்தரங்கள் வெகுலாபம் தந்தன.
குரு தசை, சூரிய புக்தி, சனி அந்தரகாலத்தில் தந்தைக்கு மாரகம் நிகழ்ந்தது. மற்ற அந்தரங்கள் அனைத்தும் சுபம். ராகு அந்தரத்தில் சிறுவிபத்து.
குரு தசை, சந்திர புக்தி, சனி அந்தர காலத்தில் விஷஜுரம் தாக்கியது.
மற்ற அந்தரங்கள் அனைத்தும் சுபம்.
குரு தசை, செவ்வாய் புக்தி, குரு அந்தர காலத்தில் கங்கா ஸ்நானம் கிட்டியது. காசி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. மற்ற அந்தரங்களும் சுபம்.
குரு தசை, ராகு புக்தியில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோரின் அந்தர காலங்கள் சரியில்லை. மற்றவை சுபம்.
இனி கிரக நிலைகளுக்கு வருவோம். மகர லக்னத்திற்கு சனி, சுக்கிரன், புதன் திரிகோணாதிபதிகள் என்பதால் இவர்களின் புக்திக்காலங்கள் வெகு சுபத்தைத் தந்தன. சூரியன் அஷ்டமாதிபதி என்பதால் தந்தைக்கு மாரகம் தந்தார். சந்திரன் மாரகன் என்பதால் விஷஜுரம் தாக்கியது. கேது 8-ல் நின்றாலும் சுக்கிர சாரத்தில் நின்றதால் நலம் தந்தார். ராகு பெரிதாக பாதிப்பைத் தரவில்லை. செவ்வாய் சுய சாரத்தில் நின்றதால் புனிதங்களைத் தந்தார். குரு விரயாதிபதி என்பதால், இவரது தசையால் பெரிய பணம் எதுவும் சம்பாதிக்க முடியவில்லை.
எனவே ஒரு தசையில் எந்த புக்தியில் நலமுண்டாகும் என்பதைக் கணிக்க அந்தரநாதனையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
புக்திநாதனுக்கு அந்தரநாதன் பகைவனாக வரும்போது நலமளிப்பதில்லை. அந்தரநாதன் நல்லவனாக இருந்தாலும், புக்திநாதனுக்கு பகையாளியாக இருக்கும்போது சுபப்பலனைத் தருவதில்லை. குருதசை சுயபுக்தியில் சனி, புதன், கேது, சுக்கிரன் அந்தர காலங்கள் சோதனைகளைத் தந்தன.
புக்திநாதனுக்கு அந்தரநாதன் நட்பு அல்லது சமநிலையாக இருந்தால் நலம் உண்டாகிறது. அந்தரநாதன் பாவியாக இருந்தாலும் தசாநாதனுக்கு அனுகூலமாக நின்றால் நலமுண்டு. இங்கே குரு தசையில் அஷ்டமாதிபதியான சூரியன் அந்தரத்திலிருந்து வெகுலாபம் கிட்டியது. குருவுக்கு சூரியன் நண்பர் ஆவார்.
இதுபோல செவ்வாய் புக்தியில் குரு அந்தரம் கங்கா ஸ்நானம் கிட்டிய பொன்னான காலமாகும்.
எனவே தசை, புக்தி, அந்தரம் இம்மூன்றும் ஒத்துழைக்கும்போதுதான் சுப அல்லது அசுபப் பலன்களைத் தரமுடியும். இந்த ஜாதகத்தில் ராகு- கேதுக்களின் புக்திக்காலங்களில் குரு, சுக்கிரன், சனி அந்தரம் நலமளித்தது. ஆனால் சூரிய சந்திரர் புக்திக் காலங்களில் சனி அந்தரம் கெடுபலன்களைத் தந்தது. இங்கேதான் கிரக நட்பு- பகை சிறப்பாகச் செயல்படுகிறது.
அந்தரநாதன் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தனது நட்பு கிரகத்தின் அந்தரத்தில்தான் புக்திநாதன் நன்மைகளைச் செய்வார். தனது பகை கிரகத்தின் அந்தரத்தில்தான் புக்திநாதன் கெடுதல்களைச் செய்வார்.
இந்த ஜாதகத்தில் சுக்கிரன் யோககாரர். குரு, சூரியன், செவ்வாய் புக்தியில் சுக்கிரன் மந்தமாக அந்தரப் பலனைத் தந்தார். இந்த ஜாதகத்தில் சூரியன் அஷ்டமாதிபதி. இவர் குரு புக்தி, சந்திர புக்தி, செவ்வாய் புக்திக் காலங்களில் சுப அந்தரநாதனாக செயல்பட்டார்.
எனவே குரு 3, 12-க்குரிய பாவியென்று தசை முழுவதும் ஒதுக்கிவிடமுடியாது. சுக்கிரன் 5, 10-க்குரிய யோகன் என்று -தசை முழுவதும் யோகம் தருவான் என்றும் நினைக்கக்கூடாது.
ஒவ்வொரு தசையிலும் சுபம்- அசுபம் இரண்டும் உண்டு. ஒவ்வொரு புக்தியிலும் சுப அந்தரம்- அசுப அந்தரம் இரண்டும் உண்டு.
எனவே சுபப்பலன் தரக்கூடிய கிரக நிலைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது நலமாகும். அசுப காலம் வரும்போது முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம்.
இங்கே இந்த ஜாதகத்தில் தசாநாதனான குருவுக்கு கஜகேசரி யோகம் இருந்ததால் அவர் மாரகனாக செயல்படவில்லை. சமநிலையில் செயல்பட்டிருக்கிறார். சனி வக்ர கதியோடு பரிவர்த்தனை யோகமும் பெற்றுள்ளதால் அவரது புக்தி பலவாறு நலமளித்தது. நீசப்பலனைத் தரவில்லை.
மகர லக்னத்திற்கு குரு தசை என்பது நலமளிக்காது என்றபோதிலும், புக்திநாதர்கள் நலமளித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். சுக்கிரனுக்கும் குருவுக்கும் பகையென்பதால் குரு புக்தி- சுக்கிர அந்தரம், சுக்கிர புக்தி- குரு அந்தரம் நலமளிக்கவில்லை.
பொதுவாக ராகு- கேதுக்களின் அந்தரகாலம் நலமளிக்காது என்று சொல்வதுண்டு. இந்த ஜாதகத்தில் குரு தசை- சனிபுக்தி, சுக்கிர புக்திக்காலங்களில், ராகு- கேதுக்களின் அந்தர காலங்களில் அளவற்ற சுபப்பலன்கள் உண்டானது.
இதுபோல குரு, சுக்கிரன், புதன் அந்தரம் வெகு சுகமளிக்கும் என்று சொல்வதுண்டு. இந்த ஜாதகத்தில் கேது புக்தியில் புதன் அந்தரம் கெடுதலைச் செய்தது. குரு புக்தியிலும் புதன் அந்தரம் கெடுதலைச் செய்தது. செவ்வாய் புக்தியிலும் புதன் அந்தரம் தீமையைச் செய்தது. சுக்கிர புக்தியில் குரு அந்தரமும், குரு, சூரியன் புக்தியில் சுக்கிர அந்தரமும் கெடுதலைத் தந்தது.
யோககாரன் வீட்டில், சுகாதிபதி சாரத்தில் லக்னேசன் பார்வையில், பாக்கியாதிபதியின் ராசிநாதனாக குரு நின்றதால், குரு தசையில் பெரிய தீமைகள் எதுவும் ஏற்படவில்லை.
தசாநாதன் சிறப்பாக இருக்கும்போது தீமைதரும் புக்திநாதர்களும், அந்தர நாதர்களும் பெரிய தீமைகளைத் தரமுடியாது.
இந்த குரு தசை அல்லது குரு புக்தி எத்தனையோ மகர லக்னக்காரர்களுக்கு மாரகம் செய்திருக்கிறதென்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஆனால் இங்கே திருமணம், புத்திர பாக்கியங்கள், நல்ல வேலை, சிறப்பான ஆரோக்கியம் போன்றவற்றைத் தந்திருக்கிறார்.
எனவே மாரகர்கள் சுபராக மாறி சில ஜாதகங்களில் செயல்படுவார்கள் என்பதற்கு இந்த குரு ஒரு உதாரணமாகும். சில ஜாதகங்களில் யோகர்கள் மாரகர்களாக மாறிவிடுவதும் உண்டு. காரணம், நின்ற நிலைகள்தான். நிற்கும் நிலையால் கிரகத்தின் தன்மையே மாறிவிடும். மாரக கிரகங்கள் யோகப்பலனைச் செய்வதற்குப் பரிகாரமும் முக்கிய காரணமாகும்.
இந்த ஜாதகர் குருதசை முழுக்க மாதம் ஒருமுறை ஆலங்குடி சென்று வந்தார். தனது குரு ஆலோசனைப்படி மகாவிஷ்ணு ரட்சையும், மகாலட்சுமி ரட்சையும் அணிந்து கொண்டார்.
வியாழக்கிழமை உபவாசம் இருந்தார். பிரதோஷ வழிபாடு செய்தார். பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றார். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். மாரக தசை என்பதைப் புரிந்துகொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொண்டார். விரயத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. உற்றார்- உறவினர் தரும் தொந்தரவுகளை சகித்துக்கொண்டார். நன்றியில்லாத மனிதர்களை மன்னித்தார். குருவே மாரகனாக இருந்ததால் தப்பிக்க அவரே உபதேசம் செய்ததாக ஜாதகர் உணர்ந்தார். எனவே பரிகாரமும், வாழ்க்கை நெறிமுறைகளும் யோகத்தைக் கூட்டும் என்பதில் ஐயமேதுமில்லை.
செல்: 93644 93102
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/ganesh.jpg)