ன்றைய காலகட்டத்தில் முகட்டுப் பூஜை போன்ற வழிபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகின்றன. கட்டடம் கட்டும்முன் வாஸ்துசாந்தி (வாஸ்து பூஜை) செய்கிறோம். அதுபோல் கட்டடச் சுவர்களை எழுப்பி அதை மேல்தளம் போட்டு மூடுகிறபோது நம் முன்னோர்கள் அதற்கென இறைவாழிபாட்டைச் செய்தனர்.

சுவர்களை எழுப்புதல் என்பது, கட்டுமானப் பணிகள் பலவற்றில் தலையாய பணியாகும். சுவர்களை எழுப்பிவிட்டு மேல்தளம் மூடப்படாமல் காலம் கடந்தால், அச் சுவர்களை "குட்டிச் சுவர்' என்கிறோம். கட்டடம் கட்டும் நிகழ்வுகளின் திருப்புமுனையே மேல்தளம் மூடுதல் தான்.

pooja

Advertisment

மேல்தளம் மூடும் நிகழ்வுக்கென்று ஒருசில விதிமுறைகள் உண்டு. ஆனால் இன்று தமிழகத் தின் பலபகுதிகளில், முகட்டுப் பூஜையின் சுப நிகழ்வுகள் நடைமுறையில் இல்லையென்பது கசப்பான உண்மை.

வாஸ்துசாந்தி ஆயினும் சரி; முகட்டுப் பூஜை ஆயினும் சரி- மரபுவழியில் வரும் கொத்தனார்கள்தான் இப்பூஜையைப் பற்றித் தெரிந்துள்ளனர். பாரம்பரியமாக வந்த வாஸ்து ஆசான்களும் முகட்டுப் பூஜை நிகழ்வை முன்னின்று நடத்துகின்றனர்.

Advertisment

பரப்பு (Concrete) கான்கிரீட் போட என்று நாள் குறிக்கிறோமோ, அதற்குமுன்பே முகட்டுப் பூஜைக்குத் தயாராகவேண்டும். மேலும் செவ்வாயின் நட்சத்திர நாளில்தான் பரப்பு கான்கிரீட் போடவேண்டும்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திர நாட்களில் ஒரு நாளைத் தேர்வு செய்யவேண்டும். பரப்பு கான்கிரீட் தொடங்குகிற சமயம், செவ்வாயின் நட்சத்திரங்களில் ஒன்று கண்டிப்பாக நடைபெறவேண்டும்.

அன்று கால் நாள், சந்திராஷ்டம நாள், மரண- பிரபலாரிஷ்ட யோகம், ராகுகாலம், எமகண்டகாலம் பார்க்கவேண்டுமா என்றால், நிச்சயமாக அவசியமில்லை. பூமிகாரகனாகிய செவ்வாயின் நட்சத்திர நாளே சிறப்பிற்குரிய நல்ல நாளாம்- காலமாம்.

முகட்டு (உச்சி) பூஜையின்முன், இதற்குரிய பூஜைப் பொருட்களைத் தயார் செய்ய வேண்டும். பொற்காசு, வெள்ளிக்காசு, ஐம்பொன்காசு, பசும்பால், பசுங்கோமியம், எலுமிச்சைக்கனி மற்றும் பூஜைக்குரிய பொருட்களும் வாங்கவேண்டும்.

ஆறடி நீளம்கொண்ட பிவிசி (PCV) பைப் வேண்டும். சென்ட்ரிங் பலகை அமைக்கும் போதே ஈசானிய பாகத்தில் அதனைப் பொருத்தவேண்டும். அதாவது சென்ட்ரிங் பலகைக்கு (அறையினுள்) உட்பக்கமாக பிவிசி பைப் நீட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.

பரப்பு கான்கிரீட் போடுகிறபோது, சாந்துக் கலவையை கன்னி (தென்மேற்கு) பாகத்திலிருந்து கொட்டி, வடகிழக்கு பாகம் நோக்கித் தொடங்கவேண்டும். (படம் காண்க).

முகட்டுப் பூஜையை நிகழ்த்த, கூடுமானவரை பரப்பு கான்கிரீட் போட்டு மூன்றுமணி நேரமாவது ஆகவேண்டும். மதிய வேளையில் கட்டடத் தொழிலாளார் அனைவருக்கும் உணவு வழங்கவேண்டும். உணவுக்கு பதிலாக, அவர்கள் கையில் காசு தருவது தர்மமல்ல.

தலைமைக் கொத்தனார், உதவியாளர், கட்டட உரிமையாளர் மேல்தளமதில் ஏறிய பின், தலைமைக் கொத்தனார் தலைவாழை இலையைப் பரப்பி, அதில் பூஜைப் பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். பின், கட்டட உரிமையாளரிடம் ஓர் எலுமிச்சைக் கனியை எடுத்துத் தர வேண்டும்.

ஈசான அறையினுள் பிவிசி பைப்புக்கு நேர்கீழாக, கட்டட உரிமையாளரின் மனைவி நிற்கவேண்டும். கட்டட உரிமையாளர் பிவிசி பைப்பின் வழியாக மேலிருந்து எலுமிச்சைக் கனியைப் போடவேண்டும். பின் தங்கக்காசு, வெள்ளிக்காசு, ஐம்பொன்காசு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகப் போடவேண்டும்.

கட்டட உரிமையாளரின் மனைவி தன் சேலையின் முந்தானைத் தலைப்பில் அதனை வாங்கிக்கொள்ளவேண்டும். பின் பிவிசி பைப்பை மெள்ள உருவிவிட்டு, கொத்தனார் உதவியுடன் கட்டட உரிமையாளர் கலவையை அந்தக் குழியினுள் கொட்டி மூடவேண்டும். அன்றிலிருந்து ஈசான உள்ளறையில், மாலையில் அவசியம் நெய்தீபம் தினமும் ஏற்றவேண்டும்.

முகடு நட்சத்திர நாள் மேல்தளம் மூட மிகச்சிறப்பான நன்னாளாகும். இறங்குமுக நட்சத்திர நாளில் மேல்தளம் போடக்கூடாது. செய்திடின் கட்டடத்தில் விரிசல், இடிதல், சேதமாகுதல் போன்றவை ஏற்படும்.

செல்: 94431 46912