பத்திரை கரணம்! பஞ்ச அங்கங்களில், ஒன்றைவிட ஒன்று மிகவும் வலிமை வாய்ந்ததாகவும், வாய்ப்புகளை ஜீவிதத்திற்கு அளிப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கரணம் அதி வலிமைகொண்ட ஒரு பகுப்பாக கருதப்படுகிறது.
கரணங்களின் வரிசையில் ஏழாவது கரணமாக விஷ்டி என்கின்ற பத்திரை கரணம் இடம்பெற்றுள்ளது.
கையாளப்படுகின்ற 11 கரணங்களில் இது அசுப கரணமாக எடுத்துக்கொள்ளபடுகின்றது. இந்த பத்திரை கரணம் பத்ரா என்ற சொல்லிலிருந்து உருவானது.
சூரியனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்த- ஆலகால விஷத்தன்மையில் உருவான ஒரு பெண் இந்த பத்ரா ஆகும்.
வேத ஜோதிடத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து அங்களிலும் இதே தன்மையே இந்த பத்திரை கரணம் பெற்றுள்ளது.
பத்ரா மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கக் கூடியவள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அது மிருத்யு லோகம். அதாவது பூமியில் சஞ்சரிக்கும்பொழுது சுப காரியங்களில் தடையை ஏற்படுத்தும் தன்மையில் அமைந்துள்ளதாகக் கூறுகிறது ஜோதிடவியல்.
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் அதீத வல்லமையும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் குற்றவியல் ஆய்வாளர்களாகவும், துப்பறியும் துறையிலும் தன்னை மெருகேற்றி மிளிர்கின்றனர்.
புதையுண்ட பொருட்களினால் இவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். மேலும் புதையலை அனுபவிக்கும் யோகம் உடையவர்கள்.
இவர்களின் வாழ்வியலில் வேலை தொடர்பான பிரச்சினைகளும், தனக்குக்கீழ் வேலை செய்பவர் களால் ஏற்படும் தொந்தரவுகளும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.
இவர்களுக்கு சரியான வேலையாட்கள் அமையமாட்டார்கள்.
கிடைக்கப்பெறும் அனைத்தும் முழுமை யாகக் கிடைக்கவேண்டும் என்னும் எண்ணம் இவர்களுக்கிருக்கும். ஆனால் எதுவுமே முழுமை பெறாத நிலையோடு இவர்களை வந்து அணுகும்.
ஓடி அலைந்து ஒரு விஷயத்தை அடைந்து, அதனாலும் திருப்தி பெறமுடியாத சூழல் இருக்கும்.
மருந்துகள் ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் மருந்தகம் அமைத்து அதனால் பெயர்புகழ் அடையக்கூடிய தன்மையும், சிறந்த மருத்துவராக பிரதிபலிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு இருக்கும்.
இவர்களின் வம்சாவளியில் நிலம் சார்ந்த ஒரு தகராறை சந்தித்தே இவர்கள் வந்திருக்கவேண்டும்.
விஷ முறிவு போன்றவை இவர்களின் சாதுரியத்தால் நிகழும். விஷம் ஏறாமல் இருப்பதற்காகப் படிக்கப்படும் மந்திரங்கள் இவர்களுக்கு எளிதில் சித்தியாகும்.
இக்கரணத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு பொருளாதார நஷ்டத்தை சந்திக்கும் சூழல் பலருக்கு உருவாகிறது.
பிறரை நம்பி பொருளை இழக்கும் நபர்கள் பெரும்பான்மையோர் இந்த கரணத்தில் பிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கும் விவசாயத்திற்கும் சுபிட்சமான தொடர்பு காணப்படுவதே இல்லை. விளைகின்ற விளைச்சல்கூட இவர்கள் எதிர்கொள்ளும் நேரத்தில் நஷ்டத்தை மட்டுமே தருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
வெறும் கரணத்தை மட்டுமே வைத்து விவசாயத்தின் தன்மையை கூறிவிடவும் முடியாது. இவர்களின் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சனியின் தொடர்பும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் கிளறி, அதிலிருக்கும் நுட்பத்தை ஆய்ந்து அதன்வழி நடக்கும் அதிநுட்பம் கொண்டவர்கள்.
எனவேதான் இவர்கள் ஆராய்ச்சியாளர்களாகவும், ஜோதிடத்திலும் பெருமளவு ஜெயித்துக் காட்டுகின்றனர்.
இவர்கள் தங்களின் வாழ்வில் ஏற்பட்ட தீமைகளையும், விரும்பத்தகாத நிகழ்வுகளையும் மனதில் வைத்துக்கொண்டு அதே எண்ணத்தோடு பயணிக்கும் ஆற்றல்பெற்றவர்கள்.
போர் உபகரணங்கள் மற்றும் ஒரு விஷயத்தை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை இந்த கரணத்தில் செய்வது சிறப்பு.
முக்தியின்வசம் பயணிக்க பெரும் உறுதுணையாக இருக்கும் குருவின் அருளாற்றல் பெறுவது மற்றும் பிரணாயாமம், சித்த வித்தை போன்றவற்றை இந்த காலங்களில் கற்கும்பொழுது மிக எளிதில் மோட்சம் என்னும் அதியற்புத நிலையை எட்டிவிட முடியும்.
அதிதேவதை- திருச்செந்தூர் முருகன்
மிருகம்- சேவல்
மலர்- குன்றிமணிப் பூ
நைவேத்தியம்- சித்திரான்னம்
தூபம்- நன்னீர் (நல்ல தண்ணீர்)
பாத்திரம்- வெண்கலம்
தெய்வம்- பைரவர்
அசுப கரணமாக இருந்தாலும் இந்த கரணத்தில் குழந்தையின்மைக்கான முதல் சிகிச்சை மேற்கொள்வது பலனளிக்கும். ஆனால் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கும் சூழல் இருந்தால் இந்த கரணத்தில் எடுப்பது சிறப்பல்ல.
அதேபோன்று தங்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள ஒரு ஜோதிடரை அணுகும்பொழுது பிரசன்னம் பார்க்கும் சூழல் வந்தால் இந்த நேரத்தில் பார்ப்பது சிறப்பல்ல.
திருமண முகூர்த்தம் மற்றும் விவசாயம் செய்வதற்கும் இந்நேரத்தை விலக்குவது சிறப்பு.
ஒவ்வொரு பௌர்ணமி முடிவின் பொழுதும் இந்த கரணம் இருக்கும்.
இதனால்தான் இந்த தருணத்தில் பிறந்தவர்கள் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் முருகன் வழிபாடு மேற்கொள்வது சிறப்பாகப் பேசப் படுகின்றது.
ஆகச்சிறந்த எதிரியை அழித்து வெற்றிகொள்ள இந்த கரணத்தை பயன்படுத்திகொள்வது சிறப்பு.
மேற்கூறிய விஷயங்கள் சற்று எதிர்மறையான சூழலை உருவாக்கினாலும், வளர்பிறையில் பிறந்தால் இந்த சூழ்நிலை சற்று குறைவாக நடைபெறுவதைக் காணமுடிகின்றது.
மூன்றாவது பாலினமாகக் கருதப்படும் திருநங்கை மற்றும் திருநம்பிகள் இந்த கரணத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இவர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இடர்களையும், இன்னல்களையும் இடம்பெயரச் செய்வதற்கு கரணநாதனின் வழிபாடு பெருந்துணையாகக் கைகொடுக்கும்.
இவர்களின் கரணநாதனுக்கான கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.
பௌர்ணமி தினத்தில் அங்குசென்று, ஒரு நாட்டு சேவலை கோவிலுக்குத் தந்துவிட்டுவர, ஏற்பட்டுவந்த பல சிக்கல்கள் தீர்ந்து இன்பத்தின்வசம் பயணிக்க முடியும்.
மேலும் நாட்டு சேவலை உணவாக உட்கொள்வதை தவிர்ப்பது பல சூழல்களில் இவர்களுக்கு நன்மை பயக்கும்.
இவர்களின் கைபேசியில் ஒரு சேவலின் படத்தை ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்வது நல்லது. அதே போன்று கோழியின் இறகு பதிக்கப்பட்ட பேட்ச் அணிந்து கொள்வது நன்மை தரும்.
இவர்களின் இஷ்ட தெய்வங்கள் மற்றும் வீட்டில் வழிபடு தெய்வங்களுக்கு வெண்கலப் பாத்திரத்தில் சித்ரான்னம் வைத்து வழிபட்டுவர எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் வசந்தத்தைக் காணமுடியும்.
இவர்கள் தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாக சாந்தி செய்துவர சிறப் பைக் காணமுடியும்.
திருச்செந்தூர் முருகனின் ஆலயத்தில், மற்ற கரணங்களுக்கு அளிக்கப்பட்ட பரிகாரங்கள்போலவே ஒரு பெரிய பாக்குமட்டைத் தட்டில் 11 கமலா ஆரஞ்சு, 11 வெற்றிலை, 11 பாக்குகளுடன் தட்சணை வைத்து அர்ச்சகருக்குத் தந்து ஆசீர்வாதம் பெற்றுவர சிறப்படைவார்கள்.
செல்: 80563 79988