சென்ற இதழ் தொடர்ச்சி...
குரு இரண்டாமித்திற்கு வந்தவுடன் முடக்கமாக இருந்த நிலைமாறி அனைத்து காரியங்களும் நடக்க ஆரம் பிக்கும். இரண்டாமிடம் வாக்கு, குடும் பம், தனம், செல்வம், செல்வாக்கு என்பதால் சுப விசேஷம் மற்றும் ஆசைகள், லட்சியம் நிறைவேறும் காலமாக இருக்கும். இரண்டாமிடத்தில் நின்ற குரு ஆறு, எட்டு, பத்தாமிடங்களைப் பார்ப்பார். ஆறு, எட்டுக்குரிய நோய், எதிரி, கடன் பிரச்சினைகள் குடும்பத்தில் இருந்தால், அவையனைத் தும் தீரக்கூடிய காலமாக இருக்கும். ஏனென்றால் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், தொழில் சிறப்பாக அமைந்து வருமானம்
வந்து குடும்பப் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த விசேஷங்களை நடத்தி, சுப விரயங்களைக் கொடுத்து நிம்மதியான வாழ்வைத் தருவார். மதிப்பு, மரியாதை, கௌரவமான பதவிகள் தேடிவரும். எதிர்பார்த்த சுபகாரியங்கள் நடந்து சுகமான, சந்தோஷமான மனநிலை உண்டாகும். சிலருக்கு இரண்டில் குரு வந்தபிறகும் முழு நன்மை கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம், கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தின்- முன்ஜென்மத் தில் அவரவர் செய்த கர்மவினையால்தான்.
குரு தைரிய ஸ்தானமான மூன்றா மிடத்திற்கு வந்தால் ஏழு, ஒன்பது, பதினொன்றாமிடங்களைப் பார்ப்பார். பார்வைபட்ட இடங்கள் சுப பலம் பெறுமென எடுத்துக்கொள்வது தவறு.
மூன்றில் குரு வந்தபோதுதான் துரியோதனன் படை மாண்டது. குரு மறைந்தால் நற்பலன்கள் குறையும்.
தைரியம் குறையும். மனைவி, பங்காளி, கூட்டாளியால் தொல்லை, தொழிலில் பாதிப்பு நேரும். எதிரிகள் வெற்றிபெறு வர் அல்லது எதிரியை வெல்லமுடியாது. எதிரியின் பலம் கூடும். பொதுவாகவே தொழில் கெட்டு, வருமானமிழந்தால் குடும்பக் கலகம் தானாக உருவாகும். தீய எண்ணம், தீய நட்பால் கணவன்- மனைவிக்குள் வீண் தகராறு ஏற்படும். தந்தைக்கு பாதிப்பு, தந்தையால்- தந்தைவழியால் பாதிப்பு உண்டா கும். பாக்கியக்குறை ஏற்படும். எதிர் பார்ப்புகளில் ஏமாற்றமே மிஞ்சும். மனம் நொந்துபோவர். லாப ஸ்தான மான பதினொன்றாமிடத்தை மறைந்த குரு பார்ப்பதால் வர வேண்டிய முழுலாபம் கிடைக்காது. மூத்த சகோதரர், நண்பர்களால் தொல்லையே ஏற்படும்.சுய ஜாதக நிலையில் சிலருக்கு அதிகக் கெடுதல் நடக்காது.
"நான்கில் குரு நாய்படாத பாடுபடுத்தும்' என்றும், "தருமர் வனவாசம் போனார்' எனவும் சொல்வர். குரு நான்காமிடமான தாயார், வீடு, வாகன ஸ்தானத்திற்கு வருவதால் நற்பலன் முழுமையாக இருக்காது. போராடியே சில நன்மை களைப் பெறமுடியும். தாயாரோடு மனஸ்தாபம் உண்டாகி, தாயாரால் அல்லது தாயாருக்குபாதிப்பு ஏற்பட்டு வீண் செலவுகளை உண்டாக்கும். வீடு, வாகனம், உற்றார்- உறவினரால் தொல்லைகளை அனுபவிக்க நேரும். வாகன விபத்து, முடக்கம், கை, கால், வயிறு சம்பந்தப்பட்ட வியாதியால் தனக்கோ அல்லது குடும்பத்தில் இருப்பவர் களுக்கோ பாதிப்புண்டாகும். அனைத்து காரியங் களிலும் தடை ஏற்பட்டும். காரணமின்றி மனஸ்தாபங்களால் சுகத்தை இழக்க நேரும். கேந்திர ஸ்தானமான நான்கில் வந்ததும் குருவின் பார்வை எட்டு, பத்து, பன்னிரண்டாமிடங்களைப் பார்வை யிடுவார். பார்வையின் நற்பலன் குரு நின்ற இடத்தைப் பொருத்தது என்பதை மறக்கக்கூடாது. கெட்ட இடங்களில் நின்று குரு பார்த்தால், பார்க்கும் இடத்திற்குரிய கெடுபலனையே செய்வார். எட்டாமிடமான நோய், எதிரி, கடனை அதிகப்படுத்தும் அல்லது உருவாக்கும். பத்தாமிடமான தொழிலில் பாதிப்பைத் தரும். செய்தொழிலில் மாற்றம், முடக்கம், ஏமாற்றத்தைத் தரும். அதனால் அயன சயன சுகத்தைக் கெடுக்கும். இடமாற்றம், வீண் அலைச்சலையே தருவார். சிலருக்கு குடும்பப் பிரிவைக் கொடுத்து, சுகத்தை இழக்கச்செய்து, தொழில் மேன்மையைத் தருவார். இருக்கும் தொல்லையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்னும் மனநிலையே இருக்கும்.
குரு ஐந்தாமிடத்திற்கு வந்ததும்
பூர்வபுண்ணியத்தால் குலதெய்வ வழிபாடு, கோவில் புனரமைப்பு, ஆன்மிக ஈடுபாட்டைத் தருவார். பூர்வீக இடத்திற்காக, நெடுநாள் போராடிய தற்கு முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவார்கள். புத்திர பாக்கியத்தை சிலருக்கும், புத்திரப் பிரிவு, பாதிப்பை சிலருக்கு தரும். ஐந்தாமிடத்திற்கான காரியங்களில் இருந்த தடை மாறி, நன்மை உண்டாக வழிபிறக்கும். ஐந்தில் நின்ற குரு ஒன்பது, பதினொன்று ஒன்றாமிடத்தை- அதாவது ஜென்ம லக்னத்தைப் பார்ப்பார். ஒன்பதாமிடமான பாக்கியத்தை வாரிவழங்கு வார். ஜாதகரின் அந்தந்த வயதுக்கேற்ப உடல்நிலை முன்னேற்றம், தோற்றப் பொலிவு, நோய் தீர்தல், மனக் குழப்பம் அகலுதல், கல்வி மேன்மை, திருமணம், குழந்தை பாக்கியம், நிரந்தரத் தொழில் அல்லது சொந்தத் தொழில் அமையும். வாழ்க்கையில் உண்டான தடை, தாமதம் தீர்ந்து எதிர்பார்த்த அத்தனை பாக்கியத்தையும் தருவார். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராதவிதத்தில் பலவழிகளில் லாபம் வரும். நன்மைகள் அதிகம் நடக்கும் காலம். "நமக்குதான் நடக்கிறதா!' என்று ஆச்சரிய அதிசயம் நிகழும். சில ராசிகளுக்கு குரு, பாதகாதிபதி, மாராகாதிபதி, மறைவிட அதிபதியாக இருந்தால் நன்மைகள் சற்று குறைவாகச் செய்யும்.
குரு ஆறாமிடத்திற்கு வந்தால், "தரையில் கிடக்கும் தங்கத்தை தன் கைப்பட்டு எடுத்தால் பித்தளையாகிவிடும்' என்பர். அந்த அளவு நாம் செய்யும்- யோசிக்கும் காரியங் கள் எதுவும் நடக்காது அல்லது தடைப்படும் என்பர். ஆறில் குரு நோய், எதிரி, பகை, கடனை உருவாக்கும். செய்யும் எந்த செயலும் நன்மையில் முடியாது. ஏதாவது பிரச்சினைமேல் பிரச்சினை வந்துகொண்டே இருக்கும். நிம்மதியைக் கெடுக்கும். கை, கால்களில் அடிபடும். புதிய நோய் உருவாகும். இருக்கும் நோய் பெரிதாகும். குடும்பத்தில் யாருக்காவது, ஏதாவது உடல்நிலை பாதித்துக்கொண்டே இருக்கும்.
குடும்பத்திற்காக மருத்துவச் செலவு செய்தே ஆகவேண்டிய சூழல் உண்டாகும். சிலருக்கு பணமில்லாத அல்லது ஏற்பாடு செய்யமுடியாத நேரத்தில்பிரசவம் போன்ற சுபச்செலவும் செய்யவேண்டி வரும். சுகப்பிரசவம் கூட பயம் தந்து அறுவைசிகிச்சை செய்யநேரும்.ஆறில் நிற்கும் குரு தன் பார்வையால் பத்து, பன்னிரண்டு, இரண்டாமிடங்களைப் பார்ப்பார். கெட்ட இடத்தில் நின்று பார்க்கும் குரு கெடுபலனையே தருவார். பத்தாமிடமான தொழிலைப் பார்ப்பதால் வருமான இழப்பு, தொழில் நஷ்டம், தொழில் அமையாமல் பாதிப்பு உண்டாகும். நல்ல வாய்ப்புகள் தள்ளிப் போகும். குடும்பத்தில் யாருக்காவது கர்மம் செய்ய நேரும். பன்னிரண்டாமிடத்தை குரு பார்ப்பதால் வீண் விரயங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வரவுக்கு மீறிய செலவே ஏற்படும். குடும்பத்தைவிட்டு பரதேசம்- அதாவது வெளிநாடு செல்லநேரும். குடும்பப் பிரிவு மனதை வாட்டும். கடன் தொல்லையால், இருக்கும் ஊரைவிட்டு ஓடி மறைந்து வாழவேண்டிவரும். எதிரி வலுவாகி தொல்லை கொடுப்பர். எதிரியை எதிர்க்கவோ, வெல்லவோ முடியாத சூழலே உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் வாக்குத் தவறவேண்டிய சூழல் வரும். அவமானங்களை சந்திக்க நேரும். மதிப்பு, மரியாதை குறையும். செல்வம், செல்வாக்கு சரியும். கெட்டவர்களுக்கு கெடுதலான நேரமாக இருக்கும். தான் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் காலமாக இருக்கும். முகத்திரை கிழிந்து உண்மையான முகம் வெளித்தெரியும். ஏமாற்றமுடியாத நேரமாகவே இருக்கும். சில ராசிகளுக்கு குரு கெட்டவனாக இருந்து கெட்டிருந்தால், விபரீத ராஜயோகத்தால் மறைமுகமாக, சட்டத்திற்குப் புறம்பாக லாபமடையச் செய்யும்.
களத்திர ஸ்தானமான குரு ஏழாமிடத் திற்குப் பெயர்ச்சியானதும் திருமணத்தடை விலகி நல்ல வரன் அமையும். கோட்சாரத்தில் சுப ஸ்தானமான ஏழில் குரு வந்ததும் வாழ்வில் ஏற்றம் பல தருவார். ஆறில் குருவால் பாதிக்கப் பட்டு நொந்து வெறுத்துப் போனவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இழந்த மானம், செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் பல நடக்கும். நோய் தீர்தல், வருமானம் கிடைத்தல், தொழில் மேன்மை, உற்றார்- உறவினர் உதவி, நண்பர்களால் லாபமடைவர். குரு ஏழில் நின்று பதினொன்றாமிடம், ஜென்மம், மூன்றா மிடத்தைப் பார்வையிடுவார். பதினொன்றா மிடத்தை குரு பார்ப்பதால் ஏதாவதொரு வழி கிடைத்து, பல வழிகளில் லாபம்வந்து வாங்கிய கடனை அடைப்பர். சரியான மருத்துவம் பெற்றுநோய்தீரும். எதிரிகளால் உண்டான பாதிப்பு குறைந்துவிடும். தொழிலில் லாபம் பெறுவர். பணப் பற்றாக்குறை தீரும். விலகிய சொந்தம் தேடிவரும். சிலருக்கு மறுமணம் நடைபெறும். சிலருக்கு இளைய தாரம் கிடைக்கும் அல்லது இளைய தாரத் தால் லாபம் அடைவர். மூத்த சகோதரர்கள் தொல்லைதர மாட்டார்கள் அல்லது தொல்லைதர முடியாமல் தவிப்பர். மூத்த உடன்பிறப்பால் உதவி, ஒத்துழைப்பு, நன்மைகள் உண்டாகும். லாபம் மற்றும் நினைத்தது நடந்ததால் தைரியம் உருவாகும். எதிலும் துணிந்து செயல்பட்டு வெற்றிமேல் வெற்றிபெறுவர். அதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தைரியமும் தன்னம்பிக் கையும் பிறக்கும். யோகமான காலமாக இருக்கும். சில ராசிகளுக்கு குரு நீசம், பகை, பாதக- மாரக கிரகமாகி, தசை கெட்டு பலவீனமானால் குறைந்த அளவு நன்மையே நடைபெறும்.
குரு எட்டில் வந்த நேரத்தில்தான் வாலி பட்டமிழந்ததாக சொல்வர். செய்யும் தொழிலில் பாதிப்பு, வேலை இழத்தல், பதவியை இழத்தல், மனநிலை, உடல்நிலை பாதிப்பு உண்டாக்கும். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் உண்டாகும். எதிரிகளால் பாதிப்பு, செய்வினை, பில்லி, சூன்யத்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகும். கடனால் அவமானப்படுதல், புதிய கடன் உருவாகி பெருந்துயர் உண்டாகும். யாரையாவது நம்பி ஏமாறவேண்டிய காலம். நல்லவர்களைத் துரத்திவிட்டு கெட்டவர்களுக்கு மரியாதை கொடுத்து, கெட்டவர்களால் சூழப்பட்டு கெட்டதை அடையநேரும். குரு எட்டில் நின்று விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீண் செலவு, வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். "எவ்வளவு வருமானம் வந்தாலும் நிற்கமாட்டேங்குது' என்பர். எல்லைமீறிய- தேவையற்ற செலவுகள் தேடிவரும். குடும்பத் தில் பாதிப்பு, குடும்பத்தால் பாதிப்பு ஏற்படும். வாக்குதவற நேரும். குடும்பத்தில் வீண் தகராறு, குடும்பப் பிரிவு ஏற்படும். தனம், வாக்கு, கீர்த்தி, புகழ் மங்கும் காலமாக இருக்கும். பலநாள் திருடனும் இந்தக் காலத்தில் அகப்பட்டுக்கொள்வார். கல்வியில் மந்தம், தடை உண்டாகும். உயர்கல்வி செல்லமுடியாது அல்லது குடும்பத்தைப் பிரிந்து கல்விக்காக வெளியூர் செல்ல நேரும். சுக ஸ்தானமான நான்கைப் பார்ப்பதால் தாயால் அல்லது தாயாருக்கு பாதிப்பு வரும். அனைத்து சுகங்களையும் இழக்க நேரும். வீடு, வாகன, நஷ்டமே உண்டாகும். எப்போதும் கெட்ட நேரத்தில் கெட்டதே நடக்கும்.
அதனால் எதிலும் முன்னெச்சரிக்கையாக இருத்தல் அவசியம். எட்டிலுள்ள குரு, பொட்டில் அடித்ததுபோல் நல்லது- கெட்டதைக் காட்டிக்கொடுக்கும். யாரையும் நம்பி ஏமாறாமல் நம்மைக் காத்துக்கொள்வதே பெரிய விஷயம். போக்குவரத்தில் கவனம் தேவை. குரு நல்ல தன்மை பெற்றால் அதிக பாதிப்பு வராது.
எட்டில் குரு இருந்து ஜாதகரைப் படாதபாடு படுத்தி வாழ்க்கையை வெறுக்கச்செய்து, ஊரைவிட்டே விரட்டியிருப்பார். அதனால் தான் எட்டிலிருந்து குரு விலகி ஒன்பதுக்கு மாறும்போது, "ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு' என்பர். கஷ்டம் நிறைந்த வருக்கு திடீர் அதிர்ஷ்டம் தந்து அனைத்து கஷ்டங்களையும் தீர்த்துவைப்பார். பிரிந்த, இழந்த குடும்பத்தை மீண்டும் பெற்று இன்புறுவர். தொழில் முடக்கம் தீர்ந்து நன்மை நடக்கத் தொங்கிவிடும். வாங்கிய கடனை அடைத்து, புதிய சொத்துகள் வாங்குமளவு வருமானம் கிடைத்துவிடும். ஒன்பதாமிட குரு ராசிக்கு மூன்று, ஐந்தாமிடங்கள் மற்றும் ராசியையே பார்ப்பார். பணம் வந்தவுடன் தைரியம், தன்னம்பிக்கை கிடைத்து தோற்றப் பொலிவு பெறுவார். எதையும் சந்திக்கும் துணிவுபெறுவார். பூர்வபுண்ணிய பலம்பெற்று, பூர்வீக நிலத்தால் லாபம், பூர்வீக சொத்து கிடைக்கும். குலதெய்வ வழிபாடு, கோவில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவர். மதிப்பு, மரியாதை கூடும் நேரமாக இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, வீடு, வாகன வசதி பெறுவர். யாரும் எண்ணிப்பாராத வளர்ச்சி பெறுவர். எதிர்பார்ப்புகளில் வெற்றி நிச்சயம். அடுத்தவரைக் கெடுக்க நினைத்தால் நினைத்தபடி நிறைவேறும். அடுத்தவரைக் கெடுக்காமல் முன்னேற நினைத்தால் எதிரி வியந்து பார்க்குமளவு வளர்ச்சிபெறலாம். எண்ணம்போல் வாழ்க்கை அமையும். எண்ணியது ஈடேறும் பொன்னான காலமாக இருக்கும்.
"பத்தில் குரு பதவி பறிபோகும்' என்றும், "சிவனே கையேந்தி பிச்சையெடுத்தார்' என்றும் சொல்வர். இருக்கும் தொழிலை இழந்து, செய்தொழிலால் நஷ்டம் உண்டாகி இருப்பதைத் தொலைத்துவிடுவர். ஒன்பதில் குருவால் உயர்ந்ததும், "தனக்கு இனி துன்பம் வராது' என்னும் ஆணவத்தில் ஆடி, உள்ள பிழைப்பையும் கெடுத்துக்கொள்வர். பதவி பறிபோகும். யாரிடம் ஆணவமாகப் பேசினோமோ அவர்களிடமே உதவிகேட்டு கெஞ்சி வாழ வேண்டிய சூழலைத் தருவார். தனது தகுதிக்குக் கீழானவர்களுடன் சேர்ந்து பணிசெய்தல், சக ஊழியர்களால் அவமானப்படுதல் போன்ற கெடுபலனே அதிகமாக நடக்கும். அவரவர் செய்த பாவத்திற்கேற்ப கஷ்டப்படுவர். பொதுவாகவே குருப்பெயர்ச்சியானது தொடர்ந்து நன்மை தராமல், விட்டுவிட்டு நற்பலன் தருவதற்குக் காரணம், தலைகணம் என்னும் ஆணவம் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்பதால்தான் அவ்வப்போது தட்டி வைக்கிறார். ஆனாலும் சிலர் அடங்கா மல் திரிவர். அடங்காதவரையும் அடங்க வைப்பதற்குதான் பத்தில் குருவாக வருவார். சிவன், மன்னன், பெரிய மனிதர்களை ஒப்பிட்டுப் பழமொழியை உருவாக்கியதற்குக் காரணம், "அவர்களுக்கே அந்தநிலை என்பதால், நீ ஆணவமின்றி அடக்கி வாசி' என சொல்வதற்காகதான். பத்தில் குரு பல புத்தியையும் புதிய யுக்திகளையும் கற்றுத் தருவார். குரு பத்தில் நின்று இரண்டு, நான்கு, ஆறாமிடங்களைப் பார்ப்பார். இரண்டா மிடமான குடும்பத்தில் பிரச்சினை, பிரிவு உண்டாகும். பொதுவாகவே தன ஸ்தானம் கெட்டு குடும்பம் நடத்த பணவரவு குறைந் தால், கண்டிப்பாக குடும்பத்தில் சண்டை ஏற்படும். வாக்கைக் காப்பாற்ற முடியாமல் அவதி, அவமானப்படுவர். சேர்த்துவைத்த செல்வம் கரையும். மதிப்பு, மரியாதை குறையும். கல்வியில் மந்தம், தடை, தூரதேசக் கல்வி பயில குடும்பத்தைப் பிரிந்துசெல்ல நேரும். வீடு, வாகனத்தில் பாதிப்பு, வாகனத்தால் பாதிப்பு ஏற்படும். சுப செலவாக்க வீடுகட்டலாம். எதிரி வலுப்பெற்று தொல்லை தருவர். கண்ணில் படுவோரெல்லாம் தொல்லை தந்து எதிரியாக மாறுவர். மன உளைச்சலால் நோய் ஏற்படும். ஒரு கடனைத் தீர்க்க இன்னொரு கடன்வாங்க நேரும். பலவித கஷ்டங்களால் தன்மான இழப்பால் வாழ்க்கையை வெறுக்கவேண்டி வரும். சில ராசிகளுக்கு குரு கெட்டவனாகிக் கெட்டிருந்தால், இடமாற்றத்துடன் நல்ல தொழில் மாற்றம், பணவரவு, பதவி உயர்வு உண்டாகும். பொதுவாக பத்தில் குரு வரும் போது குடும்பத்தில் யாருக்காவது கண்டம் ஏற்பட்டு கர்மம் செய்யவேண்டி வரும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 96003 53748