சென்ற இதழ் தொடர்ச்சி...
5-ல் சுக்கிரன்
சுக்கிரன் ஒரு பெண் கிரகம். எனவே 5-ல் சுக்கிரன் உள்ள பெண்களுக்கு பெண் குழந்தைகள்- அதுவும் அழகாக, லட்சணமாகவுள்ள பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.சுக்கிரன் நீர் கிரகம் என்பதால், 5-ல் சுக்கிரன் உள்ள பெண்கள் சற்று நீர் கோர்த்து இருப்பர். (5-ல் குரு- கொழுப்பினால் குண்டாக இருப்பர்; 5-ல் சுக்கிரன்- நீர் சேர்க்கையால் குண்டாக இருப்பர்). மேலும் 5-ல் உள்ள சுக்கிரன் சிறுநீர் தொந்தரவையும் தருவார். சுக்கிரன், ரகசிய நோய்களுக்குக் காரகர். எனவே எப்போதும் அதிக சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லாவிடில் யூரினெரி இன்பெக்ஃஷன் ஏற்படக்கூடும்.
5-ல் சுக்கிரன் உள்ள பெண்கள் எப்போதும் மகாலட்சுமித் தாயாரை வணங்குதல் நலம்.
வெள்ளைநிற மலர்கள் கொண்டு அர்ச்சிக்கவும். கூடவே பெருமாளையும் வணங்குவது தாயாருக்கு மிகுந்த சந்துஷ்டியைக் கொடுக்கும்.
சுக்கிரன் உடல் பாகத்தில் கர்ப்பப்பையைக் குறிப்பார். எனவே 5-ல் சுக்கிரன் இருந்தால் கரு நிச்சயம். ஆனால் 5-ல் சுக்கிரன் நீசமாக இருந்துவிட்டால் அந்த அமைப்புள்ள பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பரிகாரங்களைத் தொடங்கிவிடவும். இது ரிஷப லக்ன, ரிஷப ராசிப் பெண்களுக்கு அமைய வாய்ப்புள்ளது. ரிஷபத்துக்கு 5-ல் (கன்னியில்) சுக்கிரன் நீசமடைவார். அவர் நீசபங்கமாகிவிட்டால் தடைகளுக்குப் பிறகு குழந்தைப்பேறு ஏற்படும்.
5-ல் சுக்கிரன் உள்ளவர்கள் மகாலட்சுமித் தாயாருக்கு சந்தனநிறப் பட்டு அல்லது வெண்பட்டு வாங்கி சமர்ப்பிக்கவும். கண்டிப்பாக கருடனை வணங்கவும். தந்தமுள்ள யானை வடிவ நகைகளை அணியலாம். வெண்பட்டு பயன்படுத்தலாம். வைரம் அணியலாம். அத்தி மரம் வளர்க்க ஆவன செய்யலாம். வெள்ளிக்கிழமை இனிப்புகள் தானம் செய்யலாம். பெண் தெய்வ அர்ச்சனைக்கு வெண்தாமரை வாங்கிக்கொடுக்கவும். வசதியுள்ளவர்கள் வெண்தாமரை மாலைகளை சாத்வீக பெண் தெய்வங்களுக்கு அணிவிக்கவும். அவ்வப்போது உணவில் மொச்சையை சேர்த்துக் கொள்ளவும்.
5-ல் சுக்கிரன் உள்ளவர்கள் மட்டுமல்லாது, மற்ற எல்லாரும் அவ்வப்போது மொச்சையை உணவில் சேர்த்துக்கொள்ளவும். மொச்சை என்பது சுக்கிரனின் தானியமாகும். இது குடும்ப உறுப்பினர்களுக்கு வளம் சேர்க்கும். சுக்கிரன் பழங்களைக் குறிப்பார். எனவே பழங்களை அப்படியே சாப்பிடப் பழகுங்கள்.
5-ல் சுக்கிரனோடு பாவர்கள் இருந்தால், அவர்களைப் பொருத்து கர்ப்பப்பை கஷ்டங்கள் வரக்கூடும். அதற்கேற்றாற்போல் பரிகாரம் செய்துகொள்தல் அவசியம்.
5-ஆமிடம் கலைகளுக்குரியது. சுக்கிரனும் ஒரு கலைநயமிக்க கிரகம். எனவே குழந்தைகள் கண்டிப்பாக ஏதோ ஒரு கலையில் முதன்மை பெற்றவர்களாகத் திகழ்வர்.
5-ல் சுக்கிரனோடு பாவரும் இருந்து பிறக்கும் குழந்தைகளை மிக கவனமாக வளர்த்தல் அவசியம்.
5-ல் சனி
சனி என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம்தான். எனினும் ஜோதிட விதிப்படி, சனி பார்க்கும் இடங்களைத்தான் பஸ்பமாக்குவார். இருக்கும் இடத்தை வளமாக்குவார். இதனால் 5-ல் சனி உள்ள பெண்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும். என்ன ஒன்று... சற்று தாமதமாகப் பிறக்கும். ஆனால் குழந்தை பிறந்துவிடும்.
சனிக்கு சுருக்கும் தன்மையுண்டு. எனவே கர்ப்பைப்பை சுருங்கிவிடும் நிலைமையை 5-ல் உள்ள சனி பெண்களுக்குக் கொடுத்துவிடுவார். மேலும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளையும் உண்டாக்குவார். வீட்டுவிலக்கில், கறுப்புநிற தீட்டுக்கட்டிகளை உண்டாக்கிவிடுவார். இவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுதல் அவசியம். சனி எப்போதும் கழிவுப்பொருளுக்கான உறுப்புகளை சுட்டிக்காட்டுவார். இதனால் கர்ப்ப ஸ்தானத்தில் அமரும் சனி கர்ப்பப்பையில் வேண்டாத கழிவுகளை உண்டாக்கிவிடுவார். முற்காலத்தில் பெண்களுக்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து கொடுப்பார்கள். இது கர்ப்பப்பையை சுத்தம் செய்துவிடும். இக்காலத்தில் 5-ல் சனி உள்ள பெண்கள் ஆங்கில அல்லது சித்த மருத்துவம் என ஏதோ ஒன்றைப் பின்பற்றி, கர்ப்பப்பையில் கழிவு சேராமல் பார்த்துக்கொள்ளவும்.
சமையலில் கறுப்பு நிற உணவுப் பொருளை சேர்த்துக்கொள்ளவும். சனி பகவானின் இன்னொரு காரகம் நல்லெண்ணெய். இதனை 5-ல் சனி உள்ள பெண்கள் மட்டுமல்ல; மற்ற எல்லா பெண்களும் சேர்த்துக்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், சனியின் நிறமான கறுப்பு உளுந்து, நல்லெண்ணெய் போன்றவற்றை கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ளவும். இவ்வகை உணவுகள் கர்ப்பப்பையை சுத்தமாக்கி, குழந்தை உற்பத்தியை இலகுவாக்கும்.
வேறுசிலருக்கு 5-ல் சனி இருப்பின் வீட்டுவிலக்கு மிகவும் தாமதமாகும். இதுவும் கெடுதல். இதற்கு சனியின் இன்னொரு தானியமான எள்ளை, வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டியுடன் சேர்த்து உண்ண வேண்டும். மருத்துவ கவனிப்பும் அவசியம். எள் சாப்பிட்டால் மாதவிலக்கு அதிகமாகிவிடும். அதனால் எள் சாப்பிடும்போது யோசித்து சாப்பிட வேண்டும்.
சனி ஒரு வறண்ட தன்மையுடைய கிரகம். எனவே 5-ல் உள்ள சனி கர்ப்பப்பையை வறட்சியாக்கும் வாய்ப்பும் ஏற்படும். இதற்கு வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
5-ல் சனி உள்ள பெண்கள், அவ்வப்போது சனீஸ்வர பகவான் சந்நிதி குருக்களிடம் நல்லெண்ணெய், எள் மிட்டாய் (எள்ளாகக் கொடுத்தால் வாங்கமாட்டார்கள். எள் மிட்டாய், எள்ளுருண்டையாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்), கருப்புப்பட்டு, குப்பைக்கூடை, இரும்புப்பெட்டி, இரும்புப்பாத்திரம், கேழ்வரகு, தோல் பை, கம்பளிப் போர்வை போன்றவற்றில், அந்த அர்ச்சகரிடமே எது தேவையென்று கேட்டு வாங்கிக்கொடுக்கவும். அங்கு வேலை செய்பவர்களுக்கு செருப்பு, ஆடைகளை வாங்கிக் கொடுக்கலாம். 5-ல் சனி இருக்கும் பெண்களுக்கு, திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் போதே இந்த பரிகாரத்தையும் ஆரம்பித்துவிடுங்கள். அதுபோல, திருமண விஷயங்கள், பேச்சுக்கள் ஆரம்பிக்கும் வேளையில் சனிக்கிழமை விரதம், ஒரு பொழுது விரதம் ஆரம்பித்துவிடுங்கள்.
சனீஸ்வரர் தர்மநியாயவாதி. முழு நம்பிக்கையோடு சனீஸ்வரரை வேண்டினால், சீக்கிரத் திருமணம், உடனடி குழந்தை பாக்கியம் கிட்டும். (5-ல் அமரும் சனி தனது 3-ஆம் பார்வையால் ஜாதகரின் 7-ஆம் வீட்டை அவதானிப்பார். அதனால் திருமணமும் தாமதமாகும். எனவே 5-ல் சனியுள்ள பெண்கள், சீக்கிரமாகவே சனீஸ்வர பகவானை வணங்குவது நல்லது).
இத்தகைய பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சற்று மாநிறமாக, சற்று சோம்பலுடன் இருப்பர். சனி சம்பந்தம் கொண்ட கிரகங்கள்மூலம் சற்று மேன்மையான, புத்திசாலியான குழந்தைகளும் பிறக்கக்கூடும். சனி நிறைய பெண் குழந்தைகளைக் கொடுப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
5-ல் ராகு
இது சற்று யோசிக்க வேண்டிய அமைப்புதான். அவர் அமர்ந்த 5-ஆம் வீட்டு அதிபதி, உடனிருக்கும் கிரகத்தின் பலன் எல்லாவற்றையும் ராகுவே ஆகர்ஷித்துக் கொள்வார்.
இந்த ராகுவை குரு பார்த்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டு.
ராகுவுக்கு பெருக்கும் தன்மையுண்டு. கர்ப்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு, வீட்டுவிலக்கின் உதிரப் போக்கைப் பெருக்குவார் அல்லது அடிவயிற்றைப் பெருக்க வைத்துவிடுவார்.
மேலும் 5-ல் அமர்ந்த ராகு, அலர்ஜி எனும் ஒவ்வாமையை உண்டாக்கிவிடுவார். ஏனோ வயிறு எப்போதும் கனமாக, உப்புசமாக இருப்பது போன்றே இருக்கும். அடிக்கடி "ஃபுட் பாய்சன்' என்ற நிலை வேறு உண்டாகும். சிலசமயம் நோயை இன்னதென்று கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ராகு- கேதுக்கள் நிழல் கிரகங்கள். இருட்டைக் குறிப்பவர்கள். அதனால் நோயைக் கண்டுபிடிக்க விடமாட்டார்கள்.
5-ல் ராகு இருக்கும் பெண்கள் ஆரம்ப நாட்களிலிருந்தே அதாவது வயதுக்கு வந்தவுடனேயே, புற்றுள்ள மகாமாரி அம்மன்களை வணங்க ஆரம்பிக்கவும். அவளுடைய பாதங்களை இறுகப்பிடித்துக் கொள்ளவும். சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அரச மரத்தைச் சுற்றி வரவும். சிறு நாக விக்ரக காணிக்கை நல்லது.
உணவில் உளுந்தை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும். உலர்ந்த பழங்கள், உலர்ந்த கொட்டைகள், பாதாம் சேர்த்துக்கொள்ளவும்.
5-ல் ராகு இருக்கும் பெண்கள் கண்டிப்பாக துர்க்கையைத் தொடர்ந்து வணங்குதல் வேண்டும். அவளை வழிபட வேண்டும் என்று மனதார நினைத்தால், எவ்வாறு வணங்கவேண்டும் என அந்தத் தாயே வழிகாட்டுவாள்.
நீங்கள் இவ்வளவு முனைப்புடன் இருந்தால்தான், ஒரு குறையுமில்லாமல் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
5-ல் கேது
கேது என்பது ஒரு பாவகிரகம். ஒரு சர்ப்ப கிரகம் 5-ல் இருக்கலாமா எனில் கேது இருக்கலாம். கேதுவின் வடிவம் ஒரு ஆணின் விந்து வடிவமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கேதுவுக்கு பிரிக்கும்- பிளவுபடுத்தும் தன்மையுண்டு. கேதுவின் இக்குணம், கர்ப்ப ஸ்தானத்திற்கு ஏற்றதுதான். இதனால் 5-ல் கேது இருப்பினும் குழந்தை பாக்கியம் உண்டு.
கேது பித்தம் மற்றும் மர்ம உறுப்புகளைக் குறிப்பார். 5-ஆமிடமான கர்ப்ப ஸ்தானத்தில் அமரும் கேது வயிற்றுவலியைக் கொடுப்பார். அது கர்ப்பம் சம்பந்தமாக இருக்கும். மருத்துவரிடம் சென்றால் அவரும், "எல்லாம் நார்மல்; அப்புறம் ஏன் வயிற்றில் கர்ப்பம் உண்டாகாமல் இருக்கிறது' என குழம்புவார். 5-ல் உள்ள கேது புரியாத புதிர் போன்ற வில்லங்கத்தை கர்ப்பப்பையில் உண்டாக்குவார்.
எனினும் 5-ஆம் அதிபதியின் பலத்தைப் பொருத்து, சில மருத்துவ ஆலோசனைகளுக்குப் பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது வேர்கள், மூலிகைகள், விழுதுகள் போன்ற பொருட்களுக்குக் காரகர். எனவே 5-ல் கேது உள்ள பெண்கள், கர்ப்பப்பையின் புரியாத புதிருக்கு விடைகண்டு கரு உருவாக கூடியமட்டும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தைக் கடைப்பிடிக்கவும்.
விநாயகரை நன்கு வழிபடவும். ஆஞ்சனேயருக்கு ஏதேனும் வேண்டிக்கொள்ளவும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கவும்.
உணவில் கொள்ளு சேர்த்துக்கொள்ளவும். உடற்பயிற்சி அல்லது யோகா கற்கவும். யானை முடி மோதிரம் அணியவும்.
5-ல் உள்ள கேது வாங்கிய சாரநாதர், 5-ஆம் அதிபதி, 5-ஆமிடத்தைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றைப் பொருத்து குழந்தைப்பேறு உண்டாகும். இவ்வமைப்பில் பிறக்கும் குழந்தைகள் நல்ல ஞானத்தோடு இருப்பர்.
5-ல் ராகு- கேதுக்கள் இருந்தால், அது கண்டிப்பாக முன்னோர் சாபத்தைக் குறிக்கும். எனவே ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் சென்று பரிகாரம் செய்தல் அவசியம்.
பெண்களின் கர்ப்பப்பை என்பது குழந்தைப் பிறப்பிற்குரியதுதான். ஆயினும் அதில் அமர்ந்த கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், அவர்களின் முழு உடல் ஆரோக்கியத்தையும் தகர்த்துவிடும். இதனால் மனத்தடுமாற்றமும், மனக்குழப்பமும் உண்டாகும்.
இதனால்தான் பெண்களுக்கு வீட்டுவிலக்கு நாட்களில் மிகுந்த எரிச்சல் உணர்வும், மன வெறுமையும் ஏற்படுவதாக மன உளவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும் "மெனோபாஸ்' எனும் காலத்திலும் பெண்கள் படும் துன்பம் அதிகம்.
எனவே 5-ல் உள்ள கிரகங்களைக் கண்டறிந்து, அவர்களின் சுபாவப்படி பரிகாரம், உணவுமுறையை மேற்கொண்டால் பெண்களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கும்.
5-ஆமிட கிரகப் பரிகாரங்கள் குழந்தைப் பேற்றை விரைவாக்குவதோடு, கர்ப்பப்பையின் நிலைமையையும் சீராக்கும்.
செல்: 94449 61845