னன ஜாதகத்தில் ஜென்ம லக்னத் திற்கு 10-ஆம் இடமானது தொழில் ஸ்தானம். ஒருவரின் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்று 1, 5, 9 எனும் திரிகோணாதிபதிகள் அல்லது 1, 4, 7, 10 எனும் கேந்திராதிபதிகளுடன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப் பெற்ற வர்களுக்கு சொந்தத்தொழில் செய்யக்கூடிய யோகம் உருவாகிறது. கேந்திர, திரிகோணா திபதிகளுடன் சேர்க்கை பெற்ற 10-ஆம் அதிபதி, பரிவர்த்தனை பெறுவதும், ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களின் சேர்க்கை பெறுவதும், சொந்தத் தொழில் யோகத்தை மேலும் பலப்படுத்தும் அமைப்பாகும். 10-ஆம் அதிபதியானவர் தனக்கு நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று, நட்பு கிரகங்களின் நட்சத்திரத்தில் அமைந்தால் தொழில் ஸ்தானம் வலுப்பெறும்.

Advertisment

rajiyamதொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் பலம்பெற்று நிற்கி றதோ, அத்தனைத் தொழில்கள் செய்யக் கூடிய வாய்ப்பு அமையும். அதுபோல 10-ஆம் அதிபதி எத்தனை கிரகச் சேர்க்கை பெற்று பலம்பெற்றிருக்கிறதோ அத்தனைவிதமான தொழில்கள் செய்யக்கூடிய யோகமும் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபமடைய ஜென்ம லக்னத் திற்கு 11-ஆம் வீடும், 11-ஆம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவதுடன், தன ஸ்தானமான 2-ஆம் வீடும், 2-ஆம் வீட்டின் அதிபதியும் பலம் பெறுவதன்மூலம் பணவரவு சிறப்பாக இருக்கும்.

10-ஆம் இடம் பலம் பெறுவது மட்டுமின்றி ஜென்ம லக்னமும், ஜென்ம ராசி எனப்படும் சந்திரனும் பலம்பெற வேண்டும். லக்னாதிபதி பலம்பெற்றால் நல்ல தைரியம், துணிவு, சுயமாக சிந்திக்கும் ஆற்றல் போன்ற யாவும் சிறப்பாக இருக்கும். மனோகாரகன் எனப்படும் சந்திரன் பலம்பெற்றால் நல்ல மனவலிமை இருக்கும். சிந்தித்து செயல்பட்டு திடமான முடிவெடுக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். சுபகிரகம், 1, 5, 9 ஸ்தானாதிபதிகளின் தசை நடக்கவேண்டும். போதிய பணவசதி இருந்தும் 1, 5, 9 வலிமை பெறாமல் பல தொழில்செய்து, தொடரிழப்புகளை சந்தித்தவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க மனைவி, நண்பர்கள், உறவினர் பெயரில் தொழில் செய்யலாமா என்று கேட்கிறார்கள்.

அதற்கு ஜோதிடம் தரும் தீர்வு- திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜுப் பொருத்தம் எனப்படும் கயிறுப் பொருத்தத்திற்கு மிகுந்த முக்கி யத்துவம் கொடுக்கப்படும். ரஜ்ஜுப் பொருத்தத்தில் ஆரோகணம், அவரோ கணம் என்ற பகுப்பு உண்டு. ஆரோ கணம் என்றால் ஏறுமுக நட்சத் திரங்கள். அவரோகணம் என்றால் இறங்குமுக நட்சத்திரங்கள். ரஜ்ஜுக்களை ஐந்து வகை யாகப் பிரிக்கலாம்.

1. சிரசு எனும் தலைரஜ்ஜு.

2. கண்ட (கழுத்து) ரஜ்ஜு.

3. வயிறு (உதர) ரஜ்ஜு.

4. தொடை ரஜ்ஜு.

5. பாத ரஜ்ஜு.

Advertisment

ஐந்துவகையாகக் குறிப்பிட்ட ரஜ்ஜுவில் சிரசு ரஜ்ஜுவுக்கு மட்டும் ஆரோகண, அவரோக இயல்புகள் இல்லை. மற்ற ரஜ்ஜுக்களுக்கு ஆரோகண, அவரோகண இயல்புகள் உண்டு. 27 நட்சத்திரங்களையும் ஏறுவரிசை, இறங்குவரிசை எனும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

சிரசு ரஜ்ஜுவாக செவ்வாய் நட்சத்திரங்களும், ஏறுகண்டம் ரஜ்ஜுவாக சந்திரனின் நட்சத்திரங்களும், இறங்குகண்டம் ரஜ்ஜுவாக ராகுவின் நட்சத்திரங்களும், ஏறு வயிறு ரஜ்ஜுவாக சூரிய நட்சத்திரங்களும், இறங்குவயிறு ரஜ்ஜுவாக குரு நட்சத்திரங்களும், ஏறு தொடை ரஜ்ஜுவாக சுக்கிரனின் நட்சத்திரங்களும், இறங்கு தொடை ரஜ்ஜுவாக சனியின் நட்சத்திரங் களும், ஏறுபாதம் ரஜ்ஜூவாக கேதுவின் நட்சத்திரங்களும், இறங்குபாதம் ரஜ்ஜுவாக புதனின் நட்சத்திரங்களும் என ஐந்து பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆண், பெண் இருவருக்கும் ஒரே ரஜ்ஜுவானால் பொருந்தாது. வெவ்வேறு ரஜ்ஜுவானால் சர்வ உத்தமப் பொருத்தமாகும். ஆண், பெண் நட்சத்திரங்களில் ஒன்று ஆரோகணத்திலும், மற்றொன்று அவரோ கணத்திலும் இருந்தால் மத்திமமான ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு. இந்த விதியை ஆண், பெண் என திருமணப் பொருத்தத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல், தொழில் கூட்டாளிகளுக்கும், அரசியல் தலைமைக்கும், சகோதர, சகோதரிகளுக்குள்ளும் பொருத்தம் பார்த்து கொடுக்கல்- வாங்கல் வைப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

Advertisment

21-5-2017 அன்று பகல் 12.15 மணிக்கு இரு நண்பர்கள் என்னை சந்திக்க வந்தார்கள். 3-6-1973 அன்று காலை 10.12 மணிக்கு விருதுநகரில் பிறந்த இவருடைய ஜாதகம் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அவருடைய 1-ஆம் அதிபதி 12-ல் மறைவு. 5-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் மறைவு. 9-ஆம் அதிபதி குரு 7-ல் கேந்திரம் பெற்றிருந்தது. 7-ஆம் அதிபதி சனி 11-ல். 10-ஆம் அதிபதி 8-ல் என மறைவு ஸ்தானங்களே அதிகம் வேலை செய்தன. அவர் என்னை சந்திக்க வந்த அன்று புதன் தசை, சுக்கிர புக்தி. புதன், சுக்கிரன் இரண்டும் 12-ல் நின்று தசை, புக்தி நடத்தியதால் மறைவு ஸ்தானங்களே அதிகமாக இயங்கிக்கொண்டிருந்தன. அவருடைய ஜாதகத்தை வலிமைப் படுத்தியதே மூன்று விஷயங்கள்தான்.

7-ஆம் அதிபதி 11-ல். 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு குரு, செவ்வாய் பார்வை. 7-ஆம் அதிபதி சனிக்கு குரு பார்வை. 2-ஆம் அதிபதி 11-ல். இவருடைய ஜாதகத்தில் 1, 5, 9-ஆம் பாவகங்கள் வலிமை குறைவாக இருந்தாலும், பணபர ஸ்தானம் தன கிரகங்களோடு சம்பந்தம் பெற்று வலிமையாக இயங்கியதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மேலும் மனைவிவழி ஆதாயம் நிச்சயம் உண்டு என்று முடிவுசெய்து, அவர் மனைவியைப் பற்றிக் கேட்டபிறகு இருவரும் வசதியான, வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், அதனால் பண இழப்பு இருந்துகொண்டே இருந்தாலும் சமாளித்துவிடுகிறேன் என்றும் சொன்னார். "எனக்குப் பண இழப்பு ஏற்படக் காரணம் என்ன? இதை சரிசெய்ய நான் என்னசெய்ய வேண்டும்? மனைவி பெயரில் தொழில் செய்தால் மேன்மைபெற முடியுமா' என்றெல்லாம் கேட்டார். லக்ன, கேந்திர, திரிகோணாதிகள் 12-ஆம் இடமான விரய ஸ்தானத்தை வலிமையாக இயக்கியதால் தொழில் இழப்புகள் இவருக்கு இருந்து கொண்டே இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு, முடிந்தவரை முதலீடில்லாத தொழிலே உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்றுகூறி, அதற்குரிய வழிபாட்டுப் பரிகாரமுறைகளும் கூறப்பட்டன. மேலும் இவருடைய லக்னாதிபதி சந்திரன் பயண கிரகம் என்பதாலும், விரய ஸ்தானம் உபய ராசி என்பதாலும், நடப்பில் புதன் தசை என்பதாலும் கமிஷன் அடிப்படையிலான தொழிலில் நிச்சயம் சிறப்பான பொருளாதாரம் கிடைக்கும்.

இரண்டாவது நபருடைய ஜாதகத்தை ஆய்வுசெய்தபோது, லக்னாதிபதி உச்சம்பெற்று கேந்திரம் ஏறியுள்ளார். 5-ஆம் அதிபதி 5-ல் ஆட்சி பலம். 9-ஆம் அதிபதி 11-ல் என திரிகோண வலிமை பெற்றிருந்தாலும், விரயாதிபதி சந்திரன் 10-ல் உச்சம் பெற்றதால் பொருளாதாரம் சிறப்பித்துச் சொல்லும்படியாக இருக்காது. வரவைவிட செலவே மிகும். இவருக்கும் 7-ஆம் அதிபதி 11-ல் விரயாதிபதியுடன் இருந்ததால் மனைவியாலும் விரயம் உண்டு. இவர், ‘"நான் பல இடங்களில் வேலைக்கு இருந்துவிட்டேன். எனக்கு சுயதொழில் யோகம் உள்ளதா?'' என்று கேட்டார். அவருக்கு 5-ல் குரு தசை நடத்தியது. 9-ல் நின்று புதன் புக்தி நடத்தியது. இவருடைய 10-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் இருந்ததால் சொந்தத் தொழில் செய்யமுடியும் என்றாலும், 10-ல் விரயாதிபதி, சந்திரன் 6, 7-ஆம் அதிபதி சனியுடன் இருப்பதால் யாருடனாவது சேர்ந்து கூட்டுத்தொழில் செய்யலாம் என்று கூறினேன். 2-ஆம் நபர் "தானிய வியாபாரத்தில், ‘எங்கள் இருவருக்கும் 20 வருடங்களாக நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் இருவராலும் பெரியளவில் எதுவும் செய்ய முடியவில்லை' என்று கூறினார்.

இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் பார்த்தபொழுது, முதல் நபருக்கு திருவாதிரை இறங்கு கண்ட ரஜ்ஜு, 2-ஆம் நபருக்கு கிருத்திகை ஏறுவயிறு ரஜ்ஜு என்பதால், "உங்களுக்கு விருப்பம் என்றால் இருவரும் சேர்ந்து இரண்டு மாதம் தொழில்செய்து பாருங்கள்' என்று கூறினேன். அரைமனதோடு இருவரும் சென்றனர். முதல்நபர் மூன்று நாட்கள் கழித்து எனக்கு போன்செய்து, "நான் முதலீடு செய்தால் என் நண்பர் என்னை ஏமாற்றும் வாய்ப்பு உள்ளதா?' என்று கேட்டார். அதற்கு நான்,‘"அவருடைய உழைப்பு உங்களுக்கு லாபத்தையே தரும். நிச்சயமாக ஏமாற்றும் வாய்ப்பு இல்லை' என்று கூறினேன். "எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்' என்று கேட்டார்.

அதற்கு நான் கூறிய பலன்கள்:

1. ஒன்றாம் நபர் கடக லக்னம், இரண்டாம் நபர் சிம்ம லக்னம். ஒன்றாம் நபரின் தன ஸ்தானம் இரண்டாம் நபரின் லக்னம். ஒன்றாம் நபரின் லக்னம் இரண்டாம் நபரின் லக்னத்தை நோக்கிச் செல்கிறது. ஒன்றாம் நபரின் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டாம் நபரின் விரயாதிபதி சந்திரன் மேல். முதல் நபரின் சனி இரண்டாம் நபரின் சனியை நோக்கிச் செல்கிறது. எனவே இரண்டாம் நபரின் உழைப்பு முதல் நபருக்கு லாபம்.

2 . இருவர் ஜாதகத்திலும் குரு வக்ரம். முதல் நபரின் குரு, இரண்டாம் நபரின் குருவை நோக்கிச் செல்வதால், இரண்டாம் நபரின் பொருளாதாரம் முதல் நபருக்கு லாபம்.

இரு ஜாதகக் கூட்டுவிளைவு நல்ல மாற்றம் தரும் என்று கூறியபிறகு மூன்று மாதங்கள் பதிவு செய்யாமல் வியாபாரம் செய்தார்கள்.

அதன்பிறகு இருவருடைய 9-ஆம் பாவகத் தையும் வலிமைப்படுத்தக்கூடிய தொழில் நிறுவனத்தின் பெயர் வைத்துத் தரப்பட்டது. ஓராண்டாகிவிட்டது. இப்பொழுது முதல் நபருக்கு இழப்பில்லை. இரண்டாம் நபருக்குத் தேவைக்கு வருமானம். ஆகவே முறையான பொருத்தம் மிகச்சரியாக வழிநடத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

செல்: 98652 20406