தோஷங்களில் மிக முக்கியமாகக் கருதப் படுவது திருமணத் திற்கான தோஷங்களே. நல்ல அழகான, ஒழுக்கமான, படித்த, பண்புள்ள, வருமானம் ஈட்டக் கூடியவர் பிள்ளையாக இருந்தாலும், திருமணத்திற்கான வயதில் முறையாகவரன் பார்த்துத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யும்போது, தகுதியான வரன் அமையாமல் பலரின் பெற்றோருக்கு கவலை யைத் தந்துவிடு கிறது. அதன்பிறகு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான காரணங் களையும், ஜாதகருக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்தால்தான் திருமணம் நடக்குமெனவும் பரிகாரங்கள் சொல்லி பல கோவில்களுக் கும் அனுப்புகிறார் கள்.
சிலருக்கு கோவிலுக்குப் போய்வந்ததும், சிலருக்கு பரிகாரம் செய்த பின்னரும் வரன் அமைந்திருக்கிறது. சிலருக்கு மட்டும் என்ன செய்தா லும் திருமணத்தில் தடை இருந்து கொண்டு குடும்பத்தையே கவலைக் குள்ளாக்கி விடுகிறது. சிலரது வீட்டில் வெறுத்துப் போய், "நீ யாரையாவது காதல் செஞ்சுகூட கல்யாணம் பண்ணிக்க'' என்றெல்லாம் பெற்றோரே சொல்லும் நிலை வந்துவிடுகிறது.
ஜாதகரும், "கெட்ட பழக்க வழக்கம், வேலையில்லாமல் இருக்கிற பசங்களுக்கெல்லாம் கல்யாணமாகிவிட்டது. நமக்கு மட்டும் ஏன் தாமதம்'' என நொந்துகொள்கிறார்கள்.
ஒரு சிலருக்குத் தவிர, "இன்னாருக்கு இன்னார்' என்று கண்டிப்பாகப் பிறந்திருப்பார்கள். சிலருக்கு மட்டுமே திருமணம் தாமதமாகும். அதனால் ஜாதகத்தில் திருமணத்திற்கான நேரத்தைத் தெரிந்து அதுவரை பொறுத்திருப்பதே நன்று. சிலர் அவசரப்பட்டு, அவசரகதியாகத் திருமணம்செய்து அவதிப்படுகிறார்கள். "உன்னைத் திருமணம் செய்ததால்தான் கஷ்டப்படுகிறேன்' என நொந்துகொள்பவர்களும் உண்டு. ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். தோஷமுள்ளவர்கள் யாரைத் திருமணம் செய்தாலும் அப்படி தான் நடந்துகொள்வார்கள் அல்லது அப்படிதான் அமையும். "வேறு யாரையாவது திருமணம் செய்தால் நான் அப்படி ஆகியிருப்பேன்; இப்படி ஆகியிருப்பேன்' என்பதெல்லாம் வெறும் கற்பனையே. இருப்பதை ஏற்றுக்கொண்டு வாழத் தெரிந்தவனால்தான் குடும்பத்தை நல்லபடி நடத்தமுடியும். திருமணம் நடக்கும்வரை அதற்கான கால அவகாசம் இருக்கிறது.
அப்போது தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டு அடுத்தவரை குறைசொல்-லி யார் வாழ்க்கையும் மாறப்போவதில்லை. அதனால் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை அறிந்து, அதற் கேற்றாற்போல் பொறுமையாக, நிதானமாக இருந்து திருமணம் செய்தால் நிம்மதியான இல்வாழ்க்கையைப் பெறலாம்.
திருமண தோஷங்கள் செவ்வாய் தோஷம்
பலருக்குத் திருமணமென்றாலே முதலில் தடையாக இருப்பது செவ்வாய் தோஷம்தான். "செவ்வாய் தோஷமா? என் பிள்ளை ஜாதகம் சுத்த ஜாதகம். செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரமெல்லாம் பண்ணிட்டோம்'' என, ஏதோ கடுமையான வியாதி வந்ததுபோல் பலர் அலறுகிறார் கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தைக் கண்டறிந்து, அதே தோஷமுள்ளவர்களைப் பார்த்துத் திருமணம் செய்துவைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.செவ்வாய் என்றால் ரத்தத்தைக் குறிக்கும். தோஷமென்பது குறை. ரத்தத்திலுள்ள குறையைதான் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். அறிவியல்ரீதியாகப் பார்த்தால் நெகடிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்கள்தான் செவ்வாய் தோஷக்காரர்கள். ஒவ்வொரு ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு குணமுண்டு. நெகடிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். கோபமோ, சந்தோஷமோ- உடனே வெளிக் காட்டிவிடுவார்கள். தான் சொன்னதே சரியென வாதாடக் கூடியவர்கள். உடனே உடனே எல்லாம் நடக்கவேண்டுமென பிடிவாதம் கொள்வர். இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுவர். தன் இஷ்டப்படி எல்லாம் நடக்கவேண்டுமென நினைப்பார்கள். துணைவருடன் ஒத்துப்போகமாட்டார்கள். இப்படி இருப்பவர்களுக்கு தனக்கு வாழ்நாளில் இனி திருமணம் நடக்காமல் போய்விடுமோ என்கிற நிலையிலோ அல்லது இனியும் நம் குணத்தை மாற்றவில்லையென்றால் நம்முடன் வாழ்க்கைத்துணை இருக்கமாட்டார்கள் என்கிற நிலையிலோதான் தன்னை மாற்றிக் கொள்வார்கள். இல்லறம் வேண்டுமென்றால் அடங்கிப்போகத்தான் வேண்டும் என்னும் மனமாற்றம் வந்தால்தான் தோஷம் நிவர்த்தி யாகிவிட்டதென்று அர்த்தம்.
லக்னம், சந்திரன், சூரியனுக்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம். பெரும்பாலானவருக்கு செவ்வாய் தோஷமிருக்கும். அதேபோல் பலருக்கு செவ்வாய் தோஷ நிவர்த்தியும் இருக்கும். செவ்வாய் தோஷத்தைப் பற்றிச் சொன்னா லும் சட்டைசெய்யாமல் பேசுபவர்கள்கூட திருமணம் தாமதமானால் தன்னால் பயம் வந்துவிடும். செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் செய்துவிட்டால் சரியாகி திருமணமாகிவிடும் என்றாலும், செவ்வாய் நின்ற இடத்திற்கான பலனைச் செய்தே தீருவார். 2-ல் உள்ள செவ்வாய் குடும்பத்தில் துணைவருடன் வீண் வாக்குவாதங்களை அடிக்கடி செய்வார். பொருளாதாரப் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வாய்ப் பேச்சால் வம்பு வளர்ப்பர். பிடிவாதம், எதிர்வாதம் செய்வர். ஜாதகர் பேசும்போது எரிச்சலும், கோபமும் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியமின்றித் தவிப்பர்.
4-ல் செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் சுகத்தைக் கெடுக்கும். தாயார், வீடு, வாகனத்தில் ஏதாவது இழப்பு, தடை ஏற்படும். 7-ல் செவ்வாய் களத்திர நஷ்டம்,திருமணத் தடை, தாமதத்தை உண்டாக்கும். பெண்களுக்கு களத்திரகாரகரான செவ்வாய் இருப்பது தோஷத்தை அதிகப்படுத்தவே செய்யும். 8-ல் செவ்வாய்- பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமென்பதால் திருமணத் தடை, தாமதம், துணைவரின் பிரிவு, பிரச்சினையை உண்டாக்கும். 12-ல் செவ்வாய்- நிம்மதியற்ற உறக்கம், சந்தோஷக் குறைவை ஏற்படுத்தும். துணைவர் பிரிவு, வெளிநாட்டு வாழ்க்கை யைத் தருவார்.
1, 6-ல் செவ்வாய் இருப்பதுகூட தோஷ பாதிப்பை ஏற்படுத்தும். 1-ல் செவ்வாய் இருந்தால் பிறருக்குப் பிடிக்காத செயல் களைச் செய்வர். 6-ல் செவ்வாய் நோய், எதிரி, கடனைத் தரும்.
பெண்களுக்கு மாங்கல்ய அதிபதி செவ்வாய் கன்னியில், செவ்வாய் 6-ல் மறைவு பெறுவது, விரயாதிபதி குருவுடன் இணைவது, கணவர் விரயத்தைத் தரும். கன்னிச் செவ்வாய் கடலையும் வற்ற வைக்குமளவு நஷ்டம்- அதாவது களத்திர தோஷத்தையும் சிலருக்குத் தரும். திருமணம் நடக்காமல், திருமணத்தைத் தடுத்து விரக்தியடைய வைப்பதும் செவ்வாய் தோஷத்தால்தான்.
செவ்வாய் தோஷமென்பது ஜாதகத்தின் குறையல்ல. குண வேறுபாடுதான். எல்லாம் உடனே நடக்கவேண்டுமென நினைப் பவர்களுக்கு தாமதத் திருமணமே தீர்வு. செவ்வாய் லக்ன அடிப்படையில் ஒரே குணம் கொண்டவர்களை இணைத்து வைப்பது சிறப்பு. சுப கிரகப் பார்வைகள் செவ்வாய் தோஷத்தைத் தணிக்கும். திருமணத் தடை, தாமதம், பிரிவு போன்றவற்றைத் தடுக்கும். பாவகிரகப் பார்வை, சேர்க்கை செவ்வாய் தோஷத்தை மேலும் சிக்கலாக்கிவிடும். என்ன இருந்தாலும் சுப தசைக் காலங்களில் தோஷ பாதிப்பு குறைவாகவே இருக்கும். செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோஷக்காரர்களை மணப்பதே சிறந்த பரிகாரம் என்பதற்குக் காரணம், ஒத்த குணம் கொண்டவர்களை இணைத்துவைத்தால்தான் இல்லறத்தில் சிக்க-லின்றி சந்தோஷமாக வாழ்வார்கள். நெகடிவ் ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு அதே வகையைச் சேர்ந்தவர்களை இணைத்தால்தான் ஆரோக்கியமான குழந்தைப் பிறப்பு உண்டாகும். இல்லை யென்றால் அதற்கான மருந்து, மருத்துவம் பார்க்க நேரிடும். குண வேறுபாட்டால் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வர். குடும்பம் கலகத்திலேயே செல்லும். ஆன்மிகப் பரிகாரமென்பது, அரசமரத்தைச் சுற்றுவதுதான் குழந்தைப் பிறப்பை உண்டாக்கும். அரசமரத்தின் அறிவியல் மருத்துவ காரணங்களால் முன்னோர்கள் சொன்னபடி விரதமிருந்து கடைப்பிடித்தால் தோஷங்கள் தீர்ந்து திருமணம், குழந்தை பாக்கியம் பெறுவர்.
ராகு- கேதுவால் உண்டாகும் நாகதோஷம்
லக்னத்திற்கு 1, 2, 4, 5, 7, 8, 12 ஆகிய ஸ்தானத்தில் ராகு- கேது இருப்பது கடுமையான நாகதோஷம். லக்னத்தில் ராகு- கேது இருந்தாலே 7-ல் ராகு- கேது இருக்கும். இதனால் திருமணவாழ்க்கை பாதிப்பு, தடை, பிரிவு, வேதனைகள் நிறைய உண்டாகும். நாகதோஷம் இருந்தால் படுக்கையில் பாம்பு இருப்பதுபோல்தான். கணவன்- மனைவி பகலெல்லாம் நன்றாகப் பேசி மகிழ்ச்சியாய் இருந்தாலும், இரவு நேரங்களில் சண்டை சச்சரவு, ஏதாவது காரணத்தால் தம்பதியர் பிரிவு, தொழில் விஷயமாக பிரிவு, உடல்நிலை பாதிப்பால் பிரிவு என அடிக்கடி நிகழும். லக்னம், 7-ல் ராகு- கேது இருப்பது களத்திர தோஷத்தை உண்டாக்கும். 2-ல் ராகு- கேது இருந்தால் பொய் பேசுவது, அடிக்கடி வாக்குவாதம் செய்வது, வாக்கு கொடுத்தால் காப்பாற்றமுடியாமல் தவிக்கநேர்வது போன்ற கெடுபலன்களையே தரும். குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு, பிரிவுண்டு. 4-ல் ராகு, கேது தாம்பத்ய சந்தோஷத்தைக் கொடுக் காது. தேவையற்ற முறையற்ற உறவு, சந்தோஷத் தைத் தந்து அவப்பெயரையும் தரும். 5-ல் ராகு- கேது இருப்பது புத்திர தோஷம், புத்திர சேதம், புத்திர இழப்பு, புத்திர நஷ்டம், புத்திரர்களால் தொல்லை என வம்ச பாதிப்பைத் தந்துவிடும். 8-ல் ராகு- கேது இருந்தால், அது மாங்கல்ய ஸ்தானமென்பதால் பெண்களுக்கு பாதிப்பையே தரும். கணவர் பிரிவு, பிரச்சினை, வழக்கு, இழப்பு என இல்லற வாழ்க்கையை முழுதும் கெடுக்கும். சிலரது கணவர் வெளிநாடு களிலேயே இருப்பார். 12-ல் ராகு- கேது இருந்தால் நிம்மதியற்ற வாழ்க்கை- ஏக்கங்களுடனேயே வாழ்நாள் கழிந்துபோகும். சில நேரங்களில் கொடுத்தும் கெடுப்பார். நாகதோஷம் சந்தோஷமற்ற வாழ்க்கையையே தரும். லக்னத்திற்கு 8-ல் சந்திரன், ராகு இணைவென்பது மாங்கல்ய ஸ்தானத்தில் கிரகண தோஷமாகும். திருமணம், குடும்ப வாழ்க்கை, வருமானத்தைக் கெடுக்கும்.
பொதுவாக 2, 4, 7, 8-ஆமிடங்களில் ராகு- கேதுக்கள் இருப்பது, இருக்குமிடத்தைக் கெடுத்து தீயபலன் தரும். குரு பார்வை மட்டுமே கெடுபலன் தராமல் தாமதத் திருமணத்தைத் தந்து தோஷ நிவர்த்தியைத் தரும். சுபகிரகப் பார்வைகள் சிலருக்குத் தவறான பழக்க வழக்கங்களைத் தந்தாலும், மாட்டிக்கொண்டு அவமானப் படாமல் பார்த்துக்கொள்ளும். தீயகிரகப் பார்வை பெற்று பாவகிரகம் வலுப்பெற்றால், துணிந்து தெரிந்தே தீய பழக்க வழக்கத்தில் ஈடுபட்டு, துணைவருடன் தொல்லையுடனேயே காலத்தைக் கடத்துவார். சிலர் நன்றிகெட்டவர்களால் ஏமாற்றப்படுவார். நாக தோஷம் உள்ளவர்களுக்கு அதே தோஷம் கொண்டவர்களை மணம் முடித்து வைத்தால், ஜாடிக்கேத்த மூடி போலவும், கெட்டவர் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போலவும், "கேடிகள் ஒன்று சேர்ந்து கேடியாக' வாழ்ந்துகொள்வர்.
நாக தோஷம் கொண்டவர்களை தோஷமில்லாதவர்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தால், குணம் ஒத்துப்போகாதது மட்டுமல்லாமல், பிடிக்காத செயல்கள் செய்து வெறுப்பாகி பிரச்சினை, பிரிவுக்கு ஆளாக நேரிடும். ஆதலால் தோஷமுள்ளவர்களுக்கு தோஷமுள்ளவர்களை மணம்முடித்து வைப்பதேமிகச் சிறந்த பரிகாரம்.
காலசர்ப்ப தோஷம்
ராகு- கேதுகளுக்குள் சுபகிரகங்கள் அடை பட்டால், காலசர்ப்ப தோஷத்தால் சுபப்பலன்கள் அனைத்ததையும் தாமதப்படுத் தும். வாழ்வின் முதல் பாதியில் ராகு- கேதுக்கள் தசை வந்தால் பல சோதனைகளைத் தந்து, குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கும். குறிப்பாக திருமண காலத்தில் ராகு தசையோ, கேது தசையோ வந்தால் திருமணத்தைத் தாமதப்படுத்தும். திருமண வாழ்க்கையை சேதப்படுத்தி வலியையும், வேதனையையும் தந்துவிடும். காலசர்ப்ப தோஷம் களத்திர ஸ்தானத்தோடு இருந்தால் திருமண வாழ்க்கையைக் கெடுப்பதோடு, திருமணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக்கிவிடும். சிலருக்கு திருமணத்திற்கு முன்பு மறைமுகமான முறையற்ற சுகத்தைத் தரும். திருமணத்திற்குப் பிறகு கஷ்டத்தைத் தருகிறது. காலசர்ப்ப தோஷம் யோகமாக மாறியவர்களுக்கே இரண்டாவது பாதி வாழ்க்கை மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்குகிறது.
களத்திர தோஷங்கள்
இரண்டாமிடம் குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேது குடும்பத்தைக் கெடுக்கும். நான்காமிட சுக்கிரன் சுகத்தைக் கெடுக்கும். ஐந்தாமிட சூரியன் புத்திர தோஷத்தையும், ஆறாமிட குரு குழந்தை பாக்யத்தையும் கெடுக்கும். ஏழாமிட சுக்ரன், நான்கில் கேந்திராதிபதி தோஷத்தால் தாமதத் திருமணமும், எட்டில் இருக்கும் சந்திரன், ராகு மாங்கல்ய தோஷத்தையும், சந்திரனுக்கு ஏழில் கேது சந்நியாசி யோகத் தையும், திருமண விரக்தியையும், பாக்கியாதிபதி குரு ஆறில் மறைந்தால் தாமத நன்மையையும் தருகிறது.
அனைத்து தோஷமும் திருமண வாழ்க் கைக்கு பாதிப்பைத் தரும். ஏழாமிடம், ஏழாமதி பதி ஏதாவதொரு வகையில் பாதித்தாலும் களத்திர தோஷம் உண்டாகும். 8-ல் மாங்கல்ய ஸ்தானத்தில் சுக ஸ்தானாதிபதி சந்திரன் நீசம்பெற்று மறைந்தால் பருவ வயதில் சந்தோஷம் கிடைக்காது. திருமணத்தை தாமதப் படுத்தி, குரு பலமிக்க கோட்சாரத்தில் திருமணம் முடித்துவைத்தால் ஓரளவு பாதுகாக்கமுடியும்.