சென்ற இதழ் தொடர்ச்சி...
பிதுர் தோஷம்
லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2 அல்லது 7-ல்சூரியன் இருப்பது பிதுர் தோஷமாகி, தந்தையில்லா திருமணம், கடமைக்காக, காலதாமதத் திருமணத்தை ஏற்படுத்தும். தந்தைக்குப் பிடிக்காத வரன், பிடிக்காத இனத்தில் திருமணம் நடக்கும். சிலருக்கு பிள்ளையின் வருமானம் கைவிட்டுப்போகும் என்ற கவலையில், வருகிற நல்ல வரனையெல்லாம் தந்தை தட்டிவிட்டுத் திருமணத்தைத் தடுத்தல் போன்றவற்றால் திருமணத்தடை ஏற்படும். சிலருக்கு தந்தை இறந்துவிடுவார்.
சிலருக்குத் திருமணக் காலங்களில் தந்தையுடன் சண்டை ஏற்பட்டு தந்தை திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார். அல்லது காலச் சூழ்நிலையால், வரன் பார்ப்பதுமுதல் திருமணம் நடைபெறும்வரை தந்தை கண்டுகொள்ளாமலோ, கலந்துகொள்ளாமலோ இருப்பார். சிலரின் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டு பிரிந்துவிடுவார். அதனால் பிள்ளையின் திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டார். பிதுர்தோஷம் என்றால், தந்தைவழிமுன்னோர்கள் செய்த பாவத்தால் பிள்ளைகள் திருமணத்தில் கலந்துகொள்ளாமல் போவதும், பிள்ளைகள் திருமண வாழ்க்கையை பாதிக்கும் என்பதும்தான்.
மேலும் 2, 7-ல் சூரியன் இருந்தால், ஜாதகரின் துணைவர் முன்கோபக்காரராகவும், தான் சொல்வதே சரி என்னும் மனநிலை கொண்டவராகவும், தான் சொல்வதைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராகவும் அமைவார். எடுத்தெறிந்துப் பேசுபவராகவும், தீய வார்த்தைகள் பேசுபவராகவும் அமைவார். அதற்குப் பரிகாரம், அதேபோன்ற ஜாதக அமைப்பு கொண்ட வரைத் திருமணம் செய்துவைத்தால் ஒத்துப்போய்விடுவார்கள். மேலும் பிதுர்தோஷம் கொண்டவரின் திருமணத்தில் தந்தை தலையிடாமலிருந்தால் தந்தை ஆயுளையும் பாதிக்காது; திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
பாவகிரகங்களின் பார்வை, சேர்க்கையை சூரியன் பெற்றால், திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சினைகள் பிதுர்தோஷத்தால் உண்டாகும். சுபகிரகப் பார்வை இருந்தால் தந்தையைக் காப்பாற்றி திருமணத்தையும் சிறப்பாக நடத்தும். தினமும் காலையில் குளித்தவுடன் கிழக்குதிசை பார்த்து சூரியனை வழிபட தந்தையின் வாழ்க்கையும், ஆயுளும், ஜாதகரின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
சுக்கிர தோஷம்
ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரன்7-ஆமிடத்தில் நின்று, கேந்திராதிபத்ய தோஷம் பெற்று சுக ஸ்தானத்தில் பலமடைவது கடுமையான களத்திர தோஷமாகும். 7-ல் சுக்கிரன் நின்று பாவகிரகப் பார்வை, சேர்க்கை பெற்றால் ஒருவருடன் திருமணம் நடக்காது. பெண்களால் அவபெயர், அவமானம், மனைவி பிரிவு பிரச்சினைகளையே தரும்.7-ல் உள்ள சுக்கிரன் அழகான களத்திரத்தைத் தந்து களங்கத்தையே தரும். பாவகிரகச் சேர்க்கை, பல காதலையும் காம சிந்தனைகளையும் தந்து முறையற்ற உறவுகளால் தொல்லையை அனுபவிக்கச் செய்யும். சுபகிரகப் பார்வையானது ஓரளவு நன்மை தரும்.
திருமணத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் தொடர்பு ஏற்படும். நல்ல தசாபுக்தி இருப்பவர்கள் அகப்பட்டுக் கொள்ளாத யோக்கியர்களாகவும், பாவ கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தூற்றும் பாவிகளாகவும் இருப்பர். பெண்களுக்கு 7-ல் சுக்கிரன் இருப்பது பெருமளவு பாதிப்பு தராது.
புத்திர தோஷம்
ஐந்தில் சூரியன் ஆட்சிபலம் பெறுவது கடுமையான புத்திர தோஷம். தாமத குழந்தை பாக்கியம் தரும். தாமதமாக ஆண்வாரிசு ஏற்படும். புத்திரகாரகன் குரு ஆறில் மறைவது புத்திர தோஷம். நான்கில் கேது, ஐந்தாமதிபதி சூரியனுடன் தொடர்பு, சூரிய சாரம் பெறுவது போன்றவை கருக்கலைப்பு நடைபெற்று தாமதமாக குழந்தை பாக்கியம் தரும். ஐந்தாமிடத்திற்கு பாவகிரகங்களின் பலமிருப்பது புத்திர தோஷத்தை மட்டும் தருவதில்லை; திருமண தோஷத்தையும் தரும். முறையற்ற திருமணம்- அதாவது ஜாதி, மதம், கலாச்சாரம் மீறி திருமணம் செய்பவர்களுக்கு ஐந்தாமிடம் கெட்டுப்போயிருக்கும். ஐந்தாமிட பாதிப்பும் களத்திர தோஷத்தை சிலருக்குத் தரும். திருமணத்திற்குப் பின்பு மறுதாரம் ஏற்படுவது ஐந்தாமிட பாதிப்பாலும் உண்டாகிறது.
அதாவது முதல் தாரத்திற்கு பிள்ளை பிறக் காமல், இரண்டாவது திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்ளும் நிலை அல்லது திருமணமாகி குழந்தை பெற்றவரைத் திருமணம் செய்துகொள்ளும் நிலையும் ஐந்தாமிடகளத்திர தோஷத்தால் நிகழ்கிறது.
மாங்கல்ய தோஷம்
லக்னம்,ராசிக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். மாங்கல்ய கிரகமான செவ்வாய், எட்டாமதிபதி எட்டில் இருப்பது, செவ்வாய் எட்டில் இருப்பது, செவ்வாய் எட்டாமிடத்துடன் சேர்க்கை, பார்வையானது மாங்கல்ய தோஷத்தைத் தரும். எட்டாமிடத்திற்கு சூரியன், சனி, ராகு- கேதுக்கள் பார்வை, இணைவு தோஷத்தைத் தரும். 12-ஆமதிபதி 8-ல் இருப்பது மாங்கல்ய நஷ்டத்தைத் தரும். 8-ஆமதிபதி 6-ல் பரிவர்த்தனை அல்லது பலம்பெற்றால் களத்திர நஷ்டம், பிரிவைத் தந்துவிடும். இரண்டாம் அதிபதி 6, 8-ல் இருந்தாலும் மாங்கல்ய நஷ்டத்தைத் தந்துவிடும். மாங்கல்ய கிரகமான செவ்வாய் சூரியனுடன் எந்த இடத்தில் சேர்ந்தாலும் இல்லற வாழ்க்கையை பாதிக்கும். ராகு 4, 8-ல் இருந்து, 5-ல் சூரியன், செவ்வாய் இணைந்து,செவ்வாய் எட்டாமிடத்தைப் பார்ப்பதும்; சனி ஏழாமிடத்தைப் பார்த்து, குரு பார்வை பெறாவிட்டால், ராகு தசை அல்லது 6, 8-ஆமிட தசை, செவ்வாய் புக்தியில் எதிர்பாராத நேரத்தில் கணவர் மாரடைப்பால் மரணமடைவார்.
நீச தோஷம்
ஆண்களுக்கு களத்திர கிரகமான சுக்கிரன் நீசம்பெற்றால் சுக்கிலக் குறையைத் தந்து ஆண்மையைக் கெடுத்து இல்லறத்தை சுகமற்றதாக்கிவிடும். சுக்கிரன் ஏழில் இருத்தல், சுக்கிரன் பாதகாதிபதியாகி வலுப்பெறுதல், பாவகிரகத்தால் சுக்கிரன் தொடர்புபெறுதல் போன்றவை சுக்கிலத் தன்மையை இழக்கச் செய்து சுகவாழ்வைக் குறைக்கும். குரு நீசம்பெறுவது, போக விஷயத்தில் ஆண் தன்மையைக் குறைத்து இல்லற நாட்டத்தைக் கெடுக்கும். ஏழாமிடம் குருவாகி, குரு நீசம்பெற்றால் கணவன்- மனைவிக்குள் சுகமிருக்காது. பெண்களுக்கு களத்திரகிரகமான செவ்வாய் நீசம்பெற்றால், கணவன் ஆண்தன்மை குறைந்தவனாக வும், மனைவி இல்லற நாட்டமில்லா இல்லாளாகவும் இருப்பாள். செவ்வாய், சுக்கிரன் பார்வை, சேர்க்கையுடன் சனி பார்வை, சேர்க்கை ஏற்பட்டு, சுபகிரக, குரு பார்வையின்றி இருந்தால் அடுத்தவரிடம் இல்லறசுகம் தேடிச்செல்ல நேரும்.
தார தோஷங்கள்
ஏழாமிடம் கெட்டு களத்திர தோஷமிருந்தால் தார தோஷம் ஏற்படும். ஏழாமிடத்தில் சனி, சனிக்கு 5, 9-ல் சூரியன் இருந்தால், முதல் களத்திரம் கெட்டவரைத் திருமணம் செய்ய நேரும். சுக்கிரன் 7, 8-ல் இருந்து சனி பார்வை ஏற்பட்டு, சந்திரன் 7-ல் இருந்தால் இருதார யோகத்தைத் தரும். குரு ஏழாமதிபதியாகி சனியால் பார்க்கப்பட்டு, செவ்வாயும் ஏழாமிடமும் பார்த்தால், வேறொருவரின் மனைவியை மணப்பார். ஏழாமதிபதி ஐந்தில்- ஐந்தாமதிபதி நீசம்- சனி, சுக்கிரன் இணைவு- நீசம் பெற்ற சுக்கிரன் பாதிப்பு பல தாரத்தைத் தரும். மனைவி இருக்கும்போதே இன்னொருவரை மணப்பது, விதவையை மணப்பது போன்றவை ஏற்படும். சுக்கிரன், ஏழாமிடம் கெட்டு செவ்வாய், சனி, ராகு- கேது பார்வை பெறுவது தார தோஷத்தைத் தந்துவிடுகிறது.
பரிகாரம்
ஜாதகரின் 2, 4, 5, 7, 8, 9-ஆமிடங்களை ஆய்வுசெய்து, ஜாதகப் பொருத்தம், தோஷங்கள் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும். அனைத்துவிதமான களத்திர தோஷங்களுக்கு தாமதத் திருமணமே மிகச்சிறந்த பரிகாரம். தவிர்க்கமுடியாத காரணத்தால் முன்னதாக அமைந்து விட்டால், திருமணம் முடிந்தபின் நல்லநாள் பார்த்து, சம்பந்தப்பட்ட தசை நடக்கும் கிரகத்தின் தலம் அல்லது குரு ஸ்தலத்திற்குச் சென்று மறுமாங்கல்யம்- அதாவது மறுமணம் செய்துகொண்டால் கடுமையான களத்திர தோஷத்தைத் தவிர்க்கலாம். தாமதத் திருமணம் செய்பவர்களில் பலர், 'இருந்திருந்து செய்கிறோம்; வயது குறைந்த- அழகான பெண்ணை மணக்கவேண்டும்' என்று சொல்வது, இன்றைய சமூகப் பெண்களின் வாழ்க்கையில் திருமணத்திற்குப்பின் பலவகை பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடுகிறது. கிடைத்த பெண்ணோடு சந்தோஷமாக வாழ்வதைவிட்டு, ஏக்கம், எதிர்பார்ப்பின்படி திருமணம் செய்வது பாதிப்பையே தரும். வாழ்வின் ஒருமுறை செய்யவேண்டிய திருமணத்தை, பலமுறை யோசித்து முடிவெடுத்துச் செய்வதுதான் வாழ்க்கையை சுபிட்சமாக்கும்.
செல்: 96003 53748