சென்ற இதழ் தொடர்ச்சி...

துலாம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 10, 11, 19, 20, 29, 30. பாதக நாட்கள்: 4, 5, 17, 18, 24, 25.

Advertisment

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: என்ன செய்வதென்று சந்தேகத்துடன் இருந்தாலும் செவ்வாய், குரு, கேது மூவரும் நல்வழிகாட்டப் போகிறார்கள். முதல் வாரம் 4, 5 தேதிகள் நல்ல சந்தர்ப் பங்களை உருவாக்கித் தரும். இரண்டாவது வாரம் 12, 13 தேதிகளில் கணவன்- மனைவி இணைந்து பல நாட்கள் இருந்துவந்த பிரச்சினைகளை சீர்செய்ய லாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் நாவடக்கம் வேண்டும். முத்து பதித்த வெள்ளி மோதிரம் அணிதல் நல்ல பரிகாரம். பெண்கள் மூக்கில் வளையம் அணிவதும் போதுமானது. வசிக்கும் வீட்டில் வடக்கைவிட தென்திசையில் அதிக வெற்றிடம் இருந்தால் கெடுதலை உருவாக்கும்.

சுவாதி: புதுப்புது யோசனைகள், நல்ல சந்தர்ப் பங்களை நாடிச்செல்லும் மாதம். முதல் வாரம் செலவினம் அதிகமாகும். அரசியல், பொது வாழ்வில் கொண்டாட்டம்தான். அண்ணன்- தம்பி உறவில், 14, 15 தேதிகள் புதுப்பாதை அமைக்கும். சுக்கிரனின் நிலை சீராக இல்லை. மனைவியின் வயது 85-க்குமேல் எனில் உன்னிப்பான கவனம் வேண்டும். சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் 7-ல் இருந்து, 8-ஆமிடம் சுத்தமாக இருந்தால், ஆண்கள் இம்மாதம் விலைமாதரை நாடினால் பால்வினை நோய் நிச்சயமாகிவிடும். சொந்த ஜாதகத்தில் சனியும் சந்திரனும் 6-ல் இருந்தாலும் மேற்கூறிய கதிதான். சனியை சாந்தி செய்ய சுருட்டு அல்லது போதை தரும் பாட்டிலை திருஷ்டிசுற்றி நீரில் போடலாம்.

விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: உங்களிட முள்ள ஆற்றலை சுக்கிரன் வெளிப்படுத்தப்போகும் மாதமிது. மிதுனத்தில் இருக்கும் ராகு மருத்துவச் செலவைக் கட்டுப்படுத்துவார். மாதத்தின் கடைசி வாரம் நிம்மதியையும் புகழையும் சேர்த்தே தரும். 28, 29 தேதிகளில் மட்டும் சிலவற்றை போராடியே பெற இயலும். குடும்ப பூர்வீக சொத்தில் எதையும் எதிர்பார்க்க இயலாது. ஆடம்பரப் பொருள் விற்பனை செய்வோர்- அதாவது ஆயத்த ஆடை, மிக்சி, பிரிட்ஜ் போன்றவை அதிக லாபத்தை ஈட்டித்தரும். ஏதோ காரணத்தால் பிரிந்த தம்பதிகள் இம்மாதம் ஒன்றுசேர முயல்வது வெற்றிக்கு வழிவகுக்காது. ஆடவர்கள் வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் நீராடல் கூடாது. பொருள் விரயமாகும்.

விருச்சிகம்

Advertisment

ராசிக்கு சிறந்த நாட்கள் 4, 5, 12, 13, 22, 23. பாதக நாட்கள்: 1, 6, 7, 19, 20, 27, 28.

விசாகம் 4-ஆம் பாதம்: இம்மாத ஆரம்ப நிலையில், முதல் வாரமே குடும்ப சொத்து விவகாரம், சொத்தில்லா தோருக்கு பிற குடும்பநலம் சார்ந்த வாக்கு வாதம், ஆலோசனைகள் முதலிடம் வகிக்கும். காலநிலை சார்ந்த ஆரோக் கியப் பின்னடைவுகளும் தொல்லைதரும். அடுத்தவர்கள்மேல் சந்தேகங்கள் வரும். ஆனாலும் இவை யாவும் 8, 9 தேதிகளுக் குப்பின் விடைகொடுக்கும்.பண முதலீடுகள் வேண்டாம். பைரவரை வணங்குவதோடு துர்க்கா பூஜை, பிரதோஷ பூஜை நற்பலன் தரும்.

"க்ரஹேஸ்வரி க்ரஹாராத்யா க்ரஹீணி ரோக மோசிநீ/

க்ரஹாவேசகரி க்ராஹ்ய க்ரஹக்ராமாபி ரக்ஷிணி//

என்னும் மந்திரத்தை தினமும் ஒன்பது

முறை ஜெபித்தல் நன்று.

அனுஷம்: இம்மாதம் உங்களது அர்ப்பணிப்பு குடும்பத்தாருக்குப் பேருதவியாக அமையப்பெறும். 15, 16 தேதிகள் கடந்தகால அனுபவங் களின் உண்மைதனைஉணர்த்தி விடும். குடும்பத்தார் நம்பிக்கை யூட்டும் செய்திகளைத் தருவார்கள். காதல், அன்பு, பாச விவகாரங்கள் கசப்பானதாகவே இருக்கும். ராகு தீயவழிகளில் பொருளீட்டுவதில் தடைகளைத் தரத் தயங்கமாட்டார். சுண்டுவிரலை அடுத்து அமையப்பெற்ற புதன்மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால் பொருள் விரயம் ஏற்படும். 21, 22 தேதிகளில் எவரிடமும் நீண்ட வாக்கு வாதம் தவிர்க்கவும். 6-ல் சுக்கிரன், இரண்டா மிடம் சுத்த நிலை. இம்மாதம் சனியன்று ஆண் குழந்தை ஜனனமானால் தந்தைக்கு ஆகாத நிலை. எனவே குழந்தைக்கு மாதுளஞ்செடியின் வேர்த்துண்டை வெயிலில் காயவைத்து தாயத்தாகக் கட்டலாம்.

Advertisment

sun

கேட்டை: உங்களுடைய எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து செயல்படவேண்டும். வங்கி இருப்பு இருவாரங்கள் நிம்மதி தரும். வெளிநாட்டில் இருப்போர், வெளிமாநிலத்தில் பணிபுரியும் சொந்த பந்தங்களால் வருமானம் அதிகரிக்கும். குரு பகவான், குழந்தைகளின் கல்விக்கடனைத் தீர்த்துவைக்க பாடுபடுவார். கேது ஞானத்தைப் பெருக்குவார். விநாயகப் பெருமானை செந்தாமரை மலரால் பூஜித்தால் கருணை காட்டுவார். அங்காரகனை வணங்குவதால் அரசு சார்ந்த பணவரவு அதிகரிக்கும். மாதர்கள் இம்மாதம் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதைத் தவிர்த்தல் நன்று. செவ்வாய் செல்வத்தைப் பெருக்குவார்.

தனுசு

ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 14, 15, 24, 25. பாதக நாட்கள்: 2, 3, 8, 9, 22, 23, 29, 30.

மூலம்: முதல் வாரம் 7-ஆம் தேதி வரையிலும் செலவினங்களை எதிர்கொள்ளவேண்டும். 10, 11 தேதிக்குமேல் கௌரவம் மேலோங்கும். எக்சிகியூட்டிவ் போன்ற உயர் பதவியினர் கேதுவால் சில பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தோடு வெளிநாடு செல்வோர் கொண்டுசெல்லும் பொருள்மீது அதிக கவனம் வேண்டும். கூடவே குரு இருப்பதால் பெரிய தவறுகள் நடைபெறாது. இம்மாதம் குழந்தை பிறந்தால், சிறிது ஆற்று மணலைத் தண்ணீரில் கலந்து குழந்தையின் கால்களைக் கழுவினால் கெடுதல்கள் போய்விடும். ஜீவநதி எனில் மேலும் நல்லது.

பூராடம்: உங்கள் மனதில் வழக்கமாக உருவெடுக்கும் எண்ணங்கள் சக்தி நிறைந்தவை யாக மாறும். மூன்றாவது வாரம் வரவேண்டிய பணம் சீராக வந்துவிடும். அசையா சொத்து விவகாரங்களில் அற்புதங்களை எதிர்பார்க்கலாம். 21, 23 தேதிகள் மிக நல்லவை. ராகு 7-ல் இருப்பதால், இம்மாதம் திருமணம் புரிந்து மணமகன் வீடு செல்லும் மணமகளின் முந்தானையில் சிறிது பச்சரிசி, ஒரு வெள்ளி உலோக உருண்டை வைத்து முடிந்து அனுப்புதல் நன்று. அல்லது புறப்படும் போது தண்ணீருடன் நிறைகுடம் எதிரே வரச்செய்யவேண்டும். நல்லவை நடக்கும். இம்மாதம் செவ்வாய், அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் முடிந்தவரை செலவு செய்யா திருப்பது நன்று. உத்திராடம் 1-ஆம் பாதம்: "எனக்கு எப்போதுமே சரியான வாய்ப்புகள் வந்த தில்லை' என்ற கவலையை சூரியனும் புதனும் மாற்றிவைப்பார்கள். சோர்வை ஏற்படுத்திய தருணங்கள் 24, 25 தேதிகளில் நிம்மதியைப் பெற்றுத்தரும். 27, 28 தேதிகளில் ரகசிய ஒப்பந்தங்கள் பேரானந்தத்தை உருவாக்கும். உற்றார்- உறவினர்கள் கைகோர்த்து உதவி புரிவார்கள். சூரிய பகவானின் கருணைபெற ஐந்து அல்லது பத்து பார்வையற்றோருக்கு உதவிபுரிதல் மிக நன்று. ஞாயிற்றுக்கிழமை சிவன் கோவில் சென்று பைரவருக்கு முந்திரிப்பருப்பு கேக்கை வைத்து வணங்குவது நன்று. கருவேப்பிலை சாதமும் போதுமானது.

மகரம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 8, 9, 17, 18, 22, 18. பாதக நாட்கள்: 4, 5, 10, 11, 24, 25.

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளவேண்டிய மாதம். எனினும் தெளிவான பாதையை கிரகநாதர்கள் உருவாக் கித் தருவார்கள். 4, 5 தேதிகளில் ஒரு முக்கிய முடிவெடுக்கவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகும். வீட்டிலும் அலுவலகத்திலும் இது பேருதவியாக இருக்கும். ராசியிலேயே சனி அமர்ந்துள்ளார். 7 மற்றும் 10 ஆகிய இடங்கள் சுத்தமாகக் காணப்படுவதால், வீடு, நிலம், தோட்டம் என அசையா சொத்துகள் வாங்க நல்ல தருணம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சிறுவர்களின் கண்பார்வையில் பின்னடைவுகள் வரும். குழந்தையை கிழக்கு நோக்கி நிற்கச் செய்து, சிறிது சூரியகாந்தி விதையை திருஷ்டிசுற்றி சதுப்பு நிலத்தில் தூவுதல் நன்று.

திருவோணம்: குரு பகவான் 27-3-2020-ல் மகர ராசியில் நிலைகொள்வார். எனவே, அதற் குள்ளாகவே இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபாரப் பெருக்கம் ஆகியவற்றை முடிப்பது நன்று. புதனின் இடத்தில் ராகு இருப்பதால், கருவுற்ற மாதர்கள் கவனமுடன் செயல் படவேண்டும். இம்மாதம் திருட்டு, ஏமாற்றல் போன்ற தீய செயலில் ஈடுபடுவது கூடாது. அது, சிறைத்தண்டனை போன்ற கடின பின்விளைவைத் தரும். பிறரைக் கெடுவழியில் நடத்தினால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். முழு கருப்பு நிற நாய் வளர்ப்பவர்களுக்கு இது அதிர்ஷ்டமான மாதம். வீட்டில் தென்கிழக்கு மூலையில் அதிக இருட்டில்லாதவாறு பார்த்துக்கொள்வது நன்று. சுக்கிரன் வருமா னத்தை ஏற்படுத்தித்தரத் தயங்குவார். கை- கால்களில் மங்கையர்கள் மஞ்சள் பூசினால் மலட்டுத்தன்மை விடைகொடுக்கும்.

அவிட்டம்: இம்மாதம் சில உறுதியான முடிவுகள் சீரான பாதையைத் தெளிவுபடுத்தும். மூன்றாவது வாரம் மனப்போராட்டங்கள் விவாதங்களால் விடைகொடுக்கும். கௌரவம், வசதிவாய்ப்புகள் பெருகும். தடை தெரியவந் தால், பவளமோதிரம் அணிவதால் சீர்செய்யப் பட்டுவிடும். இம்மாதம் கணவரின் உத்தரவின் பேரில் தான தர்மம் செய்வது நன்று. மாதர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அரிவாள் மனையைப் பயன்படுத்தாதிருப்பது நன்று. ஆடம்பரப் பொருள் விற்பனை செய்வோர், பியூட்டி பார்லர் நடத்துவோர், திருமண மண்டபம் வாடகைக்குத் தருவோர் தவறாது வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் சுக்கிரனை வணங்குவது நல்லது.

கும்பம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 10, 11, 19, 20, 29, 30. பாதக நாட்கள்: 1, 6, 7, 12, 13, 27, 28.

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: மாத ஆரம்பத்தில் எந்த காரணமும் இல்லாமலேயே பழியைச் சுமத்துவார்கள். சமாளிக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படும். 10, 11 தேதிக்குமேல் சுகமான சூழ்நிலை மிக ஆனந்தத்தைப் பெற்றுத்தரும். அடிமைத்தொழில்போல் பணிபுரிவோருக்கு சூரியன் ஒத்துழைப்புத்தரத் தயங்குவார். பூர்வீக வீட்டில் பத்து வருடங் களுக்குமேல் வசித்துவந்தால் அதுவும் தெற்கு வாசல் வீடென்றால், புதன்கிழமைகளில் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது நன்று. கையால் அடித்து தண்ணீர் எடுக்கும் ஹேண்ட் பம்ப் இருந்தால், இம்மாதம் அந்தத் தண்ணீரில் குளித்தால் கெடுதல் மிகும். ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் உச்சிவேளையில் கோதுமை அல்வா தானம் நல்லது.

சதயம்: உங்களிடமிருக்கும் பேரறிவு இம்மாதம் சரியான பாதை நோக்கி வீரநடை போடும். 10, 11 தேதிகளில் தடுமாற்றம் ஏற்படும்; சமாளித்துவிடலாம். இருதார அமைப்புடையோருக்கு முதல் தாரம் பெற்றெடுத்த முதல் மகன் நல்லாதரவு தரும்படியாக நடந்துகொள்வார். கோவிலில் யானையிடம் தும்பிக்கை ஆசிர்வாதம் மிக நல்ல பலனைப் பெற்றுத்தரும். ராகுவின் கெடுதல் வராதிருக்க, குழந்தைகளின் பிறந்த நாள் வந்தால் இரவில்தான் கொண்டாட வேண்டும். குழந்தையில்லை என இரண்டாவது தாரத்தை மணம்முடித்தோர் இம்மாதம் சந்தான பாக்கியத்திற்கு முயற்சிப்பது கூடாது. ஏனெனில் உதடு இரண்டாகப் பிளந்த நிலையில் குழந்தை உருவாகுமாம்.

பூரட்டாதி: 1, 2, 3-ஆம் பாதங்கள்: உங்களுடைய எதிர்காலம் சார்ந்த சிந்தனை இம்மாதம் மிக வித்தியாசமாகக் காணப்படும். மூன்றாவது வாரம் உங்களுடைய செய்கைகள் அத்தனையும் பிறரால் கண்காணிக்கப்படும்விதமாகவே இருக்கும். பணிபுரிவோருக்கு 21, 22 தேதிகளில் உத்தியோக மாற்றம், இடமாற்றம் ஏற்படும். நெறிதவறி, லஞ்சம், கையூட்டு என பணம் சம்பாதித்திருந்தால், வருமான வரி ரெய்ட் அல்லது பெரிய பணவிரயம் வரும். நான்கு வியாழக்கிழமைகள் தவறாது குருவை வணங்குவது போதுமானது. நீண்டநாள் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியூர் செல்ல நேரிட்டால், வாசல் ஓரத்தில் மண்குடத்தில் தண்ணீரை நிரப்பி, எட்டு ஒரு ரூபாய் நாணயத்தை அதனுள் போட்டு பானையை மூடாமல் வைத்துச் செல்லவும். சனி காப்பாற்றுவார்.

மீனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 4, 5, 12, 13, 22, 23. பாதக நாட்கள்: 2, 3, 8, 9, 14, 15, 29, 30.

பூரட்டாதி 4-ஆம் பாதம்: காலமகள் கண்திறக்கும் மாதம் உங்களுக்கு. புதுவேலை, புதுப்பயணம், வெளிநாடு செல்ல நல்ல தருணம். இப்படியாக மனத்தெளிவான மாதம். புதுமணத் தம்பதிகளில் சிலருக்கு குடும்பத்தில் சலசலப்பு வரலாம். மாணவர் களுக்கு நற்செய்திகள் அதிகமாகவே வரும். இரண்டாவது வாரம் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போகிறீர்கள். ஆடை அணியும் போது, மஞ்சள், வைலட் வண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருதல் வேண்டும். 12, 13 தேதிகளில் வியாபாரம் சார்ந்த எந்த கலந்துரையாடலும் வேண்டாம்; தோல்வி பரிசாகிவிடும். குருவையும் விநாயகப் பெருமானை மட்டும் வணங்குதல் அதிக பலன் தரும்.

உத்திரட்டாதி: மூன்றாவது வாரம் கிரகநாதர்கள் எந்த இடையூறும் தராமல் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வார்கள். 17, 18 தேதிகளில் பிறருடைய ஆதரவு உங்களைப் பேரானந்தமடையச் செய்யும் 21, 22, 23 தேதிகள் உடல் உபாதை சில ஏமாற்றத்தை உருவாக்கும். இம்மாதம் அதிகாலை பின்வாசலைத் திறந்தபின் முன் வாசலைத் திறப்பது நன்று. புதன் கும்பத்தில் இருப்பதால் பண விவகாரங் களில் பொறுப்பற்ற உறுதிமொழி கூறுதல் கூடாது. ஷேர் மார்க்கெட், திருட்டு லாட்டரி சீட்டில் பணமுதலீடுகள் லாபம் தராது. மனைவியின் ஜாதகத்தில் புதன் 6-ல் காணப்பட்டால், இம்மாதம் அவர்களுடைய பெயரில் முதலீடு கூடாது. ஒரு சிறிய மண்குடுவை வாங்கி திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடுவது போது மானது.

ரேவதி: இம்மாதம் நடத்தையிலோ சொல்லிலோ எவரையும் துன்புறுத்துதல் கூடாது. கூட்டு வியாபாரம் செய்வோருக்கு லாபம் அதிகமாகும். ஆடம்பர வாழ்வுக்கு அஸ்திவாரம் போடும்விதமாக செல்வச் செழிப்பை எதிர்பார்க்கலாம். 26, 27, 28 தேதிகள் மன அமைதியை அதிகம் ஏற்படுத்தும். 31-ஆம் தேதி கணவன்- மனைவியிடையே பொருளாதார விவகாரத்தால் மனக்கசப்பு ஏற்படும். குங்குமப்பூ பேஸ்ட்டால் திலகம் அணிதல் நல்லது. புதன்கிழமை நவகிரக சந்நிதியிலுள்ள புதன் பாதத்தைத் தொட்டு வணங்கியபின், காலபைரவரின் வாகனமான நாயை வணங்கி புது விவகாரங்கள் ஆரம்பித்தால் எல்லாமே சுமுக நிலையா கிவிடும். செல்: 93801 73464