மாந்தி என்பது சனி பகவானின் துணைக் கோளாகும். மற்ற கிரகங்களுக்கும் துணைக் கோள்கள் இருந்தபோதிலும், அதனை ஜோதிடரீதியில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

மாந்தி என்பதும் குளிகன் என்பதும் ஒன்றே. மாந்தியைக் கொண்டுதான் ஆயுள் தாயம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாந்தியுடன் இருக்கும் ராசிநாதனும், மாந்தியுடன் கூடிநிற்கும் கிரகமும் கெடுதலைத்தான் கொடுக்கும் என்று கூறுவர். நமது அண்டை மாநிலங்களில் மாந்தி இல்லாமல் மானிட ஜாதகங்கள் குறிக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலும் இம்முறை பின்பற்றப்படுவதில்லை.

parigaram

Advertisment

மாந்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு மனிதனின் பொருளாதார விஷயங்களில் மாந்தி மிக முக்கியமாக அமைகிறது. மாந்தி இருக்கும் இடத்தைப் பொருத்தே செல்வாக்கு அமையும். எனவே உங்கள் ஜாதகத்தில் மாந்தி எங்குள்ளார் என்று ஒரு நல்ல ஜோதிடரைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதன்பிறகு அதற்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்து வாழ்வை வளமாக்கிக்கொள்ளுங்கள்.

மாந்தி இருக்கும் இடத்தைக் கொண்டு நீங்களே உங்கள் பலனை அறிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 மாந்தி லக்னத்தில் இருந்தால் ஆரோக்கியம் கெடும். முகத்தில் அழகு இராது. அங்கங்களில் பிறவியிலேயே ஊனம் இருக்கும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு ஊனத்தை ஏற்படுத்தும்.

Advertisment

 லக்னத்திற்கு இரண்டில் இருந்தால் நல்வாழ்வு அமையாது. மற்றவர்களை ஏசிக்கொண்டே இருப்பார். வருமானத்தைக் குறைப்பார். மண வாழ்வில் பிரிவை ஏற்படுத்துவார்.

 லக்னத்திற்கு மூன்றில் இருந்தால் ஜாதகர் தம்பி- தங்கைகளுக்கு கொடுமை இழைப்பார். அவர்களுக்கு விரோதமாக நடந்துகொள்வார்.

பின் சகோதரம் ஏற்படுவதை மாந்தி தடுப்பார்.

 லக்னத்திற்கு நான்கில் மாந்தி இருந்தால் மனக்கஷ்டம் ஏற்படும். எதிரிகளால் பயம் உண்டாகும். மகிழ்ச்சி இருக்காது. சுகபோக வாழ்வு அமையாது.

 லக்னத்திற்கு ஐந்தில் மாந்தி இருந்தால் ஜாதகர் குருவுக்கு துரோகம் இழைப்பார். குழந்தை இருக்காது. பெரியோர்களை அவமதிப்பார். சமுதாயத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவார்.

 லக்னத்திற்கு ஆறில் மாந்தி இருந்தால் சொந்த பந்தங்களைப் பிரிந்து வாழ்வார். எப்பொழுதும் எதையோ பறிகொடுத்ததுபோல் காட்சியளிப்பார்.

 லக்னத்திற்கு ஏழில் மாந்தி இருந்தால் களத்திரம் ஒற்றுமையுடன் இருக்காது. களத்திர தோஷம் உண்டாகும். இரண்டு மூன்று களத்திரம் உண்டு எனலாம்.

 லக்னத்திற்கு எட்டில் மாந்தி நின்றால் ஏழ்மை நிலையில் இருப்பார். வசதியாக இருந்தால் வாழ்நாள் குறைவு ஏற்படும். விஷம் அல்லது ஆயுதங்களால் பாதிப்பு ஏற்படும். எட்டில் மாந்தி இருக்க குழந்தை பிறந்துவிட்டால், திருமணமாகும்வரை மாந்தி தோஷப் பரிகாரம் செய்துகொள்வது உத்தமம்.

 லக்னத்திற்கு ஒன்பதில் மாந்தி இருந்தால் அவரிடம் தெய்வீகத்தன்மை இராது. முதியவர்களை மதித்து நடக்கமாட்டார்.

 லக்னத்திற்கு பத்தில் மாந்தி இருந்தால் நல்ல பேரும் புகழும் ஏற்படும்.

 லக்னத்திற்கு பதினொன்றில் மாந்தி இருக்க திடீர் தனப்ராப்தி ஏற்படும். திறமையற்றவராக இருந்து, கல்வியறிவு குறைவாக இருந்தாலும் திடீர் யோகப்பலன் ஏற்படும்.

 லக்னத்திற்கு பன்னிரண்டில் மாந்தி இருந்தால் உறக்கமில்லாத நிலை, கெடு நினைவுகள் ஏற்படும். யாருடனும் ஒற்றுமை ஏற்படாத நிலை ஏற்படும்.

 மாந்தி 4, 10-ஆம் வீடுகளில் சந்திரனோடு கூடியிருந்தால் தாயாருக்குக் கெடுதல் ஏற்படும். 9, 3-ல் சூரியனோடு கூடியிருந்தால் தந்தைக்குக் கெடுதல் வரும்.

இவையெல்லாம் மாந்தியால் ஏற்படும் தோஷமென்றாலும், கீழுள்ள பரிகாரத்தைச் செய்வதன் வாயிலாக மாந்தி தோஷத்தை மாற்றியமைக்கலாம்.

பரிகாரம்

 ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்துவர தோஷம் விலகும்.

 சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருவாலங்காடு ஈஸ்வரனிடம் மாந்தி தோஷத்தை விலக்கியருளுமாறு மனதார வேண்டிக்கொண்டால் வேண்டியது நடக்கும். மாந்தி தோஷத்திற்கு இதுவே பரிகாரத்தலம்.

குறிப்பு:

 திதி சூன்யம் மாந்தியை பாதிப்பதில்லை.

 தசா புக்திப்பலன்கள் மாந்தியைக் கட்டுப்படுத்தாது.

 திதி, யோகம், கரணம், ஓரை, வேளை போன்றவை மாந்தியைத் தடுக்க இயலாது.

 உச்சம், நீசம், பகை கிடையாது.

 திரிகோண கேந்திரம், உயர்வுகள் கிடையாது.

செல்: 94871 68171