ஜென்மங்களில் உயர்ந்தது மனித ஜென்மம்.
மனிதன் பூமியில் பிறப்பதற்குக் காரணமாக அமைவது அவன் முற்பிறவியிலே செய்த பாவ புண்ணியமே.
கர்மாவின் பிடியில் சிக்கிய அனைத்து ஆன்மாக்களும் தமது கர்மப் பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது தனது மனதிற்கும், உடம்பிற்கும் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படுகிற பலன் களால், சில நேரங்களில் மகிழ்ச்சியையும், பல நேரங்களில் மனவேதனையையும் சந்திக் கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. மனவேதனை சிறியதாக இருக்கும்பொழுது பலன்களை மனம் ஏற்றுக்கொள்கிறது. மாறாக, பெரு மளவு தாக்கத்தை ஏற்படுத்தும்பொழுது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் வருத்தப்பட்டு, துன்பத்திலிருந்து விடுதலைபெற முயல்கிறார்கள். துன்பத்திலிருந்து விடுதலைபெற 9-ஆம் பாவகம் எனும் பாக்கிய ஸ்தானத்தில், கர்மவினை தீரும் காலம் பற்றிய பதிவு இருக்கவேண்டும்.
ஜாதகத்தில் 9-ஆவது இடம்தான் உயர்வானதை அடைவது. அதாவது, நாம் இந்த உலகத்திற்கு வந்து நம் ஆசைகளை அடைகிற பகுதி. அந்த 9-ஆவது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்; எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.
ஒன்பதாம் இடத்தில் மோசமான கிரகங்கள் அல்லது பாவகிரகங்களின் பார்வை இருக்கப் பிறந்தவர்கள் தடுமாறு கிறார்கள்; போராடுகிறார்கள். அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப் படுகிறார்கள். v தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை எனப்படும். ஒருவர் அறிந்தோ அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினைதான் தோஷம். இந்த தோஷம் இரண்டு காரணங்களால் உருவாகிறது. 1. கோபம், 2. சாபம்.v கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப் பாடு, இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், கோபம் என்பது ஏமாந்தவர் ஏமாற்றியவர்மீது வெளிப்படுத்தும் உணர்வு.
சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். சாபம் என்பது, அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது. கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்த்ரீ தோஷம்.
கடுமையான இந்த தோஷம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து சந்ததியினரை பாதிக்கிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது? என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதை ஒருவரின் ஜாதகம்கொண்டு அறியமுடியும்.
பெண் சாபம் ஏற்படக் காரணங்கள்
பெண்கள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல், பெற்றோர், உடன்பிறந்தோரின் ஆதரவில்லாமல் துர்மரணம் அடைவது.
பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது, அவள் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது.
பெண்களை ஏமாற்றுவது.
பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது.
கட்டிய மனைவிக்கு துரோகம் இழைப்பது.
காதலியைக் கர்ப்பமாக்கி ஏமாற்றுவது.
பெண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றுவது.
மனம் வருந்தும்படியான கடுஞ் சொற்களைப் பேசி, கண்ணீர்விட்டு அழவைப்பது.
உழைக்காமல், பெண்ணின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு உடல் வளர்ப்பது.
பணத்திற்காக பெண்ணைக் கொலைசெய்வது.
தாயைப் பராமரிக்காமல் விட்டுவிடுவது.
கருவிலுள்ள பெண் குழந் தையைக் கலைப்பது.
நல்ல மாமியாரைப் பராமரிக்காமல் விடுவது.
இதுபோன்ற பல காரணங்களால் பெண் சாபம் ஏற்படுகிறது.
பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காது.
இளம்வயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும்.
காதல் தோல்வி.
மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவி அமைவார்.
மனைவிக்கு தவறான நட்பு.
விவாகரத்து, கண்டம் போன்ற விளை வுகள் உண்டாகும்.
குழந்தை பாக்கியமின்மை.
சிலருக்கு திருமணத்தடை அல்லது திருமணமாகாமல் போகலாம்.
இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத் திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. திருமணத்தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள்.
பெண் குழந்தை வேண்டாமென்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும் நிலையை ஏற்படுத்திவிட்டது.
மேற்சொன்ன தவறுகளை ஜாதகர் செய்திருந்தால், அதேபோல் தவறு அவரு டைய பெண் குழந்தைக்கும் ஏற்படலாம் அல்லது மனநலக்குறைவு ஏற்படலாம்.
பூப்பெய்ய முடியாத பெண் குழந்தைகள் பிறக்கலாம்.
திருமணமாகி கணவருடன் வாழாமல் அல்லது விதவையாகவோ பெண்கள் வீடு திரும்பலாம்.
கடுமையான குடும்பப் பிரச்சினையால் அவதிப்படலாம்.
ஜாதகத்தில், பெண் சாபத்திற்கான கிரக அமைப்புகள்
லக்னம் எனும் ஒன்றாம் இடத் தோடு அதிக பெண் கிரகம் சம்பந்தம் பெற்றால், ஜாதகர் பெண்களை ஏமாற்றிய குற்றம்.
5- ஆம் இடத்தோடு அதிக பெண் கிரகம் சம்பந்தம் பெற்றால், ஜாதகரின் தாத்தா பெண்களை ஏமாற்றிய குற்றம்.
9- ஆம் இடத்தோடு அதிக பெண் கிரகம் சம்பந்தம் பெற்றால், ஜாதகரின் தந்தை பெண்களை ஏமாற்றிய குற்றம்.
சுக்கிரன் மாந்தியுடன் இணைவு.
சுக்கிரன் பாவகர்த்தாரி தோஷம் அடைதல்.
சுக்கிரன் நீசம், அஸ்தமனம், வக்ரம்.
சுக்கிரன் பகை கிரகங்களுடன் சேர்ந் திருப்பது.
சுக்கிரன் மிகக்குறைந்த பாகையில் இருப்பது.
சூரியன், சுக்கிரன் இடைவெளி 40 டிகிரிக்குமேல் இருப்பது.
2, 7-ல் மாந்தியுடன் சந்திரன் + சுக்கிரன்.
1, 7-ல் சனி.
6, 7-ஆம் அதிபதி இணைவு.
மேற்சொன்ன அமைப்பை வைத்து, ஜாதகத்திலுள்ள பெண் சாபத்தை அறிய லாம். இவர்களுக்கு பெண்ணால் கிடைக் கக்கூடிய எந்த நன்மையையும் முழுதாகக் கிடைக்காது. பெண்கள் என்றாலே வெறுப்பு இருக்கும்.
தோஷம் தீரும் காலம்
தோஷம் வேறு, சாபம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தோஷத்திற்குப் பரிகாரம் செய்தால் தீர்வுண்டு. சாபத்திற்குத் தீர்வு காண்பது கடினம். சாபத்தின் தன்மையே வேறு. ஒருவர் பாவ காரியத்தைச் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டவர்களை வேதனையுடனோ கண்ணீருடனோ சபிப்பதுதான் சாபம். சாபத்தைப் போக்கிக்கொள்வது அத்தனை சுலபமல்ல. பாதிக்கப்பட்டவர்கள் மன்னித் தால் மட்டுமே பாவம் செய்தவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். பாதிப்பிற்கேற்ப சாபம் ஒருகட்டத்தில் வேலைசெய்யும். தவறு செய்தவர், தான் செய்த தவறுக்கு வருந்தி, திருந்தி, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால் சாபத்தின் கடுமை ஓரளவு நீங்க வாய்ப்புண்டு.
இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பாதிப்பைச் செய்தவரும், பாதிக்கப்பட்டவரும் இன்னார்தான் என்று தெரிந்து, அவர்கள் மறுபடியும் சந்திக்கும்போது மட்டுமே இது சாத் தியப்படும். சாப நிவர்த்திக்கு வழியுண்டு. ஆனால், ஜென்ம ஜென்மமாக சில சாபங்கள் தொடர்ந்துவரும். அதற்கு எங்கேபோய் யாரிடம் மன்னிப்பு கேட்பது?
என்ன வாசகர்களே... "காஞ்சனா' படம் பார்த்ததுபோல் இருக்கிறதா? பெண் சாபத்தை மட்டும் பிரதானமாக ஜோதிட உலகம் விமர்சிக்கிறதே? ஆண் சாபத்தை ஏன் கண்டுகொள்வதில்லை எனக் கேட்பதும் புரிகிறது. பெண்களில் பலர் மன வலிமை குறைந்தவர்கள். சிறிய தோல்வியைக்கூட தாங்கும் சக்தியற்றவர்கள். அவர்களின் ஆயுதமே கண்ணீரும் சாபமும்தான். பெண்கள் கண்ணீர் விட்டாலே ஸ்த்ரீசாபம் ஒட்டிக்கொள்ளும்.
ஆண்கள் மனம், உடல் வலிமை பெற்றவர்கள். எளிதில் தவறு, துரோகத்தை மறந்து, மன்னித்துவிடும் மனப்பக்குவம் உள்ளவர்கள். கடுமையான பாதிப்பிருந் தால் ஆண் சாபமும் பாதிப்பைத் தரும்.
பெண்களால் ஆண்கள் பாதிக்கப் பட்டிருந்தால், நிச்சயமாக ஆண் சாபம் தண்டனையைப் பெற்றுத்தரும். நல்ல மனம் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்கள் வாயிலிருந்துவரும் ஒவ்வொரு வார்த்தையும் சாபமாகக் களமிறங்கும்.
பரிகாரம்
பாதிப்பில்லாத சிறிய தோஷத்திற்கு வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சுமங்கலி பூஜைசெய்ய வேண்டும்.
கடுமையான பெண் சாபத்தால் திருமணத்தடையை சந்திப்பவர்கள், பிரிந்துவாழும் கணவன்- மனைவிகள் சுவாசினிகள் பூஜைசெய்ய வேண்டும் அல்லது கோபூஜை செய்யவேண்டும்.
வாழ்க்கையிழந்த பெண்ணுக்கு வாழ்வுதர முன்வரும் இளைஞர்களுக்கு, எத்தனை தலைமுறை பெண் சாபமாக இருந்தாலும் நீங்கி, பல தலைமுறைக்கு புண்ணியப் பலன்கள் கிடைக்கும்.
வம்சாவளியாக, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பெண் சாபத்தால், விருத்தியில்லாத குடும்பத்தினர் செய்ய வேண்டிய பரிகாரம்:
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும் புரட்டாசி மாத மகாளய பட்சத்தில் 15 நாட்கள் தொடர்ச்சியாக, பித்ருலோகத் தில் வசிப்பவர்கள் பூலோக வாசம்செய்ய இயலும். மறைந்த முன்னோர்களும், ரத்த சம்பந்த உறவுகளும், நண்பர்களும் அந்தந்த உறவினரை- குடும்பத்தினரைக் காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் வருவார்கள். உறவினர்கள், நண்பர்களோடு பாதிக்கப்பட்டவர்களும் வருவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நேரில்வந்து மன்னித்தால், தீராத சாபமும் தீரும்.
அவர்கள் இவ்வாறு வாசம்செய்ய பூலோகம் வரும்போது, அவர்களை நினைத் துச் செய்யப்படும் சிரார்த்தம், தர்ப் பணம் முதலியவற்றுக்கு அதிக பலன் உண்டு. அந்த நேரத்தில் அவர்களை வணங் கினால் மனமகிழ்சியோடு ஆசிர்வாதம் செய்வார்கள்.
இந்த மகாளய பட்சத்தில் ஒருவர், மறைந்த தம் தாய்- தந்தை, தாத்தா- பாட்டி ஆகியோர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தையின்றி இறந்துபோன உறவினர் களுக்கும், முன்னோர்களால் பாதிக் கப்பட்டவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் செய்யலாம். அதன்பலனாக அவர்களின் ஆசிகளையும் பெறலாம்.
துர்மரண ஸ்த்ரீ, பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மகாளய பட்சத்தின் 14-ஆம் நாளான 27-9-2019, வெள்ளிக் கிழமை, சதுர்த்தசி திதி, பூர நட்சத்திர நாளில் சிரார்த்தத் தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும்.
இயற்கையாக மரணமடைந்த பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மகாளய பட்சத்தின் 15-ஆம் நாளான 28-9-2019, சனிக்கிழமை, அமாவாசை நாளில் சிரார்த்த தர்ப்பணங்களைச் செய்யவேண்டும்.
எல்லாக் கிழமைகளிலும் வரும் அமாவாசையைவிட, சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை பூஜைக்கு வலிமை அதிகம் உண்டு.
மகாளய பட்சத்தில் பித்ருக்களின் ஆன்மாக்கள் ஒன்றுசேர்ந்து வருவதால், அந்த நேரத்தில் செய்யும் சிரார்த்த கர்மாக்களின் பலன்கள் உடனடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டு, பலனும் உடனடியாகக் கிடைக்கும். தீராத, நாள்பட்ட பிரச்சினைகள் உடனடியாகத் தீர்வுக்குவருவதை கண்முன் காணலாம். இதுவே மகாளய அமாவாசை வழிபாட்டின் தனிச்சிறப்பு.
இந்த நாட்களில் ஒருவருக்காவது அன்னதானம் செய்யவேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு சாதம் வைக்கலாம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுக்கலாம்.
பல வாசகர்கள் கேட்கும் கேள்வி- எல்லாரும் தர்ப்பணம் செய்யலாமா என்பதுதான்.
தந்தை இல்லாதவர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்யலாம். தந்தை இருந்து, தாய் இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யக்கூடாது.
ஆண் வாரிசு இல்லாதவர்கள், கணவரை இழந்த பெண்கள், தந்தை இருப்பவர்கள், தர்ப்பணம் செய்ய வசதியற்றவர்கள் அருகிலுள்ள சிவன் கோவிலில் தீபமேற்றி, இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கு வழிபாடு செய்யலாம்.
செல்: 98652 20406