ருவ வயதை அடைந்துவிட்டாலே காதல் அரும்பத் தொடங்கிவிடுவது இயற்கை. காதல்- அழகு, அறிவு, பணம், குணம் எதையும் பார்ப்பதில்லை. காதல் வயப்பட்டவர்களுக்கு மனதில் இனிமை கூத்தாடும். பார்ப்பவை எல்லாம் அழகாகவே தெரியும். பண்டைய காலங்களில் காதல் என்பது களவு நெறியாகக் கருதப்பட்டது. ஆணும், பெண்ணும் பிறர் அறியாது உளங்கலந்து செய்யும் நட்பாதலால், இக்களவானது அறம் என்றே கொள்ளப்பட்டது. காதல் சாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து வருவதுடன், வரதட்சணை என்ற கொடுமையும் நடைபெறாமல் தடுக்க வழிவகுக்கிறது. காதலில் காமத்துக்கு இடம் கொடுக்காமல், ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் என்ற சடங்கின்மூலம் இணைந்து வாழ்வதே வளமான வாழ்வாகும்.

Advertisment

காதல் உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய பூர்வபுண்ணிய பாவங்கள் பாதிக்கப்படாமலிருந்தால், உறவுக்குள்ளேயே முன்பே தெரிந்த பெண்ணைக் காதல் செய்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெறும். இதனால் உறவுகளுக்குள் எவ்வளவு பிரிவுகள் இருந்தாலும், காதல் புரியும் இருமனங்களின் இணைவால் அனைத்து உறவுகளும் ஒன்றுபடும். சாதி, மதம், இனம் மாறாமல் சந்ததிகள் தொடரும்.

murugan

அதுவே பூர்வபுண்ணிய அமைப்பு பாதிக்கப்பட்டு காதல் செய்யக்கூடிய அமைப்பிருந்தால் உறவினர்களின் எதிர்ப்போடு திருமணம் செய்துகொண்டு வாழும் சூழ்நிலைகளும் ஏற்படும்.

Advertisment

ராசி சக்கரத்தில் ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. திருமணத்தைப் பற்றி ஆராய முற்படும்போது குடும்பஸ்தானமான 2-ஆம் இடமும், சுகஸ்தானமான 4-ஆம் வீடும், மன ஈர்ப்பு மற்றும் புத்திர பாக்கியத்திற்குரிய 5-ஆம் இடமும், மாங்கல்ய பாவமான 8-ஆம் இடமும், அயன, சயன, சுகஸ்தானமான 12-ஆம் இடமும் முக்கியத்துவம் வகிக்கின்றன.

ஜோதிடத்தில் காதல் திருமணத்தைப் பற்றிப் பார்க்கும்போது 5, 7-ஆம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவரின் எண்ண ஓட்டங்கள், மனம், புத்தி, யூகம், நட்புறவு, காதல், சிந்தனை போன்றவற்றை அறியலாம். ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக்கொண்டு திருமணம், கணவன் அல்லது மனைவியின் கற்புநிலை, கணவன் அல்லது மனைவியைக் காதலில் வெற்றியடையச் செய்தல், உடலுறவு, இருமனைவியர், விந்து, ரகசியமான பாலுறவு இன்பங்கள் போன்றவற்றை அறியலாம். ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் வீடானது பூர்வீகத்தைப் பற்றியும் குறிப்பிடுவதாக உள்ளது. 5-ஆம் வீடு பாதிக்கப்படும்போது, உறவுகளிலிருந்து விலகி காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை, கலப்புத் திருமணம் செய்துகொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு எண்ண ஓட்டங்களைக் குறிக்கும் 5-ஆம் அதிபதியும், திருமணத்தைக் குறிக்கும் 7-ஆம் அதிபதியும் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்பட்டால் மனதளவில் ஈர்ப்புத் தன்மை உண்டாகி? காதல் கைகூடித் திருமணத்தில் முடிகிறது. ஆக 5, 7-ஆம் வீட்டின் அதிபதிகள் இணைவது, பார்த்துக்கொள்வது, பரிவர்த்தனை பெறுவது போன்றவை காதல் திருமணத்தை ஏற்படுத்தும். லக்னத்திற்கு 5, 7-ஆம் வீட்டின் அதிபதிகளின் தொடர்பால் மேற்கூறிய பலன்கள் உண்டாவதைப்போல, ராசிக்கு 5, 7-ஆம் வீட்டின் அதிபதிகளின் தொடர்பாலும் காதல் திருமணங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

நவகிரகங்களில் காதலுக்கு முக்கிய காரணமாக விளங்குபவை சுக்கிரனும் சந்திரனும் ஆகும். இதில் சந்திரன் மனோகாரகர். களத்திரகாரகனான சுக்கிரன் காதல், பாலியல் உணர்வுகளுக்குக் காரகம் வகிக்கிறது. காதல் உணர்வுகளுக்கும் காமவிளையாட்டுகளுக்கும் செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால் செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகனாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீடும், 7-ஆம் வீடும், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களும் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன், செவ்வாயுடன், 5, 7-க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும் அந்த ஜாதகர்களுக்கு காதல் கண்மூடித்தனமாக அதிகரித்து, கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 5-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலும், 5-ஆம் அதிபதி சனி, ராகு-கேது சேர்க்கைப் பெற்றாலும், 5-ல் அமையக்கூடிய பாவிகளுடன் 7-ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5, 7-வீடுகளுக்கு அதிபதிகள் இணைந்து, உடன் பாவகிரகங்களின் தொடர்பு இருந்தாலும், 5, 7-வீடுகளுக்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும், சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும் காதல் ஏற்பட்டு கலப்புத்திருமணம் நடைபெறுகிறது.

7-ஆம் வீட்டில் கேது அமையப்பெற்று 7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேது சாரம் பெற்றிருந்தால் காதல் திருமணம், கலப்புத்திருமணம் ரகசியமாக திடீரென்று நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5-ல் 1, 7-ஆம் அதிபதிகள் இருந்தாலும், 5-ஆம் அதிபதி பாவியாக ஜென்ம லக்னத்தில் அமைந்து, 7-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும் காதலித்துத் திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத்திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டில் ராகு அமையப்பெற்று, 7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது சாதி, மதரீதியாக வேறுபட்ட ஒருவரைத் திருமணம் செய்யும் சூழ்நிலை உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக் குறிப்பிடுவதுபோல சந்திரனுக்கு 7-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் அமையப் பெற்றாலும், பழக்க வழக்கத்தில் மாறுபட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.

செல்: 72001 63001