மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வு களுக்கும் நவகிரகங்களின் இயக்கமே காரணம். ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே பூமியில் வாழும் சகல ஜீவராசிகளின் விதியைத் தீர்மானிக்கிறது. மனிதன் உட்பட சகல உயிரினங்களையும் தங்களது கதிர்வீச்சால் வழிநடத்தும் நவகிரகங்களின் முழு விவரங்களையும் காணலாம்.
ஆண் மற்றும் பெண்ணுக்கு சப்தப் பருவங்கள் உண்டு. இந்த ஏழு பருவங்களும் மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கேற்பப் பகுக்கப்பட்டுள்ளன.
ஆண்களின் ஏழு பருவங்கள்
✶ 1 வயதுமுதல் 7 வயதுவரையிலான பருவம்- பாலன்.
✶ 8 வயதுமுதல் 10 வயதுவரையிலான பருவம்- மீளி.
✶ 11 வயதுமுதல் 14 வயதுவரையிலான பருவம- மறவோன்.
✶ 15 வயதிற்குண்டான பருவம்- திறவோன்.
✶ 16 வயதிற்குண்டான பருவம்- விடலை.
✶ 17 வயதுமுதல் 30 வரையிலான பருவம்- காளை.
✶ 30 வயதுக்கு மேலான பருவம்- முதுமகன்.
பெண்களின் ஏழு பருவங்கள்
✶ 1 வயதுமுதல் 8 வயதுவரை- பேதை.
✶ 9 வயதுமுதல் 10 வயதுவரை- பெதும்பை.
✶ 11 வயதுமுதல் 14 வயதுவரை- மங்கை.
✶ 15 வயதுமுதல் 18 வயதுவரை- மடந்தை.
✶ 19 வயதுமுதல் 24 வயதுவரை- அரிவை.
✶ 25 வயதுமுதல் 29 வயதுவரை- தெரிவை.
✶ 30 வயதுக்குமேல்- பேரிளம்பெண்.
மனித வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலத்தை ஒவ்வொரு கிரகமும் தங்கள் ஆளுமைக் குட்பட்ட காலமாக எடுத்துக்கொண்டு சுப, அசுபப் பலன்களை வழங்குகின்றன. முதல் பத்துவருடங்கள் சந்திரனின் ஆதிக்கம். சந்திரன் தாய்க்கான காரக கிரகம். ஒரு உயிரை ஜனிக்கச்செய்வது சூரிய ஒளி என்றால், உயிரைத் தாங்கும் உடல் சந்திரன். ஆன்மா உடல் என்றால், மனம் சந்திரனாகும்.
பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மாவின் முதல் பத்து வருடம் குழந் தைப் பருவம். தாயின் அன்புக்கு இணையாக உலகில் எதுவும் கிடையாது. ஒரு தாயால் மட்டுமே குழந்தையை எப்பொழுதும் தன் பார்வையில் வைத்துக்கொள்ள முடியும். பிறந்த குழந்தைக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் மிகவும் முக்கியம். தாய்ப் பாலால் அன்பையும், உலக ஞானத்தையும் வழங்குபவள் தாய். பத்து வருடத்தில் குழந்தைக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே பண்பு, பாசம், நல்ல மனநிலை, மூளை வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, நிம்மதியான உறக்கம் போன்றவை கிடைக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகருக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும் அரவணைப்பும் கிடைக்கும். பத்து வருடங்களில் தாய் கற்றுக்கொடுக்கும் நல்ல போதனைகளே மனிதனின் இறுதிக்காலம் வரைக்கும் தேவையான ஞானத்தைக் கொடுக்கும் என்பதால், குழந்தைப் பருவத்திற்கு தாயன்பு முக்கியம்.
பத்துமுதல் 20 வயதுவரை புதனின் ஆதிக்கம். நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதன். புதனுக்கு புத்திகாரகன் எனப் பெயர். புதன்- புத்தி, அறிவு, ஞானம் தருபவர்.
சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகம் புதன் என்பதால், புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். அதனால் புத்தி, அறிவு, ஞானம் சிறப்பாக இருப்பதால் புதனுக்கு புத்திகாரகன் எனப் பெயர். பத்து வருடம் தாயின் அரவணைப்பை விரும்பிய குழந்தை வெளியுலகக் கல்வியைக் கற்கும் காலம்- குழந்தை தாயிடம் கற்ற ஞானத்தை கல்வி என்ற வித்தையால் வெளியுலகம் தெரிந்துகொள்ளும் காலம்- பத்துமுதல் 20 வயதுவரை கற்கும் கல்வியே அவனுடைய வாழ்வா தாரமாக அமையும். ‘"புத்தியுடையவன் பலவான்'’ என்பது பழமொழி. புதன் பலம்பெற்றவர் புத்திசாலித்தனம் நிறைந்தவர்.
எந்த சூழ்நிலையிலும் தன் புத்தியால் தன்னைத் தற்காத்துக் கொள்வார். புதன் நன்றாக இருக்கும் ஜாதகர்தான் முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவார். அதற்கான அஸ்தி வாரம் அமையும் காலம் இது.
இருபதுமுதல் முப்பது வயதுவரை சுக்கிரனின் ஆதிக்கம். பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகம் சுக்கிரன். சுக்கிரன் எல்லாருக்கும் மிகவும் பிடித்த கிரகம். சுக்கிரன் என்ற பெயரைக் கேட்டாலே மனதில் இனம்புரியாத சந்தோஷம் குடிபுகும்.
இது பெண் கிரகம் என்பதால் பெண்ணா சையை உண்டாக்கும். காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அழகாகத் தோற் றமளிக்கும் காலம். ஆடை, அலங்காரம், சிற்றின்ப நாட்டத்தில் ஈடுபாடு ஏற்படும் காலம்.
உழைக்காமல் ஆடம்பரமாக, சொகுசாக இருக்க விரும்பும் காலம். தற்காலத்தில், "பிஞ்சிலேயே பழுத்த பழமாக' தவறான காதலில் 13, 14 வயதிலேயே சிக்கித் தன் வாழ்வைத் தொலைக்கும் பிள்ளைகளே அதிகம். இந்த கலிகாலத்தில் ஒருவருக்குத் தவறான காதல் உணர்வு வராவிட்டால் அவருக்கு வேறு பெயர் சூட்டி அவமானப்படுத்துகிறார்கள்.
படிக்கும் காலத்தில் தவறான எண்ண அலைகளை மனதில் விதைக்கக் கூடாது.
இப்பருவம் காதல் மற்றும் திருமணத்திற்குரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற வருக்கு சிறப்பான திருமண வாழ்க்கை இந்த காலகட்டத்தில் கூடி, தேடிவரும்.
30 முதல் 40 வயதுவரை செவ்வாயின் ஆதிக்கம். விண்வெளியில் பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகம் செவ்வாயாகும். செவ் வாய்க்கு பூமிகாரகன் என்னும் பெயரும் உண்டு.
உறவினங்களில் ஆண் ஜாதகத்தில் சகோதரர், பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும். சிற்றின்ப நாட்டத்தைக் குறைத்து தொழில், வேலையில் வாழ்வாதாரத்தைத் தேடிய லையும் இக்காலம் வாழ்வில் மிக முக்கிய மான காலம். மனிதன் தன் திறமை, ஆற்றல் களை வெளிப்படுத்தி வேலை அல்லது தொழிலில் உயர்வுபெறும் காலம். சிறுவயதில் சகோதரர்களிடம் சிறு மனக்கசப்பு இருந் தாலும், உடன்பிறந்தவர்களுடன் அனுசரித்து வாழ்வதே சிறப்பு என்னும் அனுபவப் பாடத்தை உணரும் காலம். பெண்கள் கணவரை முழுமையாகப் புரிந்துகொள்ளும் காலம். மண், பொன் ஆசை ஏற்படும் காலம் என்பதால், வீடுவாசல், வாகனம் என வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்க ஆர்வம் ஏற்படும். ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்றால், வாழ்க்கையில் உயர்வதற்குரிய எல்லா வழிகளும் நடக்க இந்த காலத்தில் செவ்வாய் உதவி செய்வார்.
40 முதல் 50 வயதுவரை சூரியன், குருவின் ஆதிக்கம். நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகம். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படுபவர். உலகில் உயிர்கள் தோன்ற ஆதாரமாக இருப்பவர் சூரிய பகவான். சூரியன் அழியாப் புகழைக் கொடுப்பார். சமூகசேவையில் நாட்டத்தைக் கொடுப்பார். எளிமையாக இருக்க கற்றுக்கொடுப்பார். இரக்க உணர்வைக் கொடுப்பார். ஜனன ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்றால், ஆன்மபலம் பெற்று உடல் தேஜஸ் பெருகும் காலம். பொன்னிறமாக இருப்பார். தந்தை, தந்தைவழி உறவினர் களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிரபல மனிதர்களுடன் சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம் கிடைக்கும் காலம்.
குருவருளும் தேடிவரும் காலம் இதுதான். நவகிரகங்களில் முழு சுபகிரகம் குரு. மனிதவாழ் வுக்குத் தேவையான அனைத்துவிதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்குமில்லாத தனிச்சிறப்பு குருவுக்கும், குரு பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘"குரு பார்க்க கோடி நன்மை'’ என்று கூறுகிறது. ஜனனகால ஜாதகத்தில் குருபலம் பெற்றவர்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, ஆன்மிகச் சிந்தனை, தெய்வபக்தி, நல்ல புத்திரர், நல்லறிவு, கற்பு, மந்திர சாஸ்திரம், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மிக குருக்களின் நட்பு, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, பிராமணர் ஆசி, சொல்வாக்கு, பணம் ஆகிய நற்பலன்கள் தானாக வந்துவிடும். இத்துடன் ஆலய தரிசனம் கிடைக்கும். குழந்தைகளின் அன்பு, அரவனணப்பு உண்டாகும் காலம். கௌரவம், புகழ், அந்தஸ்து தேடிவரும் காலம்.
50 முதல் 60 வயதுவரை சனியின் ஆதிக்கம். சனி பகவான் நவகிரகத்தில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். கர்மகாரகன், ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் கடுமையான துன்பத்தையும், அளவற்ற நன்மையையும் தருபவர் இவரே. ஒருவரின் கர்மவினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் தனக்குள் பதிவு செய்பவர். அவரவர் கர்மவினைப்படி பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்குநிகர் சனியே. பல காரியங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமை படைத்தவர் சனி. தன் கணக்கைக் கூட்டிக்கழித்து, லாப- நஷ்டங்களை மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவியின் நச்சரிப்பால் வங்கியில் வீட்டுக்கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில், இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும் கவலையிலும் வாழ்வு கழியும். ஜனன ஜாத கத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு, தன் தசா காலத்தில் தான் நின்ற இடத்திற்கேற்ப ஏராள மான நற்பலன்களை வாரிவழங்குவார்.
60 முதல் 70 வயதுவரை ராகுவின் ஆதிக்கம். நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு. ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களைத் தன் பிடியில் சிக்கவைத்து செயலிழக்கச் செய்யும் வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாகச் செயல்படும் கிரகம் ராகு. ராகு மனிதத் தலையும், பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன்; பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்புலன்களே ஒருவரின் சிந்தனை உறுப்புகள். மனித உடலில் இந்த ஐம்புலன்கள் தலைப்பகுதியில் உள்ளன. மனிதத் தலையின் ஐம்புலன்களை இயக்கி, புறச் சிந்தனைகளை உருவாக்கி, லௌகீக உலகோடு இணைக்க வைப்பதே ராகுவின் வேலை. லௌகீக உலகோடு இணையும் மனிதனே தவறுசெய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச்சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களை அடக்கப் பாடம் கற்பிப்பதே ராகு பகவான். ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்களால் அவதியுறும் காலம். இதுவரை பாடுபட்ட நம்மை மனைவி, மக்கள், உற்றார்- உறவினர் கண்டுகொள்ளாமல் இருக்கி றார்களே- நமக்குரிய மதிப்பும் மரியாதையும் இல்லையே- பலரும் உதாசீனப்படுத்து கிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று மனவேதனையை ஏற்படுத்தக்கூடிய காலம். அத்துடன் பலவிதமான உடல் உபாதைகள், நோய்கள் வந்து நட்புக்கொள்ளும் காலம். சுபத்தன்மையுடன் பலமான ராகு அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையிலிருந்து தப்பித்துவிடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்.
70 வயதுக்குப் பிறகு கேதுவின் ஆதிக்கம். கேது ஒரு நிழல் கிரகம். சட்டப் படியான மற்றும் தீர்ப்பதற்குக் கடினமான அல்லது தீர்க்கவேமுடியாத அனைத்துப் பிரச்சினைக்கும் கேதுவே காரணம். உருவ மில்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால், உடலில் சூட்சுமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு ஒப்பிடலாம். மனிதனின் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் அமை தியாய் இருக்கும் குண்டலினி சக்தியை யோகா மற்றும் தியானம்மூலம் எழுப்பும்போது அளவிடமுடியாத பேராற்றல் கிடைக்கும். லௌகீகம் என்னும் மாயையில் சிக்கி அலை பாயும் ஆன்மாவை அடக்கி முக்தியடையச் செய்பவர் கேது. முக்தியை ஆன்மா நாடும் வரை அனுபவப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துக்கொண்டே இருப்பவர் கேது.
மனிதன் ஞானம் பெறும் காலம். பழைய நினைவுகளிலேயே காலம் கழிக்கும் நிலை. அதிகமாகப் பேசாமல் மௌனமாகவே இருக்கும் காலம். அனைவரையும் அனுசரித்துப்போகும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவர். குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறோம் என்ற எண்ணம் மிகும். ஒரே இடத்தில் பொழுதைக் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடலுறுப்புகள் தளர்ந்து, நடை, உடை, பாவனை மாறிவிடும். ஒருவரின் அந்தஸ் திற்கும், கல்வித்தகுதிக்கும், தற்போதைய உருவத்திற்கும் சம்பந்தமிருக்காது.
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் தசாபுக்தியோடு இணைந்தே செயல்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வயதுப் பிரிவின்படியும், கிரகங்களின் ஆளுமைப்படியுமே வாழ்க்கைப் பயணம் அமையும்.
செல்:98652 20406