உடலை வளர்ப்பதோடு, அதனுள்ளிருக்கும் உயிரையும் பேணிப்பாதுகாக்க அகரவிலக்கணம்வரை ஆயகலைகள் 64-ம் பரமேஸ்வரனது வாக்கிலிருந்து வெளிப்பட்டு, முருகப்பெருமானுக்கு உபதேசம் செய்யப்பட்டு, அதைப் பார்வதி தேவியும் கேட்டதாக சிவாகம நூல்களில் ஒரு செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் ஆடல்வல்லானாய் ஆனந்தக் கூத்தாடுகிறபோது உடுக்கை ஒலியிலிருந்து ஏழு ஸ்வரங்களும், அவரது உடற்பாகங்களிலிருந்து கலைகளும் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/natarajan_0.jpg)
பாரதத்தில் பரதக்கலை 64 கலைகளில் தெய்வாம்சம் பொருந்திய 21-ஆவது கலையாக வருவது பரதம் என்னும் நாட்டியக்கலை. இக்கலையை நிருத்த நடனம் என்று உயர்வாகக் கூறினர். இறைவனது அம்சங்களை உடலில் ஏற்றி வெளிக்காட்டும் இக்கலையை கலைவாணி மற்றும் பரமேஸ்வரனின் கிருபா கடாட்சம் இருந்தால் மட்டுமே பெற முடியும். ஒரு குடும்பத்திலிருந்து வரும் வம்சாவளியில் பேரனோ, பேத்தியோ பரதநாட்டியத்தில் பெயரும் புகழும் பெறுகிறார் என்றால், அந்த குடும்பத்தில் திருமகள் கடாட்சம் தொடங்கிவிட்டது என்று பொருள். இதற்குக் காரணம் என்ன?
பரதநாட்டியக் கலைஞராக விளங்கும் ஒரு பெண் மகுடம் தரிக்கும்போது அங்கே மும்மூர்த்திகள் வாசம் செய்யத் தொடங்குகின்றனர்.
கழுத்தில் அணிகின்ற தங்க ஆபரணங்களில் மகாலட்சுமி தங்குகிறாள். இடுப்பில் அணிகின்ற ஒட்டியாணத்தில் அஷ்டவசுக்கள் தங்குவர். தொங்கும் பரல்களில் தர்ம தேவதை பாவங்களைக் கொண்டு வருகிறாள். தொடைகளில் அச்வினி தேவர்கள் அபிநயம் பிடிக்கின்றனர். சலங்கையில் நர்த்தன காளி ஓசை எழுப்புகிறாள். பாதங்களில் தேவர்கள் அவள் ஆட்டத்தைக் கண்டு அங்கும் இங்கும் செல்கின்றனர். பக்கத்தில் சிவகணங்கள் நர்த்தன பாவங்களுக்கேற்ப ஜதி சொல்லி ஸ்ருதி சேர்க்கிறார்கள்.
தெய்வத்திருமணங்கள் நடைபெறுகிற போது மும்மூர்த்திகளும் தேவர்களும் தபஸ்விகளும் ஒன்றுசேர்ந்து நிற்க, மகரிஷிகளும் தெய்வ முத்திரைகளோடு (Hasta) கூடிய நடன பாவங்களைக் காண்கிறார்கள். அங்கே பரதநாட்டியக்கலை மூலமாக தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோரும் ஆடுபவர்களின் அங்கத்தினுள் வருகிறார்கள்.
பரதமுனிவர் சொன்ன தேவ நடனம் தெய்வீக ஆடற்கலையான பரத நாட்டியத்தை பரத மகரிஷி என்ற சித்தர் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தனது பாணியில் ஓலைச்சுவடியில் எழுதி வைத்தார் என்கிறது இதன் ஆதிகால வரலாறு.
இதனால் இதற்கு பரதம் என்று பெயரிடப்பட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இதைப் பிரித்துப் பொருள் காணும்போது நமக்குச் சில அதிசயங்களும் ரகசியங்களும் இதுநாள்வரை அறியப்படாததாக வெளிவருகிறது.
ப- பாவம். நம் உடலிலுள்ள உறுப்புகளால் அசைவுகளைச் செய்து ஒருவகையான பிம்பத்தையோ உருவத்தையோ காட்டுவது. சிவதாண்டவம் என்ற தொகுப்பிலிருந்து இறைவனுக்கு பல பாவங்கள் உண்டு என்பதை அறிகிறோம்.
ர-ராகம். பதினாறு வகை ராகங்கள் இருப்பதாக சங்கீத ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பரமனுக்கு இராவணனைப் பிடித்த காரணம் அவன் மீட்டிய வீணையின் ராகமே. பக்த மீரா கண்ணபிரானை தனது ராகத்தால் லயப்படுத்தியதும் நாம் அறிந்ததே. ராகம் பரதத்துடன் சேரும்போது ஆண்டவனையே மகிழ்வித்து நம் கண்முன்னர் நிறுத்தலாம்.
த-தாளம். "தத்தோம் தரிகிட தம்தோம் தரிகிட தும்திம் தரிகிட' என்று தொடங்கி சரளி வரிசைகள் முத்துக்கோர்த்தவைபோல தாள வரிசையில் 180 வார்த்தைகளையும் தாண்டி பதமாக வெளிவருகிறது. "தம்-திம்-தும்-கட' என்ற சொற்கள் தாளங்களில் வருகின்ற பீஜாட்சர மந்திரங்களைக் குறிப்பனவாக வருகின்றன.
இந்த மூன்று எழுத்துக்களும் சேர்ந்து பரதம் என்று சாஸ்திரரீதியில் சொல்லப்படுவதால், இக்கலையானது தேவகலை, தெய்வக்கலை, ஆண்டவனின் அருட்காட்சியைக் காணவைக்கிற அற்புதக்கலையாகப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருசமயம் இமயமலைச்சாரலில் அகத்தியர் நின்று விநாயகரிடம், "எனக்கு கூத்தாடியபடி தங்களது அருட்காட்சியைத் தரவேண்டும்' என்று கேட்க, அவரும் நிருத்த கணபதியாகக் (கூத்தாடும் பிள்ளையாராக) காட்சி தந்தார். சிவாகம தியானத்தில் மஞ்சள் நிறத்தவராய், பாசம், அங்குசம், கோடரி, அசையும் கைகளில் மோதிரங்களை அணிந்து கொண்டவராகக் காட்சி தருகிறார். பரதம் என்கிற தெய்வக்கலை சிவனுக்கும் காளிதேவிக்கும் நடத்தப்பட்ட போட்டி நடனமாகவும், நடராஜரின் ஆனந்த நடனமாகவும், நந்திதேவரின் ரிஷப தாள விருத்தமாகவும் வெளிப்படுத்தப்பட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மண்ணில் உருவாக்கப்பட்ட தேவ நடனமான இக்கலையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரியாமல் இருந்து வருகிறது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம் சதிர் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பரத நாட்டியம் என்ற பெயர் வழக்கத்திற்கு வந்தது. ஜதிஸ்வரம், அலாரிப்பூ, வர்ணம், தில்லானா, சப்தம், பதம், விருத்தம், மங்களம் ஆகியன இதன் முக்கிய அங்க பாவங்கள்.
சிவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். மென்மையான அசைவுகளோடு பார்வதி தேவி ஆடும் நடனம் லாஸ்யா. உடல் அசைவுகளுடன் கை முத்திரைகளும் சேர்ந்தது அடவு எனப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ஜதி ஆகிறது. தெய்வங்களே காட்சி தந்து அருள வருகின்ற இந்தக் கலையில் பந்தநல்லூர் பாணி, வழுவூர் பாணி, தஞ்சை பாணி, காஞ்சிபுரம் பாணி, கும்பகோணம் பாணி, நெல்லை பாணி என்று பல வகை உள்ளன.
இக்கலையை குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை கற்றுக்கொள்வதால் வாழ்க்கையில் புகழ், செல்வம், நினைவாற்றல், கடவுளின் பரிபூரண அருள் ஆகியன கிடைக்கப்பெறுகின்றன.
தேவநடன முத்திரையில் தெய்வ தரிசனம்
ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் லயமாகிற தலமாக விளங்குவது. அங்கே ஆண்டவன் பல வடிவங்களில் எழுந்தருளி ஆசிர்வாதம் வழங்கிட வேண்டும் என்பதற்காகவே, ஆறுகால பூஜை நடத்தப்படுகிற தேவாலயங்களில் தூப தீப நிவேதனத்திற்கு அடுத்து புஷ்பாஞ்சலி, 16 வகை உபசாரக்கிரமங்கள் முடிந்ததும் தேவ- நிருத்த நடனத்தை தினமும் ஒரு பாவங்களாக ஆடச்செய்தனர். இது மன்னர்கள் காலத்தில் இருந்துவந்ததை வரலாற்று ஏடுகளால் அறியலாம்.
பரத நாட்டியம் என்ற ஆடற்கலையைக் காண்பதற்கும் கற்பதற்கும் இறைவனின்ஆசிர்வாதமும், ஜனன ஜாதகத்தில் சூரிய பலம் ஆண்களுக்கும், சந்திர பலம் பெண்களுக்கும் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். நிருத்தம் எனப்படுகிற பரதநாட்டியக் கலையைக் கற்று அபிநயிக்கும் பெண் குழந்தைகளுக்கு மாதப்பிரச்சினைகள் அகன்று சுரப்பிகள் நன்றாக வேலை செய்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நடனத்தை ஆலயங்களில் நடைபெறும் பிரம்மோற்சவம், சித்திரை விழா, சாரதா நவராத்திரி காலங்களிலும், தீபாவளி, பொங்கல் பண்டிகை, பூஜா காலங்களிலும் குழந்தைகள், கன்னியர்கள், பெரியவர்களை வைத்து ஆடல் நடத்த வேண்டியது அவசியம். இரண்டு கைகளால் காட்டி ஆடும் வகை அசம்யுக்தா எனவும், ஒரு கையால் முத்திரை காட்டுவது சம்யுக்தா எனவும் சொல்லப்படுகிறது. சிவாகம சாஸ்திரங்களில் 75 வகை முத்திரைகள் வழிபாட்டுக் காலங்களில் காட்டப்படுகின்றன. இதை உற்சவம் மற்றும் பண்டிகைக்காலங்களில் ஆலயங்களில் ஏற்பாடு செய்து காணும்பொழுது, இறைவனே எல்லாருக்கும் முத்திரைவழி வாழ்த்துரைகளை வழங்குவதாக அமைகிறது.
தெய்வம் தந்ததே ஆடற்கலை
நடன சபை என்று அழைக்கப்படுகின்ற சிதம்பரத்தில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதைக் காணவும் பங்கு பெறவும் ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் நடனக் கலைஞர்கள் வருகிறார்கள். இதனால் நம் தமிழ் மண்ணுக்கும், பாரத நாட்டிற்கும் பெருமை சேர்கிறது என்றாலும், எல்லா ஆலய விழாக்களிலும் பரதம் என்ற பகவன் வழிபாட்டுக் கலை நிகழ்த்தப்பட வேண்டும். சர்வதேச அளவில் தமிழுக்கு என்று லண்டன் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை ஏற்படுத்தப்பட்டதுபோல, பார் போற்றும் பரதக்கலைக்கும் தனி இருக்கை அமைத்தால் பல பெண்களுக்கும் நலமான வளமான எதிர்காலம் அமையும்.
மேலும் நாடக வடிவில் பகவானை தரிசிக்க வைக்கும் விதமாக கண்ணன் காவியம், திருவிளையாடல், மாரியன்னை கதை, வள்ளித்திருமணம், இராம காவியம், அரிச்சந்திரா, மகாபாரதம், சத்தியவான்- சாவித்திரி, தர்மதேவதை, விஷ்ணு- லக்ஷ்மி கல்யாணம், நந்தனார் வரலாறு போன்ற பல புராண இதிகாச நிகழ்வுகளை, வாழ்க்கை நெறியை போதிக்கும் முறைகளோடு சிறு பிள்ளைகளுக்கும் சொல்லித்தர முயற்சிகள் எடுத்து வருகிறோம். விரதமிருந்து வீட்டுப் பிள்ளையாகவே இருக்கும் பெண் பிள்ளைகள், இக்கருத்தை உணர்ந்து பரதம் பயின்று பாரதத்தின் பெருமையை உலகத்தார்க்கு உணர்த்தவேண்டும்.
நர்த்தனமுத்ராவில் இறைவனின் வாழ்த்து இல்லங்களுக்குச் செல்லும்போது "ஆயுஷ்மான்பவா' என்று பெரியோர்கள் "ஹஸ்தா' என்னும் முத்திரை காட்டி வாழ்த்துவர். பரதக்கலையில் நர்த்தன முத்ராக்களை "ஹஸ்தா' என்று காட்டும் இறைவன் வாழ்த்துரையை அறிவோம்.
விநாயக ஹஸ்தா: யானை முகனது உருவத்தைக் குறிக்கிறது. சௌபாக்கிய சின்னங்களில் ஒன்று. வேழமுகனது துணையால் நாம் எந்தத் தடைகளையும் உடைத்து எறியலாம் என்று இதனால் அறிய முடிகிறது.
சண்முக ஹஸ்தா: சக்தி தேவியிடம் வேல் வாங்குகிற ஆறுமுகப் பெருமானைக் குறிக்கிறது. வாழ்வில் துன்பங்கள் தொடரும்போது நாம் வீரமுடன் போராட வேண்டும் என்று உணர்த்துவது.
லக்ஷ்மி ஹஸ்தா: உள்ளங்கையில் இருக்கிற இறைவனை அன்போடு வழிபட்டால் உலகம் உன் வசமாகும் என்று அறிவுறுத்துகிறது. "கபித்தமுத்ரா' எனவும் கூறலாம்.
சரஸ்வதி ஹஸ்தா: அறிவும் ஆற்றலும் தன் முயற்சியால் வருவது. அதை முறையாகப் பயன்படுத்தும்போது உயர்நிலை அடையலாம்.
விஷ்ணு ஹஸ்தா: சுழலும் சக்கரம் ஒரு கையில்; சங்கு வடிவம் ஒரு கையில் உள்ள அந்தப் பரந்தாமனை- சுழலும் இந்த உலகில் சங்குபோல் நிற்பவனைச் சிந்தித்தால் நலம் உண்டாம்.
ஈஸ்வர ஹஸ்தா: சிவபெருமானது அருளைப் பெற்றிட- ஐஸ்வர்ய சிவனாக வழிபடும் மூலவிதானத்தை இரு கைகளும் கூறும்.
பார்வதி ஹஸ்தா: சக்தி தேவியின் இரு கைகளிலும் இறைவன் நம்மை அருள்தர அழைப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. விநாயகர், முருகன், காலபைரவ மூர்த்தங்களிலும் காணமுடியும்.
குபேர ஹஸ்தா: வாழ்க்கையில் நமக்குத் தேவைப்படுவது பொருள் பலம். ஒரு கையில் பணத்தைச் சேமிக்க வேண்டும், இன்னொரு கையால் பிறருக்கு உதவவேண்டும் என்று சொல்லப்படுகிறது.
வாயு ஹஸ்தா: நிலையாக நிற்கும் வாழ்வில் இடையூறுகள் வந்தாலும் மனம் கலங்குதல் கூடாது என்று அறிவுறுத்தும்.
"யமஹஸ்தா': தர்மராஜனின் பாசக்கயிறைக் குறிக்கும். பாசம் இரண்டு வகை. அன்பைக் காட்டித் தன்வயப்படுத்துவது; பிறர் நம்மைத் துன்புறுத்தும்போது பாசம் என்ற ஆயுதத்தால் தன் நிலை இழக்கச் செய்வது.
அக்னி ஹஸ்தா: தீ ஜுவாலையைக் குறிக்கிறது. சூடு இன்றி உடல் வாழாது. அக்னியாகிய கதிரவனின்றி ஒளி ஏது வாழ்வில் என்று சொல்கிறது.
இந்திர ஹஸ்தா: தேவர்களின் தலைவன் இந்திரன்- நீ உயர வேண்டுமானால் நன்மையும் தீமையும் வாழ்வில் உரசும்- அதை சமாளிக்கத் தெரிந்துகொள் என்கிறது.
நிருதி ஹஸ்தா: திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தான் துணை என்பதை புலப்படுத்துவது. பெரியவர்களுக்குச் சிறியவர்கள் பணிதல் வேண்டும் என்று உபதேசிக்கிறது.
மன்மத ஹஸ்தா: ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் இல்லறம் இனிதாக இருக்கும். இதில் பிரிவினைகள் வராமல் இருக்க தெய்வ அருள் நாடுக என்று சொல்லப்படுவது சிறப்பு.
தேவ நடனத்தில் இத்தனை ரகசியப் புதையல்கள் உண்டா என வியாக்காமல், இக்கலையை எல்லாரும் அறிந்து பயன்பெற முயல்வோம்.
செல்: 80560 33403
தொகுப்பு: கே. குமார சிவாச்சாரியார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-09/natarajan-t.jpg)