"ஜனனீ ஜென்ம சௌக்யானாம்
வர்தனி குல சம்பதாம்
பதவீ பூர்வ புண்யாணாம்
லிக்யதே ஜென்ம பத்திரிகா.'
ஒரு ஜாதகப் புத்தகத்தை கையில் எடுத்தால் முதலில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கும்.
அதன்பிறகே அந்த ஜாதகரின் பிறந்த விவரம் பற்றிய குறிப்புகள் இருக்கும்.
இதன் பொருள் இந்த ஜாதகரின் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையிலே இந்த ஜாதகத்தின் பலன்கள் இருக்கும் என்பதே.
ஒரு ஜாதகத்தில் ஆண்டி யையும் அரசனாக்குவது பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம். ஒருவர் பெயரும் புகழுமாக இருந்தால், "புண்ணியவான்'“ என்று கூறுவார்கள். அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் இந்த ஜென்மத்தில் யோகசாலியாக இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால்- அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால், அந்த வீட்டுக்குடையவன் உச்சம் பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால், அந்த வீட்டில் 6, 8, 12-க்குடையவன் அமராமல் இருந்தால், பாவிகள் அமராமல் இருந்தால் இவர்கள் யோகசாலிகளே.
மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்ற எல்லா தேவைகளையும் நிறைவு செய்யும் வாழ்வாதார சக்தியாக பணம் இருக்கிறது.
இப்படிப்பட்ட பணம் சேரும் யோகம் ஒருசிலருக்கு எளிதில் அமைகிறது. இதன் மூலம் பொன், பொருள், அசையும்- அசையா சொத்துகள் அமைகின்றன.
ஒரு பகுதியினருக்கு பற்றாக்குறை என்பது எப்பொழுதும் உள்ளது. கடன்வாங்கி செலவு செய்வதென்பது சிலருக்கு மாதாமாதம் ஏற்படும் அனுபவமாகும். சிலர் அன்றாடம் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. பலர் பல விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியுள்ளது. கையில் காசு தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, நகைக்கடன், வங்கிக்கடன் வாகனக்கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பல்வேறு வகைகளில் பணம் கையில் இருப்பில்லாத அமைப்பு பலருக்கு உள்ளது.
ஜாதகக் கட்டம் என்பது நாம் பிறக்கின்ற நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசி வீடுகளில் அமைந்துள்ளன என்பதை நமக்குத் தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இவையெல்லாம் நம் கர்மக் கணக்கின்படி முன்கூட்டியே இறைவனால் தீர்மானிக்கப்படுகின்ற விஷயமாகும். இந்த ஆன்மா எங்கு, எப்படி, எந்த சூழ்நிலையில், எப்படிப்பட்ட கிரக சஞ்சார அமைப்புகளுடன், எந்த தசையில் தாயின் கர்ப்பத்தில் உதிக்க வேண்டும் என்பது இறைவனின் படைப்பாகும். அதுதான் நம்முடைய கர்மவினை.
ஆன்ம, கர்ம, பிராப்தம் ஆகிய மூன்றும், ஒரு ஆத்மாவிற்கு சரீரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆத்மாவுடனே பயணம் செய்யும். நாம் பேச்சு வழக்கில்‘"நாம் என்ன கொண்டு வந்தோம், எதை எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று சொல்வோம்.
ஆனால் நாம் பிறக்கும்போது நம்மோடு பல்வேறு விதமான நல்வினை, தீவினைகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றை அனுபவித்து முடித்தபின், இந்த பிறவியில் செய்த வினைப்பயன்களைக் கொண்டு செல்கிறோம். ஆகவே நமக்குக் கிடைக்கின்ற எந்த யோகமும் அதிகமோ, குறைவோ- எல்லாம் நாம் வாங்கி வந்த வரம். அதன்படி கிரகங்கள் நமக்கு அந்தந்த காலகட்டத்தில் உரிய யோக பாக்கியங்களைத் தருகின்றன.
ஒரு ஜாதகத்தில் குறிப்பிட்ட சில வீடுகள், ஸ்தானங்கள், கிரகங்கள், கிரகச் சேர்க்கை, பார்வை, திதி, யோகம், கரணம், ஷட்பலம் ஆகிய காரணிகளை வைத்து தனம் எனும் பணம் எப்படி ஒருவருக்கு சேருகிறது என்று கூறமுடியும்.
ஒரு ஜாதகரின் உயிர்ப் புள்ளியாகிய லக்னம், லக்னாதிபதியால்தான் ஒரு ஜாதகம் செயல்படுத்தப்படுகிறது. எனவே லக்னம், லக்னாதிபதி பலம் மிகவும் முக்கியம். தனயோகம் என்பதை 1, 2, 5, 9, 11 ஆகிய இடங்கள் மற்றும் அந்த இடத்தின் அதிபதிகள்மூலம் நிர்ணயிக்கிறோம்.
அத்துடன் தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகியோரின் அமர்வு மிக முக்கியம்.
இவையெல்லாம் சரியாக அமையும்போது பல்வேறு வகையில் தனப்ராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து போன்றவை அமையும்.
பதினொன்றாம் இடம் பல வகையில் வருவாய், லாபம் பற்றிப் பேசும் இடம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் உழைப்பு மிக முக்கியம்.
அதனால் ஊதியமும், பண வரவும் இருக்கும்.
பொருளாதாரம் சற்று உயரும். அதே நேரத்தில் யோகமும், அம்சமும், பாக்கியமும் சேர்ந்திருந்தால் தனம் எனும் பணம் கொட்டும். எந்த ஜாதகமாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் யோகம் இருக்கும். ஆனால் அந்த யோகம் என்ன தன்மையில் உள்ளது- எந்த அளவில் உள்ளது என்பதில்தான் விஷயம் உள்ளது. இதில் அளவென்பது நாம் வாங்கி வந்த வரம், கொடுப்பினை, அம்சம்.
இந்த கர்மா நமக்கு நல்ல அம்சத்தில் இருந்தால் நிச்சயம் செல்வ வளம், தனப்ராப்தி, பண மழை கொட்டும். மேலும் தனயோகம், ராஜயோகங்கள் இருந்தாலும், தீய கிரகச் சேர்க்கை, தீய யோகங்கள், நீச யோகங்கள் மற்றும் நவாம்ச சக்கரத்தில் கிரக பலம், பார்வை பலம், யோக பலம், பரல் பலம் போன்றவை குறைந்த ஜாதகங்கள், நீச தசை, பாதக ஸ்தான தசை, விரய ஸ்தான தசை போன்ற பலம்குறைந்த தசைகள் நடக்கும்போது அடிக்கடி சரிவைச் சந்திக்கும். வாழ்க்கைப் பாதை சகடயோகம்போல் மாறிமாறி ஏறி இறங்கிக்கொண்டே இருக்கும். கிரக யோகமும், ராஜயோக தசையும், அனுபவிக்கும் பாக்கியமும் ஒருங்கே அமைந்தால்தான் குபேர தன சம்பத்து சித்திக்கும்.
ஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்பது 1, 4, 7, 10. இவை விஷ்ணு ஸ்தானங்கள். கோணம் என்பது 1, 5, 9. இவை லட்சுமி ஸ்தானங்கள். ஒரு ஜாதகத்தில் பணபர ஸ்தானம் என்பது 2, 5, 8, 11. தனவரவு, பணம் வரும் வழிகளைச் சொல்லும் இடங்கள். 2-ஆம் இடமானது தனம், வாக்கு சாதுர்யம், உடல் உழைப்பில்லாமல் மூளையைப் பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கும் வழியைச் சொல்கிறது. 5ஆம் இடம் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், வெறும் வாய்ஜாலம், வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டிக் கொடுத்து சம்பாதிப்பது, யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது.
நான்காம் வீட்டிற்கு இரண்டாம் வீடு கல்வியின்மூலம் பணம் சேருவதைக் குறிக்கும். தாய், தாய்மாமன் வர்க்கம்மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்.
இரண்டாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் பார்வைத் தொடர்புண்டு. இந்த இடங்களில் எந்த கிரகம் இருந்தாலும் தன் 7-ஆவது பார்வையால் ஒன்றையொன்று பார்க்கும். எட்டாம் இடமானது மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் என பல வகைகளில் பொருள் குவிவதைக் குறிக்கும். ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு அடுத்த 11-ஆம் இடம் லாப ஸ்தானம். இந்த இடத்திலுள்ள கிரகங்களின் தசாபுக்திகளில் ஒருவருக்கு தொழில்மூலம் லாபம், மறைமுக வருமானம் கிட்டும். அந்தக் கணக்கில் அனுபவப்பூர்வமாக பெரும்பாலானோருக்கு மனைவிமூலம் சொத்து, சம்பாத்தியம் கிடைத்து யோகம் வருகிறது. அதாவது மாமனார்மூலம் உதவி, சொத்து பாகப்பிரிவினை, உயில், தொழில், வியாபாரம் என்று பணம் சேரும். இதற்கு லக்னத்திற்கு 3-ஆம் இடம் நமக்கு பதில் தருகிறது.
மூன்றாம் அதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், கோணம் வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலும், மூன்றாம் வீட்டை புதன், சுக்கிரன் அல்லது யோக கிரகங்கள் பார்த்தாலும், மூன்றாம் வீட்டில் 35 பரல்களுக்குமேல் இருந்தாலும் மாமன், மைத்துனர் வகைமூலம் சொத்து, பணம் குவியும். இது நேர்வழி பாக்யராஜயோக அமைப்பாகும்.
ஒருசிலருக்கு 3, 6, 8, 12-க்குரிய கிரகங்கள் பலம் பெற்று ஒருவருக்கொருவர் பார்வை பரிவர்த்தனை போன்றவை ஏற்பட்டு, லக்னாதிபதி, யோகாதிபதி பார்வை, உண்டாகி விபரீத, ராஜயோக தசை நடைபெறும்போது அளப்பரிய செல்வம் சேரும். இந்த அமைப்பு ஒருவருக்கு சரியாகக் கைகொடுத்தால் எந்த உச்ச நிலைக்கும் கொண்டு செல்லும்.
ஒரு ஜாதகத்தில் இரண்டுவிதமான அம்சங்கள் உண்டு. அதேபோல் வாழ்க்கையிலும் இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நேர் வழி, மற்றொன்று குறுக்கு வழி. ஜாதகத்தில் சுப கிரக ஸ்தானங்கள்மூலம் நமக்குக் கிடைக்கும் தனம், செல்வம் ஒரு வகை. அதேபோல் 6, 8, 12 ஆகிய ஸ்தானங்கள்மூலம் கிடைக்கும் செல்வம் ஒரு வகை. நீச கிரகம், நீசபங்கமாகி ராஜயோகம் அளிக்கும்போது சேரும் செல்வம் ஒரு வகை.
"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற அமைப்பின்படி தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப்பெரிய அளவிட முடியாத யோகத்தையும், செல்வ வளத்தையும், குபேர சம்பத்தையும் கொடுத்துவிடும்.
நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற்றிடில் நீசபங்கராஜ யோகம். சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் நீங்கி ராஜயோகம். ராசியில் நீசமாக உள்ள கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால் ராஜயோகம். ராசியில் நீசமாகவுள்ள கிரகம் வர்க்கோத்தமம் பெற்றால் முதல் தர ராஜயோகம். இதைப்போன்ற கிரக தசாபுக்திகளில் எதிர்பாராத விஷயங்கள், நடக்காது என்று நினைக்கும் விஷயங்கள் எல்லாம் தாமாகக் கூடிவரும். தொட்டதெல்லாம் துலங்கும்.
நடைமுறை வாழ்வில் 1, 5, 9 ஸ்தானங்கள் இயல்பிலேயே சரியில்லாதவர்களை சந்திக்கிறோம். அது அவர்களுடைய ஆன்ம, கர்ம, பிராப்தம். இதைச் சரிசெய்வது எளிதல்ல. அதனால் அதை விட்டுவிடுவோம்.
சிலருக்கு ஏற்ற இறக்கம் இருந்துகொண்டே இருக்கும். எல்லா அமைப்பும் சரியாக இருந்தும் எந்தப் பலனையும் அனுபவிக்க முடியாதவர்கள் எந்த குரு, சனி, ராகு- கேது பெயர்ச்சி நம்மை சரிசெய்யும் என்று மனவேதனையுடன் காலத்தைத் தள்ளுகிறார்கள்.
இன்றைய உலகில் அதிக மக்களின் பிரச்சினையாக பணம் மட்டுமே உள்ளது. பத்து சதவிகித மக்கள் மட்டுமே பணம் சார்ந்த பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள்.
எஞ்சிய 90 சதவிகித மக்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.
இங்கே நாம் ஆழ்ந்து சிந்தித்தால், கடன் பணம்கூட ஒருவருக்கு பணம் வரும் நேரம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பது புரியும். கடனாக வரும் பணத்தை உழைப்பால் வரும் பணமாக மாற்ற வேண்டும்.
1, 5 ,9 வலிமை பெற்றுமே பிரச்சினைகளை அனுப்பவிப்பதற்குக் காரணமாக தீர்மானம் செய்வது 1, 2, 5, 9, 11 ஆகிய ஸ்தானங்கள், அதன் அதிபர்கள், தன கிரகங்களான குரு, சுக்கிரன், சனி, யோகாதிபதிகள் போன்ற காரணிகள், மாந்தி, ராகு- கேது, விஷ சூன்ய திதிகள், அவயோக கிரகங்களால் கட்டுப்படுத்தப்படுவதுதே. (முடக்கப்படுவதே.)
எந்த கிரகத்தின் தசை நடக்கிறதோ அந்த தசைக்கான கிரகத்திற்குரிய திசையிலிருந்து வரும் அதிர்வலைகள் ஜாதகரை இயக்குகிறது.
எனவே பணம் சார்ந்த நிகழ்வுகளில் தன்னிறைவுபெற மேலேகூறிய எந்த கிரகம் தொடர்பான காரணிகளால் கட்டுப்படுத்தப் படுகிறேதோ அதற்குரிய நட்சத்திர இறைவழிபாடு மூலமாக மிகமிக எளிதான முறையில் பணவிஷயத்தில் தீர்வு பெற்று வாழ்வில் வளமாக வாழமுடியும்.
இதேபோல் எல்லா பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும் காரணிகளை ஆய்வு செய்தால் வளமான வாழ்வு நிச்சயம் உண்டு.
ஈரோட்டில் பிறந்த பிரபல வணிகரான இந்த ஜாதகர் 4-5-2018 அன்று காலை 11.54-க்கு என்னை சேலம் அலுவலகத்தில் சந்தித்தார். அன்றைய கோட்சாரத்தையும் ஜனன கால ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் பிரசன்னம் எனக்கு கொடுத்த கேள்விகள்-
தொழில் முடக்கம், பண முடக்கம், சட்டச் சிக்கல், சொத்து அடமானம், ஒரு மாதத்தில் குழந்தை பிறக்கப்போகிறது ஆகியவை. "இவைதான் தங்களின் கேள்விகளா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர், "தலைமுறை தலைமுறையாக ஜவுளி வியாபாரம் செய்துவரும் நாங்கள் இந்த மூன்று வருடங்களில் தொழில் நெருக்கடியால் மிகவும் அவமானம், அவதியில் இருக்கிறோம்' என்றார்.
இவருடைய திதி சூன்ய ராசி விருச்சிகம், முடக்கு நட்சத்திரம் அனுஷம், முடக்கு ராசி விருச்சிகம் என்பதை உணர்ந்து சில வழிபாட்டுமுறைகள் கூறப்பட்டன. இப்பொழுது தொழிலில் சிறிய மாற்றம் ஏற்படஆரம்பித்திருப்பதாகவும் வரவேண்டிய பணம் வந்துகொண்டிருப்பதாகவும் தகவல்.
எந்த காரணியால் முடக்கம் என்பதை அறிந்து, அதற்குரிய நட்சத்திர இறைவழிபாடுமூலமாக மிகமிக எளிதான முறையில் பணவிஷயத்தில் தீர்வு பெற்று வளமாக வாழமுடியும்.
செல்: 98652 20406