வாஸ்து என்பது வசிக்கும் இடம்பற்றி அறிந்துகொள்வதேயாகும். "வஸ்' என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வாஸ்து என்னும் சொல் பிறந்தது. மயன், பிரம்மா, பிருகு, பிரகஸ்பதி, பர்கர், புரந்தரர், வசிஷ்டர், வாசுதேவர், விசாலேஷன், விஸ்வகர்மா, நாரதர், தக்னஜித், நந்தீஸ்வரர், அத்ரி, அநிருந்தர், சுக்கிரன், குமாரசுவாமி, ஸௌனகர் போன்ற ரிஷிகள் நமக்கு வாஸ்து பற்றிய நூல்களை அருளியுள்ளனர்.

Advertisment

மனை எவ்வாறு இருக்கவேண்டுமென கடந்த வாரத்தில் பார்த்தோம். நாம் வாங்கும் மனை மேடுபள்ளமாக இருந்தால், அவ்வகை நிலங்களை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர். கஜப் பிருஷ்டம், கூர்மப்பிருஷ்டம், தைத்யப்பிருஷ்டம், நாகப்பிருஷ்டம் எனப்படும். தற்காலத்தில் இயந்திரங்கள் கொண்டு சமப்படுத்தப்படுவதால், இவ்வகை மனைகள் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. இருப்பினும், இயற்கையான இவ்வகை மனைகளை வாங்கும்போது என்ன பலன் என்று பார்ப்போம்.

நாம் வாங்கும் மனை தெற்கு திசை, மேற்கு திசை உயர்ந்தும், வடக்கு திசை, கிழக்கு திசை தாழ்ந்தும் இருந்தால் அவ்வகை மனைகளை நாம் வாங்கலாம். இதனை கஜப்பிருஷ்டம் என்பர். சமஸ்கிருத வார்த்தை என்பதால் அது மருவி கருடமனையானது. இம்மனையில் வீடு கட்டுபவர்கள் அனைத்து செல்வங்களையும் பெறுவர். வளமான வாழ்க்கை, படிப்படியான வளர்ச்சி, சந்தான விருத்தி, மங்களகரமான விஷயங்கள் தொடர்ந்து நடக்கும்.

இம்மனைகளை வாங்கி வீடுகட்டலாம்.

மனையின் மையப்பகுதி உயர்ந்தும், மற்ற நான்கு திசைகளும் ஒரே அளவில் தாழ்வாகவும் இருந்தால், அது கூர்மப்பிருஷ்டம் எனப்படும். இதுபோன்ற மனைகள் கோவில் கட்டுவதற்கு ஏற்றவையாகும். வீடு கட்டுவதிலும் தவறேதும் இல்லை.

Advertisment

மனையின் தெற்கு திசை, மேற்கு திசை தாழ்ந்தும், வடக்கு திசை நில அமைப்பு, கிழக்கு திசை நில அமைப்பு உயர்ந்தும் இருந்தால், அம்மனையை தைத்யப்பிருஷ்டம் என்பர். இம்மனையில் வீடுகட்டுவதைத் தவிர்க்கவேண்டும். அதேபோன்று தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு பள்ளமாகவும், மையப்பகுதி மேடாகவும், வடமேற்கு பள்ளமாகவும் இருந்தாலும்; தெற்கு உயர்ந்து பின் தாழ்ந்தும், வடக்கு உயர்ந்திருந்தாலும் நாகப்பிருஷ்டம் அல்லது பாம்பு மனை என்பர். இதுபோன்ற மனைகளில் வீடுகட்டுதல் கூடாது. தைத்யப்பிருஷ்டம் என்பதைப் பன்றிமனை என்பர். இதுபோன்ற மனைகளிலும் வீடுகட்டுதல் கூடாது.

கஜப்பிருஷ்டம், கூர்மப்பிருஷ்ட மனைகளில் மட்டுமே வீடுகட்ட வேண்டும். மற்ற மனைகளைத் தவிர்க்கவேண்டும். மனையில் எந்தவொரு மூலையும் வளரவோ குறையவோ கூடாது. மனையின் நான்கு முனைகளும் மூலைமட்டம் பார்த்து 90 டிகிரி இருக்கவேண்டும்.

vastu

மனையில் மூலை குறைந்தால் அல்லது மூலை வளர்ந்தால் என்ன பலன்?

Advertisment

மனையின் தென்மேற்கு மூலையில் மூலைமட்டம் பார்க்கவேண்டும். தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கும், தென்மேற்கு மூலையிலிருந்து கிழக்கும் 90 டிகிரியில் சரியாக இருந்தால் அந்த மனை நல்ல மனை. ஆனால், தென்மேற்கு மூலையிலிருந்து கிழக்கு திசை 90 டிகிரிக்குமேல் வளர்ந்தால் சமுதாயத்தில் மானம் மரியாதை போகும். குடும்பத் தலைவரோ, தலைவியோ தவறான வழிசெல்வர். தென்மேற்கு மூலையிலிருந்து மேற்கே 90 டிகிரிக்கு அதிகமானால் அம்மனையில் வசிப்பவர்கள் சஞ்சலமான மனநிலையில் இருப்பர்.

தென்மேற்கு 90 டிகிரியில் கிழக்கும் மேற்கும் இருந்து, அதன்பின் தென்கிழக்கில் இருந்து வடக்கு 90 டிகிரிக்குமேல் அதிகமானால் ஈசானியம் வளர்ந்துள்ளது என அறியலாம்.

இதுபோன்று வடகிழக்கு திசை வளர்ந்திருந்தால் அம்மனையில் வசிக்கும் ஆண்கள் மிகப்பெரிய கௌரவத்தை அடைவர். பெயர், புகழ் பெறுவர். எல்லா வளங்களும் பெறுவர்.

தென்மேற்கு 90 டிகிரியில் இருந்து, தென்கிழக்கும் 90 டிகிரியில் இருந்து, வடகிழக்கில் 90 டிகிரியில் இல்லாமல் வளர்ந்திருந்தால், அவ்வீட்டில் வசிப்பவர் சஞ்சலமான மனநிலையில் இருப்பர். வடகிழக்கு 90 டிகிரியில் இருந்து, வடமேற்கும் 90 டிகிரியில் இருந்து, தென்கிழக்கு 90 டிகிரிக்கு அதிகமானால், தென்மேற்கு மனை அதிகம் வளர்ந்திருக்கிறது என அறியலாம். அதுபோன்று இருந்தால் வீண்கவலைகள், பிள்ளைகளால்- உறவினர்களால் கவலைகள் இருக்கும். எனவே, மனையில் எந்தவொரு திசையும் 90 டிகிரிக்கு அளவெடுத்து, மனையில் எந்தவொரு மூலையும் வளராமலும் குறையாமலும் வீடுகட்டினால் வளமோடு வாழலாம்.

(தொடரும்)

செல்: 94434 80585