பிரம்மதேவரின் புதல்வரான மரீசி மாமுனிவரின் புதல்வர் காசியப மாமுனிவரால் இயற்றப்பட்டது "காசியப சில்ப சாஸ்திரம்' எனும் நூல். இதில் கிராம அமைப்பு, நகர அமைப்பு, கோட்டைகள் அமைப்பு, இல்லங்கள் அமைப்பு, அரண்மனை அமைப்பு பற்றியும், சிற்பங்கள் பற்றியும், அவை அமைக்கப்படுவதற்குரிய ளவீடும், இலக்கணமும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் பிள்ளைகளே நமக்கு அருளியது வாஸ்து சாஸ்திரம்.
"பிருஹத் சம்ஹிதா' குப்தர்கள் காலத்தில் இயற்றப்பட்டது. "விஷ்ணுதர்மேந்திர புராணம்' 7-ஆம் நூற்றாண்டில், போஜ மன்னர் காலத்தில் இயற்றப்பட்டது. இம்மன்னர் காலத்தில்தான் அனைத்துக் கலை சார்ந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன. "சுவராஜத பிருச்சா' 12-ஆம் நுற்றாண்டில் இயற்றப்பட்டது. "ஜயபிருச்சா' தென்னாடு மனையடி சாஸ்திரம் பிரம்மாணமஞ்சரி 12-ஆம் நூற்றாண்டிலும், "வாஸ்துராஜ வல்லபம்' 15-ஆம் நூற்றாண்டிலும், "சில்பரத்னம்' 16-ஆம் நூற்றாண்டிலும் இயற்றப்பட்டது. தேவர்களாலும், ரிஷிகளாலும் வாஸ்து சாஸ்திரம் நமக்கு அருளப்பட்டது. தற்போதுள்ள சில பொறியாளர்கள் நமக்கு வாஸ்து அடிப்படையில் இல்லங்கள் அமைப்பதாகக்கூறி கட்டிமுடித்த வீடுகளைப் பார்க்கும்போது சங்கடமானதாக உள்ளது. சிறந்த வாஸ்து நிபுணர்கள்தானா என உறுதிசெய்து, அதன்பின் கட்டடப்பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கடந்த வாரம் வடக்கு வாயில் அமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி கிழக்கு, மேற்கு, தெற்கு வாயில்கள் குறித்துக் காண்போம்.
கிழக்கு வாயில் ஆண்களுக்கானது. கிழக்கு வாயில் கொண்ட திருக்கோவில்கள் பலகாலம் கடந்தும் கம்பீரமாக நிற்கின்றன. கிழக்குப் பார்த்த வாயிலுள்ள மாளிகைகள், கோட்டைகள் அரசர்களுக்காக வடிவமைப்பட்டு, அதில் வாழ்ந்து வந்தார்கள். கிழக்கு வாயில் அமைக்கும்போது வீட்டின் அகலம் 26 அடி எனில், வடகிழக்கு மூலையிலிருந்து இரண்டு அடிவிட்டு நிலை அமைக்கலாம். நல்ல பலனைத் தரும். வீட்டின் மையத்தில் நிலை இருந்தால் லாபம்- நஷ்டம் இரண்டும் ஏற்படும். தென்கிழக்கில் வாயில் இருக்கக்கூடாது. அக்னியால் சேதம் உண்டாகும். கிழக்கு சார்ந்த சுக்கிர திசை மூலை என்பதால் திருடுபோகும். கிழக்குப் பார்த்த வாயில்கள் அமைக்கும்போது அதேநேருக்கு மேற்கில் பின்புற வாயில் அமைக்கலாம். கிழக்கு வாயிலைப் பொருத்தவரை ஒருவாயிலே போதுமானது. கிழக்கு இந்திரன் திசை என்பதால் வாயில் உயரமாக இருத்தல் வேண்டும். பின்புற வாயில் முன்புற வாயிலைவிட உயரம் குறைவாக மைக்கவேண்டும். குரு திசையான வடகிழக்கில் வாயில் அமைத்து, பின்புற வாயில் அதே நேருக்கு வடமேற்கு திசையில் அமைக்காமல் மேற்கில் அமைப்பதோ, தென்மேற்கில் அமைப்பதோ, தென்கிழக்கில் அமைப்பதோ தவறான பலனையளிக்கும்.
இனி மேற்கு வாயில் பற்றிப் பார்ப்போம். இது ஆண்களுக்கான வாயில் அமைப்பாகும். மேற்கு வருணன் திசை என்பதால் போதுமான அளவில் அமைத்துக்கொள்ளலாம். உள்கூடு அதிக உயரம் தேவையில்லை. மேற்கு வாயில் அமைத்தால், பின்புற வாயில் கண்டிப்பாக அமைக்கவேண்டும். வடமேற்கு மூலையான சந்திரன் திசையில் வாயில் அமைப்பது நல்லது. வீட்டின் மையத்தில் வாயில் அமையக்கூடாது. லாபம்- நஷ்டம் இரண்டும் இருக்கும். தென்மேற்கு வாயில் கூடாது.
அவ்விடம் ராகு திசையாகும். உடல் சார்ந்த பாதிப்புகள் ஆண்களுக்கு ஏற்படும். தொடர்ந்து இவ்வமைப்பில் வசித்தால் மருத்துவ சிகிச்சை செய்து உயிரிழப்போ, விபத்தினால் மரணமோ ஆண்களுக்கு சம்பவிக்கும். எனவே மேற்குப் பார்த்த வீடுகளுக்கு வாயில் அமைப்பவர்கள் கண்டிப்பாக கவனமுடன் வாயில் அமைக்க வேண்டும். சந்திரன் மூலையான வடமேற்கை ஒட்டி வாயில் அமைத்தால் ஆண்களுக்கு நல்ல பலனும், ராகு திசையான தென்மேற்கை ஒட்டி அமைத்தால் ஆண்களுக்கு கெடுபலனும் ஏற்படும். பொதுவாக மேற்கு வாயில் ராணுவம், காவல்துறையில் பணியாற்றுபவர்கள், எதையும் தலைமையேற்றுச் செல்பவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
தெற்கு வாயில் சுபவாயிலாகும். தெற்கு திசை வாயில் சரியாக அமைந்து, பின்புற வாயிலும் சரியாக அமைந்துவிட்டால் அவ்வீட்டில் தொடர்ந்து சுபச்செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். தெற்கு வாயில் அமைக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். தெற்குப் பார்த்த வீட்டின் அகலம் 26 அடி எனில், தென்கிழக்கு மூலையிலிருந்து இரண்டு அடிவிட்டு சுக்கிர திசையில் அமைக்கவேண்டும். அதே நேருக்கு கண்டிப்பாக பின்புற வாயில் அமைக்கவேண்டும்.
தெற்கு எமன் திசை என்பதால் வாயில் உள்கட்டு உயரமாக அமைக்கக்கூடாது. தேவையான அளவு அமைத்தால் போதுமானது.
ஆனால் அதே நேருக்கு பின்புறம் அமைக்கும் வாயிலானது உள்கூடு உயரமாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவ்வீட்டிற்கு குரு ஆற்றல் கிடைக்கும். வடக்கு அல்லது வடமேற்கு திசையில் பின்புற வாயில் அமைக்கக்கூடாது. வீட்டின் மையத்தில் வாயில் அமைக்கக்கூடாது. லாபம்- நஷ்டம் இரண்டும் இருக்கும். எமன்திசை என்பதால் கவனமாக வாயில் அமைக்க வேண்டும். தெற்குப் பார்த்த வீடுகளுக்கு தென்மேற்கில் வாயில் அமைக்கக்கூடாது. தென்மேற்கை ஒட்டியிருந்தால் அவ்வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கும். தொடர் மருத்துவ சிகிச்சை இருக்கும். சிலருக்கு உயிரிழப்புகூட ஏற்படும். தெற்குப் பார்த்த வீடு கட்டும்போது கவனமுடன் வாயில் அமைத்து வளமுடன் வாழவேண்டும்.
(தொடரும்)
செல்: 94434 80585