சாணக்கியரின் நீதிநூலான "அர்த்த சாஸ்திரம்' அரண்மனை எவ்வாறு எழுப்பவேண்டுமென குறிப்பிடுகிறது.
அந்த பிரதேசத்தின் நடுவிலிருந்து வடக்கில் ஒன்பதாவது பாகத்தில் சாஸ்திரம் விதித்த முறையில் அந்தப்புரத்தை உருவாக்கவேண்டும். அது வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ இருக்க வேண்டும். அரண்மனையின் வடகிழக்கில் நீர்நிலையும், தென்கிழக்கில் சமையல் கூடமும், தானியங்கள் சேர்த்து வைக்கும் இடமும், யானைகளின் இருப்பிடமும், கிழக்கு திசையில் வாசனைப்பொருட்களும், தெற்கு திசையில் பொருட்களை சேமித்து வைக்கும் கருவூலமும், வரவு- செலவு பார்க்கும் இடமும், தென்மேற்கு திசையில் ஆயுதசாலையும் இருக்கவேண்டும். கணக்குப் புத்தகங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்கள், வரவு- செலவு பார்க்கும் அதிகாரிகளின் அறைகள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நிறுவவேண்டும். வாஸ்து நிபுணர்கள் சொல்லும் இடங்களில் அரண்மனை வாயில்கள் அமைக்க வேண்டும் என சாணக்கியர் தெளிவுபடக் கூறியுள்ளார்.
வாஸ்து என்பது தற்காலத்தில்தான் இருப்பதுபோன்ற மாயை உள்ளது. அது தவறாகும்.
நான்கு சுவர் அமைத்து எப்போது மனிதன் வசிக்கத் தொடங்கினானோ, அப்போதே தேவர்களாலும் ரிஷிகளாலும் வாஸ்து பற்றி மனிதருக்கு அருளப்பட்டது. எனவே வாஸ்து என்பது பரம்பரையாக நமது ரத்தத்தோடு கலந்த விஷயம்.
கடந்த வாரங்களில் பல்வேறு வாஸ்து அமைப்புகள் பற்றிப் பார்த்தோம். அடுத்து பூஜையறை குறித்துக் காணலாம்.
வாஸ்து என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. பஞ்சபூதங்களின் அருள் கிடைக்கும் வகையில், இயற்கை வழியில் வீடுகட்டி வாழ்வதே வாஸ்துவாகும். இது அறிவியல்பூர்வமானது. வாஸ்துசாஸ்திரத்தில் சில குறிப்பிட்ட பெயர்கள், திசைகள் ஒரு மதம் சார்ந்த சொற்களாக இருந்தாலும், இதை அனைத்து மதத்தினரும் ஏற்று வாஸ்துப்படி அமைத்த வீடுகளில் வளமோடு வாழலாம்.
வீட்டின் வடகிழக்கு மூலை என்பது முக்கியமான பகுதியாகும். அது எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். இந்த திசையினை ஈசான்ய மூலை என்றும், குரு தசை என்றும் கூறுவர். சிலர் சனி மூலை எனக் குறிப்பிடுவது தவறு. பொதுவாக கிரகங்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும். "அவன் வருகிறான்;
இரண்டரை வருடம் கண்டம் இருக்கும்', "இந்த கிரகம் வருகிறான்; ஏழரை வருடம் கடுமையாக இருக்கும்; அவன் கெட்டவன்' என கிரகங்களை மரியாதைக் குறைவாகக் குறிப்பிடுவது தவறு. "அந்த கிரகம் இத்தனை ஆண்டுகள் இருப்பார்; ஊழ்வினைக்குத் தகுந்தவாறு பலனளிப்பார்.
அதைத் தாங்கிக்கொண்டால் அடுத்து இத்தனை ஆண்டுகளில் நற்பலனை வாரி வழங்குவார்' என கிரகங்களை உயர்வாகக் குறிப்பிடவேண்டும். மேற்கண்ட ஈசான்ய மூலையை வேறுவகையில் கூறுவது கெடுதலை ஏற்படுத்தும். சிலர் ஈசான்ய மூலையில் அறை அமைத்து, அவற்றில் கதவும் அமைத்து அதை எப்போதாவது பயன்படுத்தினால் அதனாலும் தோஷம் உண்டாகும். இந்த மூலையில் பூஜையறை அமைத்து தொழுகை நடத்தலாம்; பூஜைகள் செய்யலாம்; தவமிருக்கலாம்; ஜெபம் செய்யலாம். சுவாமி திருவுருவப்படங்கள் கிழக்கு நோக்கி இருக்கவேண்டும். நாம் வடக்கு நோக்கி ஜெபிக்கலாம்; தொழுகை நடத்தலாம்; பூஜை செய்யலாம். இந்த மூலை தரைமட்டம் உயர்ந்தும் இருக்கலாம். இந்த மூலையில் சபரிமலை படிக்கட்டுபோல் அமைத்தும் பூஜைக்கான ஸ்சுவாமிப்படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.
மேற்கண்ட இடங்களில் பூஜையறை இருந்தும் நிம்மதியில்லை எனில், வாஸ்துக்குறைபாடு உள்ளது என அறியலாம். தாமாக முயற்சிக்காமல் நல்ல வாஸ்து நிபுணர்களைக் கொண்டு வீடு அமைத்து நலமோடு வாழலாம்.
(தொடரும்)
செல்: 94434 80585