ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்களுக்கும் உபவேதங்கள் உண்டு. ரிக் வேதத்திற்கு ஆயுர்வேதமும், யஜுர் வேதத்திற்கு தனுர் வேதமும், சாமவேதத்திற்கு காந்தர்வ வேதமும், அதர்வண வேதத்திற்கு ஸ்தாபத்ய வேதமும் உபவேதங்கள். ஸ்த+பதி=ஸ்தபதி. "ஸ்த' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு "அசையாத' என்று பொருள் உண்டு. அசையாத பொருளான செங்கல், சிமெண்ட், மரக்கதவுகள், மணல், இரும்பு இவற்றையெல்லாம் கலந்து கட்டுவதே கட்டடம். அசையாத பொருளைக்கொண்டு கட்டடம் கட்டுபவரே ஸ்தபதி.
கடந்த வாரங்களில் மனையின் தன்மை, மண் பரிசோதனை, மூலைமட்டம், மேடு பள்ளம், சுற்றுச்சுவர் ஆகியவற்றால் என்ன பலன் என்பதைப் பார்த்தோம். மனையில் சுற்றுச்சுவரும் எழுப்பியாகிவிட்டது. அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
சுற்றுச்சுவர் அமைத்தபின் வீடுகட்டத் தொடங்க வேண்டும். பொதுவாக குளம் வெட்டிய பின்னரே கோவில் கட்டத் தொடங்குவார்கள். அதுபோல கிணறு அல்லது போர் அல்லது சம்ப் அமைத்த பின்னரே வீடு கட்டத் தொடங்கவேண்டும்.
எந்த இடங்களில் போர், கிணறு, கீழ்நிலைத் தொட்டி (சம்ப்) அமைக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம். வீடு கட்ட இருக்கும் இடத்திற்கு நேர் வடக்கில் கிணறு இருந்தால் நற்பலன் அளிக்கும். அல்லது வடக்கு சார்ந்து வடகிழக்கில் கிணறு அமைக்கலாம். ஆனால் சுற்றுச்சுவர் உள்ள வடகிழக்கு மூலையிலிருந்து 45 டிகிரிக்கு குத்தாக அல்லது சுற்றுச்சுவர் மூலைக்குத்தில் போர், கிணறு, சம்ப் அமைத்தல் கூடாது.
இதுபோன்று மூலைக் குத்து இல்லாமல் வடக்கு சார்ந்த வடகிழக்கிலும், கிழக்கு சார்ந்த வடகிழக்கிலும் போர் அமைக்கலாம்; கிணறு வெட்டலாம்; சம்ப் அமைக்கலாம். அதே போன்று வீடு கட்டவிருக்கும் கிழக்கிலும் கிணறு அமைக்கலாம். வடக்கும், கிழக்கும் குபேர திசை, இந்திரன் திசை என்பர்.
தென்கிழக்கு திசையினை சுக்கிரன் திசை அல்லது அக்கினி மூலை அல்லது ஆக்கினேய மூலை என்பர். இந்த மூலையில் கிணறு, சம்ப், போர் அமைத்தால் தவறான பலன் தரும். அக்கினி மூலை என்பது நெருப்பு இருக்க வேண்டிய இடம். அங்கு நீர் இருந்தால் தீயினால் விபத்து ஏற்படக்கூடும். அம்மூலை பெண்களுக்குரிய திசை என்பதால், அங்கு கிணறு, போர், சம்ப் இருந்தால் எமனை வீட்டுக்கு அழைப்பதாக இருக்கும். எமன் திசையில் பள்ளம் இருந்தால் வீண்விரயங்கள் ஏற்படும். தென்மேற்கு திசையினை ராகு திசை, கன்னி மூலை, பிள்ளையார் மூலை, நைருதி மூலை என்பர். அங்கு கிணறு இருந்தால் வீண் உயிரிழப்பு அல்லது தொடர் மருத்துவ சிகிச்சை ஏற்படும். உடல்நல பாதிப்புகளால் வீண்விரயங்கள் ஏற்பட்டு கடன் ஏற்படும். பிள்ளையார் மூலை உயர்ந்திருக்கவேண்டும்.
சிவாலயங்களில் மூலவரைவிட பிள்ளையார் மூலை திருவுருவச் சிலைகள் மிக கம்பீரமாக- பெரியதாக இருக்கும். அதே போன்று வீட்டில் பிள்ளையார் மூலை மேடாக இருக்கலாம்.
மேற்கு திசை வருணன் திசை. அந்த திசையும் மேடாக இருக்க வேண்டும். அங்கு பள்ளமான அமைப்பான கிணறு, சம்ப், போர் இருந்தால் வீண் விரயங்கள் ஏற்படும். வடமேற்கு திசையினை வாயுமூலை, சந்திரன் திசை என்றும், கிராமங்களில் கொடிக்கா மூலை என்றும் கூறுவர். இங்கு கிணறு, போர், சம்ப் அமைத்தால், அது சந்திரன் திசையாக இருப்பதால் கணவன்- மனைவிக்குள் சண்டை ஏற்படும். ஒருவேளை அவர்கள் ஒற்றுமையாக இருந்தால் அடுத்த வீட்டாரிடம் சண்டை சச்சரவுகள் இருக்கும். ஊரில் சண்டை சச்சரவுகளோடு இருப்பர்.
பொதுவாக வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மூலைகளில் கிணறு, சம்ப், போர் போன்றவற்றை மூலைக் குத்து இல்லாத இடத்தில் அமைத்து வீடு கட்ட வேண்டும். கிணறு நிலத்தின்மேல் சதுர வடிவில் கூடாது. வட்ட வடிவில்தான் இருக்கவேண்டும். சம்ப் நில மட்டத்தில் இருந்து அரை அடி உயரமாக இருக்கலாம்.
அதிக உயரம் இருந்தால் அந்த சம்ப்பினாலும் தோஷம் உண்டாகும்.
வீடு கட்டுவதற்குமுன் கிணறு, போர் அல்லது சம்ப் அமைத்தால் எவ்வித தடையுமில்லாமல் வீட்டைக் கட்டி முடிக்கலாம்.
(தொடரும்)
செல்: 94434 80585