பிரசன்னம் பார்க்க வந்தவரின் காதோரத்து நரைமுடி, அவரது வயதை ரகசியமாகச் சொன்னது.
முகமோ, கவலையை பட்டவர்தனமாகப் பறைசாற்றியது. தன் மகளுக்கு எப்போது திருமணம் நடக்குமென்பதை அறிவதற்காக பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார். சாலக்குடியில் அருள்பாலிக்கும் கண்ணம்புழா பகவதி அம்மனைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழிப் பிரசன்னம் கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் காட்டியது. ராசிக்கு, நவாம்சம் பாதகத்தில் அமைந்தது. நவாம்ச லக்னமாக அமைந்த மகரத்திற்கு ஏழில் சனி பகவான், சந்திரனுடன்கூடி புனர்பூ தோஷத்தைத் தந்தார்.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைப்பட்டதைக் காட்டியது.
பிரசன்னம் பார்க்க வந்தவர் உண்மையை ஒப்புக்கொண்டார். பரிகாரங்களைச் சொல்லி பிரசன்னத்தை முடித்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. ஜோதிடர்களிடம் எதையும் மறைக்கமுடியாதென்ற உண்மை பிரசன்னம் பார்க்க வந்தவருக்குத் தெளிவாகப் புரிந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
சோரப் பிரசன்னம் எனும் திருட்டுப்போன பொருளைக் கண்டுபிடிப்பதில், கேரள ஜோதிடத் தின் அணுகுமுறை சிறப்பானது.
ஆரூட திரேகாணம் பலமாக இருந்தால் திருடரின் தோற்றம் மற்றும் உயரத்தை திரேகாணத்தின் வடிவத்தை வைத்துக் கூறலாம். அது பலவீனமாக இருந்தால், ஆரூட லக்னத்தின் ஏழிலுள்ள கிரகத்தின் வடிவத்தை ஒத்திருக்கும் அல்லது கேந்திரகளில் பலமாக உள்ள கிரகங்களின் தோற்றத்தைக் கருத்தில்கொண்டு கூறவேண்டும். பல கிரகங்கள் உள்ளனவென்றால் பல திருடர்களின் கூட்டுமுயற்சி என்பதை அறியலாம். திருடரைக் குறிக்கும் கிரகம் லக்னாதி பதியாகி லக்னத்தில் இருந்தால், கேள்வி கேட்பவரே ஞாபகமறதியால் தொலைத்துவிட்டார் என்பது உறுதி. சோர கிரகத்துடன், இரண்டாம் பாவாதிபதி சம்பந்தப்பட்டால் திருடியவர் குடும்ப உறுப்பினர்கள் என்றும், மூன்றாம் பாவாதிபதி சம்பந்தப்பட்டால் சகோதர் என்றும், நான்காம் பாவாதிபதி சம்பந்தப்பட்டால் தாய்வழி உறவினர் என்றும், 5-ஆவது அதிபதி சம்பந்தப்பட்டால் குழந்தைகள் என்றும், 6 அல்லது 8-ஆவது அதிபதி என்றால், திருடன் ஒரு எதிரியாக இருப்பார் என்றும் அறியலாம்.
சோர கிரகத்தின் நான்காமிடத்தின் தன்மைகளைக்கொண்டு திருடரின் இருப்பிடத்தை அறியலாம். நஷ்டப் பிரசன்னத்தில் காணாமல்போன பொருளைத் துல்லியமாகக் கண்டறியும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
வெளிநாடு செல்லமுடியுமா?
கேள்வி: நான் என் வேலை விஷயமாக, வெளிநாட்டில் முயற்சி செய்து வருகிறேன்.
அதற்கான அயல்நாட்டு நுழைவுச்சான்று கிடைக்குமா? அதற்கான பரிகாரத்தையும் கூறமுடியுமா?
-தீபக், சேலம்.
(ஆரூட எண் 55; சித்திரை மூன்றாம் பாதம்)
* சித்திரை 3-ஆம் பாதம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய், புதன் நட்சத்திரத்தில் உள்ளதாலும், புதன் சோழி லக்னத்திற்கு ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியாவதாலும், வெளிநாடு செல்வது தொடர்பான கேள்வியென்பது புலனாகிறது.
* சோழி லக்னத்திற்கு 64-ஆவது நவாம்சம், சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை இரண்டாம் பாதமாகிறது. சோழி லக்னமாகிய துலாத்திற்கு சூரியனே பாதகாதிபதியாகிறார். இது அரசாங்கத்தால் தடை ஏற்படுவதைக் காட்டுகிறது.
* கும்பத்திலிருக்கும் குருபகவானின் ஒன்பதாம் பார்வை சோழி லக்னத்தின்மீது பதிவதால், ஓரளவு அனுகூலமான பலன் கிடைக்க வாய்ப்புண்டு.
* சனி பகவானும் புதனும் சோழி லக்னத்திற்கு நான்காமிடத்தில் அமர்ந்து, பத்தாமிடத்தைப் பார்ப்பது, தொழிலுக்குப் பாதகமான அமைப்பாகவே அமைகிறது.
* பரிகாரம் செய்தால் வெற்றிபெறலாம்.
பரிகாரம்
அனுமனுக்கு நிவேதனம் செய்த அன்னத்தை சிறுவருக்கு காணிக்கையுடன் தானம் தந்தால், கடல்தாண்டிச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
சிவன் கோவிலில் பிரதோஷ காலத்தில், நந்திக்கு வேட்டி, துண்டு சாற்றுவதால் தடை விலகும்.
(தொடரும்)
செல்: 63819 58636