பிரசன்னம் பார்க்க வந்த இளைஞரின் மனதில் குழப்பம் குடிகொண்டிருந்தது. தனக்கு புதிய வேலைவாய்ப்பு வந்துள்ளதாகவும், அதிலுள்ள சாதக- பாதகங்களைப் பிரித்துணர முடியவில்லை என்றும் வருந்தினார். எதிர் காலத்திற்கு நன்மை தரும் முடிவை எடுப்பதற்காக பிரசன்ன ஆரூடத்தின் துணையை நாடியதாகத் தெரிவித்தார். சிக்கல் சிங்கார வேலரை வணங்கி பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
லக்னம், ஆறு, ஐந்தாம் பாவங்களைக்கொண்டு ஆராய்ந்ததில், புதிய வேலைவாய்ப்பு நன்மை தருமென்பதே பிரசன்ன ஆரூடத்தின் பதிலானது. சோழி லக்னத்தின் பத்தாம் வீடும் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டியது. சாத சஞ்சார யோகத்தின் அமைப்பும் காணப்படுவதால், புதிய வேலை பயணம் தொடர்பானதாக அமையுமென்ற உண்மை புலப்பட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆண்டுகள் உருண்டோடின.
சில வருடங்கள் கழித்து கிருஷ்ணன் நம்பூதிரியை சந்தித்த அந்த இளைஞர் நன்றி கூறினார். கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஜோதிடத்தில் வருடம், ருது, மாதம், பட்சம், வாரம், ஹோரை என்று பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நுட்பமான ஒருமணிநேர கால அளவு கொண்ட ஹோரைதான் அனைத்திலும் வலிமை யானது. ஜனன காலத்து ஹோரா கிரகம் நல்லதைத் தரவேண்டிய கோள் என் றால், ஆயுள் முழுவதும் அதன் ஹோரைகளில் நன்மைகள் நடக்கும். முகூர்த்த நிர்ணயத்தில் ஹோரைக்கு லக்ன தோஷமோ, திதி தோஷமோ, கிழமை தோஷமோ, நட்சத்திர தோஷமோ, ராகுகால தோஷமோ, கரிநாள் தோஷமோ கிடையாது. ஹோரை அறிந்து நடப்பவனை யாராலும் ஜெயிக்கமுடியாது. சாயா கிரகங்களாகிய ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஹோரையின் வரிசையில் ஆளும் கிரகங்களாக வரும். ஒவ்வொரு நாளும், அந்த நாளின் அதிபதி ஹோரையை முதலாகக்கொண்டு, ஏழு ஹோரைகளும் வரிசைக்கிரமமாக அமையும். உதாரணத்திற்கு, ஞாயிறன்று உதய காலத்தில் சூரிய ஹோரையில் தொடங்கி, சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் அமையும். பிரசன்ன ஆரூடத்தில், பிரசன்ன காலத்து ஹோரையைக்கொண்டு பலனை நிர்ணயம் செய்யும் முறையே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
புத்திர பாக்கியம் உண்டா?
கேள்வி: திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை புத்திர பாக்கியம் இல்லாமல் கவலையுடன் வாழ்கிறேன். எனக்கு குழந்தைப்பேறுக்கான வாய்ப்புண்டா? அதற்கான பரிகாரத்தையும் கூறமுடியுமா?
-திருமதி சசிகலா, விழுப்புரம்.
(ஆருட எண்- 85; திருவோணம் முதல் பாதம்)
* சோழி லக்னத்திற்கு லாப ஸ்தானமாகிய பதினொன்றாம் வீட்டில் பிரசன்ன லக்னம் அமைவது நன்மை தருமென்றாலும், அது பாதக ஸ்தானமாகிறது.
* புத்திர ஸ்தானாதிபதியாகிய சுக்கிரன் சோழி லக்னத்திற்கு பாதகத்தில் அமைவது பின்னடைவைக் காட்டுகிறது.
* சோழி லக்னத்திற்கு ஐந்தில் ராகு அமைவதும் புத்திர தோஷம் தரும் அமைப்பென்றாலும், ஒரு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதை சுட்டிக் காட்டுகிறது.
* சோழி லக்னத்தில் நீசகுரு அமர்ந்து ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால், தடையும் தாமதமும் இருந்தாலும், குருவருளால் குழந்தை பாக்கியத்திலுள்ள தோஷங்கள் நீங்கும்.
* குருபகவான் சதயம் முதல் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தென்படும்.
பரிகாரம்
* திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணிக்கு அருகிலுள்ள புதுக்காமூரில் ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அந்த திருத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் நல்ல பலன் உண்டாகும்.
* ராகுவால் ஏற்படும் தோஷத்தைப் போக்க, கோவிலிலுள்ள வேம்பு மற்றும் ஆலமரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதும் மிக முக்கியம்.
(தொடரும்)
செல்: 63819 58636