புருவத்தின் நரைத்தமுடி அவர் வயதைக் காட்டியது. பிரசன்னம் பார்க்கவந்தவரின் முகத்தில் மரணபயம் குடிகொண்டிருந்தது. தான் ஓரளவு ஜோதிடம் அறிந்தவர் என்றும், தனக்கு ஆறாம் தசை நடப்பதாகவும், அதனால் ஆயுள் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் நடுக்கத்துடன் தெரிவித்தார்.
கிருஷ்ணன் நம்பூதிரி புன்னகைத்தார். "ஜோதிடத்தை முழுமையாக அறிந்தவருக்கு இந்த சந்தேகம் வராது. ஆறாவது தசை மாரக தசை என்றும், மரணத்தைத் தருமென்றும் எண்ணுவது அறியாமையே. ஆறாவது தசையில் கோடீஸ்வரரான ஜாதகர்கள் பலருண்டு. ஆயுர்தாயம் கணக்கின்மூலமே ஒருவரின் ஆயுளை நிர்ணயிக்கமுடியும். எண்பது வயதிற்குமேல் வாழ்பவர்கள், ஏழாவது தசையைக் கடந்து வாழும் வாய்ப்புண்டு. தங்கள் விருப்பப்படி பிரசன்னம் பார்த்து பலனறிவோம்'' என்று கூறி, ஷேர்தலா என்னும் தலத்தில் அருள்தரும் கார்த்தியாயினியைத் தொழுது, பிரசன்னத் தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.
சோழி லக்னத்தின் எட்டாம் பாவம் வலுவாக இருந்தது. இரண்டாம் வீடு பலமில்லாமல் இருந்தாலும் ஆயுளுக்கு இப்போது பிரச்சினையில்லை என்பது புரிந்தது. ஆனாலும், மரணபயம் நீங்குவதற்கு ஸ்ரீவாஞ்சியம் சென்று பரிகார பூஜைகள் செய்வது நல்லதென்று தெரிவிக்கப்பட்டது. குரு உபதேசமில்லாமல் புத்தகங்களை மட்டும் நம்பி ஜோதிடம் கற்பது தவறென் பதை பிரசன்னம் கேட்க வந்தவர் உணர்ந்தார். அவர் மனம் நிம்மதியடைந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒவ்வொரு ராசியும் பத்து பாகைகள் அடங்கிய மூன்று திரேக்காணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. பன்னிரண்டு ராசிகளுக்கும் மொத்தம் முப்பத்தாறு திரேக்காணங்கள் வருகின்றன. முதல் திரேக் காணத்துக்கு அந்த ராசிநாதனே அதிபனா கிறான். இரண்டாவது திரேக்காணத்துக்கு ஐந்தாவது ராசியின் நாதனும், மூன்றாவது திரேக்காணத்துக்கு ஒன்பதாம் ராசியின் நாதனும் அதிபர் களாகின்றனர். இந்த முப்பத்தாறு திரேக்காணங்களுக்கு சில பொருட்கள், சில தன்மைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. பிரசன்ன நேரத்திலும், ஜாதகனின் சரியான பிறந்த நேரத்தை நிச்சயிக்கும் சமயத்திலும் இவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
திரேக்காணத்தில் முக்கியமானது இருபத்திரண்டாவது திரேக்காணம். இது மரணத்தினைக் குறிக்கும் திரேக்காணம். திரேக்காணம் குறிக்கும் உறுப்புகள் என்பதும் தனியே உண்டு. ஆயுத திரேக்காணம், பாச திரேக்காணம், நிகள திரேக்காணம், சர்ப்ப திரேக்காணம் என இதன் பிரிவுகளைக் கொண்டு, அந்தந்த தசாபுக்திக் காலங்களில் உண்டாகும் நற்பலன்- தீயபலன்களைச் சொல்லலாம்.
மன நிம்மதி கிடைக்குமா?
கேள்வி: எனக்கு நாற்பத் தேழு வயதாகிறது. சில வருடங்களாக மன நிம்மதி யின்றித் தவிக்கிறேன். நான் கஷ்டப்பட்டு வளர்த்த குழந்தைகளும், கணவனும் என்னிடம் அன்பு காட்டுவதில்லை. என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள். எனக்கு என் குடும்பத்தாரின் அன்பு கிடைக்குமா? அதற்குப் பரிகாரம் உண்டா?
-திருமதி சியாமளா, தஞ்சை.
(பிரசன்ன ஆரூட எண்-9; கார்த்திகை 1-ஆம் பாதம்)
* சோழி லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் கிரக யுத்தம். இது தவிர, நான்காம் வீட்டு அதிபதியாகிய மனோகாரகனாகிய சந்திரன் கிரக யுத்தத்தில் சிக்கிக்கொண்டதால் மன சங்கடம் உண்டானது.
* சோழி லக்னத்திற்கு ஆறில் பிரசன்ன லக்னம் அமைந்ததால், உங்கள் மனம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
* சோழி லக்னத்திற்கு நான்கில் நீச செவ்வாய் இருப்பதால் பய உணர்வே மனக் கலக்கத்திற்குக் காரணமாகிவிட்டது.
* சோழி லக்னத்திற்கு எட்டில் கேது விருச்சிகத்தில் (இனப்பெருக்க மண்டலம்) வர்க்கோத்தமமாக இருப்பதால், பெண்களுக்கு நாற்பது வயதில் ஏற்படும் பருவகால மாற்றத்தால்(Menopause) மனம் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் மனத்தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
* ஏழாம் வீட்டதிபதி மூன்றில் இருப்ப தாலும், ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதாலும் கணவனாலும் பிள்ளைகளாலும் பிரச்சினை இல்லையென்பது தெளிவாகிறது.
* பெண் மருத்துவரின் சிகிச்சையால் பலன் உண்டாகும்.
* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனை வழிபட்டால் நலம்பெறலாம்.
(தொடரும்)
செல்: 63819 58636