ஒரு மழைக்காலத்து இரவில், குப்தன் நம்பூதிரி தன் குருவைக் காண நடைப்பயணம் மேற்கொண்டிருந்தான். வௌவால்கள் அவன் முகத்தில் அறைந்தன. தலை விரித்தாடும் பேய்களைப்போல் காட்சியளித்த ஆலமரங்கள், அவன் தைரியத்தை பலிவாங்கிக்கொண்டிருந்தன. எப்படியாவது தன் குருவிடம், தன் கையில் வைத்திருக்கும் "தேவி' பாகவதத்தின் ஓலைச்சுவடியைக் கொடுத்துவிடவேண்டும் என்ற உறுதியில், காற்றாய்ப் பயணப் பட்டுக் கொண்டிருந் தான். வழியில், வெண்மேகமாய் நின்றிருந்த ஒரு இளம் பெண் தன்னை வழித்துணைக்காக அழைப்பதை உணர்ந்தான்; சம்மதித்தான்.
இருவரும் பொதுவான விஷயங் களைக் கதைத்தபடி நடந்தார்கள். நேரம் செல்லச்செல்ல, சிரித்தபடி வந்த பெண்ணின் அழகை ரசித்தப்படி நடந்து கொண்டிருந்தான் குப்தன் நம்பூதிரி. தன் குருநாதரின் வீட்டு வாயிலில் அந்தப் பெண்ணை நிறுத்திவிட்டு, குருவைக் காணச்சென்றான்.
தன் சீடனின் முகத்தில் மாற்றமும், பேச்சில் படபடப்பும் இருப்பதைக்கண்டு சந்தேகமுற்றவர் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார். பிரசன்னப் பலகையில், சோழிகளை உருட்டி, பகவதியிடம் பதிலைக் கேட்டறிந்தார். பிரசன்ன லக்னத்திற்கு எட்டாம் பாவத்தின் தொடர்பு ஏழாம் பாவத்தில் விழுவதாலும், அது எட்டு தத்துவங்களில் பேய் தத்துவத்தைக் குறிப்பதாலும், தன் வீடு நோக்கி வந்தவர்களில், ஒருவர் தேகமுள்ள மனுஷ கணம். மற்றவர், தேகமற்ற இராட்சச கணமாகிய வனயட்சி என்பதையுணர்ந்தார். பிரசன்ன ஆரூடத்தின் பலனைக்கேட்ட சீடன் அதிர்ந்தான். சோட்டாணிக் கரை பகவதியின் பீஜாட்சர மந்திரத்தைக்கொண்டு உருவேற்றிய ரட்சையை, சீடனின் பாதுகாப்புக்காக தந்து ஆசீர்வதித்தார். மும்மூர்த்திகளுக்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தலைவியாக விளங்கும் சோட்டாணிக்கரை பகவதியின் அருளையும், பிரசன்ன ஆரூடத்தின் சிறப்பையும் எண்ணி மெய்சிலிர்த்துப் போன சீடன், ஆபத்து நீங்கி வீடு திரும்பினான்.
மலடியா? மழலை தவழுமா?
கேள்வி: புத்திர பாக்கியம் உண்டா?
துல்லியமாக பலன்களை அறிவதற்காக ஜாதகங் கள் பதினாறு அம்சங்களாக ஆராயப் படுகின்றன. ராசி என்பது ஜாதகரின் புகைப்படம் போன்றது. ஒருவரின் உள் உறுப்புகளில் உள்ள நோய்பற்றி அறிய மருத்துவர்கள், ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற பலமுறைகளில் கண்டறிவதுபோல், அம்ச சக்கரங்களால் மட்டுமே ஒவ்வொரு பாவத்தின் தன்மை மற்றும் அது ஏற்படுத்தும் விளைவு முதலியவற்றை உறுதியாகக் கூறமுடியும். அதில் நவாம்ச சக்கரம் மிகவும் முக்கியமானது.
நாடி அம்சம் காண்பது மிகவும் துல்லியமானது. ஒரு ஜாதகரின் செல்வத்தை ஹோரா லக்னம், ஸ்ரீ லக்னம் கொண்டும், உடன்பிறந்தவரின் நிலையை திரேக்காணத்தாலும், தொழிலை தசாம்சத்தைக் கொண்டும் அறியலாம். எல்லா அம்சங்களையும் கணக்கிட்டால் மட்டுமே, ஒரு ஜாதகத்தின் பலன்களை முழுமையாக அறியமுடியும். சில மணித்துளிகள் மட்டுமே ஜாதகத்தை ஆராய்ந்தால், துல்லியமான பலன்களைக் கூறமுடியாது என்பதே உண்மை. கேரள ஜோதிடத்தில் எல்லா அம்சங்களும், விசேஷ லக்னங்களும் ஆராயப்படுகின்றன.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
* பிரசன்ன ஆரூடத்தில், திரி ஸ்புடம்- சதுர் ஸ்புடம்- பஞ்ச ஸ்புடம்- சூட்சும திரி ஸ்புடம்- பிராண ஸ்புடம்- தேக ஸ்புடம்- ம்ருத்யு ஸ்புடங்கள் ஆராயப்படுகின்றன.
*பெண் ஜாதகங்களில், ஜென்ம நட்சத்திரத்தைக்கொண்டு, எட்டு விதமான தத்துவங்களில் வகைப் படுத்தி, குணாதிசயங்கள் அறியப்படுகின்றன.
*புண்ய ஸஹம்- மிருத்யு ஸஹம்- விவாஹ ஸஹம்- ராஜ்ய ஸஹம்- புத்ர ஸஹம் போன்றவற்றைக் கணிப்பதால், கோட்சாரத்தில் எந்த கிரகம், எந்த பாகையில் சஞ்சரிக்கும்போது, எந்தவிதமான சுப- அசுப நிகழ்வு கள் நடைபெறுமென்பது தெளிவாகும்.
*புத்திர பாக்கியத்தில் குறையிருந்தால். ஆண் ஜாதகத்தில் பீஜ ஸ்புடமும், பெண் ஜாதகத்தில் ஷேத்ர ஸ்புடமும் கணக்கிட்ட பின்னரே, யாரிடம் குறையுள்ளது என்ற முடிவுக்கு வருவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
*சோழி லக்னத்திற்கு பதினோறாம் பாவத்தில் மாந்தி அமைவதால், இந்த பிரசன்னம் வெற்றியைத் தருமென்பது உறுதியாகிறது.
*ஐந்தாம் பாவாதிபதி எட்டாம் பாவத்தில் மறைவது, புத்திர பாக்கியத்தில் தடையிருப்பதைக் காட்டுகிறது என்றாலும், ஐந்தாம் பாவத்தை குரு பார்ப்ப தால், பரிகாரத்தால் தடை நீங்கும் என்பதும் தெளிவாகிறது.
*பிரசன்னம் கேட்பவர் பெண்ணாக இருப்பதால், பாக்கியஸ்தானமாகிய ஒன்பதாம் இடத்தையும் ஆராயவேண்டியது அவசியமாகி றது. ஒன்பதாமிடத்தில் கேது இருப்பது, குடும்பத்திலுள்ள சாபத்தைக் காட்டுகிறது. அதனாலும் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படுகிறது.
*ஒன்பதாமிடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதே விதி.
* சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு என்பது ஜோதிட விதி. பிரசன்னத்தில், சுக்கிரன் ஆரோகணகதியில் உச்சவீட்டை நோக்கிச் செல்வதாலும், செவ்வாய் ஆட்சி வீட்டில் இருப்பதாலும் புத்திர பாக்கியம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.
* 5-ஆம் வீடு சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானதுதான்.
* பிரசன்னம் கேட்டது சுக்கிர ஓரையில்; கேட்பவர் பெண்ணாக இருப்பதால் சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும்.
*புத்திரகாரகனாகிய குருவின் ஆளுமை உள்ள வியாழக்கிழமையில் பிரசன்னம் கேட்கப்படுவதால், குருவின் நல்லாசிகள் உண்டு என்பது சாதகமான விளைவைக் காட்டுகிறது.
* குடும்ப சாபம் நீக்கும் பரிகாரங்களைச் செய்தால், குரு மீனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மழலை, கைகளில் தவழும்.
பரிகாரம்
* கிருஷ்ண அங்காரக சதுர்த்தசியில் விரதமிருப்பதால், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கொடிய சாபம் நீங்கும். (தேய்பிறை சதுர்த்தசி திதி, செவ்வாய்க்கிழமை சேர்ந்துவருமானால், அது கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி).
* பிரசன்ன ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் செவ்வாயின் வீடாகி, அதில் கேது அமர்ந்து, பாக்கியஸ்தானத்தில் தடை உண்டாக்குவதால், வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடிய பிறகு கோவிலில் தியானம் செய்யவேண்டும்.
*அமாவாசை நாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் குளித்தபின், கோவில் பிராகாரத்திலுள்ள இருபத்தியோரு தீர்த்தத்திலும் நீராடி, சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.