"அரசாங்க வேலை செய்தேன். ஓய்வுபெற இரண்டு நாள் இருக்கும்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். எனக்கு வரவேண்டிய ஓய்வூதியமும், சேமிப்புப் பணமும் கிடைக்கவில்லை.

Advertisment

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தேன். பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துப் போனவன் எனக்குப் பணம் அனுப்புவதில்லை. பத்து வருடமாக எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறான்.

அவனுக்குத் திருமணமாகவில்லை. சம்பளப் பணத்தை யாருக்கு அனுப்புகிறானென்று தெரியவில்லை.

எல்லா துன்பத்தையும் நீ அனுபவியென்று என் மனைவி போய்ச் சேர்ந்து விட்டாள்.

Advertisment

யாரும் என்னை மதிப்பதில்லை. உறவினர்கள் ஒதுக்கிவைத்துவிட்டார்கள். திக்கற்றவனுக்கு தெய்வமே துணையென்று கோவில் கோவிலாகப் போய்க் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏன் இந்த நிலை?'

இப்படிப்பட்ட துயர வாழ்க்கை வாழும் ஒருவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்தப் பலனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.ஒருவரின் உதய லக்ன, ராசிப்படி கிரகங்கள் அமரும்போது சுத்தமான சுகபோகங்களை வாழ்நாள் முழுவதும் வழங்கிவிடாது. கர்மா எடுத்து இந்த பூமிக்கு வருவதே செய்த வினையின் பலனை அனுபவிக்கத்தான். சந்தோஷமும் சங்கடமும் மாறிமாறித்தான் வரும்.

உதாரண ஜாதகர் பிறந்த தேதி: 8-4-1954.

பிறந்த நேரம்: காலை 6.28 மணி.

பிறந்த இடம்: மன்னார்குடி.

இதற்குத் துணையாக கிரகங்கள் அமர்ந்து பலனைத் தரும். இதை பரிகாரங்களால் மாற்றிவிட முடியாது. ஒருவரின் ஆன்ம நம்பிக்கை பரிகாரங்களால் திருப்திப்படுமேயொழிய தீர்வு கிட்டிவிடாது. "எறும்பு ஊர கல்லும் தேயும்' என்பார்கள். அதுபோல் வழிபட வழிபட நமது எண்ணங்கள் தூய்மைப்பட்டு, நமக்கு நற்பலன்கள் நடக்க ஏதுவாக அமையும்.

Advertisment

ஒருவரின் காலபுருஷ ராசியான மேஷமே ஜென்ம லக்னமாக வரும்போது, தைரிய, வீரிய, வெற்றி ஸ்தானமான 3, 6-க்குடைய புதன் பலவீணமடையக்கூடாது. மேஷம் என்றில்லை; பன்னிரண்டு ராசிகளுக்கும் வேலை, தொழில், வருமானம், நீடித்த நிலைத்த சுகபோக வாழ்க்கை, வெற்றி- தோல்வி நிர்ணயத்திற்கு புதன் முக்கிய காரணகர்த்தாவாக இருக்கிறார். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் வாக்கிய- திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, புதன் சூரியனோடு இணைந்தோ அல்லது சூரியனுக்கு முன்- பின் என மிக நெருக்கத்தில் இருக்கும் கிரகமாகும். சூரியனுக்கு அருகிலுள்ள கோள் புதன் மட்டுமேயாகும். கல்வி, கலை, மொழியாற்றலை வளர்க்கும் கிரகம் புதன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்திற்கு வலு சேர்ப்பது புதன் மற்றும் கர்மகாரகன் சனியுமாகும். புதன் பலவீனப்பட்டவர்கள் அரசு வேலை பார்ப்பதோ, அரசு வேலையில் நீடித்து நிலைப் பதோ சாதாரண விஷயமில்லை. "புதன் எனக்கு கெட்டிருக்கிறது; இருப்பினும் நான் அரசு வேலைதான் பார்க்கிறேன்' என்று யாராவது சொன்னால், அவர்களுக்கு குரு பார்வை கிடைக்கப்பெற்றிருக்கும்; இல்லாவிடில் லக்னத்திற்கு ஆதரவு சாரபலம் வாங்கி வலுத்திருக்கும்.

guru

நமது உதாரண ஜாதகருக்கு பூரட்டாதி 4-ஆம் பாத சாரத்தில் புதன் மீனத்தில் இருப்பது பலமா- பலவீனமா? புதனை குரு பார்க்கவில்லையென்றாலும், குரு சாரத்தில் புதன் நின்ற காரணத்தினால் அரசு வேலையில் குறிப்பிட்ட காலம் நீடிக்க முடிந்தது.

பிறகு ஏன் கடைசி தருணத்தில் அரசு வேலையின் முழுப்பலனையும் அடையமுடியாமல் செய்தது?

கர்மகாரகன் சனி கெடுதலுக்குக் காரணமாகிவிட்டார். 10, 11-ஆமிடத்து அதிபதியல்லவா? சுவாதி சாரத்திற்கு புதன் பெற்ற பூரட்டாதி ஐந்தாமிடத்தை குறிவைத்து எதிர்ப்பதால், அரசு வேலையின் பலனை ஜாதகருக்குக் கொடுக்கவில்லை. ஜாதகத்தைப் பார்க்கும்போது கிரகங்கள் நல்லவிதமாக அமர்ந்திருப்பதுபோல் தோன்றினாலும், பலன்களை பிழையின்றி, பழுதின்றி வழங்க சாரபலம் சரியாக இருக்கவேண்டும். ஆதிபத்தியங்கள் முரண்பட்டு புரண்டுவிடுவது இதனால்தான்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், ராகு எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் அல்லது சனி, செவ்வாய் சேர்ந்தோ, தொடர்போ கொண்டாலும் சகோதர- பங்காளி உறவுகள் பாதிப்படையும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் உருவாகும். உறவினர்களுடன் ஒட்டவிடாது. உறவினர்களுக்கு உதவி செய்தால் விசுவாசம் இருக்காது.

மேஷ லக்னத்துக்கு ஏழுக்குடைய சுக்கிரன் அஸ்வினி சாரத்தில் நிற்கும்போது, ரிஷப ராசிக்கு எட்டில் ராகு, செவ்வாய் இணைய, அந்த ராகு பூராட சாரம் வாங்கினால் என்ன? மனைவி பிரிவு அல்லது மனைவி இறப்பு என தாரதோஷத்தைச் செய்துவிடும். பொதுவாக திருமணப்பொருத்தம் பார்க்கும்போது ராசிக்கு 2, 8-ல் ராகு- கேது, செவ்வாய் இருப்பின் மிகுந்த கவனம் தேவை.

பொதுவாக யாருடைய ஜாதகத்திலும் பன்னிரண்டு ராசிகளில் குரு எந்த ராசியிலிருந்தாலும், அது பார்வை செய்யும் இடங்களான 5, 7, 9 என எந்த இடமாக இருந்தாலும் அதில் கிரகங்கள் இருக்க வேண்டும். அப்படி இருந்து குரு பார்த்துவிட்டால் தோஷம் நிவர்த்தியாகி அந்த பாவப் பலனை ஜாதகரால் முழுமையாக அனுபவிக்கமுடியும்.

குரு பார்க்கும் இடங்களில் கிரகங்கள் இல்லாமல் போவது துரதிர்ஷ்டமே. ஒரு கிரகம் குருவோடு சேர்வதைவிட, குரு பார்க்கும் இடங்களில் இருப்பது மிகமிகச் சிறப்பு. நமது உதாரண ஜாதகருக்கு குரு பார்வை செய்யும் இடங்களில் கிரகங்கள் இல்லை. எந்த பாவத்திலுள்ள கிரகத்தை குரு பார்வை செய்கிறதோ, அந்த பாவம் நிச்சயமாக விருத்தியம்சம் பெறும்.

தடையிருந்தாலும் முடிவை வெற்றியாக்கித்தரும் வலிமை குருவின் பார்வைக்கு உண்டு.

பெரும்பாலும் யாருடைய ஜாதகமாக இருந்தாலும் ராசிக்கு, லக்னத்துக்கு ஐந்தாமிடத்துக்குரியவர் யாரோ, அவர் நல்ல நிலையிலிருந்து, அவரை குரு பார்த்தால் பிள்ளைகளால் பெரும் நன்மை உண்டாகும். ஜாதகரின் கர்மகாரகன் பெற்ற நட்சத்திரத்திற்குப் பிள்ளையின் ஜென்ம நட்சத்திரம் பகைபெறாமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். இதில் செய்தவினையும் அடங்கியிருக்கும். எப்படி என்கிறீர்களா? உங்கள் தந்தையை நீங்கள் வயோதிகத்தில் நன்கு கவனித்து, அவர் மனம் புண்படாமல் கரைசேர்த்தீர்களா? அப்படியெனில் உங்கள் பிள்ளையும் உங்களை கவனிக்க எவ்வித மாறுபாடும் வந்துவிடாது. முன்னர் நடந்தது பின்னர் நடக்கும். முறைமாறாது வரும் ஊழ்வினை. ஐந்தாமிடத்தோன் பலவீனப்பட்டாலும், குரு பார்க்கும் இடத்தில் இருந்துவிட்டால் பிள்ளைகளால் பிரயோசனம் உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று நடக்கும். இவற்றைப் பகுத்துணர்ந்து பார்த்தே பலன்களை முடிவுசெய்ய இயலும். கொடுப்பதெல்லாம் நிரந்தரமில்லை; கெடுத்தாலும் வாழ்வை முடித்துவிடாது.

செல்: 73731 72593