ஜீவநாடி படிக்க சுமார் 55 வயதுடைய ஒரு அம்மாவும், சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணும் வந்திருந்தார்கள். அவர்களை அமரவைத்து. என்ன விஷயமாக நாடி படிக்க வந்துள்ளீர்கள் என்றேன்.
அந்த அம்மாள் ஐயா, இவள் எனது மருமகள். இவளுக்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் ஆகின்றது.
ஆனால் புத்திர பாக்கியமில்லை. இவளுக்கு கர்ப்பம் உண்டாகின்றது. ஆனால் மூன்று அல்லது நான்கு மாதங்களில் கூடிய கரு கலைந்துவிடுகின்றது. இதுவரை நான்கு முறை இதுபோல் நடந்துவிட்டது.
இந்த குறை தீர, மருந்து, மந்திரம், கோவில் பிரார்த்தனை, கிருத்திகை, சஷ்டி விரதம் என எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் எந்த பலனும் இல்லை. என் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர், தங்களிடம் சென்று ஜீவநாடியில் பலன் கேட்டால், அகத்தியர் இதற்கு காரணம் கூறி, ஏதாவது ஒரு வழி காட்டுவார் என்று கூறினார். அதனால்தான் தங்களை நாடி வந்தோம் என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி, இந்த தாய் மிகவும் நல்லவள். தன் மருமகளை, தன் சொந்த மகள்போல் பாசமாக பராமரித்து வருகின்றாள். ஆனால், மருமகளுக்கு கூடிய கரு கலையவும், இந்த அம்மாளே காரணமாகிவிட்டாள். இந்த தாய் செய்த தவறையும், கரு கலையும் காரணத்தையும் கூறுகின்றேன்.
இவள் கணவன் வம்சத்தில், முன்னோர்கள் காலத்தில், திருமணமாகாத ஒரு மகன், இவர்கள் வசித்த வீட்டிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து, இறந்துபோனான். அவன் இறப்பிற்குப்பின்பு, அந்த குடும்பத்திற்கு பலவிதமான கஷ்டங்கள் உண்டாகியது. கஷ்டம் தீர பலவிதமான பூஜை, வழிபாடுகளைச் செய்தார்கள். ஆனால் கஷ்டம் தீரவில்லை.
இவர்கள் வசித்த ஊரிலுள்ள, ஒரு பெரியவர் கனவில், இறந்துபோன அந்த மகன் ஆத்மா, தான் உயிர்விட்ட கிணற்றில் இருந்து ஒரு பிடி மண், ஒரு கல், ஒரு கமண்டலம் நீர், இலை மூன்றையும் எடுத்துவந்து, வீட்டில் தான் குறிப்பிடும் இடத்தில், அவற்றை வைத்து, தினமும் தீபமேற்றி, என்னை குலதெய்வமாக வணங்கி வரச்சொல், மேலும் வருடம் தவறாமல் தைமாதம் 1-ஆம் தேதி தைப்பொங்கல் நாளன்று, விடியற்காலை வீட்டின் வாசலில் பொங்கல் வைத்து, சூரியன் உதிப்பதற்கு 1 நாழிகை (24 நிமிடம்)க்குமுன்பு, வாசலில் நான் கூறுவதுபோல் பூஜை சாமான்கள் வைத்து, படையல் போட்டு, என்னை மனதால் பிரார்த்தனை செய்து வணங்கி, தூபம், தீபம் காட்டச் சொல். நான் பிறந்த வீட்டில் குலதெய்வமாக இருந்து, என் குடும்பத்தி னரை காப்பாற்றுகின்றேன். நான் கூறியபடி என்னை வழிபாடு செய்யாவிட்டால் ஏதாவது ஒரு சிரமம், கஷ்டம், தடைகளை அனுபவித்துக்கொண்டேதான் வாழ நேரிடும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathiyar_4.jpg)
இவர்கள் குடும்பத்தில் சிரமம், தடைகள் நீங்க, எந்த கோவில்சென்று வழிபட்டாலும், எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும், பலன் கிடைக்காது. எந்த தெய்வ சக்தியானாலும், முன்னோர்கள் வழிபட்ட வம்ச குலதெய்வமானாலும், என் அனுமதியின்றி. என் ஆத்ம சக்தியை மீறி, அந்த வீட்டில் நுழைய முடியாது. வாழ்வின் பாதியில் மாண்டு, பட்டுப்போன என்னை பட்டவனாக வைத்து வணங்கச் சொல்.
அந்தப் பெரியவர், தான் கனவில் கண்டதையும், கேட்டதையும், அந்த வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கூறினார். அவர்களும் மாண்டுபோன அந்த மகனின் ஆத்மா கூறியபடியே, அவன் உயிர்விட்ட கிணற்றில் இருந்து ஒரு பிடி மண்ணும், ஒரு கல்லும், நீரும் எடுத்துவந்து, கூறிய இடத்தில் வைத்து, குலதெய்வமாக வணங்கி வந்தார்கள். குடும்பம் குறைவின்றி செழிப்பாக வளர்ந்தது.
இந்த அம்மாளுக்கு இந்த விவரம் எதுவும் தெரியாது. இந்த மகள் திருமண சமயத்தில், வீட்டை சுத்தம் செய்கின்றேன் என்று கூறி, இங்கு ஏதோ ஒரு கல்லைப் புதைத்து, நட்டுவைத்து இருக்கின்றார்கள் என்று நினைத்து அந்தக் கல்லைப் பிடுங்கி வெளியில் வீசிவிட்டாள். இதனால் அந்த ஆத்மாவின் கோபத்திற்கு குடும்பம் ஆட்பட்டு விட்டது. தான் பிறந்த வீட்டில் தெய்வமாக இருந்து, பூஜைகள் பெற்றுவந்த அந்த மகன் ஆத்மா, இப்போது, அந்த வீட்டில் தன்னைப்போல், ஒரு வாரிசு, மகன் பிறக்காமல் தடுத்து வருகின்றது. அந்த மாண்ட மகனின் கோபம்தான் கருகூடினாலும் கர்ப்பத்தைக் கலைத்து விடுகின்றது.
இந்த தாய் வீசி எறிந்த கல் இவள் வீட்டில்தான் உள்ளது. அதை தேடி எடுத்து, அது இருந்த இடத்தில் வைக்கச்சொல். இவள் வாழவந்த வீட்டில் மாண்டுபோன அவனையும் மகனாக எண்ணி, தீபமேற்றி, வருடம் தவறாமல் படையல் போட்டு, வணங்கி வரச்சொல். மாண்டுபோன மகன் மறுபடியும் இவள் பேரனாக வந்து பிறப்பான். எந்த காரியம், செயல் தொடங்கினாலும், அவனை வணங்கிவிட்டு செய்யச்சொல். அவன் இந்த தாய்க்கு எப்போதும் துணையாக இருந்து, குடும்பத்தையே காப்பாற்றுவான் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து அகத்தியர் மறைந்தார்.
அகத்தியர் கூறியவற்றைக் கேட்ட அவர்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அகத்தியரை வணங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
பொதுவாக, எவர் ஒருவர் வீட்டிலாவது, இதுபோன்று விபத்துகளில் இறந்து போனவர்கள், வீட்டின் வெளியில் சென்று இறந்து போனவர்களுக்கு கல் நட்டோ, பட்டவன் எடுத்து வைத்தோ, நினைவிடம் வைத்து வணங்கி இருந்தாலும் அல்லது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு சமாதி வைத்து அடக்கம் செய்து இருந்தாலும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சிரமம், கஷ்டம், தடைகள் வரும்போது, கோவில் பிரார்த்தனை, பூஜை, வழிபாடு பரிகாரங்கள் பலிக்காது.
இந்த குடும்பத்தினர், வம்சத்தில் இறந்துபோன முன்னேர்கள் ஆத்மாவை முறையாக வழிபட்டால் மட்டும்தான் நன்மை கிடைக்கும். முன்னோர்களின் ஆத்மா வழிபாடுதான் ஆன்மா வழிபாடு, ஆன்மிக வழிபாடு, அகத்தியர் கூறிய தென்புலத்தார் வழிபாடு.
இறந்தவர்களுக்கு இப்போது நாம் செய்யும் இறந்த நாள், அமாவாசை திதி, வழிபாடு, தர்ப்பணம் தருதல் போன்ற செயல்கள் பணச் செலவைத்தான் தருமே தவிர எந்த பலனையும் தராது.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/agathiyar-t.jpg)