இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட சகல ஜீவராசி களைக் காட்டிலும் மனிதனே உயர்வானவனாகவும், உன்னதமானவனாகவும் மதிக்கப்படுகிறான். காரணம், மற்ற உயினங் களைக் காட்டிலும் தனக்குத்தானே கிரகித்து சிந்தித்து செயல்படும் இயல்பினராய் (?) மனிதர்களே உள்ளோம். இத்தகைய ஆற்றல் களைக்கொண்ட மனிதர்களால் தனக் குள்ளே மறைந்திருக்கும் ஜீவனான ஆன்மாவை அறியமுடிவதில்லை. அப்படி யார் தனக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்துகொள்கிறாரோ அவரே "ஞானி' யாகப் போற்றப்படுகிறார். ஆத்மா அல்லது ஆன்மாவை அறிந்து உணர்ந்தவர்களால் மட்டுமே மீண்டும் பிறவா நிலையான மோட் சத்தை அடையமுடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மற்றவர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கவேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொருவருடைய எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் கூட்டுத்தொகையே "கர்மா'வாக உருமாறி அடுத்த பிறப்பிற்கு வித்தாக மாறுகிறது என்பதை மறுப்பதற் கில்லை.
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் எப்போதோ- அதாவது பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட விஷயம். எதையும் நாம் முயற்சித்துப் பார்க்கலாமே தவிர, அதன் வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை.
"முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை' என்று சொல்லலாமே தவிர, முடி வென்பது யார் கையிலும் இல்லை. சாதிக்க வேண்டுமென்ற "விதி' இருந்தால் மட்டுமே சாதனையாளராக உருவாகமுடியும்.
கயிலையிலிலிருந்து கன்னியாகுமரிவரை எத்தனையோ பேர் சாதுக்களாகவும், சந்நியாசி யாகவும், சாமியார்களாகவும் தத்தமது நிலைகளுக்குத் தக்கவாறு இருக்கிறார்களே தவிர, இவர்களில் யாராவது ராம கிருஷ்ணரைப்போலவோ விவேகானந்தரைப் போலவோ- நமக்குத் தெரிந்த ஷேசாத் திரி சுவாமிகளைப்போலவோ பகவான் ரமண மகரிஷி போன்றோ காஞ்சிப் பெரியவ ரைப்போலவோ ஏன் ஆகமுடியவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் எல்லாம் முன்னர் செய்த புண்ணியத்தின் பயனாய் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நிலையில் பிறந்து மகான்களாகப் பரிண மிப்பார்கள் என்று பிறக்கும்போதே நிர்ணயிக் கப்பட்ட விஷயம் அது.
இப்போதுள்ளவர்களில் பெரும் பாலானோர் அவர்களின் எல்லைக் கோட்டை மட்டுமே தொட முயல்கிறார்கள். அவர்களைப்போல இவர்கள் எதையும் இழக்கத் தயாரில்லை. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஆன்மாவை அறிந்தவர்கள்.
சொத்தாலும் சுகத்தாலும் எந்தப் பயனு மில்லை என்று உணர்ந்தவர்கள்.
இந்த உலகில் உண்மையும் இல்லை; பொய்யும் இல்லை. பிரபஞ்ச சக்தி மட்டுமே உண்மையென்று அறிந்து அமைதியாய் இருந்தவர்கள்.
அன்பு ஒன்றே இறைவனின் பிறப்பிடம் என்று அறிந்து அனைவரிடமும் அன்பு காட்டினார்கள். அப்படி அன்பால் ஈர்க்கப் படுவதால் மட்டுமே இவர்களைப் போன்றவர்களை நாம் இன்றும் நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
எதுவுமே இல்லாமல் வாழ்ந்து மறைந்த வர்களிடத்தில்தான் நாம் இன்றும் "இதைக் கொடு; அதைக்கொடு' என்று பிரார்த்தனை வைக்கிறோமே தவிர, நாம் அனுபவிப்பதெல்லாம் நம் கர்மவினை; அதை அனுபவித்து முடிப்போம் என்ற பக்குவ நிலை இன்னும் மக்களாகிய நமக்கு வரவே இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அப்படி ஒருநிலை வந்து விட்டால் எந்தக் கோவிலிலிலும் கூட்டம் அலைமோதாது. இருக்கின்ற கோவில்களே போதும் என்ற நிலை வந்துவிடும்.
அறிவில் மிக வளர்ந்தாலும் நம்மை உணர்வதில் பின்தங்கியே இருக்கிறோம். நம்மை நாம் உணர்ந்துகொள்வதென்பது அவ்வளவு சுலபமல்ல. நாளை என்ன நடக்கு மென்பதைத் தெரிந்துகொள்ள இயலாத நிலையில் இருக்கும்போது, நம்மை நாம் உணர்ந்துகொள்வது எல்லாருக்கும் கைவந்த கலையாக இருக்க வாய்ப்பில்லை.
நாம் எல்லாரையும் சந்தேகக் கண் ணோட்டத்தில் பார்த்தே பழகிவிட்டதால் அன்பென்ற வார்த்தைக்கும் அர்த்தமில் லாமல் போய்விட்டது.
அறிவு வளரவளர அன்பு குறைந்து கொண்டே வருகிறது.
அறிவால் அன்பு வளராது என்ற உண்மை பலருக்குப் புரியவில்லை.
அன்புக்கு எல்லையே இல்லை. அறிவுக் கிருக்கும் மதிப்பைவிட அன்பிற்கிருக்கும் மதிப்பு ஆழமானது.
மனிதனை மனிதன் புரிந்துகொள்ளாத வரை மற்ற உயிரினங்கள்மீது ஆழமாக அன்பும் கருணையும் செலுத்த இயலாது.
இயற்கையானது எத்தனையோ விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.
அதையெல்லாம் முற்றிலும் அறிந்தவர்கள் இப்போது இல்லை.
உதட்டளவில் உச்சரிக்கும் மந்திரத்தை விட உள்ளத்தில் இருக்கும் அன்பானது மிக சக்தி வாய்ந்தது. அதனால்தான் "மௌனமாயிரு, என்றார்கள்.
எத்தகைய கடவுளைக் கும்பிட்டாலும், தூய்மை இல்லாத மனதுக்கு எப்போதும் குறை இருந்துகொண்டே இருக்கும்.
ஜாதகத்தின் பலன் மாறலாம். ஆனால் கர்மாவின் கணக்கு தப்புவதே இல்லை.
கணிதம் தெரிந்தவர் ஜோதிடராகலாம். ஆனால் வாக்குப்பலிலிதம் இல்லாதவர் பிரபலமாவதில்லை. சாமியாராவது சுலபம். நல்ல மனிதனாவது சிரமம்.
அதிகம் படித்தவரைவிட உண்மையை உணர்ந்தவர்களே சத்தமில்லாமல் சாதிக் கிறார்கள்.
இயற்கையின் சக்தியானது எல்லாரையும் அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கும் போது, அவரவர் கர்மாவானது அதற்குள் செல்லத் தடுக்கிறது.
இறைவனால் படைக்கப்பட்ட எத்த னையோ ஜீவராசிகளுக்குள்ளும் நல்ல ஆத்மா அடைபட்டுக் கிடக்கிறது. பிறந்த திலிலிருந்து சாகும்வரை எதையுமே தீண்டாத எத்தனையோ பாம்புகள் உண்டு.
சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் பிராணிகளும் உண்டு.
இத்தகைய ஆற்றல்கள் உள்ள சக்திகளை பலர் உணருவதே இல்லை. அப்படியே உணர்ந்து கொண்டாலும் பரிபூரணமாக உள்வாங்குவதில்லை. அப்படியே உள்வாங் கினாலும் அதன்படி நடப்பதில்லை. அப்படியே நடந்துகொள்ள முயற்சித் தாலும் அவரவருடைய கர்மா தடுத்து விடுகிறது.
நாம் இன்று போடும் விதையே நாளைய பிறப்புக்கும் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது.
ஒவ்வொருவருடைய எண்ணம், சொல், செயல்தான் தெரிந்துகொள்ள முடியாத தலைவிதியாக- கர்மாவாக விளங்குகிறது.
எந்த ஒரு செயலும் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை.
நீதி, நேர்மை, நியாயம், சத்தியம்- இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவை எப்படி வேண்டுமானாலும் இயல்பு மற்றும் சூழ்நிலைக்கேற்ப வளைந்துகொடுக்கும் இயல்புடையவை.
ஆனால் தர்மம் என்ற ஒன்றுமட்டுமே எதற்கும் அஞ்சாமல் நிலையாக இருப்பது. இதனுடைய செயல்பாடு தன்னைத்தானே அழித்துக் கொண்டாலும் சுயம்புவாகப் பரிணமிக்கும். அதையறிந்து- உணர்ந்து கொள்ளுதல் என்பது சுலபமல்ல.
நீதி, நேர்மை, நியாயம், சத்தியம் ஆகியவற்றின் பலனை வாழும்போதே அனுபவிக்கலாம். ஆனால் தர்மத்தின் பலனை பின்னாளில்தான் அனுபவிக்க முடியும்.
சுவற்றில் அடிக்கப்பட்டுத் திரும்பிவரும் பந்தைப்போன்றது நம் வாழ்க்கை. மரணம் என்ற சுவரில் பட்டுத் திரும்பவும் பிறப்பெடுக் கக் காரண கர்த்தாவாக விளங்குவது கர்மா என்ற ஒன்றுதான்.
ஒவ்வொருவருடைய எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் கூட்டுத்தொகையே அடுத்த பிறப்புக்கு ஆணிவேர்!
இதை உணர்ந்து கொண்டவர்கள் ஞானிகள். உணர முற்பட்டு அதில் இன்பம் கண்டவர்கள் சித்தர்கள்.
அறியாமலும் உணராமலும் வாழ்பவர் களே நம்மைப் போன்ற சாதாரண மக்கள்!
இத்தகைய ஆத்மாவை எப்படிப்பட்ட நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதை இறைவன் நம் கையிலேயே ஒப்படைத்து அனுப்பியுள்ளான்.
எனவே அவரவர் ஆத்மா அவரவரது கையில்! நம்மை இயக்குவது கர்மா!
செல்: 96552 69723