னி மனிதர்களை சமூகக் குழுக்களாக இணைப்பது உறவுமுறையாகும். மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும் உறவுகளுண்டு. உறவுகளில்லாத மனிதர்கள் உலகில் இருக்கமுடியாது. ஏன்- உறவுகள் இல்லாமல் மனிதன் பிறக்கவே முடியாது. மனிதர்கள் பிறக்கும்போதே தாய்- தந்தை, சகோதரர்கள், தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் என பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்துகொண்டு செல்கிறது. வேலை, குடும்பம், சுற்றம், உற்றார்- உறவினர் என்று பலநிலைகளில் பலவிதமான உறவுகள், நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நம் வாழ்க்கையின் அங்க மாகிவிடுகின்றன.

எத்தனைவிதமான உறவுகள் இருந்தாலும் சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதேவேளை, வேறுசில உறவுகள் மேம்போக்கானவையாக இருக்கின்றன. வாழ்க்கையில் உறவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தைப் பார்க்கும்போது, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உறவுகள்தான் நிர்ணயிக்கின்றன என்றே நினைக்கத் தோன்றும். எல்லா உறவுகளுக்கும் ஒரே அடிப்படைக் காரணம்தான் உள்ளது. ஒன்று, உங்களுக்கு உறவுகளிடம் ஏதோவொரு தேவையிருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்ற உறவுகளைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். அல்லது தங்களது தேவையை நிறைவு செய்து கொள்ள உறவுகள் உங்களைப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

ஏனெனில் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழவேண்டியது காலத்தின் கட்டாயம். அதாவது கொடுக்கல்- வாங்கல் என்ற உதவி இருந்தால் மட்டுமே அனைத்துயிர்களும் ஜீவிக்க முடியும். எனவே மனிதர்கள் உறவு களை உருவாக்கிக்கொள்வதன் பின்னணியில் இருப்பது அவர் களுடைய தேவைகள்தான். அவை பொருள் தேவைகள், மனதின் தேவைகள் என்று பலவிதமாக உள்ளன. அதற்கேற்ப உறவுகளும் பலவிதம்.

உங்களின் ஒரு தேவையை நீங்கள் விரும்பும் உறவு நிறைவேற்றாத போது அந்த உறவில் வெறுப்பு உருவாகி பிடித்தம் குறைந்துவிடுகிறது. இதுவரை கூறிய அனைத்தும் உளவியல் ரீதியாக- சமூகரீதியாக அனைத்து மனிதர்களுக்கும் நடக்கும் பொதுவான பிரச்சினை.

Advertisment

காரகோ பாவக நாஸ்தி

ஜோதிடரீதியாக உறவுகளுக்குள் நிகழும் பயனற்ற நிலையை "காரகோ பாவக நாஸ்தி' என்று கூறலாம். ஒரு ஜாதகத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் ஒரு காரக கிரகம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் அந்த ஸ்தானத்திற்குரிய கிரகம் நின்றால் "காரகோ பாவக நாஸ்தி' என்று கூறப்படும். இவ்வாறிருந்தால் அந்த கிரகத்திற்குரிய காரகம் பாதிக்கப்படுமென்பது பொதுவான விதியாகும். மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும் ஐந்துவித உறவுகள் மிக முக்கியம். தந்தை- தாய், உடன்பிறப்பு, வாழ்க்கைத் துணை, பெற்ற பிள்ளைகள். இந்த ஐந்து உறவுகளும் வாழ்வின் இறுதிவரை தொடரும் உறவுகள்.

அதன்படி 9-ஆம் பாவகம் எனும் தந்தை ஸ்தானத்தில் சூரியன் அமர் வதும், 4-ஆம் பாவகம் எனும் மாதுர் ஸ்தானத்தில் சந்திரன் அமர்வதும், 3-ஆம் பாவகம் எனும் சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதும், 7-ஆம் பாவகம் எனும் களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதும், 5-ஆம் பாவகம் எனும் புத்திர ஸ்தானத்தில் குரு அமர்வதும் காரகோ பாவக நாஸ்தி என்றும், அந்த உறவுகளால் பயனிருக்காது என்பதும் பொதுவான ஜோதிட விதி. சிலர் விதியை மட்டும் பயன்படுத்திப் பலன்கூறி வருகிறார் கள். இதிலுள்ள விதிவிலக்குகள் பற்றி சிந்திப் பதும் முக்கியம்.

Advertisment

காரகோ பாவக நாஸ்தி விதிவிலக்கு

காரக கிரகம் தங்கள் பாவகங்களில் அமர்வது காரகோ பாவக நாஸ்தி என கூறப்படுகிறது. காரகோ பாவக நாஸ்தியில் கிரகங்கள் ஆட்சி, உச்சம்பெறுவது தோஷத்தைத் தராது. லக்னத் திற்கு 3, 4, 5, 7, 9-ஆமிடங்களில் ஆட்சி, உச்சம்பெறும் கிரகங்கள் முறையே செவ்வாய், சந்திரன், குரு, சுக்கிரன், சூரியன் காரகோ பாவக நாஸ்தியைத் தராது.

காரகோ பாவக நாஸ்தியிலுள்ள கிரகங்கள் உயிர் காரகத்துவத்தை மட்டும் பாதிக்கும். பொருள் காரகத்தை பாதிக்காது. காரகோ பாவக நாஸ்தி பெற்ற கிரகத்தின் தொடர்பைப்பெற்ற ராகு- கேதுக்கள் அந்த தோஷத்தை எடுத்துச் செய்வார்கள். இதை மேலும் விரிவாகப் பார்க்கலாம்.

bb

தந்தை

மனிதனுக்கு உயிர்கொடுத்த உறவு தந்தை. ஜென்ம லக்னத்திற்கு 9-ஆமிடம் தந்தை ஸ்தானம். தந்தைக் காரகன் சூரியன். ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதியுடன் சூரியனும் பலம்பெற்றிருந்தால் தந்தையின் அனுக்கிரகம் உண்டு. இதன்படி தனுசு லக்னத்திற்கு சிம்மத்தில் ஆட்சிபெறும் சூரியனும், சிம்ம லக்னத்திற்கு 9-ஆமிடமான மேஷத்தில் உச்சம்பெறும் சூரியனும் ராகு- கேது சம்பந்தம் பெறாதவரை சிறப்பான நல்ல பலனைத் தரும். தந்தையின்மூலமாக தாராள தனவரவு உண்டாகும். தந்தையால் கௌரவம், குலத்தொழில்மூலம் வருவாய், பூர்வீகச் சொத்துகள் என அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்கும். பிற லக்னத்திற்கு 9-ல் சூரியன் அமர்ந்து, சூரியன் அமர்ந்த வீட்டதிபதியும் கெட்டால் தந்தையால் பயனிருக்காது.

பரிகாரம்

காரகோ பாவக நாஸ்தியால் தந்தையால் பயன்பெற முடியாதவர்கள் 27 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00-7.00 மணிவரையிலான சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்துவர தந்தையின் அன்பு, அனுசரணை, உதவிகள் தேடிவரும்.

தாய்

மனிதனுக்கு உடல்கொடுத்த உறவு தாய். ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 4-ஆமிடம் தாய் ஸ்தானமாகும். மாதுர் ஸ்தானமான நான்காமிடத்தில் மாதுர்காரகன் சந்திர பகவான் அமர்ந்தால் தாய் ஸ்தானத்தை மட்டும் பாதிக்கும் வாய்ப்புண்டு. இதிலும் சில விதிவிலக்குண்டு. அந்த நான்காம் வீட்டதிபதி பலம்பெற்று, நான்காமிடத்தை சுப கிரகங்கள் பார்க்கும் பட்சத்தில் காரகோ பாவக நாஸ்தி அதிகமாகத் தருவதில்லை.

2-ஆமதிபதியும் 4-ஆமதிபதியும் இணைந்திருந்தாலும், பரிவர்த்தனைப் பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றாலும், இருவரும் இணைந்து பலம்பெற்றாலும் தாய்வழியில் அனுகூலங்கள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளின் சேர்க்கை அதிகரிக்கும். ஸ்திர சொத்துகள்மூலம் வாடகை வருமானம் உண்டாகும். கற்ற கல்வியால் நன்மையுண்டாகும்.

அதுபோல தாய் காரகன் சந்திரன் 2, 4-க்கு அதிபதிகளுடன் இணைந்து பலமாக அமையப்பெற்றால் தாய்வழியில் நல்ல அனுகூலம், மிகுந்த பலன்கள் உண்டாகும். தாய்வழிப் பூர்வீகச் சொத்துகள், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை பாக்கியங்கள் கிடைக்கும்.

பரிகாரம்

4-ஆமிட சந்திரனால், காரகோ பாவக நாஸ்தியால் தாயிடம் மனபேதம் உள்ளவர்கள் 21 வாரம் திங்கட்கிழமை காலை 6.00-7.00 மணிக்குள் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட அன்னையின் ஆசியும் உதவியும் தேடிவரும்.

சகோதரர்

ஒரு மனிதனுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் உடன்பிறப்பு என்ற பந்தம் மனதில் தெம்பையும், தைரியத்தையும் தரும் தொப்புள்கொடி உறவு. "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்; தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பது பழமொழி. இதன் பொருள், ரத்தபந்த உறவுகளுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், உடன்பிறந்தவருக்கு ஆபத்தென்றால் உள்ளுணர்வு சகோதரரின் மன வருத்தத்தைத் தெரிவிக்குமாம்.

ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 3-ஆமிடம் இளைய சகோதர ஸ்தானம். 11-ஆமிடம் மூத்த சகோதர ஸ்தானம். சகோதர ஸ்தானமான 3, 11-ஆமிடத்தில் தனித்து ஆட்சி, உச்சம்பெற்ற செவ்வாய் காரகோ பாவக நாஸ்தியைத் தராது. உடன் பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள், ஏற்றங்கள் உண்டாகும். செவ்வாய் வலுப்பெற்று 3, 4, 11-ஆமதிபதிகள் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் உடன்பிறந்தவர்கள் வகையில் அனுகூலங்கள், அசையா சொத்து யோகம், கூட்டுத் தொழில் யோகம், தாராள தனச் சேர்க்கை, உதவிகள் உண்டு. செவ்வாய் நின்ற 3, 11-ஆம் வீட்டு அதிபதி பாதிக்கப்பட்டால், செவ்வாய்க்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால், காரகோ பாவக நாஸ்தி சகோதர ஸ்தானத் தில் மட்டும் பாதிப்பை உண்டாக்கும்.

பரிகாரம்

ஜனனகால ஜாதகத்தில் செல்வாயும் 3, 11-ஆமதிபதியும் பலவீனமாக இருந்தால் 27 வாரம் செவ்வாய்க்கிழமை காலை 6.00- 7.00 மணிவரையிலான செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அரளிமாலை அணிவித்து வழிபட உடன்பிறப்புகள் ஒன்றுகூடி மகிழ்வார்கள்.

வாழ்க்கைத் துணை

ரத்தபந்தம் அல்லாத, நட்பிற்காக- அன்பிற்காக வாழ்வின் இறுதிவரை தொடரும் உறவு வாழ்க்கைத் துணை. வாழ்வின் ஏற்ற- இறக்கத்தில் தோள்கொடுத்து உதவும் உறவு களத்திரம். ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் பாவகம் களத்திர ஸ்தானமாகும். பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகம் செவ்வாய். ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன். ஆண் ஜாதகத்தில் சுக்கிரனும் 7-ஆமதிபதியும் பலமாக இருந்தால் மனைவிமூலமாக தாராளமான தன வரவுகள், உதவிகள் உண்டாகும். திருமணத்திற்குப்பிறகு அனைத்துவிதமான வசதிகளும் கிடைக்கப் பெறும். வாழ்க்கை வசந்தமாகும்.

உதாரணமாக மேஷ லக்னத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7-ஆமிடத்தில் நின்றிருந்தால் அது காரகோ பாவக நாஸ்தியல்ல.

அங்கே சுக்கிரன் நிற்பது மனைவிவழியில் ஜாதகருக்கு நன்மை தரக்கூடிய அமைப் பாகும். திருமணத்திற்குப்பிறகு தொழில், உத்தியோகரீதியான மாற்றங்கள் உண்டாகும். ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்வார்கள்.

பரிகாரம்

சுய ஜாதகத்தில் ஏழாமிட சுக்கிரனும் 7-ஆமதிபதியும் பலமிழந்த ஆண்கள் 11 வெள்ளிக்கிழமை காலை 6.00-7.00 மணிவரையிலான சுக்கிர ஓரையில் விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து வழிபட மனைவியின் அன்பும் உதவியும் கிடைக்கும்.

குழந்தைகள்

உலகில் மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பிறவிப்பயனை அடையவும், தங்களது வம்சம் தழைக்கவும் தமது வாரிசுகளை விருத்திசெய்ய வேண்டும். ஒரு மனிதன் தான் வாழ்ந்ததற்கு அடையாளமாக பூமியில் விட்டுச்செல்லும் தடயம் வாரிசுகள். லக்னத்திற்கு ஐந்தாம் பாவகம் புத்திர ஸ்தானமாகும். ஒரு ஜாதகத்தில் புத்திர காரகன் குரு பகவான் புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளில் பலம்பெற்றிருந்தால் காரகோ பாவக நாஸ்தியை உண்டாக்குவதில்லை.

உதாரணமாக, மீன ராசிக்கு ஐந்தாமிடமான கடகத்தில் உச்சம்பெறும் குருவும், விருச்சிகத்திற்கு 5-ஆமிடமான மீனத்தில் ஆட்சிபெற்ற குருவும் அசுப கிரக சம்பந்தமில்லாதவரை காரகோ பாவக நாஸ்தி என்ற பிரிவில் வருவதில்லை.

காரகோ பாவக நாஸ்தியென்பது ஒரு பொதுப்பலனாகும். ஆனால் அதேநேரத்தில் சிறப்புவிதி என்ற வகையில் அந்த ஸ்தானத் தைப் பார்க்கும் மற்றும் சேர்ந்திருக்கும் கிரகங்களைப் பொருத்தும் பலன்களில் மாறுபாடு ஏற்படும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. ஒரு பாவகம் காரகோ பாவக நாஸ்தியடைந்தாலும் அந்த பாவகாதிபதி நல்ல நிலையில் இருந்தால், அந்த பாவகம் சார்ந்த நற்பலன்கள் உண்டு. எனவே ஜாதகத்தில் விதியைக் கொண்டு ஆராய்ந்தாலும், அந்த மூலவிதிக்குள் உள்ள விதிவிலக்குகளையும் ஆராய்ந்து பார்த்துப் பலன்சொல்ல வேண்டும்

பரிகாரம்

5-ஆமிட குருவால் காரகோ பாவக நாஸ்தியை அனுபவிப்பவர்கள் வியாழக் கிழமை குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

செல்: 98652 20406