இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு கிரகம் தன் ஆட்சிவீட்டிற்கு பாதக ஸ்தானங்களில் அமர்ந்தால் தீய பலனையே தரும். உதாரணத்திற்கு,செவ்வாய் ,தன் ஆட்சிவீடுகளில் பகல் வீடாகிய மேஷத்திற்கு (சரம்) பதினோறாவது வீடாகிய கும்பத்திலிருந்தால், செய்தொழில் தொடர்பான பாதகத்தைத் தருவார்.
இரவு வீடாகிய விருச்சிகத்திற்கு (ஸ்திரம்) ஒன்பதா மிடமாகிய கடகத்தில் அமர்ந்தால்,குடும்ப மகிழ்ச்சியைக் குலைப்பார். பொதுவாக, பாதக ஸ்தா னங்களில் அமையும் கிரகங்கள், தன் சுய தசையில், பாதக ஸ்தானாதிபதியின் புக்தியில் தீயபலனையே தருவர் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""காலமூர்த்தியே! மனிதர்கள், தங்கள் அறிவால் எதையும் அடையமுடியும் என்னும் அகங்காரத்தால் ஞானத்தைப் புறக்கணிக்கிறார்கள். அறிவையும் ஞானத்தையும் பகுத்துணரும் உபாயத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை கற்பகாம்பாள் பேளூர் எனும் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
பிட்சாடனர் உரைத்தது- ""ஆதவனின் ஒளியால் உலகைக் காணுகின்ற மனிதன் ,எதன் ஒளியில் ஆதவனைக் காணுகின் றான்? தானே தன்னைக் காட்டிக் கொள்வதே ஞானம். அகங்கார முடையவன் அறிவால் தன் அகங்காரத்தை உணரமுடிவ தில்லை. ஞானம் கண் போன்றது.
அறிவு கால்களாக இயங்கும். பார்வையே முன் செல்லும். பஞ்சேந்திரியங்களின் துணையில்லாமல் சொப்பனத்தில் இயங்குவதே ஞானம் . தொலைவில் தெரியும் புழுதியை புகை யென்றெண்ணி ஏமாறுவதே அறிவு. அறிவால் மரணத்தை வெல்லமுடியாது. ஞானமோ மரணமில்லை என்பதை அறியும்.''
""தாண்டவமூர்த்தியே! "பர ஸர்ப்பிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், மிருகசிரீடம் நான்காம் பாதத்தில் சனியும், சித்திரை இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், ஸ்வாதி மூன்றாம் பாதத்தில் புதனும் குருவும் சேர்ந்திருக்க, அனுஷம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், அனுஷம் நான்காம் பாதத்தில் சூரியனும், பூராடம் நான்காம் பாதத்தில் சந்திரனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என தாரமங்கலம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் இலமீஸ்வரரை அன்னை தையல்நாயகி வேண்டிப் பணிந்தாள்.
சம்ஹார மூர்த்தி உரைத்தது- ""பராசக்தியே! இந்த ஜாதகன் வாலையூர் எனும் ஊரில், ஒரு வணிகக் குடுமபத்தில் பிறந்து, சத்தியன் என்ற பெயர் பெற்றான். பெற்றோரின் காலத்திற்குப் பின், தானே குடும்ப சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்றான். தன்னிடம் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு சரியான ஊதியம் தராமல் ஏமாற்றினான். உரிய ஊதியம் பெறாத உழைப்பாளிகள் விரக்தியுற்றனர்.
தர்மத்தாய் வேதனையுற்றாள். அவன் மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கவில்லை. வாத நோயின் பிடியில் சிக்கினான். நெடுங்காலம் துன்புற்றபின் இயற்கை எய்தினான். அவனுயிர் எமனுலகம் சென்றது. ரௌரவாதி எனும் நரகத்தில் தண்டிக்கப்பட்டான். பல நாட்கள் துன்புறுத்தப்பட்டபின், பூதவுடலெடுத்துப் பூவுலகில் புகுந்தான். ஜனனகாலம்முதலே நோயால் அவதியுறுகிறான். * சுக்கிர நீதியில் கூறியபடி, உழைத்தவருக்கு ஊதியம் கொடுத்திருந்தால் இந்த கதி நேர்ந்திருக்காது. ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் சாபம் நீங்கும்.''
* சுக்கிர நீதி: பணியாட்களுக்குக் கொடுக்கும் வேதனத்தைக் (கூலி)குறைப்பது அநீதி என்பதைச் சுட்டிக்காட்டும் நூல்.
(வளரும்)
செல்: 63819 58636
_____________
நாடி ரகசியம்
1. திருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும் சந்திரனும் சேர்ந்திருக்க, சகலகலா வல்லவனாகத் திகழ்வான்.
2. திருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் குருவும், உத்திரம் முதல் பாதத்தில் புதனும் இருந்தால், எப்போதும் பிறருடன் பகை உண்டாகும்.
3. திருவோண நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சனியும், பூசம் நான்காம் பாதத்தில் சந்திரனும் இருக்க, ஜாதகர் வாழ்வு முழுவதும் துன்பப்படுவார்.
கேள்வி : கொள்ளை நோய் எனப்படும் தொற்று நோய்கள் உருவாவதன் காரணத்தை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: பொதுவாக பதினோறாவது பாவம் ஜாதகரின் சமுதாயத்தொடர்பை சுட்டிக்காட்டும். சமுதாயத்திலிருந்து எதை இலவசமாகப்பெற்றாலும் ஜாதகரின் இரண்டு, ஆறு, பதினோறாவது பாவத்தைக்கொண்டு அறியமுடியும். நன்கொடையாக இருந்தாலும், நோயாக இருந்தாலும், அடிப்படை விதி ஒன்றே. ஒருவர் ஜாதகத்தில் 2, 6, 10-ஆம் பாவங்கள், சனி மற்றும் செவ்வாய் தொடர்பிலிருந்து, சந்திரனும் பலவீனமடைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். காலபுருஷ லக்னமாகிய மேஷத்திற்கு 4, 8, 12-ஆம் வீடுகளில் சூரியன் சஞ்சரிக்கும் காலங்களில் (ஆடி, கார்த்திகை, பங்குனி) தொற்று நோய்கள் வேகமாகப் பரவுவதற்கான காலம். பொதுவாக, கடகத்திலும் மகரத்திலும் பிணிகாரகனாகிய சனி சஞ்சரிக்கும் காலங்களில் உலகைக் கொள்ளை நோய்கள் ஆட்கொள்ளும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.