இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
"ஒரு மரத்தின் இலை, கிளை, பூ, காய், கனிகள் மட்டுமே வெளியில் தெரிந்தாலும், மரத்திற்கு ஆதாரமான வேர் கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோல மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே நமக்குத் தெரிகின்றன. ஆனால் அதற்குக் காரணமான முன்ஜென்ம கர்மவினைப் பயன் என்ற ஆணிவேர் நமக்குப் புலப்படுவதில்லை' என்பதே கந்தர்வ நாடி நமக்கு சுட்டிக்காட்டும் உண்மை.
""முக்காலமும் உணர்ந்த ஞானிகளுக்கே குருவாய் விளங்கும் ஐயனே! இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் நல்வழி காட்டியருளினால், எல்லா உயிர்களும் பிறவிக்கடலைக் கடக்க முடியுமன்றோ! அவ்வாறில்லாமல் சிலர் மட்டுமே ஜீவன்முக்தி அடையக் காரணம் என்ன?'' என்று பராசக்தி சிவபெருமானிடம் ஐய வினா எழுப்பினாள்.
நீலகண்டன் தெளிவுபடுத்தியது- ""உமையவளே! இந்த யுகத்தில் பல கர்மயோகிகள் அவதரித்து மக்களை நல்வழிப்படுத்த போதனை செய்கிறார்கள். அளவில்லாத தர்மசாத்திரங்களும், ஞான நூல்களும் முக்தியடைவதற்கு வழிகாட்டுகின்றன. ஆனாலும், அன்னை தரும் அமுதை மறுத்து மண்ணை உண்ணும் மழலைபோல், மக்கள் பேராசையால் தீய வழிகளையே நாடுகிறார்கள். பொய்யான உடலை மெய் என்று சொல்லி புத்திபேதலித்துப் போகிறார்கள். கற்பூரம் போன்ற ஞானிகள் கரையேறுகிறார்கள். கதலி நார் (வாழை நார்) போன்ற அஞ்ஞானிகளால் யோக தீபத்தை ஏற்ற முடிவதில்லை. பல பிறவிகளை எடுத்து இளைத்து, திருந்திய பின்னரே முக்தியடைகிறார்கள்.''
""வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய தலைவனே! வ்ருஷ்பக்ரீடிதம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதம் லக்னமாகி, அதில் ஆதித்தன் (சூரியன்) இருக்க, ரேவதி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், ரேவதி மூன்றாம் பாதத்தில் புதனும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சந்திரனும், ரிஷபம் இரண்டாம் பாதத்தில் சனியும், மிருகசீரிடம் முதல் பாதத்தில் குருவும், சித்திரை முதல் பாதத்தில் வக்ர செவ்வாயும் இருக்கப் பிறந்த ஜாதகனின் முன்ஜென்ம வினை, பாவம், அதற்கான பரிகாரத்தை விளக்கவேண்டும்.''
சிவபெருமான் உரைத்தது- ""தேவி!
இந்த ஜாதகி, பெண்களின் எட்டுவித தத்துவங்களில் ஒன்றான காந்தருவ குணத்தைத் தரும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவள். சுக்கிர மேட்டில் திரிசூல ரேகையும், நடுவிரலில் மச்சமும் கொண்டவள். இவள் முன்ஜென்மத்தில் வைசியனாகப் பிறந்து, ஒரு அந்தணன் கொடுத்த பணத்தை அபகரித்துக்கொண்டதால் "தாமிஸ்ரம்' என்ற நரகத்தில் சில காலம் இருந்து, பின் இப்பிறவியில் காசி நகரிலுள்ள ஒரு சத்ரிய குடும்பத்தில் பிறந்தாள். செல்வமும் செல்வாக்கும் இருந்தாலும் புத்திரபாக்கியம் இல்லாமல் போனது. அதற்குப் பரிகாரமாக வெள்ளியில் அந்தணன்போல் ஒரு பிரதிமை செய்து, அதை ஒரு அந்தணருக்கு துளசி இலையுடன் சேர்த்து தானம் செய்து, பின் திருவெண்காடு சென்று கோதானம் செய்ய, பாவம் நீங்கி ஆண் புத்திர வாரிசு உண்டாகும். பின் சனி இரண்டாம் சுற்றில் ரிஷபம் ஏற, சித்திரைத் திங்கள் இரண்டாம் நாள் வைசூரியால் இறப்பாள்.''
(வளரும்)
செல்: 63819 58636