இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

ந்தர்வநாடியில் சொல்லப்பட்ட பாவ காரகங்கள், நிகழ்வுகள்- உடல் ஆரோக்கியம் என்ற இரு பிரிவுகளாக இல்லாமல் ஒன்றோடு மற்றதைத் தொடர்புபடுத்தியே காட்டுகிறது. நம் வாழ்வின் நிகழ்வுகளும், உடல் ஆரோக்கியமும் ஒன்றை மற்றது பாதிப்பது மற்றும் சார்ந்திருப்பது உண்மையே.

லக்ன பாவம்- முதல் பாவம்- தனு பாவம்

Advertisment

உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது. தலைமைச் செயலகமாகக் கருதப்படும் மூளை, அதன் செயல்பாடுகளை லக்ன பாவமே முடிவு செய்கிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து உறுப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் தன்னை உணர்தல், வெளியுலகை அறிதல் என்ற ஒட்டுமொத்த நிகழ்வுக்கும், தலைவிதி நிர்ணயத்திற்கும் காரணமாகிறது. மொத்தமுள்ள 72,000 நாடிகளில் 15,000 நாடிகள் தலையுடன் தொடர்புகொள்வதாக மருத்துவம் சொல்கிறது.

இரண்டாம் பாவம்- தன பாவம்

ஜாதகரின் பொதுவான ஆரோக்கியம், தனம், தான்யம், வாக்கு, ஞாபக சக்தி, களத்திரத்தின் சுக- துக்கங்கள், குடும்பம், வலது கண், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் போன்றவற்றை விளக்கும்.

மூன்றாம் பாவம்- சகஜ பாவம்

இளைய சகோதரம், தோள்பட்டை, தகவல் தொடர்பு, இருப்பிடம் மாறுதல், ஒப்பந்தங்கள், வெற்றி, புகழ், வலிமை, பரிகாரம் செய்தல், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, பிறர் உதவியை எதிர்பார்த்தல் போன்ற காரகங்கள் மூன்றாம் பாவத்தில் அடங்கும்.

நான்காம் பாவம்- பந்து பாவம்

Advertisment

உறவினர்கள், வாகனம், அசையா சொத்துகள், சுகம், புதையல், கல்வி, தாய், இருப்பிடம், பிறப்பிடம், செயற்கையான பொருட்கள், நீர்நிலைகள்.

ஐந்தாம் பாவம்- புத்திர பாவம்

நட்பு, புத்திர- சந்தான பாக்கியம், இயற்கை, இதயம், மதிநுட்பம், பதவியிலிருந்து இறங்குதல், மந்திரம், அனுபவ அறிவு, காதல், பூர்வ புண்ணியம் ஆகியவையே ஐந்தாம் பாவ காரகங்கள்.

nataraj

Advertisment

ஆறாம் பாவம்- அரி பாவம்

நோய், அடிமைத் தொழில், கடன், போட்டிகளில் வெற்றி, தோல்வி, எதிரிகள், வயிறு, பணியாட்கள், களத்திரப் பிரிவு, பொருள் களவு போதல், ஆயுதங்களால் ஆபத்து போன்றவை ஆறாம் பாவத்தில் அடங்கும்.

ஏழாம் பாவம்- யுவதி பாவம்

களத்திர ஸ்தானம், திருமணம், கூட்டு வியாபாரம், பொதுஜனத் தொடர்பு, ஆடை, ஜாதகரைப் பற்றிய பிறர் மதிப்பீடு போன்ற உலகத் தொடர்புகளை விளக்கும் பாவமே ஏழாம் பாவம்.

எட்டாம் பாவம்- ரந்திரம்

உயில், மூதாதையர் சொத்து, திடீர் தன லாபம்- எதிர்பாராத துன்பங்கள், ஊழ்வினை, துரோகம், விபத்து, ரத்தம், தீராத நோய், மரணம், மாந்திரீகம், ஏவல், கனவு, ரகசியம், உள்ளுணர்வு, ஆயுள், மர்ம உறுப்புகள் ஆகியவை எட்டாம் பாவத்தின் காரகங்கள்.

ஒன்பதாம் பாவம்- தர்மம்

ஆன்மிகம், குருநாதர், தந்தை, சூழ்நிலை, கொடுப்பினை- பாக்கியம், கடவுள் அருள், துறவு, தொலைத்தொடர்பு, நீதித்துறை, உயர்கல்வி, தத்துவம், கடமை, தீர்த்த யாத்திரை, தொடை எலும்புகள் ஒன்பதாம் பாவத்தால் அறியப்படும்.

பத்தாம் பாவம்- கர்மஸ்தானம்

அங்கீகாரம், அந்தஸ்து, அதிகாரி, அரசாங்கம், பிதுர் கர்மா, மூட்டுகள், ஒவ்வாமை நோய், நண்பர்களாலும், புத்திரர்களாலும் வரும் பிரச்சினைகள், முழங்கால் எலும்புகள் போன்றவையே பத்தாம் பாவ காரகங்கள்.

பதினோராம் பாவம்- லாபம்

மூத்த சகோதரம், நம்பிக்கை, போட்டிகளில் வெற்றி, பரிசு, நோயிலிருந்து விடுபடுதல், கடன் தீருதல், சுய விளம்பரம் ஆகிய காரகங்கள் அடிப்படையாக உள்ளன.

பன்னிரண்டாம் பாவம்- விரய பாவம்

செலவு, நஷ்டம், மரணம் நிகழுமிடம், முதலீடு, சிறை, அயல்நாட்டுத் தொடர்பு, அனாதை இல்லம், சத்திரம், மனநலக்காப்பகம், மருத்துவமனை, தைரியம் இழப்பது போன்றவையே விரய பாவ காரகங்கள்.

பன்னிரண்டு பாவங்கள் தமிழின் உயிரெழுத்துபோலவும் கிரகங்கள் மெய்யெழுத்துகளாகவும் ஒன்றிணைந்து வாழ்க்கை என்ற வார்த்தை மற்றும் வாக்கியங்களை உருவாக்குகின்றன என்றால் அது மிகையாகாது.

காலக்கணிதம்- தசாபுக்தி

கந்தர்வ நாடியில் மகா கல்பம், மன்வந்தரம், சதுர்யுகம், யுகசந்தி போன்றவற்றின் விவரங்கள் மற்றும் ஒவ்வொரு யுகத்திலும் வாழும் மக்களின் மனோநிலை, வாழ்வியல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இவையாவும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால் இங்கு விவரிக்கப்படவில்லை. ராசி சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் சப்தரிஷி மண்டலமே இவ்வுலகின் எல்லா மாற்றங்களுக்கும்,  கிரக சஞ்சாரங்களுக்கும் காரணமாக அமைவதாக கந்தர்வ நாடி கூறும். பிற நாடி நூல்கள் நேரடியான பலன்களை மட்டும் சொல்லும். ஆனால் கந்தர்வநாடி பலன்களை சூத்திரங்களாக, காரண காரியங்களோடு விளக்கும்.

ஒரு மாடு, கட்டப்பட்ட கயிறின் அளவைப் பொருத்தே அதன் மேய்ச்சல் நிலத்தின் வட்டம் அமையும் என்பதுபோல, ஜாதகரின் கொடுப்பினை ஜனன ஜாதகத்திலேயே முடிவு செய்யப்படுகிறது. (பசு- பதி- பாசம்). பாவகாரகங்களும், கிரக காரகங்களும் விதி நிர்ணயம், ஜாதகரின் கொடுப்பினைப் பலன்களைத் தெரிவிக்கும் என்றாலும், எந்த காலத்தில் நிகழும் என்ற கேள்விக்கு விடையாக தசாபுக்திக் கணிதத்தையே நாடவேண்டியுள்ளது.

விம்சோத்தாரி, அஷ்டோத்தாரி, காரக, காலச்சக்கர தசை போன்ற பத்துக்கும் மேற்பட்ட தசாபுக்தி கணிதமுறைகள் இருக்கின்றன. எளிதாக இருப்பதால் விம்சோத்தாரி தசாபுக்திக் கணிதமுறையே நடைமுறையில் உள்ளது. விம்சோத்தாரி முறையில் ஒன்பது தசை மற்றும் புக்திப் பிரிவுகளுக்குப் பலன் பொதுவாகவேயுள்ளது. ரிஷப, மிதுன ராசிகளில் பிறந்தவர்களுக்கு கடகச் சனி தசையும், கன்னி, துலா ராசிகளில் பிறந்தவர்களுக்கு விருச்சிகச் சனி தசையும், மகர கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு மீனச் சனி தசையும் வரவுமே வாய்ப்புள்ளது என்பதே உண்மை. ஆனால் சனி தசைப் பலன் என்று பொதுவில் கிரகப் பலன், அது நின்ற நட்சத்திரப் பலன், பார்வை, மற்ற கிரகச் சேர்க்கை கொண்டு மட்டும் பலன் சொல்வது சரியானதாக ஒப்புக்கொள்ள முடியாது. சத்துவ குண ராசியான கடகத்தில் உள்ள சனியும், ரஜோ குண ராசியான விருச்சிகத்தில் உள்ள சனியும் ஒரே பலனைத் தருவார்கள் என்பதை அடிப்படை ஜோதிடமே ஒப்புக்கொள்ளாது.

பொதுவாகவே சனி, கடகம், விருச்சிகம், மீனம் இவற்றில் சஞ்சரிக்கும்போது பலன்கள் மாறுபடுவதுபோல், இடத்திற்குத் தகுந்தாற்போல் தசாபலனும் மாறும் என்று எண்ணுவதே அறிவுடமையாகும்.

கந்தர்வ நாடியில் மருத்துவ நாடிக் குறிப்புகளும், ஜோதிட நாடிக் குறிப்புகளும் பின்னிப் பிணைந்துள்ளதால், காலச்சக்கர தசை கொண்டு விளக்குவதே சரியானது. காலச்சக்கர தசையின் வலவோட்டு மற்றும் இடவோட்டு நட்சத்திர தசை, புக்திகளுக்கு வரும் கதிகளும் (பாய்ச்சல்) மருத்துவ நாடி ஸ்பரிச கதிகளும் ஒத்துப்போவதே இதன் சிறப்பு. (உ-ம்: மண்டூக கதி, மயூர கதி). பாவங்களும், கிரகங்களும் வாத, பித்த, சிலேத்தும நாடிகளாகவே பிரிக்கப்படுவதாலும், ஜோதிட நாடியை, மருத்துவ நாடியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

காலச்சக்கர தசை, ராசி மண்டலத்தை 108 பிரிவுகளாக (9 பாதம் ஷ் 12 ராசிகள்) பிரித்து தசை வேறுபாடுகளைக் காட்டுவதால், இதை நவாம்ச தசை என்றும் கூறலாம். ஜோதிடப் பிதாமகர் ஜெய்மினியின் ஜோதிடக் கணிதமும் காலச்சக்கர தசையை ஒட்டியே அமைந்துள்ளது இங்கு குறிப்பிடதக்கது.

(வளரும்)

செல்: 63819 58636