லட்சுமி கடாட்சம் என்பது எல்லாருக்கும் கிடைக்காமல் ஒருசில மனிதர்களிடமே குவிந்து கொண்டிருக்கிறதே! அந்த யோகம் கிடைத்துவிட என்ன செய்யவேண்டும்? இது பலரது கேள்வி! தசமகா வித்யையில் உள்ள பத்தாம் வித்யையாகிய கமலாத்மிகா தந்திர வித்தை இதற்கு விடை கூறுகிறது.
கமலாத்மிகா என்பவள் வேறு எந்த வித்தியாச மான தெய்வமும் அல்ல. நாம் தினமும் வணங்கும் லட்சுமி தேவியின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றான விசேட வடிவம்தான். இவளது ரூபவர்ணனையைக் கூறுகிற ரகசியம் அடங்கியுள்ள தியானத்தின்படி எந்திரம் வரைந்து பூஜையறையில் பிரதிஷ்டை செய்யவேண்டியதுதான்.
கமலாத்மிகா தேவியை அறிந்தவரை பஞ்சம் நெருங்காது.
கமலாத்மிகா தேவியை மந்திரத்தால் உபாசனை செய்பவருக்கு தானம் செய்யும் அளவுக்குச் செல்வம் பெருகிவரும்.
இந்த தேவியை எந்திர ரூபத்தில் தினமும் பார்ப்பவருக்கு திருமகளின் அருட்பார்வை விலகா திருக்கும் என்பது ருத்ரயாமளம் என்னும் தந்திர நூலின் கருத்தாக உள்ளது.
விஸ்வசார தந்திரம் கூறுவது
லட்சுமி தேவியின் நிரந்தர அருட்பார்வையைப் பெற பல நூல்கள் கிரியைகள் பலவற்றைக் கூறுகின்றன. இந்த தந்திர விதியில் கமலாத்மிகாவான ஐஸ்வர்ய லட்சுமியை இல்லத்தில் நிலைபெறச் செய்ய சில சாஸ்திர நியமங்கள் கூறப்பட்டுள்ளன. தேவி பாகவதத்தில் சித்திரை, தை, ஆடி, புரட்டாசி மாதங்களின் செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி தினங்களில் வழிபடும் முறை கூறப்பட்டுள்ளது.
தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமியே கமலா எனப்படுகிறாள். இந்த தேவியின் கருணையைப் பெற சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் சுபவேளையில் எந்திரம் எழுதி செஞ்சந்தனம் பூசுதல் முறை.
கோரோசனை, செஞ்சந்தனம், குங்குமப்பூ பூசிய தாமிரத்தகட்டில் திருவோண நட்சத்திர நாளிலும் எழுதலாம். ப்ரீதி யோகம், ப்ரம்ம யோகம், இந்திர யோகம், சுபயோகம், சுக்கிர யோகத்திலும்; அஸ்வினி, கார்த்திகை, பூரம், மகம், பூராடம், சுவாதி சேர்ந்த செவ்வாயன்றும் எழுதுவது மிக உத்தமம். குபேர வாசலை யும் திறந்துவிடும் யோகம் வந்துசேரும்.
கௌலவம், பாலவம், வணிசை ஆகிய கரண வேளைகளிலும் எழுதிவைத்து வழிபட நாம் வேண்டிய செல்வங்களைப் பெற்றுவிடமுடியும்.
கமலாத்மிகா எந்திரத்தை வரைந்து சக்தி ஏற்படுத்த பரமேஸ்வரனையும், ஹரிப்ரியா என்ற தேவியையும் சேர்த்து வழிபடவேண்டும். இப்படி முறையாகச் செய்தால் லட்சுமி தேவி நிலையாகத் தங்குவதோடு சாம்ராஜ்ய சுகங்களும் சாத்தியமாகிவிடும்.
கமலாத்மிகாவின் மூர்த்தி ரகசியம்
சௌபாக்கியங்களை விரும்புகிற பக்தர்கள் எல்லாரும் வரமும் வளமும் வேண்டி தெய்வங்களை வழிபடு கின்றனர். ஆனால் அவற்றின் மூர்த்தி ரகசியம் என்னும் உருவ வர்ணனையை அறியத் தவறிவிடுகின்றனர்.
கமலாத்மிகாவின் மூர்த்தி ரகசியமாக பூஜைக்காலத் திலும், எந்திரம் சக்தியூட்டும் காலங்களிலும் தவறாமல் சொல்ல வேண்டியது-
"ஹேமவர்ணாம் விசாலாட்சீம்
லக்ஷ்மீம் பத்மாசனஸ்திதாம்
ஹஸ்த த்வயே க்ருஹீதாப்ஜாம்
சோபிதாம் ஹேம வஸ்த்ரகாம்
ஹஸ்தீ சுண்டாக்ர கும்பாப்யாம்
விச்யமான சிரோருஹாம்
ப்ரஸாந்தபத ந்வந்த்வாம்
பத்ம பத்ர நிபேக்ஷணாம்
பார்ச்வத்வயே ச கன்யாப்யாம்
சாமராப்யாம் விசேஷத
வீஜ்ய மானாம் மகாலக்ஷ்மீம்
விசாலாம் விஷ்ணு வல்லபாம்.'
தங்க நிறமான பத்மாசனத்தில் இரு கால் களையும் தொங்கவிட்டபடி வீற்றிருப் பவளும், தனது இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியவளும், பொன்னிறமான ஆடையை அணிந்திருப்பவளும், இரண்டு பக்கமும் யானைகளின் துதிக்கை நுனியிலுள்ள பானை போன்ற குடங்களின் நீரால் நீராட்டுவிக்கப்படுகின்றவளும், தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவளும், இரண்டுப் பக்கங்களிலும் இரு கன்னிப் பெண்களான விருத்தி, புஷ்டி ஆகியோரால் சாமரம் வீசப்பெற்றவளும், விஷ்ணுவின் நாயகியுமான மகாலட்சுமி வடிவான கமலாத்மிதாவை தியானிக்கவேண்டும்.
எந்திரம் சக்திபெற வைக்கும் தந்திரம்
ஆலய தரிசனங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கே தெருவில் விற்கப்படும் "டை மேக்கிங்' எந்திரங்களை வாங்கிவந்து பூஜைசெய்து வருவதால், எதிர்பார்த்த பலன் கிட்டாதபோது பிறகு அதை சிறு கோவில் களிலுள்ள அரச மரத்தடி, ஆலமரத்தடி, புற்றுகளில் யாரும் பார்க்காத நேரத்தில் வைத்துவிடுகின்றனர். இதனால் அங்குள்ள உபதேவதைகள், சண்ட பரிவாரங்களின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும். ஆகவே, எந்திரங்கள் எதுவாயினும், ஆலயங்களிலோ சுத்தமாகவுள்ள வீட்டிலோ பஞ்சாங்க சுத்தியுள்ள நாளில் எழுத்தாணியைக்கொண்டு எழுதிப் பூஜையில் வைத்தல் நலம் தரும்.
யந்திரோத்தார: என்னும் விதியில் கமலாத்மிகா எந்திரத்தை எழுதும் லிபி முறையை வரிவஸ்யா ரகசியமாகச் சொல் வதை இங்கே அறியுங்கள்.
"அனுக்த கல்பே யந்த்ரம் து
லிகேத் பத்ம தளாஷ்டகம்
ஷட்கோண கர்ணிகம் தத்ர
வேதத் வாரோப சோபிதம்.'
நடுவில் வட்டம் வரைந்து, அதன்நடுவில் அறுகோணம் வரைந்து, வெளிவட்ட மேற்பரப்பில் தாமரை இதழ்களை இட்டு, ஓரங்களில் வேதங்களைக் குறிக்கிற நான்கு கோணங்கள் வரைந்து, அதற்கும் வெளியே 16 கோணங்கள் அமைகின்றபடி நான்குப் பட்டைகள் வரைந்து, மொத்தம் 32 த்வாத்ரிம்ஸதம் என்ற கோணங்கள் அமையுமாறு கமலாத்மிகா தேவியை மத்திய பாகத்தில் நிலைப்படுத்த வேண்டும்.
மந்திர உத்தாரகம் என்ற விதிப்படி "தாரம் பூர்வம் லிகித்வாபரமலம்' என்று தொடங்கி, "மந்த்ரம் உக்தம் ரமாயா' என்று முடியும் சுலோகத்தை மூன்றுமுறை சொல்லவேண்டும்.
இதற்கு மூலமந்திரமாக-
1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத: ஸ்ரீம் ஹ்ரீம்
ஓம் மகாலக்ஷ்ம்யை நம:
2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஜம் மகாலக்ஷ்ம்யை
கமலதாரிண்யை சிம்மவாகின்யை நம:
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸௌ
ஜகத் ப்ரஸுத்யை ஸ்லாஹா:
ஆகிய மூன்று மந்திரங்களையும் மும்முறை சொல்லிவிட்டு, எந்திரத்திற்கு பஞ்ச உபசாரங்கள் செய்து, மூன்றாவதாக உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்து வரவேண்டும்.
சாணக்கியர் வாக்கில் திருமகள்
தான் பாடிய அர்த்த சாஸ்திரம் என்னும் காவியத்தில் சாணக்கியர் கூறுகிறார்: மனிதர்களின் உடலில் எட்டுவிதமான பெயர்களுடன் மகாலட்சுமி விளங்குகிறாள். இக்கருத்தை பூஜை நடத்தும் பண்டிதர்கள் வாக்கிலும், திருமணக்காலத்தில் ஆசிர்வாதமாகவும் சொல்லவேண்டும் என்றும் உபதேசித்துள்ளார்.
பக்தர்களின் இதயக் கமலத்தில் பாக்கிய லட்சுமியாகவும், கரங்களாகிய கமல மலர்களில் எல்லா வகையான தான்ய லட்சுமியாகவும், புஜங்களில் வீரலட்சுமி யாகவும், இதயக்கமலத்தில் நிறைவான கருணையோடு சத்தியலட்சுமியாகவும், மேலான குணங்களினால் கீர்த்தி லட்சுமியாகவும், உடல் முழுவதும் அழகைக் கொடுக்கும் சௌம்ய லட்சுமியாகவும் இருக்கும் லட்சுமிதேவி, நமது மனதைவிட்டு நீங்காத சர்வ சாம்ராஜ்ய லட்சுமியாகவும் வீற்றிருக்கிறாள்.
சிலரது அங்கங்களில் லட்சுமிதேவி நிரந்தரமாகத் தங்குவதால்தான் அவர்கள் பணக்காரர்களாக- தொட்டதெல்லாம் செல்வமாகும் குபேர சம்பத்து உடைய வர்களாக வலம்வருகிறார்கள். இப்படியே கமலாத்மிகா தேவியை சாஸ்திரப்படி உபாசனை செய்து நமது அங்கங்களில் தங்கும்படிச் செய்திட, அங்க நியாச- கர நியாச விதிகளைப் பின்பற்ற வேண்டும். எந்திரத்தை விதிப்படி எழுதி ஆவாஹன பூஜை நடத்தி, கமலாத்மிகா தேவியின் உபநிஷ தத்தைப் பாராயணம் செய்யவேண்டும். மகாலட்சுமி தேவிக்குப் பிடித்த துதியில் சிறந்த மந்திரங்களுள் ஒன்றுதான் இந்த உபநிஷதம். இது ஒன்பது சிறு அனுவா கங்களை உடையது.
"ஓம் அதலோகான் பர்யடன் ஸனத் குமாரோஹ வைதேஹ' என்று தொடங்கி, "ஐஸ்வர்யம் துர்லபம் ப்ராணி னாம் ஹி' என்று முடியும் இத்துதி மகாலட்சுமியை செல்வமழை பொழிபவளாக வீட்டில் தங்க வைப்பது... வலம்புரிச் சங்கை பூஜையறையில் வைத்து ஜீவ பூஜை செய்து, கமலாத்மிகா எந்திரம் செய்து, ஆலயத்தில் அஷ்டலட்சுமி தேவிகளை தரிசித்து வர இன்னும் பலமான திருமகள் கடாட்சம் வந்துசேரும்.
கேரளத்துக் கொல்லாபுரத் திலும், சென்னை குன்றத்தூரிலும் மிகவும் சக்தி வாய்ந்த அஷ்டலட் சுமி அருள்தரும் கோபுரம் அமைந் திருக்க, அங்கே கருவறையின் பின்புறத்தில் கமலாத்மிகா தேவி நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
எந்திர பூஜையால் யோகம் பெறுபவர்கள்
பிறவிப்பயன் என்று சொல் கிறோமே- அதையே ஜாதக விசேஷம் என்று குறிப்பிடுவர்.
ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரக அமைப்புகளால் லட்சுமி அருள் பெறுகிற சிறப்பான யோகங்கள் அமையும் என "பராசர ஹோரா' தெளிவுபடுத்துகிறது.
சரஸ்வதி யோகம்: லக்னத் திற்குக் கேந்திரத்திலோ, திரிகோணத்திலோ புதன், குரு, சுக்கிரன் இருந்தாலும் அல்லது இவர்கள் இரண்டாம் பாவகத்தில் இருந்து அதுவே நட்பு, ஆட்சி, உச்ச வீடாக இருப்பின் இந்த யோகம் ஏற்பட்டு, எந்திர உத்தி அறிந்து அதிர்ஷ்டம், பெரும் செல்வத்தைப் பெறுவார். புதன், குரு இணைந்தாலே இந்த யோகம் ஜாதகருக்கு உறுதியாகிவிடுகிறது.
ஸ்ரீநாத யோகம்: புதனும் சுக்கிரனும் ஒன்பதுக்கு உடைய வருடன் நல்ல ஸ்தானங்களில் ஒரே நிலையில் சேர இந்த சிறப் பான யோகம் வரும். விஷ்ணு பக்தி, ஸ்ரீநாராயண முத்திரை அணிந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையால் செல்வந்தராக மக்களைக் கவரும் வண்ணம் திகழ்வார்.
ஸ்ரீகாந்த யோகம்: லக்னாதிபதி, சூரியன் மற்றும் சந்திரன் ஆட்சி அல்லது உச்ச ராசியிலிருக்க, அவை லக்ன கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் யோகம் சித்தியாகும். ருத்ராட்ச மாலையணிந்து சிவபூஜை செய்து தியானத்திலிருந்து திருமகள் அருளைப் பெறுவார்.
விரிஞ்சி யோகம்: ஐந்தாம் பாவக அதிபதியும் குரு- சனியும் நல்ல நிலையில் இருந்தால் இந்த யோகம் ஏற்பட்டு வேதநெறிகளைக் கடைப்பிடித்து, பிரம்மத்தை உணர்ந்து, உயர்ந்த அறிவும் ஞானமும் உடையவராகி, தனங்களைச் சேர்த்து செல்வந்தராகத் திகழ்வார்.
மகாயோகம்: 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய பாவாதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை அடைந்திருந்தால் இவ்வகை யோகம் உண்டாகி, ஜாதகர் லட்சுமி அருளைப் பெற்று அரசர்களால் மதிக்கப்பட்டு, பல பொன் நகைகளைப் பெற்றவராக இருப்பார். எந்திர- தந்திர சாஸ்திரங்களில் நம்பிக்கை உடையவராக சுகபோகங்களை அனுபவிப்பார்.
கமலாத்மிகா எந்திரத்தை வழிபடுவோர் வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் நிரந்தரமாக தனவரவு இருந்து, மேன்மேலும் விருத்தியடையும்.
செல்: 91765 39026