● ஜி. சீனிவாச ராகவன், சென்னை-106.
என் மகள் கிருஷ்ணவேணி பி.ஈ., படிக்கிறாள். பரீட்சையில் அரியர்ஸ் வைத்திருக்கிறாள். அவற்றை எழுதி பாஸ் செய்து பட்டம் வாங்கிவிடுவாளா? எதிர்காலம், வேலை, திருமணம் எப்படி அமையும்?
கிருஷ்ணவேணிக்கு மிருகசீரிட நட்சத்திரம், மிதுன லக்னம். பிறந்த தேதி எழுத மறந்துவிட்டீர்கள். ஜாதகப் பலன் கேட்கும் தந்தையே பிறந்த தேதி எழுதாதபோது, மகள் எப்படி பட்டம் பெறுவாள்? அரியர்ஸ் ஏற்படுவதில் என்ன தவறு? ஹயக்ரீவருக்கு அபிஷேக பூஜை செய்து அவர் மந்திரத்தை தினசரி 108 முறை ஜெபிக்கச் சொல்லவும். அரியர்ஸ் பாஸ் செய்து பட்டம் வாங்கி வேலைக்கும் போகலாம். செவ்வாய் சனியைப் பார்ப்பதால் திருமணத்தடையும் தாமதமும் பிரச்சினையும் வரும். 29 வயதுகூட ஆகலாம். திருமண முயற்சி மேற்கொள்ளும்போது காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். 2017 ஜூலையில் கேள்வி கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறந்த தேதி எழுத மறந்துபோனதால் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று கருதுகிறேன்.
● ஆர். அனந்தபத்மநாபன், கோவை-18.
குலதெய்வம் பற்றிய விவரம் தெரியவில்லை. குழப்பமாக உள்ளது. ஜாதகரீதியாக ஆய்வுசெய்து கூறவும்.
கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னம். லக்னத்துக்கு 9-ல் குரு ஆட்சி; ரேவதி சாரம். நவாம்சத்திலும் ஆட்சி. மீன குருவை கன்னிச் சனி பார்க்கிறார். முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் சுடலைமாடசாமியாகவும் பேச்சியம்மனாகவும் தெரிகிறது. பிரசன்னம் பார்த்தால் சரியான தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம். 67 வயதாகிறது. குலதெய்வம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இஷ்டதெய்வத்தை ஏற்றுக்கொள்ளவும்.
● பொ. கோடிசுந்தரம், குச்சிக்காடு.
என் பேரன் அண்ணாமலை சோடா- கூல்டிரிங்ஸ் சென்டர் வைத்திருக்கிறான். இதையே தொடர்ந்து செய்யலாமா? திருமணம் எப்போது நடக்கும்? எதிர்காலம் எப்படி அமையும்?
அண்ணாமலைக்கு சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னம். லக்னத்தில் ராகு; 7-ல் கேது. நாகதோஷம் இருக்கிறது. 2018 ஜுலையில் 35 வயது முடியும். அதன்பிறகு வரும் ஆவணியில் திருமண யோகம் வரும். சனி தசை, சுயபுக்தி. ஏற்கெனவே செய்துவரும் ஜூஸ் கடையைத் தொடர்ந்து நடத்தலாம். ஒரு சனிக்கிழமை ஆதிதிருவரங்கம் சென்று வழிபட்டு வரவும். தொழில் முன்னேற்றம், திருமண யோகம் உண்டாகும். அர்ச்சகர் ரெங்கநாத பட்டாச்சாரியிடம் கோரிக்கையைக் கூறவும்.
● கே.பி. ராஜீவ், காஞ்சிபுரம்.
என் பெயர் K.P. RAJEEV.. இதை K.P. RAJEEV PRASANTH என்று மாற்றினால் அதிர்ஷ்டகரமாக இருக்குமா?
K. P. R A J E E V
2 8 2 1 1 5 5 6=30
P R A S A N T H
8 2 1 3 1 5 4 5=29
இரண்டையும் சேர்த்தால் 59. நல்ல எண். வைத்துக்கொள்ளலாம்.
● ஜி. தங்கமணி, மொடக்குறிச்சி.
எனக்கு ஜோதிடம் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா? பட்டிமன்றப் பேச் சாளராக வேண்டும் என்ற வெறி மனதில் தீயாக எரிகிறது. தினமும் புத்தகங்களை வாங்கி வாங்கிப் பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்கிறேன். நிறைவேறுமா?
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னம். லக்னத்தில் குருவும் 10-ல் புதனும் இருப்பதால் உங்கள் இரண்டு ஆசைகளும் நிறைவேறும். அதேசமயம் பயிற்சி முக்கியம்- அவசியம்! நிறைய படியுங்கள்; நிறைய பேசுங்கள். ஜோதிட சம்பந்தமான ஞானம் வளர சென்னை பி.எஸ்.பி. விஜய்பாலாவிடம் தொடர்புகொண்டு (செல்: 98410 40251) பி.எஸ்.பி. எழுதிய ஜோதிட புத்தகத்தை வரவழைத்துப் படியுங்கள். அவரிடம் படித்த ஏ.ஆர்.ஆர். சுதர்சனன் தன் விடாமுயற்சியால் இன்று "பாலஜோதிடம்' முதல் பல பத்திரிகைகளில் எழுதி வருகிறார். வளர்ந்திருக்கிறார்.
● மகேஸ், கோவை.
எனக்கு ராகு தசை, சுயபுக்தி நடக்கிறது. அடுத்துவரும் குருபுக்தி சிறப்பாக இருக்கும் என்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
தனுசு லக்னம். 7-ல் ராகு, குரு சாரம்; குரு பார்வை. என்றாலும் ஏழரைச்சனி நடப்பதால் சரீர உபாதைகளும் வைத்தியசெலவுகளும் வரலாம். பிரதானப் பரிகாரம் சூலினிதுர்க்கா ஹோமம்தான். சனிப்பரிகாரமாக காலபைரவர் சந்நிதியில் சனிக்கிழமைதோறும் உங்கள் வயதுடன் ஒரு எண்ணிக்கை சேர்த்து அத்தனை மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி அதைக்கொண்டு நெய் தீபமேற்றி வழிபடவேண்டும். ஏழரைச்சனி முடியும்வரை.
● உஷா ராமமூர்த்தி, சென்னை-96.
எனக்கு 3-7-1978-ல் திருமணம் நடந்தது. மாமியார், நாத்தனார் பிரச்சினை இருந்தாலும் கணவர் பாசமாக இருந்தார். இரண்டு பிள்ளைகள் கடவுள் தந்த பிரசாதம். அவர்களால்தான் நான்! அப்பா- அம்மாவை கடைசிவரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பிள்ளைகள் நினைக்கிறார்கள். எனக்கும் மூத்த மகனுக்கும் கடவுள் பக்தி அதிகம். இளையவன் விஜய் ஆனந்த் நல்லவன்தான்; கோபம், பிடிவாதம் உண்டு. அவன் ஜாதகத்தில் சனிதோஷம், ராகு- கேது, சுக்கிரன் சேர்க்கை தோஷம் உண்டு. அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுகிறது. மூத்தவனின் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கிறது. இருபது வருடத்திற்குப் பிறகு ஒரு பெண்ணால் பிரச்சினை. கணவர் என்னை வெறுக்கிறார். பிள்ளைகள் திருப்திக்காக கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்- என்ன பரிகாரம்?
உஷாவுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னம். ஏழரைச்சனி 2020 வரை. 63 வயது நடக்கிறது. 56 வயதுமுதல் (2011 அக்டோபர் முதல்) ராகு தசை நடக்கிறது. ராகு- கேது, சனி சம்பந்தம் இருந்தாலே நிம்மதிக்குறைவும் குடும்பக் குழப்பமும் இருக்கத்தான் செய்யும். கணவர் ராமமூர்த்திக்கு உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். ஜாதகப் பொருத்தம் நன்றாக இருப்பதால் பிரிவுக்கு இடமில்லை. ஏழரைச்சனியும், ராகு தசையும் கவலை தருகிறது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றவும். 72 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, மண்விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வழிபடவும். வீட்டில் தினசரி அபிராமி அந்தாதி படிக்கவும். வயதான காலத்தில் வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும்.
● செ.சு. மணியன், விருதுநகர்.
தகப்பனார் 21-10-2017-ல் காலமானார். தாயாருக்கு கை- கால் விளங்கவில்லை. பேத்தி காயத்ரியின் எதிர்காலம் பற்றிக் கூறவும்.
காயத்ரி மேஷ ராசி, பரணி நட்சத்திரம். அட்டமச்சனி விலகிவிட்டது. 2017 ஏப்ரல் முதல் சந்திர தசை ஆரம்பம்- பத்து வருடம். இதில் 2017 டிசம்பர் வரை அட்டமச்சனி சந்திப்பு ஆகாத காலம். காயத்ரி பட்டப்படிப்பு முடித்து நல்ல வேலை அமையவும், திருமண வாழ்க்கை திருப்தியாக அமையவும் தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் சிவலிங்க சந்நிதியில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித்தரவும். நெய் தீபமேற்றி வழிபடவும். உங்கள் தகப்பனார் 2017 அக்டோபரில் காலமானார் என்றால், 2018 அக்டோபரில் ஒரு வருடம் முடிந்து (தலைதிவசம் கொடுத்தபிறகு) பரிகாரம் எதுவும் செய்துகொள்ளலாம். அதுவரை மலை ஏறக்கூடாது. கடலில் குளிக்கக்கூடாது.
● வ. ரூபாவதி, குடந்தை.
என் கணவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிட நூல்களைப் படித்து ஜோதிட ஞானம் பெற்றுள்ளார். தற்போது (எட்டு வருடமாக) அரசுப்பணியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் வாங்குகிறார். அவர் பணியில் இருந்த காலத்தில் தேனி- ஈரோடு அருகில் பிளாட் வாங்கிப் போட்டுள்ளார். அவருக்கு வீடு கட்டும் யோகம் உண்டா? அது எப்போது நடக்கும்? எங்கள் ஆயுள், ஆரோக்கியம், எதிர்காலம் எப்படி இருக்கும்?
கணவர் வசீகரன் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னம். மனைவி ரூபாவதி உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். சமசப்தம லக்னம். ஆயுள், ஆரோக்கியம் தெளிவாக உள்ளது. பிளாட்டுகளை விற்றுவிட்டு விரும்பிய இடத்தில் வீடு கட்டலாம். கடன் கிடைக்கும். முன்னதாக பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமி, ஆரணவல்லியம்மனுக்கு ஒரு அபிஷேகம் செய்து வீடுகட்ட மனுபோடவும். (பிரார்த்தனை வேண்டுதல்). வீடு கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்தபிறகு அதே தலத்தில் 108 சங்கு வைத்து ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக சங்காபிஷேக பூஜை செய்யவும். தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863). வசீகரன் உத்திரட்டாதி நட்சத்திரம். அவர் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தேவகோட்டையிலிருந்து ஓரியூர்வழி திருப்புனல்வாசல் சென்று தீயத்தூர் சஹஸ்ர லட்சுமீஸ்வரர் கோவிலில் (உத்திரட்டாதியன்று) நடக்கும் ஹோமத்திலும் பூஜையிலும் கலந்துகொள்ளவும். (தொடர்புக்கு: டி.எஸ். கணேச குருக்கள், செல்: 99652 11768). இந்த இரண்டு பிரார்த்தனை செய்தபிறகு இடம் விற்கவும், வீடு கட்டவும் தடையில்லாமல் முயற்சி கைகூடும்.
● எஸ். சரஸ்வதி, கிருஷ்ணகிரி.
தங்களின் அறிவுரையாலும் பண்புமிக்க ஜோதிடத்தாலும் பயன்பெறும் லட்சக்கணக்கான உள்ளங்களில் நானும் ஒருத்தி! எங்களைப் போன்றவர்களின் தோஷங்களை நிவர்த்தி செய்து ஆலோசனை கூறும் தங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். தங்களுடைய அறிவுரைப்படி என் பேத்திகளின் படிப்பு, வேலை நன்றாகப் போகிறது. அடுத்து திருமணம் செய்யவேண்டிய கடமை! ஆனால் பேத்தி திருமணம் வேண்டாமென்று மறுத்து வருகிறாள். ஏன்? எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. திருமணத்தடையோ தோஷமோ இருக்கிறதா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எனக்கும் 76 வயது ஆகிவிட்டது.
மூத்த பேத்தி சிவரஞ்சனி (வயது 25) ரேவதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது, ராசிநாதன் குரு லக்னத்துக்கு 12-ல் மறைவு. நாகதோஷம், மாங்கல்ய தோஷம் உண்டு. 27 வயது முடிந்தபிறகு திருமணப்பேச்சை எடுக்கவும். வேலை, சம்பாத்தியம், அதன்பிறகு திருமணம் என்பது சிவரஞ்சனியின் லட்சியம். இளைய பேத்தி ஹரிதா (வயது 23) பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு நிற்பது நல்லது என்றாலும், 7-ல் சனி, புதன் இருப்பது தோஷம். இவருக்கும் 27 வயது முடிந்த பிறகு திருமணம் பற்றிப் பேசலாம். இருவருக்கும் 2018-க்குப் பிறகு நல்ல வேலை அமையும்.
● ராமநாதன், பரமக்குடி.
திருமணப் பொருத்தம் பத்து என்றும் 13 என்றும் சொல்லுகிறார்கள். இதில் எவை மிக மிக முக்கியமானவை?
மொத்தம் திருமணப்பொருத்தம் 23. அதுமாறி பத்துப் பொருத்தம் என்று சுருங்கிவிட்டது. தினம், கணம், ஸ்திரீ தீர்க்கம், மாகேந்திரம், ராசி, ராசியாதிபதி, யோனி, வசியம், ரஜ்ஜு, வேதை என்ற பத்தும்தான் முக்கியமான பொருத்தம். இத்துடன் பட்ஷி, மரம், நாடி என்று மூன்று சேர்த்து 13 என்றும் கூறுவார்கள். இந்த 3-ம் அவசியமில்லை. திருமண விருந்தில் எண்ணிக்கைக்காக முதலில் ஜாம் என்று இனிப்பு வைப்பார்கள். சில இடங்களில் தயிர் வெங்காயம் வைப்பார்கள். அதுமாதிரித்தான். அதற்கு முக்கியத்துவமில்லை. பத்து பொருத்தத்தில் ஸ்திரீ தீர்க்கம், மாகேந்திரம் ஆகிய இரண்டும் அவசியமில்லை. இது சப்ஸ்டிட்யூட் மாதிரி. முக்கியமானது- அவசியமானது யோனி, ரஜ்ஜு, வேதை, ராசி, தினம் (நட்சத்திரம்) ஆகிய ஐந்தும்தான். நட்சத்திரப் பொருத்தத்தில் வதை தாரை கூடாது. ராசி சஷ்டாஷ்டகம் கூடாது. ஒரே ரஜ்ஜு கூடாது. இதற்கும் மேல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ராகு தசை, சம ராகு புக்தி நடக்கக்கூடாது. பத்து பொருத்தம் இருந்தாலும் திருமணத்தேதிதான் மிக மிக முக்கியமானது. தேதி எண்ணும் கூட்டு எண்ணும் 4, 5, 7, 8 வரக்கூடாது. இதில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் திருப்தியில்லாமல் போய்விடும். வாரிசு இருக்காது. விவாகரத்து ஆகலாம் அல்லது பிரிந்துவிடலாம்.