● ஜெ. சுதர்சன்குமார், செங்கல்பட்டு.
ஜோதிட பீஷ்மருக்கு வணக்கம்! இருளில் கிடக்கும் பலருடைய வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் புண்ணிய காரியம் செய்யும் தெய்வக்ஞனின் பாதம் தொட்டு என் குறைகளைக் கூறுகிறேன். எனக்கு சுமார் இருபது லட்ச ரூபாய் கடன் உள்ளது. மாதம் 60 ஆயிரம் வட்டிகட்டத் தேவைப்படுகிறது. வருமானம் 12 ஆயிரம்தான். என் தாயாருக்கு அரசு வேலை ஓய்வு பென்ஷன் வருகிறது. கடனிலிருந்து மீள வழி கிடைக்குமா?
கடக லக்னம். அதில் குரு உச்சம். சுவாதி நட்சத்திரம், துலா ராசி. ஏழரைச்சனியைக் கடந்துவிட்டீர்கள். 2018 செப்டம்பரில் (ஆவணியில்) 40 வயது முடியும். சனி தசை, சூரிய புக்தி 2018 மே மாதம் 1-ஆம் தேதி முடிந்து சந்திரபுக்தி ஆரம்பம். 30 வயதுமுதல் கடந்த பத்து வருடம், சனி தசையில் கடனை வாங்கிக் கடனைக் கொடுத்து வட்டியே பாதாளப்படுகுழியில் உங்களைத் தள்ளிவிட்டது. இதிலிருந்து எப்படி மீளப் போகிறீர்கள்? கடனை வாங்கிக் கடனைக் கொடுப்பவனும், மரமேறிக் கைவிட்டவனும் ஒன்று! கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
● ப்ரியா, மதுரை.
என் மகன் தேவேஷ் திருமணம் எப்போது நடக்கும்? நிரந்தர வேலை எப்போது கிட்டும்?
தேவேஷ் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னம். 7-க்குடைய புதன் 4-ல் நீசம். ராசிக்கு 2-ல் வக்ர குரு, சனி, செவ்வாய், ராகு சேர்க்கை. ராசிக்கு 8-ல் கேது. லக்னத்துக்கு 5-ல் சூரியன். 6-ல் சுக்கிரன் மறைவு. களஸ்திர தோஷமும், புத்திர தோஷமும் கடுமையாக இருப்பதால் திருமணம் நடக்குமா என்பதே ஒரு கேள்விக்குறிதான். 2015 டிசம்பர் முதல் அட்டமாதிபதி சந்திர தசை. 2018 ஏப்ரல் 23-ல் 38 வயது முடிந்தது. சுந்தரம் குருக்களை செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு, காரைக்குடி அருகில் வயல்நாச்சியம்மன் கோவிலில் காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் 40 வயதுக்குள் திருமணம் கூடிவரலாம்.
● கே. சரவணன், சேலவாயல்.
என் பெயரை எஸ்.கே. சரவணன் என்று எழுதலாமா? நான், மனைவி, இரு மகன்கள், ஒரு மகள். இத்துடன் தம்பி இறந்ததும் தம்பி மனைவி மறுமணம் செய்து போய்விட்டதால், தம்பி பிள்ளைகள் எல்லாரும் என் பராமரிப்பில் வாழவேண்டியுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் முடங்கிவிட்டது. எதிர்காலம், தொழில், வருமானம் எப்படியிருக்கும்?
விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். ஏற்கெனவே ஒருமுறை உங்களுக்கு பதில் எழுதியுள்ளதாக ஞாபகம். உங்களுக்கு 2015 செப்டம்பர் முதல் சந்திர தசை. மனைவி பிரசன்னா தேவிக்கு மூல நட்சத்திரம், தனுசு ராசி. ஜென்மச்சனி; குரு தசை. மினரல் வாட்டர் அல்லது காபி, டீக்கடை, ஜூஸ் கடை- அக்னி சம்பந்தமான உணவு விடுதி, மாலை நேர புரோட்டாக்கடை போன்ற தொழில் செய்யலாம். எளிய பரிகாரமாக 2025 வரை திங்கட்கிழமைதோறும் காலையில் சிவலிங்க அபிஷேகத்துக்குப் பால் வாங்கித்தரவும். அதேபோல சனிக்கிழமைதோறும் (ஏழரைச்சனி முடியும்வரை) காலபைரவர் சந்நிதியில் 45 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, நெய்யில் மிளகுப்பொட்டலத்தை நனைத்து தீபமேற்றி வழிபடவும். பணவசதி வரும்போது காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) 18 விதமான ஹோமம் செய்து குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். செல்வ நிலையான வாழ்வு சீரும்சிறப்புமாக அமையும்.
● பி. கமலக்கண்ணன், சங்ககிரி.
எனக்கு 28 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்? என்ன தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டாகும்? தற்போது கார் டீலிங் செய்கிறேன். திருப்தியில்லை. தந்தைக்கும் எனக்கும் தினசரி வாக்குவாதம், தர்க்கவாதம் இருக்கிறது. எப்போது மாறும்?
மேஷ லக்னம். குரு தசையில் சுக்கிர புக்தி 2018 மார்ச் முதல். அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி. ஏழரைச்சனி எதுவுமில்லை. செவ்வாய், சனி, சுக்கிரன், புதன் தனுசு ராசியில் (9-ல்) சேர்க்கை. 30 வயதுக்குமேல் திருமண யோகம். 10-ல் சூரியன், ராகு. ஏற்றுமதி- இறக்குமதி தொழில், பிளாஸ்டிக், ரப்பர், பேன்ஸி ஸ்டோர் சம்பந்தமான தொழில் செய்யலாம். ஆடம்பரப் பொருள், அலங்காரப் பொருள் விற்பனையும் லாபகரமாக அமையும். திருமணத்துக்குப்பிறகு வாழ்வு உயரும். தந்தையை அனுசரித்துப் போகவும். தந்தை கடைசிவரை மாறமாட்டார். விதண்டாவாதம்தான் செய்வார். அனுசரித்துச் செல்லலாம் அல்லது அவரைத் தனியே வைத்து செலவுக்குக் கொடுக்கலாம்.
● தினேஷ்குமார், சங்ககிரி.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா?
விசாக நட்சத்திரம், துலா ராசி. ஏழரைச்சனி முடிந்துவிட்டது. கும்ப லக்னம். 10-க்குடைய செவ்வாய் கடகத்தில் நீசபங்கம்! சனி தசை 2018 மே மாதம் முடியும். அடுத்துவரும் புதன் தசையில் அரசு வேலை அமையும். தொடர்ந்து அதற்கான பயிற்சியையும் படிப்பையும் மேற்கொள்வது நல்லது.
● வி. சின்னுசாமி ஜோதிடர், மருதமலை.
எனது மானசீக குருவுக்கு பணிவான வணக்கம். தங்களை குருவாக ஏற்று ஜோதிடத்தை உபதொழிலாகச் செய்கிறேன். தாங்கள் கூறுவதுபோல திருக்கணிதத்தைவிட வாக்கியமே 100-க்கு 100 சரி என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனக்கும் மனைவிக்கும் சம ராகு தோஷம் என்றும், இரண்டரை வருடம் சந்தான பாக்கியம் தடைப்படும் என்றும் கூறி காரைக்குடியில் ஹோமம் செய்யும்படி அறிவுறுத்தினீர்கள். அதன்படியே செய்து 1-4-2015-ல் திருமணம் நடந்தது. கூட்டு எண் 4 என்றாலும் பரிகார ஹோமம் செய்ததால் குற்றம் இல்லை என்றீர்கள். எங்களுக்கு எப்போது வாரிசு அமையும்? சொந்த வீடு அமையுமா? புத்திர தோஷம் உண்டா?
சின்னுசாமி உத்திராட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னம். 13-4-2017 முதல் குரு தசை ஆரம்பம். இதில் தனது புக்தியிலேயே வாரிசு கிடைக்கும். திருமணத் தேதி எண், கூட்டு எண் 4 என்றாலும், ராகு தசையில் திருமணம் நடந்தது குற்றமில்லை. நீங்களும் மனைவியும் ஒரு வியாழக்கிழமை கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேக பூஜை செய்து, அவர் மந்திரத்தை (அச்சிட்ட கார்டு உண்டு) வாங்கி வந்து தினசரி பாராயணம் செய்யவும். ஆண் வாரிசு யோகமும் ஜோதிட ஞானமும் வாக்குப் பலிதமும் உண்டாகும். குழந்தை பிறக்கும் யோகத்தால் சொந்த வீடும் அமையும். ஏழரைச்சனி- பொங்குசனி!
● என். கோவிந்தசாமி, செம்பேடு.
என் மகன் கோபிநாத்துக்கு 30 வயதுக்குமேல் திருமணம் நடக்குமென்று ஆறு வருடங்களுக்குமுன்பு கூறினீர்கள். இப்போது 34 வயது நடக்கிறது. எப்போது திருமணம் நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்?
மிதுன லக்னம். 5-ல் செவ்வாய், சனி சேர்க்கை. 7-ல் குரு. 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் திருமணம் தாமதம்! தற்போது புதன் தசை குரு புக்தி 2019 ஜூன் வரை. வருகிற வைகாசிக்குமேல் திருமணம் கைகூடும். மனைவி வந்தபிறகு எல்லா யோகமும் தேடிவரும்.
● என். மணி, திருப்பூர்-7.
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு நன்றிகலந்த வணக்கம்! 3-3-2018 இதழில் எனது மகள் சத்தியப்பிரியா ஜாதகத்தை வெளியிட்டீர்கள். அதற்கான பரிகாரம் எழுதியிருந்தீர்கள். அதை எங்கு சென்று நடத்துவது? எனது மகன் கார்த்திகேயன் பி.காம் (தமிழ்) படித்துள்ளான். 25 வயதாகிறது. எப்போது திருமணம் நடக்கும்? தொழில் வளம் எப்படி இருக்கும். தன்னுடன் படித்த கிறிஸ்துவப் பெண்ணை விரும்புவதாகக் கூறுகிறான். (திருநெல்வேலி கிறிஸ்டியன் நாடார்). என்ன செய்வது?
அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். லக்னத்தில் நீச செவ்வாய். 8-ல் லக்னாதிபதி சந்திரன், சனி சேர்க்கை. இவர்களுக்கு செவ்வாய் பார்வை. அவர் ஜாதகமே கலப்புத்திருமணம், காதல் திருமணம் என்பதுதான் விதி. மறுப்பு கூறாமல் முடித்துவிடுங்கள். திருமணத்தேதி 4, 5, 7, 8 வராமல் 1, 3, 6-ல் நடத்தவேண்டும். சர்ச்சில் நடந்தாலும் சரி; மண்டபத்தில் நடந்தாலும் சரி- ஏற்றுக்கொள்ளுங்கள். மகள் ஜாதகம் பற்றிய விவரம் பிறகு பார்த்து தெளிவுபடுத்துகிறேன்.
● சந்திரா, கோவில்பட்டி.
சித்திரை 21 முதல் வைகாசி 14 வரை அக்னி நட்சத்திரம் என்று காலண்டரில் போட்டிருக்கிறது. அதில் திருமண சுபமுகூர்த்தம் செய்யலாமா?
தாராளமாகச் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. சித்திரை மாதமும் வைகாசி மாதமும் வசந்த ருது என்பதால் இதில் நடக்கும் திருமணங்களும் மணவாழ்க்கையும் இனிமையாகத் திகழும். அக்னி நட்சத்திரத்தில் புது வீடு பால்காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. அதேபோல வாடகை வீடு கூட மாறக்கூடாது. கூடியவரை அக்னி நட்சத்திரக் காலங்களில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் கூடாது. சில இடங்களில் அக்னி நட்சத்திரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். அதுவும் தவறு என்றுதான் என் குருநாதர் கூறியுள்ளார்.