● ஷயிலாபானு.
நான் முஸ்லிம்மதப் பெண்ணாக இருந்தாலும் ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம். கடந்த மூன்று வருடமாக "பாலஜோதிடம்' படிக்கிறேன். எம்.பில்., படித்து ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிகப் பணியில் பேராசிரியராக இருக்கிறேன். எனக்கு காதல் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. கடந்த நான்கு வருடமாக கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக நிம்மதியில்லை. கணவருடன் சந்தோஷமாக எப்பொழுது வாழ்வேன்? பி.எச்டி., எப்பொழுது முடிப்பேன்? அரசுக் கல்லூரியில் நிரந்தர வேலை கிடைக்குமா?புதன் தசை நடக்கிறது. தனுசு லக்னத்துக்கு புதன் தசை பாதகாதிபதி தசை என்று படித்திருக்கிறேன். அது கெடுதலா?
தனுசு லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. தனுசு லக்னத்துக்கு புதன் 7, 10-க்குடைய பாதகாதிபதிதான். என்றாலும் அவர் 8-ல் மறைவதால் தோஷம் மறைகிறது. தனது சுயசாரம் (ஆயில்யம்) பெற்றதால் தனது புக்தி முடியும்வரை (18-11-2020) குடும்பத்தில் பிரச்சினையும் உத்தியோகத்தில் மத்திமப் பலனும் இருக்கும். கேது புக்தியில் டாக்டரேட் பட்டம் பெறலாம். சூரியன் ஆட்சி, 10-ல் கேது என்பதால் கேது புக்தியில் அரசுக் கல்லூரியில் பணிபுரியும் பாக்கியம் உண்டாகும். சுக்கிரன் 10-ல் இருப்பதாலும், குரு பார்வை இல்லாததாலும் (கும்ப குரு- ஜென்ம குரு) குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. அம்சத்தில் புதன் நீசம்.
கணவர் தாழ்வு மனப்பான்மை உடையவர்; சந்தேக குணம் இருக்கும். வறட்டு கௌரவம் உடையவர். கன்னி என்பதில்லாமல் கல்யாணம் ஆகிவிட்டது. மலடு என்பதில்லாமல் தாயாகியும் விட்டீர்கள். அரசுப் பணி கிடைத்ததும், நிரந்தர வேலை அமைந்ததும்- பிள்ளைகளை வளர்ப்பதே லட்சியம் என்று தனித்து வாழலாம். அத்துடன் ஜோதிடம், எண்கணிதம் (நியூமராலஜி) இரண்டையும் பயில்வது உங்களுக்கு பிளஸ் பாயின்டாகும். மன அமைதிக்கு வழியமைக்கும். சீரடி சாய்பாபாவை இஷ்ட தெய்வமாக வழிபட்டு தினசரி ஜெப பாராயணம் செய்யவும். முடிந்தால் ஒருமுறை சீரடி சென்று வரவும். (டூரிஸ்ட்டில்). அருகில் பாபா கோவில் இருந்தால் புதன்கிழமை போய் வழிபடலாம். பாபாவுக்கு வியாழக்கிழமை சிறப்பென்றாலும் புதன் தசைக்கு புதன்கிழமை சிறப்பு. உங்கள் ஜாதகம் வாக்கியப் பஞ்சாங்கமே சரியானது. திருக்கணிதத்தில் ராசிக்கட்டம் மாறவில்லை என்றாலும், தசாபுக்தி சுமார் மூன்றரை வருடம் வித்தியாசம் உள்ளது. குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் வழிபடலாம்.
● தங்கவேலு, பரமக்குடி.
எனது பேரன் 29-5-2011-ல் அசுவினி நட்சத்திரம், மேஷ ராசியில் ஜெனனம். T. DIVAAGAR என்று 23-ல் பெயர் வைத்துள்ளோம். நன்றாக கல்வி பயில்வானா?
ஒரு ஞாயிறு அன்று நயினார் கோவில் சென்று நாகநாத சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வரவும். அத்துடன் ராமநாதபுரத்தில் பஸ் ஸ்டாண்டு அருகில் வழிவிடும் முருகன் கோவில் சென்று (விநாயகர்- சுப்பிரமணியர் இருவரும் சேர்ந்துள்ள சந்நிதியில்) தீபமேற்றி அர்ச்சனை செய்யலாம். கேது தசையில் பிறந்துள்ளதால் படிப்பில் ஆர்வக்குறைச்சல் இருக்கும். ஒவ்வொரு அமாவாசைக்கும் மானாமதுரை வழி வேதியரேந்தல் விலக்கு சென்று அங்கு நடக்கும் மிளகாய் வற்றல் ஹோமத்தில் காணிக்கை செலுத்தி மிளகாய் அல்லது மிளகு வாங்கித் தரவும். படிப்படியாக முன்னேற்றம் தெரியும். பெயரை
T. T H I R U M A L
4 4 5 1 2 6 4 1 3=30
என்று 30-ல் மாற்றம் செய்து ரிக்கார்டுகளில் பதியலாம். அமைதி, அறிவு, படிப்பில் உயர்வு உண்டாகும்.
● சந்திரமோகன், தரங்கம்பாடி.
எனக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளான். 2010-ல் எனது தாயார் இறந்துவிட்டார். 2015-ல் மூத்த சகோதரனை இழந்தேன். தற்போது 4-2-2018-ல் மற்றும் ஒரு சகோதரனை இழந்தேன். இறந்தவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. 40 முதல் 45 வயதில் அகால மரணம். எனது ஆயுளைப் பற்றிப் பயமாக உள்ளது. சந்திரமோகன் மகர ராசி, தனுசு லக்னம்.
லக்னாதிபதி குரு 8-ல் மறைவு. ஆனால் உச்சம். அதனால் உங்கள் ஆயுளைப் பற்றி பயமே வேண்டாம். 9-ல் சனி, ராகு இருப்பது பிதுர்வகை தோஷம் உண்டு. பிதுர்தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். 2018 பிப்ரவரியில் ஒரு சகோதரன் இறந்ததால், ஆறு மாதம் கழித்துதான் எந்தப் பரிகாரமும் செய்யமுடியும். அதுவரை ஒருமாதம் கழித்து 2018 மார்ச்- 4-க்குமேல் விநாயகர் கோவிலில் 21 நாள் தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றவும். வேப்ப மரமும் அரசமரமும் இணைந்த சந்நிதி விசேஷம். ஆறு மாதம் கழித்து (செப்டம்பரில்) என்னைத் தொடர்புகொள்ளவும்.
● ஜி. அர்ஜுனன், ஸ்ரீவில்லிப்புத்தூர்.
எனது மகள் சண்முகப்பிரியா (வயது 23) ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 7-ல் ராகு- கேது இருப்பதால் இரண்டு வருடம் கழித்துத் திருமணம் முடிக்கலாமென்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள். தங்களுடைய கணிப்புப்படி எப்போது திருமணம் நடக்கும்? 12-ல் செவ்வாய் இருப்பது தோஷமா? நல்ல இடத்தில் திருமணம் நடக்க ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?
சண்முகப்பிரியா கடக லக்னம், அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி. லக்னத்துக்கு 12-ல் செவ்வாய் இருப்பது தோஷம் என்றாலும், துலா ராசியிலுள்ள குரு 9-ஆம் பார்வையாக செவ்வாயைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தி. அதனால் செவ்வாய் தோஷமுள்ள மாப்பிள்ளையைதான் பார்க்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் லக்னத்துக்கு 8-ல் சனி (கும்பத்தில்) இருப்பது தோஷம். அதனால் 26 வயதுக்குமேல் திருமணம் செய்வதுதான் நல்லது. அதுவரை திருமண முயற்சிகள் எடுக்காமல் இருப்பதும் நல்லதுதான். மேலும் சுக்கிரன் நீசம் என்பதும் தாமதத் திருமணத்துக்கு ஒரு காரணம் எனலாம். 27 வயதில் திருமணம் செய்தால் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் சந்தான பாக்கியமும் உண்டாகும்.
● நா. விஸ்வநாதன், பூவாளூர்.
2010 முதல் "பாலஜோதிடம்' வாசகன். என்னுடைய மகள் கார்த்திகா எம்.எஸ்.ஸி., பி.எட் படித்திருக்கிறாள். திருமணம் தடைப்படுகிறது. எப்போது நடக்கும்?
புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னம். லக்னத்துக்கு 2-ல் சனி இருப்பது தோஷம். குரு 8-ல் மறைவதும் குற்றம். நடப்பு வயது 30. சனி தசை 2020 ஜூலை வரை (32 வயது வரை) நடக்கிறது. அதன்பிறகுதான் திருமண யோகம். முடிந்தால் பார்வதி சுயம்வர கலாஹோமம் செய்து கார்த்திகாவுக்கு கலச அபிஷேகம் செய்யலாம். திருமணத்தடையும் விலகும்; நல்ல வரனும் அமையும்; மகிழ்ச்சியான மணவாழ்க்கையும் கிடைக்கும். வசதியில்லையென்றால்- திருச்சி அருகில் திருப்பைஞ்ஞீலி சென்று வாழைமரப் பரிகாரப் பூஜை செய்யலாம். காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரையிலும் செய்யலாம். சங்கர் அய்யர், செல்: 98426 33907; பாண்டியன், செல்: 93624 96534-ல் தொடர்புகொள்ளலாம். கோவில் தொலைபேசி: 0431-2061400; 0431-2560813.
● பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பெங்களூரு.
எனக்கு மென்பொருள் பொறியாளராக வெளிநாட்டில் 2014-ல் வேலை கிடைத்தது. அங்கு பல பிரச்சினைகளை சந்தித்து 2015-ல் வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு இன்னும் சரியான வேலை அமையவில்லை. எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? என்ன பரிகாரம்?
உங்கள் கேள்வியைதான் கேட்டுக் கடிதம் எழுதி இருக்கிறீர்கள். ஜாதகக் குறிப்பு எழுதவில்லையே! வேலைக்கு இன்டர்வியூவுக்குப் போனால் உங்கள் படிப்பு சர்ட்டிபிகேட், அனுபவ ரிக்கார்டுகளை எடுத்துப்போகாமல் இருந்தால் வேலை கிடைக்குமா? இதில் பெயரை வெளியிட வேண்டாம் என்று ஒரு விண்ணப்பம். ஜாதகப்பலன் கேட்பதில் என்ன வெட்கம்? வேலை செய்யத்தானே போகிறீர்கள். ஜாதகக் குறிப்பு இருந்தால்தான் பதில் சொல்லமுடியும்.
● தி. கோவிந்தசாமி, திருவண்ணாமலை.
என் மானசீக குருவுக்கு வணக்கம்! 32 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்றேன். 59 வயது முடியப்போகிறது. சர்க்கரை நோய்க்கு முறையான மருந்து எடுத்துக்கொண்டும் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இன்னும் ஒரு மகனுக்குத் திருமணம் செய்யவேண்டிய கடமை பாக்கியிருக்கிறது. எனக்கு சனி தசை கேது புக்தி நடப்பதாக அறிகிறேன். மனைவிக்கும் உடல்நலக்குறைவுண்டு. கன்னி லக்னம், கன்னி ராசிக்கு சனி 6-க்குடைய பலன் என்று எடுத்துக்கொள்வதா? ஜோதிடரீதியான தீர்வென்ன?
உங்களுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. 5, 6-க்குடைய சனி 6-ல் இருப்பதால் ஆரோக்கியக்குறைவு எனலாம். என்றாலும் ஆயுள்காரகன் சனி லக்னம், ராசியைப் பார்ப்பதால் ஆயுள் பயமில்லை. தவிரவும் சர்க்கரை நோய் பயப்படும்படியான நோயல்ல! கட்டுப்பாடு இருந்தால் எந்த பாதிப்பும் வராது. மனைவி ஸ்தானாதிபதி குரு 3-ல் (விருச்சிகத்தில்) நின்று மனைவி ஸ்தானத்தைப் பார்ப்பதோடு, களஸ்திர காரகன் சுக்கிரனும் 9-ல் ஆட்சி என்பதால் மனைவிக்கும் ஆயுள் பலமுண்டு. இருவரும் தன்வந்திரி பகவானை வழிபடவேண்டும். அவர் மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும். அத்துடன் புதுக்கோட்டை- அறந்தாங்கி வழி ஆவுடையார்கோவில் என்னும் ஊரில் ரூபம்- அரூபம்- அருவுருவம் என்று மூன்று வடிவங்களையும் கொண்ட சிவன் அருள்பாலிக்கிறார். மாணிக்கவாசகருக்கு குரு உபதேசம் அருளிய தலம். சுவாமி ஆத்மநாதர். அர்த்தஜாமப்பூஜைக்கு பாகற்காய் குழம்புடன் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்தியம் செய்து வழங்கப்படும். தொடர்ந்து நான்கு வாரம் சாப்பிட்டு வர, நீரிழிவு நோய் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
● இந்திரா, குலசேகரன்பட்டினம்.
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு பணிவான வணக்கம்! எனது தம்பி பிரம்மகிருஷ்ணனுக்கு வயதாகியும் திருமணமாகவில்லை. வாகனம் ஓட்டுகிறான். எப்போது திருமணம் நிகழும்?
பிரம்மகிருஷ்ணனுக்கு மீன லக்னம். 7-ல் செவ்வாய், சனி சேர்க்கை; குரு 8-ல் மறைவு என்பதால் திருமணம் என்பதே ஒரு கேள்விக்குறிதான்; பிரச்சினைதான். 36 வயது நடக்கிறது. 40 வயதுவரைகூட திருமணம் தடையாகலாம். புதன் தசை சந்திரபுக்தி. புதனும் 3-ல் மறைவு; சந்திரனும் 12-ல் மறைவு. செலவைப் பார்க்காமல் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும். அத்துடன் நல்ல மனைவியும் அமைவார். செவ்வாயும் சனியும் சேர்ந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பது ஜோதிட விதி.
● கோ. ஆறுமுகம், குலசேகரன்பட்டினம்.
எனக்கு 44 வயது. மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் பெண் நளினி 11-ஆவது வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகன் நம்பி பெருமாள் 10-ஆவது வகுப்பு படிக்கிறான். மூன்றாவது மகன் பார்த்தசாரதி 7-ஆவது வகுப்பு படிக்கிறான். எங்கள் குடும்ப ஜாதகப்படி எங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மனைவிக்கு ஜாதகமில்லை.
ஆறுமுகம் மேஷ ராசி, ரிஷப லக்னம். ஜாதக ரீதியாக அட்டமச்சனி முடிந்துவிட்டது. ஆனால் ரிஷப லக்னத்துக்கு அட்டமச்சனி, ராகு தசை நடக்கிறது. நளினிக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம். லக்னப்படியும் ராசிப்படியும் ஏழரைச்சனி- 2020 வரை. கேது தசை வரப்போகிறது. நம்பி பெருமாளுக்கு அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னம். அர்த்தாஷ்டமச்சனி (நான்காமிடத்துச்சனி), ராகு தசை நடக்கிறது.
பார்த்தசாரதிக்கு ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னம். ராசிக்கு அட்டமச்சனி. தற்போது செவ்வாய் தசை; அடுத்து ராகு தசை வரும். ஆக இப்படி ராகு- கேது தசையும் அட்டமச்சனியும் ஏழரைச்சனியும் சேர்ந்து நடந்தால் எல்லா வகையிலும் பாதிப்பு, கடன், வைத்தியச் செலவு, பொருள் சேதம், படிப்பில் பாதிப்பு என்று கெடுதல்கள் தேடிவரும். அதனால் குடும்பத்துடன் ஐந்துபேருக்கும் சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம் முதலிய 18 விதமான ஹோமம் செய்து, ஐந்துபேரும் புதுஆடை உடுத்தி கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். ஈரஉடைகளை தானம் செய்துவிட்டு மாற்று உடை (பயன்படுத்திய ஆடை) அணியலாம்.
கடலில் படகில் செல்பவனுக்குத் தண்ணீர் தாகம் எடுக்க, தன்னைச் சுற்றி தண்ணீர் (கடல் நீர்) இருந்தாலும் குடிப்பதற்குப் பயன்படாமல் தவிப்பது போல வாழ்க்கை தடுமாற்றமாக இருக்கும். செலவைப் பார்க்காமல் கடன் உடன் வாங்கியாவது மேற்படி ஹோமங்களைச் செய்வது அவசியம். அத்துடன் பிள்ளைகளின் படிப்பு, எல்லாரின் ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம், கடன் நிவர்த்திக்கும் ஹோமம் செய்யப்படும். காரைக்குடி அருகில் வேலங்குடியில் வயல்நாச்சியம்மன் கோவிலில் மேற்படி ஹோமம் செய்வார்கள். ஐந்து அய்யர்கள் 108 சமித்துகளைக் கொண்டு மூன்று மணிநேரம் ஹோமம் செய்வார்கள். முதல்நாள் காரைக்குடியில் வந்து தங்கவேண்டும். குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாய் செலவு (கோவில் செலவு மட்டும்) ஆகும். உங்கள் போக்குவரத்து செலவு, புது உடை செலவு தனி. பணம் தயார் செய்துவிட்டு தொடர்புகொள்ளலாம். எதிர்காலத்தில் எந்த புயல் வந்தாலும் சமாளிக்கலாம்; தப்பிக்கலாம். "வரும்முன் காப்பது' நல்லது.
● இராமகிருஷ்ணன், சென்னை.
எனது மகன் சிவசைலநாதனுக்கு ஐந்தாவது முறையாக வலிப்புநோய் வந்துள்ளது. மருந்தும் எடுத்துக்கொண்டு இருக்கிறான். இதற்குத் தீர்வு என்ன?
சிவசைலநாதனுக்கு பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னம். 18 வயது வரை (2021 வரை) சனி தசை. அதுவரை அவனுக்கு நரம்பு சம்பந்த நோய் இருந்தாலும் பயப்பட வேண்டாம். பாலக்காட்டிலிருந்து ஷொரனூர் செல்லும் வழியில் அஞ்சுமூர்த்தி க்ஷேத்திரம் என்று இருக்கிறது. சிவன், பார்வதி, கணபதி, மஹாவிஷ்ணு, தன்வந்திரி ஆகியோர் ஐந்து சந்நிதிகளில் தனித்தனியாக அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சர்வரோக நிவாரண தன்வந்திரி பகவான் சந்நிதியின் விபூதியாலும் நெய்யினாலும் நோய் குணமாகும்.
● ஏ.ஆர்.ஆர். சுதர்சனன், திருச்சி.
எனக்கு நிலையான வேலை, வருமானம், திருமணம், எதிர்காலம் எப்படி இருக்கும்? தங்களை மானசீக குருவாக மதிக்கிறேன்! ஜோதிடத்துறையில் எனது வளர்ச்சி எப்படி இருக்கும்?
என்னுடன் முதலில் பழகிய காலம்முதல், சென்னை வாணிமகாலில், பி.எஸ்.பி. விஜய்பாலா நிகழ்ச்சியில் உங்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த காலத்திலிருந்து- இப்போது உங்கள் வளர்ச்சி மிக நன்றாக இருக்கிறது. எனக்குத் திருப்தியளிக்கிறது. "பாலஜோதிட'த்திலும் மற்றும் பல ஜோதிடப் பத்திரிக்கைகளிலும் நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஜோதிட ஞானத்தையும் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் "மாத ஜோதிட'த்தில் ஒரு பொறுப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஜோதிட ஆராய்ச்சி செய்யுங்கள். ஜோதிடப் பலன் சொல்லுங்கள். சந்திரனும் சனியும் சேர்ந்துள்ளதால் திருமணத்தடை, வாரிசு தாமதம். கேது தசையில் புதன் புக்தியில் (2018 மார்ச்சுக்குமேல்) திருமணம் கூடும். குத்தாலத்துக்கு வடகிழக்கில் மூன்று கிலோமீட்டரில் (கும்பகோணம்- மயிலாடுதுறை பாதை) திருவேள்விக்குடி சென்று பரிகாரப் பூஜை செய்தால் திருமணம் நடக்கும். நவகிரகம் இல்லாத கோவில்.