சபாரத்தினம், காரைக்குடி.
ஜோதிடம் சொல்வதற்கு கணித ஆராய்ச்சி முக்கியமா- வாக்குப்பலிதம் முக்கியமா?
இரண்டும் முக்கியம். ஜோதிடக் கணித ஆராய்ச்சியும் அனுபவமும் அவசியம். சொல்லும் ஜோதிடப்பலன் வாக்குப்பலிதமாவதும் அவசியம். என் ஜோதிட குரு கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் ஒருமுறை, வாக்குப்பலிதத்துக்கு யட்ஷிணி உபாசனை ஏதாவது செய்யுங்கள் என்றேன். அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்குத்தான் நிலைக்கும். அதன்பிறகு விலகிவிடும். எப்போதும் நிலைத்து நிற்க ஆராய்ச்சி அனுபவம்தான் அவசியம். ஜோதிடத்தில் தவறு ஏற்பட்டால், எப்படி? ஏன்? மாற்று வழி என்னவென ஆராய்ச்சி செய்து, அதைக் கண்டுபிடி. அப்படிக் கண்டுபிடித்தால் அது கடைசிவரை உனக்கு வழிகாட்டியாக அமையும் என்றார். கணித ஆராய்ச்சி இல்லாமல் சொல்லும் ஜோதிடம் அருள்வாக்கு எனப்படும். அது எப்போதும் நிலையாக அமையாது. மன்னர் போஜராஜன் சபையில் உத்தண்டர் என்ற பெருங்கவி இருந்தார். அவர் சீனியர். பின்னர், காளிதாசரும் அரசவைக் கவிஞர் பட்டியலுள் இடம் பெற்றார். காளிதாசர் ஜுனியர்; ஆனால், காளிதேவியின் அருள்பெற்றவர். போஜராஜன் மகாகவி என்று காளிதாசருக்குப் பட்டம்கொடுக்க விரும்பினார். உத்தண்ட கவிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருவருள் யார் உயர்ந்தவர் என்பதை யார் நிர்ணயிப்பது? தீர்ப்பு சொல்ல யாருக்குத் தகுதி என்பதை முடிவுசெய்ய ஒரு தந்திரம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இருவர் கழுத்திலும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. யார் கழுத்திலுள்ள மாலை வாடு கிறதோ அவர் தோற்றவராகக் கருதப்படுவார் என்று தீர்மானிக் கப்பட்டது.
காளிதாசரின் கழுத்திலுள்ள மாலை வாடாமல் இருந்தது. உத்தண்டரின் கழுத்திலுள்ள மாலை வாடி விட்டது. காளிதாசருக்கு மகாகவி பட்டம் அளிக்கப்பட்டது. உத்தண்டருக்கு அவமான மாகி, தீக்குளிக்க முயன்றார். அன்னை சரசுவதி தடுத்து, நீ என் மகன். நான் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உனக்கு என் சம்பந்தப் பட்ட எல்லா உரிமைகளும் உண்டு. காளிதாசன் என் அபிமான புத்திரன். அவனுக்கு நான் பார்த்துதான் உரிமைகளைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் பராரி ஆகிவிடுவான் என்று சமாதானப்படுத்தினாள். (பராரி என்றால் உரிமை கோரமுடியாத செயலற்றவன்). இந்த வரலாற்றை எடுத்துக் கூறிய ஜோதிட குரு கிருஷ்ணமூர்த்தி சாஸ் திரிகள், தவறைக் கண்டுபிடித்துத் திருத்து. அதுவே கடைசிவரை துணையாகும் என்ற அறிவுரையே எனது ஜோதிட ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் உருவான ஓர் உருவந்தான் தத்தாத்ரேயர். அடியேன் சிவ தீட்சை எடுத்து சிவ பூஜை செய்தாலும், மதுரையில் என்னைப் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்திய குபேர பத்ரகாளி அபிமான தெய்வம். தத்தாத்ரேயர் இஷ்ட தெய்வம். சேங்காலிபுரத்திலும், சேர்ந்தமங்கலத்திலும் தத்தாத்ரேயருக்கு தனிக்கோவில் உண்டு.
● எஸ், மகேசுவரன், பேராவூரணி.
எனது கடன்கள் எப்போது அடைபடும்? மனைவிக்கு உடல்நலம் எப்போது ஏற்படும்? மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்?
மகேசுவரன் மேஷ ராசி, கார்த்திகை நட்சத் திரம். 63 வயது ஆரம்பம். 56 வயதுமுதல் (75 வயதுவரை) சனி தசை. அட்டமச்சனிக்குப் பிறகு கடன்சுமை குறையும். கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று, 11 வெள்ளிக் கிழமை கடன் நிவர்த்தி ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யவும். முதல் வெள்ளியும் கடைசி வெள்ளியும் நேரில் சென்று கலந்துகொள்ளவும். மனைவிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி. மகன் சிவசிதம்பர ராஜனுக்கு சதய நட்சத்திரம், கும்ப ராசி. 19 வயதுமுதல் குரு தசை. உங்கள் இருவருக்கும் சனியின் கடுமை குறைந்த பிறகு கடன் சுமை தணியும். வியாபாரம் விருத் தியாகும். மகளுக்குத் திருமணம் கூடும். மகனுக்கு 30 வயதில் திருமணம் அமையும்.
● கே, சித்ரா தேவி, சின்னியம்பாளையம்.
எங்களுக்குத் திருமணம் நடந்து. இரண்டுமுறை குழந்தை உருவாகி அபார்ஷனாகிவிட்டது. என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
திருமணத் தேதியில் குற்றமில்லை. ஆனால், உங்கள் ஜனன ஜாதகப்படி ரிஷப லக்னம். 7-க்குடைய செவ்வாய் கடகத்தில், நீசம். அவர் கும்பச்சனியைப் பார்க்கிறார். அதனால் 25 வயதுக்குமேல் 27 வயதிற்குள் திருமணம் நடந்திருக்கவேண்டும். 21 வயதுக்கு முன் நடந்ததால் கர்ப்பம் தங்கவில்லை. சுப்பையாவுக்கு மிருகசீரிட நட்சத்திரம், மிதுன ராசி. சித்ராவுக்கு உத்திரட்டாதி நட்சத் திரம், மீன ராசி. இது 7-ஆவது நட்சத்திரம்- வதை தாரை. சுப்பையாவுக்கு குரு தசையில் ராகு புக்தி நடக்கிறது. சனி தசையில் வாரிசு யோகம் அமையும். சித்ராவுக்கு கேது தசை. இருவரும் நாகதோஷ நிவர்த்தியும், சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், வாஞ்சா கல்ப கணபதி புத்திரப்ராப்தி ஹோமமும் செய்து தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும்.
● ராமலிங்கம், பள்ளிப்பட்டு.
என்மகன்தாமு மூன்று வயதிலிருந்துவலிப்பு நோயால் கஷ் டப்பட்டு, எப்படியோ எம்.காம் முடித்து பெங்களூரூவில் தனியார் துறையில் வேலைசெய்கிறான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் பிரச்சினை வந்து, தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இப்போது நலமாக உள்ளார். அடுத்துவரும் தசாபுக்தி எப்படியிருக்கும்? அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்?
தாமு மீன லக்னம், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 14 வயதுமுதல் சுக்கிர தசை. இவருக்கு சுக்கிரன் 8-ல் மறைவு. ஆனால் ஆட்சி. 6-க்குடைய சூரியன் சேர்க்கை. 33 வயதுவரை சுக்கிர தசை. கவனமாக இருக்க வேண்டும். ஆயுள்தீர்க்கம். திண்டுக்கல் அருகில் தாடிக் கொம்பு என்ற ஊரில் சௌந்திரராஜப் பெருமாள் கோவில் சென்று தன்வந்திரி பகவானுக்கு எல்லாவிதமான அபிஷேகம் செய்யவும். 7-ல் கேது, செவ்வாய் இருப்பதால் 33 வயதுக்குபிறகு சூரிய தசையில்தான் திருமணம். அப்போது ஒரு ஹோமம் செய்யவேண்டும். சூரியன் நீசம் என்பதாலும், 8-ல் மறைவு என்பதாலும் அரசு வேலைக்கு இடமில்லை. சுக்கிர தசையின் தோஷம் விலக, திருவாரூர் குடவாசல் சாலையில் திருப்பெருவேளூர் என்னும் மணக்கால் அய்யம்பேட்டை என்ற ஊரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவைகுண்ட நாராயணப்பெருமாளை வெள்ளிக்கிழமை 20 நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
● ஏ. பிரியா, வந்தவாசி
என் கணவர் சென்னையில் சாலை விபத்தில் இறந்துவிட்டார். 2008 ஆகஸ்டில் ரயில்வே வேலையில் சேர்ந்தேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது. என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என் மகன் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். அவன் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று மறுமணம் செய்து கொள்ளாமல் லட்சியத்தோடு வாழ்கி றேன். மாமியார் வீட்டில் ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டேன். என் அப்பா, அம்மா, தம்பியோடு வாழ்கிறேன். தம்பி பி.ஈ. முடித்து சாதாரண வேலைக்குப் போகி றான். நல்ல வேலை கிடைக்கவேண்டும்.
பிரியா மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னம். உங்கள் திருமணத்தேதியின் கூட்டு எண் 5-ல் நடந்தது குற்றம். அதனால் கணவரைப் பிரியும் நிலை ஏற்பட்டது. திருமணமான மறுவருடமே ஆண் மகன் பிறந்துவிட்டான். பூராட நட்சத்திரம். அவன் பிறக்கும்போதே குட்டிச்சுக்கிர தசை. குட்டிச்சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும். அவன் ஜாதகப்படியும் உங்கள் ஏழரைச்சனியும் மாங்கல்ய தோஷம் ஏற்படுத்தியது. அடுத்து உங்களுக்கு வேலையையும் தந்தது. மகனுக்கு பத்து வயதுக்குமேல் சூரிய தசை. 16 வயதுவரை. இதனூடே அவனுக்கு (தனுசு ராசிக்கு) ஏழரைச்சனி ஆரம்பம்- 2021 வரை. இது ஏதாவது இழப்பைத் தரும் காலம். எனவே செவலூர் பூமிநாத சுவாமி கோவிலில் ருத்ரஹோமம் செய்து சிவனுக்கு 108 சங்காபிஷேக பூஜை செய்யவேண்டும். அத்துடன் சந்திர தசை முடியும் வரை திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் பாலபிஷேகம் செய்யவேண்டும். அதனால், கடும் பாதிப்பு களையும் எதிர்விளைவுகளையும் தவிர்க்க லாம். மகனின் படிப்பு, எதிர்காலம் பிரகாச மாக அமையும். ஏழரைச்சனி முடியும்வரை பையனுக்காக 19 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, மண்விளக்கில் நெய்நிரப்பி, மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றவேண்டும். சனிக் கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மிளகு தீபமேற்றவும். மகனின் படிப்பு உன்னதமாக அமையும். உங்களுக்கும் வேலையில்- அலுவலகத்தில் நிம்மதி உருவாகும். உங்கள் தம்பியின் நல்ல வேலைக்கும், திருமணத்துக்கும், நல்ல மணவாழ்வுக்கும் ராமநாதபுரம் வழி தேவிபட்டினம் சென்று நாகதோஷ நிவர்த்தி ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், சொர்ணா கர்ஷண பைரவ ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், மிருத்யுஞ்ச ஆயுஷ்ஹோமம் செய்து தம்பிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.