மாரிமுத்து, மூணாறு.

மூத்த பெண்ணுக்கும் மூத்த பையனுக்கும் திருமணம் செய்யலாமா?

இருவரும் ஆனி மாதம் பிறந்திருந்தால் திருமணம் செய்யக்கூடாது. ஒருவர் மட்டும் ஆனி மாதம் பிறந்து, மற்றொருவர் வேறு மாதத்தில் பிறந்திருந்தால் தோஷ மில்லை. இருந்தாலும், தலைச்சனாக இருந்தால் தவிர்ப்பது நல்லது. ஆனி மாதத்துக்கு "ஜேஷ்ட மாதம்' எனப் பெயர். திரிஜேஷ்டை (மூன்று ஜேஷ்டை) ஆகாது என்பது விதி. சிலர், "தலையும் வாலும் ஆகா'தென்பார்கள். அதாவது- தலைச்சனுக்கும் கடைசிப் பெண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பார்கள். இது அனுபவ ரீதியான சம்பிரதாயம்.

jj

Advertisment

நீலகண்டன், மதுரை.

ஓரிடத்தில் வாஸ்துப் பூஜை போட்டபிறகு, எவ்வளவு காலத்துக்குள் கட்டட வேலையை ஆரம்பிக்கலாம்?

வாஸ்து புருஷன் என்னும் தேவதைதான் கட்டடம் கட்டும் பிளான் அப்ரூவர். நகரசபை யிடமிருந்து கட்டடம்கட்ட முன்அனுமதி பெறுவதுபோல, வாஸ்து நாளில் பூமிபூஜை செய்தபிறகுதான் கட்டட வேலையைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியம் தடை, தாமதம் இல்லாமல் நிறைவேறும், அதிர்ஷ்டமாக அமையும். வருடத்தில் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்கள் தவிர, மற்ற எட்டு மாதங்களும் குறிப்பிட்ட தேதியில் வாஸ்து புருஷன் கண்விழிப்பார். மற்ற நேரம் முழுவதும் உறங்கிக்கொண்டே இருப்பார். சித்திரை மாதம் 10-ஆம் தேதி 5 நாழிகைக்குமேல், வைகாசி 21-ஆம் தேதி 8 நாழிகைக்குமேல், ஆடி 11-ஆம் தேதி 2 நாழிகைக்குமேல், ஆவணி 6-ஆம் தேதி 1 நாழிகைக்குமேல், ஐப்பசி 11-ஆம் தேதி 2 நாழிகைக்குமேல், கார்த்திகை 8-ஆம் தேதி 10 நாழிகைக்குமேல், தை 12-ஆம் தேதி 8 நாழிகைக்குமேல், மாசி 22-ஆம் தேதி 8 நாழிகைக்குமேல் மூன்றேமுக்கால் நாழிகைவரை வாஸ்து புருஷன் கண்விழித்திருப்பார். இந்தக் காலத்தில் கிரக ஆரம்பம் (தச்சு) செய்ய உத்தமம். மூன்றே முக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணிநேரம். இந்தக் காலகட்டத்திலும் முக்கால் நாழிகை (18 நிமிடம்) பல் துலக்குதல், குளித்தல், பூஜைசெய்தல், போஜனம் (சாப்பிடுதல்), தாம்பூல தாரணம் (வெற்றிலைப் பாக்கு போடுதல்) என ஐந்து காரியங்களைச் செய்வார். இந்த ஐந்து வேளையிலும் போஜனம், தாம்பூல தாரணம் செய்யும் சமயத்தில் கிரக ஆரம்பம் (தச்சு) செய்ய உத்தமம். இந்த விதிமுறைகள் அந்தக் காலத்தில் அனுபவம்மிக்க கொத்தனாருக்கு முழுமை யாகத் தெரியும். அதனால், அவர்கள் கட்டிய கட்டடங்களுள் வசித்தோர் மூன்று நான்கு தலைமுறையாகப் பாரம்பரியமாக வாழ்ந்தனர். இந்த விஷயம் இந்தக்கால சிவில் எஞ்ஜினி யர்கள் எல்லாருக்கும் தெரியுமென சொல்ல முடியாது. சிலருக்குத் தெரியலாம். அந்த விதி முறைகள் தெரியாதவர்கள் கட்டிய வீடுக ளெல்லாம் அவர்கள் காலத்திலேயே கடனுக்காகவிற்கும் அவல நிலைக்கு ஆளாகின்றன. அல்லது அதிர்ஷ்டமில்லாமல் போகிறது. மூன்று நான்கு தலைமுறைக்கு முந்தைய காலத்தில் எந்த சிவில் எஞ்ஜினியர் பிளான் போட்டு கட்டடம் கட்டினார்கள்? செட்டி நாட்டில் பெரியபெரிய பங்களாக்கள் எல்லாம் அரண்மனைபோல் கட்டிவைத்து, இன்னும் பேர்சொல்லுமளவுக்கு காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படுகிறது. பலர், திரைப்படங் களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தத் தொழில் ரகசியம் 64 கலைகளுக்கும் பொருந்தும். அதில் ஜோதிடக்கலையும் ஒன்று. அன்றைய மன்னர்கள், ஜமின்தார்கள், பண்ணையார்களிடம் ஆஸ்தான ஜோதிடராக சிலர் இருந்தனர். அவர்களின் குடும்பச் செலவுகளுக்கெல்லாம் நித்தியப்படி மாதிரி ஊதியம் கொடுத்துப் பராமரித்து வந்தார்கள். உதாரணமாக, ஒரு உண்மை வரலாறு. திருவனந்தபுரம் மன்னரிடமிருந்த ஒரு திவான் ஜோதிடர்முதல் பல கலைஞர்கள்வரை பொழுதுபோக்காகப் பல விஷயங்களைக் கலந்துரையாடுவார். ஒருநாள் ""அரண்மனையை விட்டு வெளியேறப்போகிறேன்; எந்த வாசல்வழி வெளியேறுவேன்'' என்று ஜோதிடரிடம் கேட்டார். ஒரு ஜோதிடர் அவர் எந்த வாசல்வழி வெளியேறுவார் என்று கணித்து திவானிடம் கொடுத்து "வெளியேறிய பிறகுதான் இதைப் பிரித்துப் பார்க்கவேண்டு' மென்று ஒரு நிபந்தனையும் விதித்தார். திவானுக்குக் குழப்பம். இருப்பதோ நான்கு வாசல்தான். இதில் ஒரு வாசலைத்தானே அவர் குறிப்பிட்டிருப்பார்? அதைப் பொய் யாக்கப் புதுவாசல் ஒன்றைத் திறந்து வெளியேறுவோமென்று கன்னிமூலையில் சுவரை இடித்து, அதன்வழியே வெளி யேறியபிறகு, ஜோதிடர் எழுதிய சீட்டைப் பிரித்துப் பார்த்தார். அதில், "கன்னிமூலையில் நூதன (புதிய) வாசல் திறந்து போவார்' என்று எழுதியிருந்தது. இப்படிப்பட்ட திறமையானவர்களெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜோதிட வித்வானுக்கும் ஒருசமயம் சோதனை வந்தது. மேலே சொன்னபடி, கன்னிமூலையில் புதிய வாசல் திறந்ததன்பலனாக, திவானின் மனைவிக்கு கர்ப்பம் உண்டாகுமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதன்படியே, திவான் மனைவி கர்ப்பம் அடைந்தார். மகப்பேறு காலத்தில், திவான் என்ன குழந்தை பிறக்கு மென்று ஜோதிடரிடம் கேட்க, திவான் மனைவியின் வயிற்றில் ஒரு எலுமிச்சம்பழத்தை வைத்து எடுத்துவந்து, அந்தப் பழத்தை உருட்டிவிடும்படி பணிப்பெண்ணிடம் ஏற்பாடு செய்தார். அந்தப் பழம் நிலைப்படி தடுக்கி தேங்கிவிட்டது. அதைக் கவனித்த பணிப்பெண் பழத்தை எடுத்து மறுபடியும் உருட்டிவிட்டாள். இதற்குள் இரண்டு மூன்று நிமிடங்களாகிவிட்டன. பழம் கைக்குக் கிடைத்த நேரத்தை வைத்து கணக்கிட்ட ஜோதிடர், பெண் குழந்தை என்று பலன் சொன்னார். பிறந்ததோ ஆண் குழந்தை. ஒருவகையில் மகிழ்ச்சி என்றாலும், ஜோதிடம் பொய்யாகிவிட்டதே என்று ஜோதிடருக்கு வருத்தம். "காசிக்குப்போய் கங்கையில் நீராடிய பிறகுதான் ஜோதிட ஏட்டைத் தொடுவேன்' என்று சபதம்கொண்டு போய்விட்டார். அந்த ஜோதிடரிடம்தான் என் குருநாதர் பள்ளத்தூர் அய்யா பாடம் படித்தார். அவரைக் குருநாதராக அடைந்தது அடியேன் செய்த பாக்கியம். அதைத்தான் "தாரமும் குருவும் தலைவிதிப்படி' என்பார்கள்.

 பன்னீர்செல்வம், மதுரை.

இறந்தவர்களின் படத்துக்குப் பூப்போட்டுத் தீபமேற்றி வணங்கலாமா?

இறந்து 30 நாள்கள் முடிந்தபிறகு பூப்போடலாம், தீபமேற்றலாம். 30 நாள்வரை வழிபட்டால், அந்த ஆத்மா வரும்- அப்படி வந்தால் அது கரிக்காலோடு வரும். இது குடும்பத்துக்கு ஆகாது. மற்றவர்களுக்கும் ஆகாது. அதாவது, எரியும் அடுப்பில் வைத் திருக்கும் பாத்திரத்தைக் கைப்பிடி இல்லாமல் இறக்கினால் சுடுமல்லவா?

 தங்கப்பாண்டியன், விருதுநகர்.

கூட்டுத்தொழில் அமைப்புக்கு இரு கூட்டாளிகளின் நட்சத்திரம் அல்லது ராசி பார்க்கவேண்டுமா?

திருமணத்துக்கு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோம் அல்லவா? அதுபோல, தொழில்துறைக்கும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டாளிகளின் ஜாதகப் பொருத்தம் அவசியம் பார்க்கவேண்டும். ஒருவர் நட்சத்திரம் அல்லது ராசிக்கு மற்றவரின் நட்சத்திரம் ஏழாவது நட்சத்திரமாக இருந்தால் வதை தாரையாகும்; சேரக்கூடாது. இருவருக்கும் சஷ்டாஷ்டக ராசியாக (6ல8) இருந்தாலும் சேரக்கூடாது. அடிக்கடி கருத்து வேறுபாடு, சண்டை வரும். 2ல12 ஆக இருந்தாலும் ஆகாது. எனக்குத் தெரிந்த ஒரு கூட்டு நிறுவனத்தில், கூட்டாளிதான் கணக்கு முடிக்கும்போது இரும்புப் பெட்டியிலுள்ள பணத்தை எண்ணிச் சொல்வார். மற்றவர் குறித்துக்கொண்டு கணக்கை சரிபார்ப்பார். எண்ணுகிறவர் ஒரு கட்டை எடுத்துவைத்துக்கொண்டு, மற்ற பணத்தை அத்துடன் சேர்த்துச்சொல்வார். மற்றவரும் கணக்கு நேர் என சரிபார்த்து, சமாதானம் அடைவார். அந்தக் கூட்டாளி இரண்டு மூன்று நாள்கள் விடுமுறையில் போனபோதுதான் எண்ணிக்கை வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது.