நரசிங்கம், மதுரை.
விஞ்ஞானம், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வளர்ந்த நிலையில், இன்னும் ஜோதிடத்தை நம்பி காலத்தை வீணடிக்க வேண்டுமா?
கம்ப்யூட்டர்- விஞ்ஞானம் என்றால், ஜோதிடம் மெய்ஞானம். இராமாயணத்தைவிட மகாபாரத இதிகாசத்தில் ஜோதிடத்தின் முக்கியத்துவத்தையும் நம்பிக்கையையும் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். ஜோதிடம் என்பது காலத்தின் கணிதம்- காலக் கண்ணாடி! திருக்குறளில் ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்று ஒரு குறள் உண்டு. அதில் எண் என்பது நியூமராலஜி. எழுத்து என்பது அஸ்ட்ராலஜி. வேதத்தின் அங்கங்கள் ஆறு. அதில் கண் போன்றது ஜோதிட சாஸ்திரம். "நாள் செய்வதை நல்லார் செய்யார்' என்பார்கள். "அவரவர் வினைவழி அவரவர் வந்தனர். அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்' என்பது சொக்கநாத வெண்பா. அந்த வினையின் தன்மையை அறிந்து செயல்படச் செய்வது ஜோதிடம். "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்' என்பதும் குறள் தான். (தமிழ்மறை-குறள்). "ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்' என்பது சிலப்பதிகாரம். அந்த ஊழ் என்பதே ஜோதிடம். நாம் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவைதான். அதை உணர்ந்து நீரோடும்வழியே பயணித் தால் எல்லாம் இனிதாகும். எதிர்நீச்சல் சிரமம் இருக்காது.
கே. வளர்மதி, கழுநீர்குளம்.
நான் பி.எஸ்.சி., பட்டம் பெற்றுள்ளேன். எனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? என் தந்தைக்கு ஆண் வாரிசுஇல்லை. நாங்கள் மூவரும் பெண்கள்தான். நான் இரண் டாவது மகள். தங்கை பி.காம்., படிக் கிறாள். நான் பெற்றோருடன் இருந்து அவர்களுக்கு உதவிசெய்ய விரும்புகிறேன். என் ஆசை நிறைவேறுமா?
பெற்றோருடனே இருக்க ஆசைப்படும் நீங்கள் எப்போது திருமணம் என ஏன் கேட்கிறீர்கள்? திருமணம் நடந்தால் பெற்றோரைவிட்டுப் பிரிந்து கணவர் வீட்டுக்குப் போகத்தானே வேண்டும்? அல்லது வீட்டோடு மாப்பிள்ளையைத் தேடுகிறீர்களா? கும்ப ராசி, சதய நட்சத்திரம், விருச்சிக லக்னம். லக்னத்துக்கு 2-ல் சனி, ராகு நிற்பது கடுமையான தோஷம். தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். சனி, செவ்வாய் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதால், மனதை அலைபா யவிடாமல் கட்டுப்பாடாக இருக்கவேண்டும். குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து கவனமாக நடந்துகொள்ள வேண்டும். காதலில் சிக்கிக்கொள்ள நேரும்; கவனம்!
சி. சந்திரன், பொறையாறு.
ராசிச்சக்கரத்தில் ஒரு கிரகம் உச்சமாக இருந்து, நவாம்சத்தில் நீசமடைந்தால் ஆரம்பத்தில் கெட்ட பலனையும், பிறகு நல்ல பலன்களையும் செய்யும்; அந்த கிரகம் நவாம்சத்தில் உச்சமாக இருந்து, ராசிச்சக்கரத்தில் நீசமாக இருந்தால், ஆரம்பத்தில் நன்மைகளையும் யோகத்தையும் அனுபவித்து, முடிவில் நஷ்டத்தையும் இழப்பையும் ஏமாற்றத்தையும் அனுபவிக்கவேண்டு மென எழுதுவீர்கள்.ஆனால்,ஒரு வாசகரின் கேள்விக்கு பதில் கூறும் போது- ராசியில் நீசம், அம்சத்தில் உச்சம் என்பதால் வாழ்க்கையின் முற்பகுதி வரை போராட்டம், பிற்பகுதியில் படிப்படியான முன்னேற்றம், வளர்ச்சி என்று எழுதியுள்ளீர்கள். இரண்டுக்கும் வித்தியாசம் வருகிறதே- ஏன்?
அது அந்த ஜாதகரின் பூர்வ புண்ணியப் பலனைப் பொருத்தது. ராசி பலனே பிரதானம். அம்சப் பலன் இரண்டாவது நிலைதான். 5+3= 8. இது சரிதானே? 3+5=8. இதுவும் சரிதானே? 6-8 சஷ்டாஷ்டகம். இதில் சுபசஷ்டாஷ்டகம் எனவும் உண்டல்லவா? ஒரு வீதியில் ரிப்பேர் வேலை அல்லது ரோடு போடுகிறார்கள் என்றால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறதல்லவா? அந்த மாற்றுப் பாதை "நோ-என்ட்ரி'யாக இருந்தாலும் அந்த வழியில் வாகனங்கள் போகுமல்லவா? அப்படி சில ஜாதகங்களில் மற்ற கிரக அமைப்புப்படி விதிவிலக்கு உண்டு. அது ஏனென்பதை உங்கள் ஜோதிட ஞானத் தால்தான் கண்டுபிடிக்க வேண்டும். சங்கீத குரு கற்றுக்கொடுத்தால், இசை பயிலும் மாணவன் அதற்குமேல் தன் ஆற்றலை வெளிப்படுத்தி "பிர்க்கா' அல்லது "சங்கதி'யைப் பயன்படுத்தி "சபாஷ்' பெறுவதில்லையா? அப்படி நீங்கள் குருவை மிஞ்சிய சீடனாக மாறவேண்டும். எல்லாவற்றையும் குருவிடமே கேட்டுத் தெளிவுபெற நினைக்கக்கூடாது. ஏகலைவன்- துரோணரை மானசீக குருவாக மதித்து, தானே வித்தையைக் கற்று அர்ச்சுனனைவிட சிறந்த வில்லாளியாக மாறவில்லையா?
கே. ஏ.. முனீஸ்வரன், விழுப்புரம்.
இரண்டுமுறை எனது மனைவிக்கு அபார்ஷன் ஆனது. எப்போது குழந்தை பாக்கியம் கிட்டும்?
உங்கள் திருமணத் தேதி 14-2-2005. தேதி எண். 5; கூட்டு எண்ணும் 5. இப்படி 5-ஆம் தேதி திருமணமானால் தம்பதிகள் கருத்து வேறு பாட்டால் பிரியநேரும். அன்யோன்யமாக இருந்தால் வாரிசு தங்காது. அதனால், திருமணத்தேதி எண் 1, 6, 3 வருமாறு அமைத்து, மறுமாங்கல்யம் அணியவேண்டும். முதலில் கட்டிய மாங்கல்யத்தைக் கோவில் உண்டியலில் போடலாம். அல்லது அழித்து புதிதாகச் செய்யலாம். உங்கள் விருப்பம். ஜாதகப்படி, உங்களுக்கு கன்னி லக்னம். 5-ல் மகரத்தில் செவ்வாய், குரு (நீசம்), சந்திரன். 9-ல் சனி. மகர ராசிக்கு 5-ல் சனி. மனைவி பாலாம்பாளுக்கு மேஷ லக்னம். 5-ல் குரு, செவ்வாய், சனி. விருச்சிக ராசிக்கு 9-ல் கடகத்தில் ராகு. இருவர் ஜாதகத்திலும் புத்திர தோஷம் உண்டு. எனவே, புத்திர தோஷ நிவர்த்திக்கு சந்தானகோபால ஹோமமும், சந்தான பரமேஸ்வர ஹோமமும், வாஞ்சா கல்பகணபதி புத்திரப்ராப்தி ஹோமமும் செய்து, நீங்களும் மனைவியும் அபிஷேகம் செய்து கொள்ளவேண்டும்.