● கே. முருகேசன், தண்டையார்பேட்டை.
எனது இளையமகன் பவித்திரன் 11-ஆவது வகுப்பு படிக்கிறான். அவனது மேற் படிப்பு, எதிர்காலம் நன்றாக இருக்குமா? எனக்கு உதவிகர மாக இருப்பானா?
பவித்திரன் உத்திர நட்சத் திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னம். 16 வயது முடிந்து 17 வயது நடக்கிறது. 22 வயது வரை செவ்வாய் தசை. பிறகு ராகு தசை. ராகு 4-ல் பலம்பெற்றிருப்பதால், ராகு தசையில் பட்டம், வேலை, திருமணம், வாரிசு என எல்லா நன்மைகளும் உண்டாகும். ராகு- தனது புக்தியில் முன்னதாக பரிகாரம் செய்துகொள்ளவும். பிள்ளையைப் பெற்ற கடமைக்கு அவர்களை வளர்த்து ஆளாக்கி, படிக்கவைத்து, குடும்பஸ்தனாக ஆக்குவது பெற்றவர்கள் கடமை! அவர்கள் நம்மை கவனிப்பார்கள்- உதவியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. "ஈன்று புறந்தருதல் என் கடன்- சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடன்' என்பது ஒரு தாயின் நிலை! பிள்ளைகள் நன்றிக் கடனாக பெற்றவர்களைக் கவனித்துக்கொண்டால் அந்தப் பிள்ளைகளுக்கு புண்ணியம் சேரும். அவர்கள் பெறும் பிள்ளைகள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். பெற்றவர்களை கவனிக்காத பிள்ளைகளை, அவர்கள் பிள்ளைகள் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். பிள்ளைகள் உதவி னாலும் உதவாவிட்டாலும் கல்லினுள் தேரைக்குப் படியளக்கும் தெய்வம் பெற்றவர்களைக் கைவிடாது கவனித்துக்கொள்ளும்!
● எஸ். சந்திரமதி, ஆற்காடு.
பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் முடித்து தற்சமயம் சென்னையில் நகைக்கடையில் வேலை பார்க்கிறேன். எனது திருமணம் எப்போது நடக்கும்? அரசு வேலை கிடைக்குமா? என் தந்தைக்கு மகன் இல்லை. நானும் என் தங்கையும்தான். என் பெற்றோருடன் இருந்து அவர்களை கவனித்துக்கொள்ளும் வகையில் எனக்கு கணவர் அமைவாரா? நீங்கள் அனுப்பிய ஜாதகம் உங்கள் ஜாதகமா? அல்லது தங்கை ஜாதகமா?
ஏனென்றால் பெயர் குறிப்பிடவில்லை. ஜாதகத்தில் துவிதீய புத்திரி என்று எழுதியிருப்பதால், இளைய மகள் என்று அர்த்தம். உங்கள் தகப்பனார் நடராஜனுக்கு எத்தனை பெண் குழந்தைகள்? அவருடைய ஜாதக நகலை அனுப்பினால்தான் அவரது உடல்நிலை, ஆயுள் பற்றி தெளிவாகக் கூறமுடியும்.
● எல். கணேசன், விழுப்புரம்.
சர லக்னத்துக்கு 11-க்குடையவர் பாதகாதிபதி. எனது ஜாதகத்தில் பாதகாதிபதி சூரியன் வீட்டில் மூன்று கிரகம். 2-ஆம் வீட்டில் பாதகாதிபதியுடன் இரண்டு கிரகம். சனியும் சூரியன் சாரம். இதன் பலன் என்ன? லக்னாதிபதி, ராசியதிபதி இருவரும் 7-ஆம் பார்வை யாக 8-ஆம் வீட்டைப் பார்ப்பதன் பலன் என்ன?
துலா லக்னத்துக்கு 11-க்குடைய சூரியன் பாதகாதிபதி. அவர் 2-ல் இருந்தாலும் அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 11-ல் இருப்பதால் பரிவர்த்தனை. அதனால் 2-ஆம் வீட்டுப்பலன்- வாக்கு, தனம், குடும்பம். இவற்றில் தடை, தாமதம் ஏற்படலாம். பரிவர்த்தனை என்பதால் தாமதமில்லாமல் இருந்தால் பிரச்சினை, நிம்மதிக்குறைவு இருக்கும். சனியின் சாரம் பற்றி கவலையில்லை. பாதகாதிபதி நின்ற இடம்- பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்கள் ஆதிபத்திய பலன் பாதகம் அடையும். லக்னத்துக்கு 2, 7-க்குடைய செவ்வாய் பலன்- 3, 6-க்குடைய குரு பலன் கெடுதலாக அமையும். பாதக ஸ்தானத்தில் பாவ கிரகம் ராகு நிற்பது தோஷ மில்லை.
● எம். முகுந்தன், வள்ளியூர்.
என் பேரன் குகன் ஜாதகத்தை வாக்கியப் படி கணித்து அனுப்பியுள்ளேன். படிப்பு, அரசுப்பணி, திருமணம் பற்றி வழிகாட்டவும்.
16 வயது பையனுக்கு முதலில் பேரன் பிறப் பானா? பேத்தி பிறப்பாளா என்று கேட்க மறந்துவிட்டீர்கள். 21 வயதுவரை சனி தசை. தனுசு லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். 9-க்குடைய சூரியன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 8-ல் சந்திரன் ஆட்சி! 4-ல் சனி- 3-ல் குரு பரிவர்த் தனை. 10-ல் சுக்கிரன். 11-ல் புதன் பரிவர்த்தனை. எனவே ஆயுள், பட்டப்படிப்பு, அரசு வேலை எல்லா யோகங்களும் உண்டு. கடக ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு. 8-ல் குரு, கேது. எனவே திருமணத்தில் குழப்பம், பிரச்சினை வரலாம். அந்த நேரம் அதைப் பற்றி சிந்திக்கலாம். மேலும் மீனச்சனியை சிம்மச் செவ்வாய் பார்ப்பதால் காதல் அல்லது கலப்புத் திருமணம் நடக்கும்.
● ஆர். சங்கர், வாழப்பாடி.
தாங்கள் கூறியபடி மகன் சரவணனுக்கு 30 வயதில் திருமணம் நடந்தது. தங்கள் தெய்வ வாக்கு பலித்ததற்கு நன்றி! எனது உறவுக்காரர் அரசுப் பணியில் ஓய்வு பெற்றவர். அவர் மகள் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். உள்ளூரில் மாப் பிள்ளை பார்த்து, மகளும்- மருமகனும் தன் பார்வையிலேயே இருந்தால் நல்லது என்று நினைக்கிறார். மாப்பிள்ளை அரசு வேலையில் இருப்பவராக அமைந்தால் நல்லது என்றும் ஆசைப்படுகிறார். நடக்குமா?
ராஜேஸ்வரி தனுசு லக்னம், அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. லக்னத்தில் சனி. 6-ல் குரு மறைவு. 7-க்கு 12-ல் மறைவு. 7-க்குடைய புதனும் விருச்சிகத்தில் மறைவு. வெளியூரில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைதான் அமைவார். 29 வயதுக்குமேல்தான் திருமண யோகம். சூரியனும் லக்னத்துக்கு 12-ல் மறைவு. அரசு வேலை அமைவது கஷ்டம்! திருமண முயற்சி எடுக்கும்போது, பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்யலாம்.
● சி. ராமசாமி, ஓசூர்.
எனது ஜாதகத்தில் லக்னாதிபதி ராசிக்கட்டத்தில் நீசமடைந்து, அம்சத் தில் உச்சமடைந்துள்ளார். இதன் பலன் என்ன? லக்னத்தில் குருவும் கேதுவும் இணைந்துள்ளது நன்மையா- தீமையா?
விருச்சிக லக்னத்தில் 2, 5-க்குடைய குரு நிற்பது நன்மை! கேது சேர்ந்திருப்பது கெடுதல். கௌரவப் பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். லக்னாதிபதி செவ்வாய் ராசியில் நீசம்; அம்சத்தில் உச்சம். வாழ்க்கையின் முற்பகுதி வரை போராட்டம்; பிற்பகுதியில் படிப்படியான முன்னேற்றம்- வளர்ச்சி!
● கௌசல்யா, நாகப்பட்டினம்.
வருங்காலத்தினை மிகத்துல்லியமாகக் கணித்திடும் வல்லமையும் வாக்குப் பலிதமும் உடைய நவீனகால பிரம்மாவுக்கு வணக்கம்! ராகு தசை எப்படியிருக்கும்? பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து திருமணம் செய்துகொண்டேன். ஒரு பெண் குழந்தை உள்ளது. அவள் எதிர்காலம் எப்படியிருக்கும்? நான் பி.காம்., சி.ஏ. முடித்துள்ளேன். பி.எட் படிக்க எண்ணுகிறேன். அதன்பிறகு அரசு ஆசிரியை வேலை கிடைக்குமா?
உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி, உத்திராட நட்சத்திரம். நடப்பு ராகு தசை. பி.எட் முடித்த பிறகு அரசு வேலைக்கு இடமுண்டு. மகளுக்கும் கடக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். 9-க்குடைய குரு 10-ல் தர்மகர்மாதிபதி யோகம். ஒன்பது வயதுவரை புதன் தசை. பிறகு கேது தசை ஏழு வருடம். அடுத்து சுக்கிர தசை. படிப்பு, ஆயுள், ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். மகளுக்கு புதன் தசையில் ராகு புக்தி நடக்கும்போது உங்களுக்கும் ராகு தசை நடக்கும். நன்றாக இருக்காது. அப்போது சூலினிதுர்க்கா ஹோமம் அவசியம் செய்துகொள்ளவும்.
● வி. துர்க்கா, காஞ்சிபுரம்.
புதன் தசை நடக்கிறது. 7-ஆவது தசை. இப்போது 66 வயது. ஆயுள் எவ்வளவு? குடும்பத்தில் யாருடனும் சுமுக உறவில்லை.
கும்ப லக்னம், மேஷ ராசி. புதன் லக்னத்துக்கு அட்டமாதிபதி. ராசிக்கு 6-க்குடையவர் புதன் தசையில் சுயபுக்தியும், கேது புக்தியும், சுக்கிர புக்தியும், அடுத்து சூரிய புக்தியும் திருப்தியில்லாத காலம். குடும்பத்தாரை அனுசரித்து, விட்டுக்கொடுத்து நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அட்டமாதிபதி லக்னத்தில் நின்றால், உங்களையறியாமல் நீங்களே பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுவீர்கள். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீராமஜெயம் மந்திரம் எழுதுங்கள்.
● இராஜேஸ்வரி, சாத்தான்குளம்.
திருமணமாகி 25 வருடங்களாகின்றன. அன்றுமுதல் இன்றுவரை கணவர் குடும்பத்துக்கு என்னைப் பிடிக்காது. விட்டுக்கொடுத்து, அனாதை மாதிரி பொறுமையாகப் போகிறேன். அந்தமாதிரி நேரங்களில் உங்கள் "பாலஜோதிட'மும், ராசிபலனில் வரும் ஒவ்வொரு வரியும்தான் எனக்கு ஆறுதல். ராகு தசை, சுக்கிர புக்தி நடக்கிறது. எனக்கு சிம்ம ராசி, பூர நட்சத்திரம். கணவருக்கு மகர ராசி! எப்போதுதான் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்?
ராகு தசை முடியும்வரை பிரச்சினைதான்; போராட்டம்தான். இருந்தாலும் 7-க்குடைய குரு விருச்சிகத்தில் நின்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பிரிவு, பிளவுக்கு இடமில்லை. துர்க்கை ஸ்தோத்திரம் தவறாமல் படிக்கவும். ராகு தசை நடந்தால் ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு ஏற்படும். நேரம் கிடைத்தால் தினசரி அபிராமி அந்தாதி படியுங்கள். ஜோதிடமும் படிக்கலாம்.